வியத்தகு வித்தகர் ம...
 
Notifications
Clear all

வியத்தகு வித்தகர் மெல்லிசை மன்னர்


K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 223
Topic starter  

                 நீண்ட இடைவெளிக்குப்பின்னர்  நண்பர்க;ளை தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பு எனக்கருதி நமது தளத்தில் எழுத வந்துள்ளேன். இயக்குனர் ஸ்ரீதர் குறித்த எனது தொடர் நிறைவுற்று நெடுநாட்கள் ஆகிவிட்டதாக உணர்கிறேன். இடையில் என் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட சோகம் என்னை பெருமளவிற்கு தனிமைப்படுத்திவிட்டதென்றே சொல்லலாம். பலவித இறுக்கமான சூழல்களில் இருந்து விடு பட முடியுமா என்பதே எனக்குள் ஊசலாடிவந்த கேள்வி. . 'எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே' என்ற மன்னர் பாடல் என்னை அவ்வப்போது தேற்றி வந்தது. சரி, அதனால் என்ன  என்கிறீர்களா? அதனால் ஒன்றுமில்லை என நினைப்போர் உண்டு. எனினும் வீழ்ந்துவிட்டவனுக்கு எழ வேண்டும் என்ற எண்ணமும், முடியுமா என்ற ஐயமும் ஒருசேர தோன்றுவதைப்போன்ற ஒரு மன நிலையில் தத்த ளித்த நிலையில் காலச்சக்கரம் தனது இயக்கத்தை பிசகாமல் நகர்த்திக்கொண்டு தான் இருக்கிறது. என்ன செய்தால் ஆறுதல் கிடைக்கலாம் என்று பலவாறான யோசனைகள் . அவற்றுள், நமக்கு ஆறுதலும் பிறர்க்கு தகவல் பரிவர்த்தனையும் ஒருசேர நிகழ வேண்டும் என்றால் எம் எஸ் வி தான் சிறந்த அருமருந்து. சரி என்ன செய்யலாம்?  மெல்லிசை மன்னர் ஒரு மாறு பட்ட வித்தகர் என்பதை   அவரது நீண்ட திரைப்பயணத்தில் இருந்து 'நான் அறிந்தவகையில்' விளக்க முற்பட்டால் என்ன எனத்தோன்றியது . இது போன்ற அவா பலருக்கும் இயல்பான ஒன்று..உணர்வுகளால் மெல்லிசை மன்னரின் இசையில் ஐக்கியப்ப்பட்டுவிட்ட எவரும் எளிதில் வேறு வகை இசைக்கோர்வைகளால் ஈர்க்கப்படுவதில்லை. சிலர் இதை ஒரு குறைபாடாக விமரிசிக்கின்றனர் . ஆனால் இதே போன்ற நிலை அவர்களுக்குள்ளும் உள்ளதே அது முதிர்ச்சியின் பிரதிபலிப்பா ? இல்லை. மனித மனம் சில வகை அமைப்புகளை ஏற்கிறது பிறவற்றை ஏற்க தயங்குகிறது.. அவ்வளவே. ஆனால் எம் எஸ்வி நிகழ்த்திய இசை விந்தைகள் , சப்போர்ட் எனப்படும் தொழில் நுட்பம் மற்றும் பொருள் பின்புலம் போன்றன இல்லாத நிலையில் என்பதனால்   மட்டுமல்ல அவர் காலத்திய செயல்பாடுகள் மனித முயற்சியை மட்டுமே சார்ந்திருந்தது. அதாவது கடின உழைப்பே அவர்களது மூலதனம் மற்றும் மூலாதாராம். இவ்வனைத்தையும் தாண்டி, மன்னர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதவர், குடத்திலிட்ட விளக்காகவே வாழ்ந்து அழியாப்புகழ் எய்தியவர். பிறர் எவரும் அவரைப்பற்றி பேசினாலோ, எழுதினாலோ மட்டுமே எதிர்கால சந்ததி இதுபோன்ற மாமனிதர்கள் நம்மிடையே இருந்தனர் என்பதை சிறிதளவேனும் உணர ஏதுவாக அமையும்.

மன்னரை தம் வாழ்நாளில் நெருங்கிட வாய்ப்பு கிட்டாதா என்றே ஏங்கிக்கிடந்த  எண்ணற்ற ரசிகர்களில்  நானும் ஒருவன். சரியாக மன்னரின் இசையில் கட்டுண்டு 1957 ம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகள் [அரை நூற்றாண்டு ] கடந்தபின் 2007 ல் முதன் முதலாக அவரை சந்திக்கும் பரவசமான வாய்ப்பு கிடைத்தது. அதாவது மறக்கவொண்ணாத பாடல்களின் முடிசூடா மன்னருக்கென்றே துவங்கப்பெற்ற www.msvtimes .com என்ற தளத்தில் நான் எழுதத்துவங்கியபின், சென்னை அன்பர்களின் அறிமுகம் கிடைத்தது.  அவர்களின்   உதவியுடன் மன்னரைப்பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளமென மனதில் பீறிட்டது. அப்போது நான் மும்பையில் இருந்தேன் . எனவே நினைத்ததும் சென்னை வருவது எளிதன்று . எனது வேட்கையை மன்னர் பாடல்கள்  பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள் வாயிலாக ஓரளவு தணித்துக் கொண்டிருந்தேன்.  மன்னர் பாடல்களின் தாக்கம்/தாகம் தணியக்கூடியதா என்ன?

யானை, கடல் , நிலவு மூன்றையும் எந்த வயதினரும் ரசிப்பர் என்றொரு சொல்லாடல் உண்டு. அந்தப்பட்டியலில் மன்னரின் பாடல்களை தயக்கமின்றி சேர்க்கலாம் . செவிகளை கூர்மைதீட்டிக்கொண்டு, திறந்த மனம் கொண்டு பாடலை ரசிக்கும் நுணுக்கம் அறிந்த எவரும் மன்னரை யோ அவர்தம் கற்பனைத்திறன் தன்னையோ வியந்து பாராட்டாது விலகி ஓட  முடியாது.  குறிப்பாக 1960 களில் மன்னர் களப்படுத்திய இசைக்கருவிகளும்  அவற்றின் மாறுபட்ட தொகுப்புகளும் காலத்திற்கு முந்தியன  எனில் முற்றிலும் உண்மை. அவ்வகை இசைக்கோர்வைகளை இயல்பான ஒலிகளுடன், இப்போது கூட அரங்கேற்ற இயலுமா என்பது வினாவுக்குரியதே; ஆம் உயிரோட்ட இசைவடிவம்  வேறு, கணினிஎழுப்பும் எலும்புக்கூடான ஒலிகள் உயிரற்றவை. ஒலிகள் வெளிப்படும் ஆனால் உயிரோட்டம் ? நிஜ யுவதிக்கும், ஆயத்த ஆடைக்கடைகளின் வெளியே நிற்கும் பொம்மைக்கும் உள்ள வேற்றுமையே இவ்விரு வகை இசைக்கோர்வைகளின் அடிப்படை வேறுபாடு. முன்னதை அறியாதவன் பின்னதை வியப்பான். பொம்மையின் ஈர்ப்பு இம்மையிலேயே தகர்ந்து சிதறிவிடும். காலத்தை கடந்து நிற்காது. மன்னரின் இசையோ குன்றாத இளமையோடு [ மாறும் உலகில் மாற இளமை அடைவோம் கண்ணா ' என்ற 'நீல வானம் ' படத்தில் கவி அரசர் தந்த சொற்களுக்கு சாட்சியாக]  வலம் வரும் வளம் படைத்தது. பார்ப்போம் வரும் நாட்களில் .  அன்பன் ராமன்  மதுரை


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 162
 

பேராசிரிய முதல்வருக்கு வணக்கம்

பொதுவாக உங்களின் பதிவுகள் புரிதல்களை உற்சாகங்களை தர வல்லது .
ஆனால் இன்றையப்பதிவு ஒரு இறுக்கத்தினை தந்தது ,உங்களுக்கு ஏற்பட்டப் பிரிவினை நினைந்து 
'"உறவும் வரும் ஒரு நாள் பிரிவும் வரும் " என்ற கவிஞர் வரிகளை நிறையக் கேட்டிருப்பினும் சில உறவுகள் வருவதையும் அவை பிரிவதையும் மனதில் இருத்திக்கொள்ளாமல் இருக்க முடியாது

இறைவனின் அருள் உங்களை இந்தத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் ,அதற்க்கு நீங்கள் என்றும் விரும்பும் மெல்லிசை மன்னரின் இசை கருவியாக பயன்படுவது ஒரு ஆறுதல் .

மெல்லிசை மன்னரின் இசை நம் வாழ்வின் இன்பங்களைப பெருக்கவும் துன்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் இருப்பதை நாம் நிறைய பேசியுள்ளோம் , இதோ கண்கூடு எடுத்துக்காட்டு

உங்களின் இழப்பினை சரி செய்ய இயலாது ஆனால் துயரம் குறைய இறைவனை இறைஞ்சுகிறேன்

யானை கடல் நிலவு (இது கூட மலை மழையையும் சேர்க்கலாம் ,என் கண்ணோட்டத்தின் படி )
கூட மெல்லிசை மன்னரின் இசையினையும் சேர்த்தது இயல்பானது இயற்கையானது . ஏனெனில் அவரும் அவர் இசையும் இயல்பானவர் /வை இயற்கையானவர் /வை

உங்கள் பதிவுக்கு காத்துக்கொண்டுஇருக்கின்றோம்

best Regards
vk


ReplyQuote
Share: