ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 139


K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 218
Topic starter  

                                                               சினிமாத்துறைக்கு அவர் தந்தது

அன்பர்களே

                      திரு ஸ்ரீதர் அவர்களை ஒரு இயக்குனராக மட்டுமல்ல , பிற, துறை சார்ந்த அம்சங்களிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார் என்பதை அவர் செயல்களிலிருந்து அறியலாம் .

கம்பெனி துவக்கம்

                                 தனது சித்ராலயா நிறுவனத்தை துவக்கும் போதே , தொழில் திறன் மிக்க அன்பர்களை பங்குதாரர்களாக வைத்து அதன்  மூலம் ஒவ்வொரு படத்திலும் அனைவருக்கும் ஈடுபாடு மற்றும் திறன் வெளிப்பாடு சிறப்பாக ஏற்படுமாறு அமைத்துக்கொண்டார். பிற தயாரிப்பு நிறுவனங்களில் இத்தகைய செயல் முறை இருந்ததா என்பது சரியாக தெரியவில்லை.எப்படி இருப்பினும் சிறப்பான படங்களின் ஆக்கத்திற்கு இந்த ஏற்பாடு 60 களில் சரியான அணுகுமுறையாய்  இருந்ததாகவே நான் கருதுகிறேன்.

தொழில் நுட்பாளர்களுக்கு அங்கீகாரம்.

தமிழ் சினிமாவில் பழைய நாட்களில் 1960 களுக்கு முன்னர் படக்கலைஞர்களின் பெயர்களை திரையில் தான் பார்க்க இயலும் . ஸ்ரீதர் தனது படங்களின் போஸ்டர் களி ல் அனைத்து துறை கலைஞர்களின் பெயர்களையும் இடம்பெறச்செய்து அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தையும் பெருமையையும் ஏற்படுத்தித்தந்தார்.

அதிலும் புதுமையாக ,துறைகளின் பெயர்கள் இல்லாமல் கலைஞர்களின் பெயர்கள் மாத்திரம் போஸ்டர் களி ல் தோன்றச்செய்து மக்களிடம் மேலும் ஆர்வத்தைக்கூட்டி இன்னின்னார் இந்த கலைஞர் என்பதை அறிந்துகொள்ள வைத்தார். இதனாலேயே ஸ்ரீதர் பட போஸ்டர்களுக்கு தனி மவுசு ஏற்பட்டது. ஓவியர் பரணி பிரபலமானதும் இவ்வாறே .

துணிச்சலான முயற்சியாளர்

அவர் மிகவும் துவக்கத்திலேயே பெரிதும் பேசப்பட்டார் எனில் அதற்கு மூலதனம் அவரது துணிச்சலாலான முயற்சிகளும் , கதை அமைப்புகளும் , பாத்திரத்திற்கேற்ற கலைஞர் தேர்வும் , தொழில் நுட்ப மென்மையும் காதலில் மென்மையும் , இளம் கலைஞர்களை ஊக்குவித்தும் அவர் உருவாக்கிய படங்களும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். தயக்கமில்லாமல் பரீட்சார்த்த முயற்சிகளை முன்னெடுத்தார். வெளி  மாநிலம் , வெளி நாடு என அலைந்து திரிந்து படமாக்கிய முதன்மை இயக்குனர். கதையை கேமரா சொல்லவேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் காட்டியவர்.பாடல்களின் தரத்திலும் , பாடல்களை பொருத்தமான இடத்தில் பதிவிடுவதும் ஸ்ரீதரை முத்திரை என்றே நான் சொல்லுவேன்.

மூவி மேக்கர்ஸ் கவுன்சில்

இதை ஒரு செயல் திட்டமாக வடிவமைத்து திரைப்படங்கள் போட்டியினால் அழிந்து விடமால் இருக்க தயாரிப்பாளர்கள் இடையே நல்லிணக்கமும் புரிதலும் கொண்டு படங்களை உரிய இடை வெளியில் வெளியிட்டு திரைத்தொழில் நசிந்து விடாமல் இருக்க முக்கிய தயாரிப்பாளர்களை [1972-73] ஒருங்கிணைத்தார். இவ்வாறாக பல விதங்களிலும் ஸ்ரீதர் பங்களித்தார் என்பதையும் அதை நான் இங்கே பதிவிடும் வாய்ப்பும் கிடைத்தமை குறித்து உவகையும் பெருமையும் கொள்கிறேன் .

அடுத்த பதிவுடன் நிறைவடையும்                          அன்பன்      ராமன்     மதுரை

 


Quote
Share: