Notifications
Clear all

ARTICLE 49 & 50 ெல்லிசை மன்னர் நினைவுகள்


Salem Ganesh
(@salem-ganesh)
Active Member
Joined: 4 months ago
Posts: 18
Topic starter  

ெல்லிசை மன்னர் நினைவுகள் 49 :
22.6.2014 அன்று மன்னரின் பிறந்த நாளை ஒட்டி ரஷ்யன் கல்சுரல் அகாடமியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில் மன்னர் இசையமைத்து 1970.ல் வெளிவந்த THRILLING THEMATIC TUNES OF M.S.VISWANATHAN என்ற இசைத்தட்டை AUDIO C.D. வடிவில் RE LAUNCH செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முக்தா ஸ்ரீநிவாசன் முத்துலிங்கம் புலமைப்பித்தன் கங்கை அமரன் ராஜ்குமார் G.S. மணி ஆகியோர் கலந்துக் கொண்டு மன்னரை பாராட்டி பேசினர்.மன்னர் ஒரே ஒரு விஷயம் மட்டுமே ஆசைப்பட்டார்.தன்னுடைய முன்னோடிகள் அனைவரின் படமும் மேடையில் இருக்க வேண்டும் என்பதே அந்த ஆசை. அவர் விருப்பப்படி எல்லா முன்னோடி இசையமைப்பாளர்களின் படமும் மேடையில் இடம் பெற்றது. அதை கண்ட மன்னருக்கு பெரும் மகிழ்ச்சி. மலர் தூவி மரியாதை செய்தார். மன்னருடன் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது கூட எனக்கு தெரியாது மன்னருடன் நான் கலந்துக் கொள்ளும் கடைசி நிகழ்ச்சி அது என்று.
மன்னரின் தளர்வுக்கு காரணம் என்ன என்று யோசித்தேன். கவிஞர் கண்ணதாசன் மறைந்து விட்டார்.மக்கள் திலகம் மறைந்து விட்டார். பெற்ற தாயாரும் மறைந்து விட்டார்.நடிகர் திலகமும் மறைந்து விட்டார். கட்டிய மனைவி 2012 ல் மறைந்து விட்டார். அந்த துயரில் இருந்து மீள்வதற்குள் 2013 தனது பார்ட்னரான ராமமூர்த்தி, தனது கலையுலக தோழர்கள் T.M.S. P.B.S., கவிஞர் வாலி அனைவருமே மறைந்து விட்டனர். ஒரே வருடத்தில் இத்தனை பேரும் பிரிந்தது மன்னர் மனதை வெகுவாக பாதித்திருக்கும் .அவருடன் நெருக்கமாக பழகிய பெரும்பாலோர் இல்லாத நிலை. அதன் வெளிப்பாடு மற்றும் மன்னரின் உடல் நிலை ஏற்படுத்திய தளர்வு அது. இத்தனை இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் ரசிகர்களுக்காக அவர்களின் அன்பிற்காக வந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் எனக்கு இன்னொரு நினைவும் வந்தது.கலைஞர் டிவியில் ரசிகன் என்றொரு நிகழ்ச்சி வரும். அதில் 50வது வார நிகழ்ச்சியாக மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி நடந்தது. புலமைப்பித்தன் நடுவராகவும் திரு.அப்துல் ஹமீத் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தனர். சேலம் அணியில் நானும், தூத்துக்குடி அணியில் ரமேஷும் சென்னை அணியில் சபேசனும் ஈரோடு அணியில் இளங்கோவும் கலந்துக் கொண்டோம். அந்த நிகழ்ச்சிக்கும் தன் ரசிகர்களுக்காகவே மன்னர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு எங்களை வாழ்த்தினார்.
பிறந்தநாள் விழா முடிந்து மேடையிலிருந்து இறங்கிய போது மன்னரின் கையை பிடித்த படி அழைத்து வந்தேன். எனக்கு முன்னால் திரு. S.A. ராஜ்குமார் அவர்கள் கூட்டத்தை விலக்கி மன்னர் வர வழி செய்தார்.
எல்லா இசையமைப்பாளர்களும் மன்னரை தங்களது சொந்த அண்ணனாகவே நினைத்து அன்பு செலுத்தியதை மன்னரின் பேத்தி திருமண நிகழ்ச்சியில் கண்டேன். மன்னர் மாலை ரிசப்ஷனில் ஹாலின் வாசலில் அமர்ந்து வருபவர்களை வரவேற்க காத்திருந்த போது மன்னரை சுற்றி தேவா, கங்கை அமரன், கணேஷ், ராஜ்குமார் போன்றவர்கள் அமர்ந்து பேச அவர்களுடன் நானும் அமர்ந்து அந்த காட்சியை ரசித்தேன்.

மெல்லிசை மன்னர் நினைவுகள் 50 :
எனக்கொரு பழக்கமுண்டு திரைத்துறையை சேர்ந்த எந்த கலைஞரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களிடம் மெல்லிசை மன்னர் பற்றிய கருத்துக்களை கேட்டறிவேன். அதில் மன்னரை பற்றி பல சுவையான விஷயங்கள் கிடைக்கும்.
தம்பி அவருக்கு சரியாக காது கேக்கறதில்லே. என் கிட்ட கேளுங்க நான் அவருக்கு புரிய வைக்கிறேன் என்று கோவர்த்தனம் மாஸ்டரின் மனைவி கூற, அவரிடமே கேள்வியை கேட்டேன். சில விஷயங்களை மாஸ்டரிடம் கேட்டு சொன்னார். சிலவற்றுக்கு தானே பதில் கொடுத்தார்.
சார் மெல்லிசை மன்னரிடம் நீங்க எப்போது சேர்ந்தீங்க? எந்த படம் கடைசி படம்?
விஸ்வநாதன் கிட்டே நான் பாசம் படத்தோட கம்போசிங் போது சேர்ந்தேன். அபாரமான திறமைசாலி.
அவர் போடற மெட்டுக்கு நான் ஸ்வரம் எழுதுவேன். பல சமயங்களில் அவர் பாடுவதை கேட்டு அப்படியே பாடி காட்டுவேன்.ஆர்க்கெஸ்ட்ரா கண்டக்ட் பண்ற வேலையை செய்வேன். விஸ்வநாதனுக்கு கோபம் வந்தால் சரியான சத்தம் போடுவார். அவரிடம் திட்டு வாங்காத ஆளே இல்லை. ஆனால் ரிகார்டிங் முடிந்த கையோடு எல்லாத்தையும் மறந்திடுவார்.அவரோட வேகத்துக்கு ஈடு கொடுக்கறது எங்க எல்லோருக்குமே கஷ்டம்.ஒரு சில படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகும் போது நான் இசையமைப்பேன். ஆனால் தமிழில் அவர் போட்ட பாடல்களை அப்படியே தெலுங்கில் போட்டுடுவேன். போலீஸ்காரன் மகள் படத்தை தெலுங்கில் எடுத்த போது நான் ஒரு பாட்டு போட்டேன் மீதியை தமிழில் இருந்து போட்டுட்டேன்.
எனக்கு முழு சுதந்திரம் விஸ்வநாதனிடம் உண்டு.நான் தனியா படம் பண்ணும் போது அதில் தலையிடவே மாட்டார்.
சார் நீங்க மன்னரோட பணியாற்றிய கடைசி படம் எது சார்?
இந்த கேள்வியை தெலுங்கில் சத்தமாக மொழி பெயர்க்காமல் திருமதி. கோவர்த்தனம் தானே பதில் சொல்ல ஆரம்பித்தார்.
புன்னகை படம் தான் கடைசி படம் தம்பி. ரீரிகார்டிங் போது உள்ளே ஒரே வெப்பமாம் தம்பி. சட்டை எல்லாம் கழற்றி விட்டு பனியனோட வேலை செய்துக்கிட்டு இருந்தார். என்ன தப்பு ஆச்சு தெரியலை விஸ்வநாதன் கடுமையாக திட்டிட்டாராம். எப்பவுமே இவருக்கு கோபம் வராது, ஆனால் அன்று பாலசந்தர் முன்னாலேயே விஸ்வநாதன் திட்டியதாலே இவருக்கும் கோபம் வந்து அப்படியே பாதி ரீரிகார்டிங்கிலேயே கிளம்பி வந்துட்டார். விஸ்வநாதன் சமாதானம் சொல்லியும் இவர் கேக்கலை. அடுத்த நாளும் விஸ்வநாதன் கூப்பிட்டு பார்த்தார் இவர் போகலை என்று மனைவி சொல்ல கோவர்த்தனம் மாஸ்டர் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு உடம்பு சரியில்லாத போது விஸ்வநாதன் ரொம்ப ஹெல்ப் பண்ணினார் என்று மாஸ்டர் முடித்தார்.
மன்னருக்கு அடுத்து நான் பார்த்த வெள்ளை மனம் படைத்த மனிதர் திரு. P.B.S. அவர்கள். முதன் முதலாக உட்லண்ட்ஸ் ஓட்டலில் சந்தித்து பேசினேன். மறு முறை ஒரு கச்சேரிக்காக நானும் எனது நண்பரும் பார்த்த போது PBS அவர்கள் ஒரு தொகை கேட்டார். நாங்கள் ஒரு தொகை சொன்னோம். உடனே முகத்தை சிரித்தவாறு வைத்துக் கொண்டு, நான் கேட்ட தொகையை கொடுத்தால் இப்படி வருவேன் , நீங்க கொடுக்கும் தொகைக்கு என்று கூறி முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டு இப்படி தான் வர முடியும் என்றார். பரவாயில்லை இப்படியே வாங்க. எங்களுக்கு உங்க குரல் தான் முக்கியம் என்றவுடன் சிரித்து விட்டார். கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளம் கொண்டவர் P.B.S.
கலைஞர் டிவியில் வந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சிக்கு நானும் அந்தோணிராஜ் என்பவரும் பாடல்கள் பற்றிய விவரங்களை கொடுத்து வந்தோம். இந்த வாய்ப்பு எனக்கு நவ்ராக்ஸ் ஸ்ரீதர் மூலம் கிடைத்தது. என்னிடம் ஒரு மூவாயிரம் பாடல்களுக்கு என்ன படம் யார் பாடியது யார் இசை யார் எழுதியது எந்த வருடம் வெளிவந்தது போன்ற விவரங்கள் உள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரித்த லிபர்டி மீடியா பாடல் பட்டியலை அனுப்புவார்கள் நான் விவரங்களை அனுப்புவேன். இந்த நிகழ்ச்சியின் ரிகார்டிங்குகளுக்கு செல்வேன். முதல் முறை செல்லும் முன் மன்னரை பார்த்து பேசி விவரங்களை சொல்லி ஆசி பெற்று சென்றேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் P.B.S. அவர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.அவர் எனக்கு வைத்த பெயர் மீசை. ஒரு நாள் P.B.S. அவர்களிடம் மன்னரை பற்றி கேட்கலாம் என்று நினைத்த போது அவர் என்னிடம், எனக்கு ஒரு ஆசை நிறைவேற்றுவீங்களா என்றார். என்ன சார் சொல்லுங்கள் என்றேன். அவர் ஆசையை கேட்ட எனக்கு சிரிப்பு தான் வந்தது.இப்படி ஒரு ஆசையா?


Quote
Share: