Notifications
Clear all

ARTICLE 46 47 48 மெல்லிசை மன்னர் நினைவுகள்


Salem Ganesh
(@salem-ganesh)
Active Member
Joined: 4 months ago
Posts: 18
Topic starter  

மெல்லிசை மன்னர் நினைவுகள் 46 :
சரணாலயம் படத்தின் பாடல் ஒலிப்பதிவு. பயணங்கள் முடிவதில்லை வெற்றி இயக்குநருடன் மன்னர் இணைகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கம். இது வரை எத்தனையோ கம்போசிங்குகள் ரிகார்டிங்குகள் ரீ ரிகார்டிங்குகள் மன்னரது பார்த்திருந்தாலும், இந்த படத்திற்கு குறிப்பாக இந்த பாடல் பதிவின் முன் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தேன்.இது சத்தியம். காரணம் இந்த இயக்குநர் வேறு தலைமுறையை சேர்ந்தவர், மன்னருக்கு பழக்கமில்லாதவர். ஒரு 20 வயது இளைஞனுக்கு தேவையில்லாத கவலைகள். ஆனால் பிறந்தது முதல் மன்னரின் இசையை கேட்டு வளர்ந்த ஒரு பரம ரசிகனுக்கு மனதில் அன்று மட்டும் ஏற்பட்ட குழப்பம்.
ஒலிப்பதிவாகப் போவது ஒரு டூயட் என்பது SPB சுசிலா வருகையில் புரிந்தது. மன்னர் பாடலை சொல்லிக் கொடுத்தார்.இணைப்பிசையை மன்னர் வாசித்து காட்ட சொல்லும் போதே ஒன்று புரிந்தது இங்கே இயக்குநர் மட்டுமல்ல மன்னரே புதியவராக காட்சியளித்தார்.
ஸ்வரங்கள் சொல்வது ஹம்மிங் என்று சுசிலாவும் SPB யும் மன்னரிடம் பாடி காட்டும் போது , அதை டேக்கிற்கு முன் இரண்டு மூன்று முறை பாடி காட்டிய போதே இது நிச்சயம் ஒரு ஹிட் பாடல் தான் என்பது உறுதியானது. முகப்பிசை மட்டும் வாசிக்க சொல்லி மன்னர் திருத்தங்கள் செய்தார். மீண்டும் மீண்டும் முகப்பிசை வாசிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது.டேக்கிற்கு தயாரானார் மன்னர்.
நெடுநாள் ஆசை ஒன்று எந்தன்
நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணமில்லாதவள் அல்ல
சுசிலாவின் தொடக்கமே இனிமையோ இனிமை.
அதை நேரிடையாக சொல்ல என்ற வரியை மன்னர் சொல்லிக் கொடுத்தது போலவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஸ்டைலில் பாடி அசத்தினார் SPB. பாடல் பதிவு நடக்கும் போதே ட்யூன் மனதில் நன்றாக பதிந்து விட்டது.
பாடல் ஒலிப்பதிவு முடிந்ததும் முழு பாடலையும் பாடகர்களும் ஆர்க்கெஸ்ட்ராவினரும் கேட்பது வழக்கம். இந்த பாடல் முடிந்து கேட்கும் போது பாடலை எஞ்சினியர் ரூமில் கேட்ட SPB அதை நேரிடையாக சொல்ல என்ற வரி பாடும் போது தானும் இயக்குநர் சுந்தர்ராஜன் முகத்துக்கு எதிரே கையை ஆட்டிய படி அந்த வரியை ரசித்து பாட சுந்தரராஜன் முகத்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சி.
மன்னர் கிளம்பும் முன் கைகளை பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.
ஒலிப்பதிவு கூடத்தை விட்டு ரோட்டிற்கு வந்தால் வழக்கமான இரைச்சல்கள். அந்த போக்குவரத்து இரைச்சல்களுக்கு நடுவிலும் அந்த மென்மையான டூயட் மட்டும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அண்ணே உங்களிடம் ஒரு உதவியை எதிர்பார்க்கிறேன். முதல் முறையாக மன்னரிடம் கேட்ட போது என்னை நிமிர்ந்து பார்த்தார்.என்ன தம்பி சொல்லுங்க.

மெல்லிசை மன்னர் நினைவுகள் 47 :
கலாகேந்திரா என்ற பெயரில் அமைப்பை தொடங்கி மாதம் தோறும் கச்சேரி மற்றும் நாடகங்கள் நடத்த நெல்லை கண்ணன் முடிவு செய்தார். நெல்லை கண்ணன் அவர்கள் சேலத்தில் வெற்றிகரமாக பல நாடகங்களை கச்சேரிகளை அரங்கேற்றிய அமெச்சூர் ஆர்ட்ஸின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவர். அமெச்சூர் ஆர்ட்ஸிலிருந்து ரிடையர் ஆன பிறகு அவரது எதிர்காலத்திற்காக அவர் எடுத்த முடிவு இது.
இனியவை நாற்பது என்ற பெயரில் நாற்பது பாடல்களை வடிகட்டி செலக்ட் செய்தோம். முதல் நிகழ்ச்சியாக ஆர்க்கெஸ்ட்ராவிலிருந்து தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு நவ்ராக்ஸ் ஸ்ரீதர் அவர்கள் புக் செய்யப்பட்டார். 40 பாடல்கள் கண்டிப்பாக பாடப்பட வேண்டும். அப்போது தான் இனியவை நாற்பது என்ற டைட்டில் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
கணேஷ் நீங்க MSV ஐ கூட்டிட்டு வந்தால் அவரை சிறப்பு விருந்தினராக போடலாம். அவரை விட்டே குத்து விளக்கை ஏற்றி கலாகேந்திராவை தொடங்க வைக்கலாம் என்றார் கண்ணன்.
சார் கலாகேந்திரா ஏற்கனவே K.B. சாரின் நிறுவனத்தின் பெயர். அதில் எதுவும் சிக்கல் வராமல் பார்த்துக்கங்க என்றேன். பிரச்சனை வந்தால் கலை கேந்திரா என்று பெயர் மாற்ற முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் மன்னரை சந்தித்த நான் அண்ணே உங்களிடம் ஒரு உதவியை எதிர்பார்க்கிறேன் என்றவுடன் சொல்லுங்க தம்பி என்றார். என் நண்பர் ஒரு அமைப்பை தொடங்குகிறார். அதில் நாடகம் கச்சேரி எல்லாம் போடப் போகிறார்.நீங்க வந்து சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு நீங்களும் அம்மாவும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கணும். எப்போ தம்பி இது? அண்ணே இன்னும் இரண்டு மாசம் இருக்கு. இப்போது சேலம் விமான போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளதால் ரயிலில் உங்களையும் அம்மாவையும் அழைத்து வந்து மீண்டும் சென்னையில் விடறேன் என்றேன்.
தம்பி இப்போது இருக்கும் உடல்நிலையில் என்னால் அலைவது சிரமம். இருந்தாலும் நிகழ்ச்சிக்கு ஒரு பதினைந்து நாட்களுக்கு முன் தொடர்பு கொள்ளுங்க சொல்றேன் என்றார்.
ஆனால் ரயிலில் வந்து போவது சிரமமாக இருந்ததால் மன்னரால் வர முடியாத நிலையை சொன்னார்.
மன்னர் வரவில்லை என்றதும் துவக்க விழா கைவிடப் பட்டு, கச்சேரி மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒரு நாள் நவ்ராக்ஸ் ஸ்ரீதர் மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்து வருவதாக சொன்னார்.
மறு நாளே மன்னரிடம் விஷயத்தை கூறினேன். தம்பி என்னால வர முடியாவிட்டாலும் அண்ணன் வரார். அவரை கூட இருந்து பார்த்துக்கங்க என்றார்.
ஸ்ரீதருடன் ராமமூர்த்தி அவர்கள் வந்தார். நான் காலை 11 மணிக்கு ஓட்டலுக்கு சென்றேன். அறிமுகப் படுத்திக் கொண்டேன். விசு தம்பி சொன்னார் நீங்க வருவீங்க னு என்றார். MSV TIMES.COM துவக்க விழாவில் ஒரு மூன்றெழுத்து கவிதை படித்திருந்தேன். அதை நினைவு வைத்திருந்தார். சார் உங்க கூடவே அண்ணன் இருந்து கவனிச்சுக்க சொன்னார் என்றவுடன் ராமமூர்த்தி அவர்களுக்கு மகிழ்ச்சி. அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். மதியம் அவருக்கு என் கையால் ஓட்டல் உணவை பரிமாறினேன். சார் என்னை உங்களுக்கு அண்ணன் மகாலிங்கபுரம் கோயிலில் ஏற்கனவே அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்பதையும் நினைவுப் படுத்தினேன்.மதியம் மன்னரை தொடர்பு கொண்டேன் கிடைக்கவில்லை. மாலை மீண்டும் மன்னருக்கு போன் செய்த போது பேசினார். ராமமூர்த்தி அண்ணன் கூட தானே இருக்கீங்க. அண்ணனை நல்லா கவனிச்சுக்கங்க. அண்ணன் சாப்பிட்டாரா என்றவுடன் போனை ராமமூர்த்தி அவர்களிடம் கொடுத்தேன். பேசினார். கணேஷ் என் கூடவே தான் இருக்காரு என்றார்.
ஒரு நிமிடம் யோசித்தேன். மன்னரால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. வேறு யார் வந்தால் என்ன என்று இருக்காமல் ராமமூர்த்தி வருகிறார் என்று தெரிந்தவுடன் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார். மன்னரை பொறுத்த வரை நட்போ பாசமோ அவர் என்றுமே ஒரே மாதிரி தான் இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். நினைக்க தெரிந்த மனமே பாடல் ஏனோ தேவையில்லாமல் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அன்றிரவு கச்சேரி முடிந்து ராமமூர்த்தி அவர்களுக்கு இரவு 11 மணிக்கு ரயில். ஆனால் ரயில் வந்ததோ அதிகாலை 2.45 மணிக்கு. அதுவரை ரயில் நிலையத்தில் ஜி.ராமனாதன், கே.வி.மகாதேவன் மற்றும் பழைய பாடல்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்.

மெல்லிசை மன்னர் நினைவுகள் 48 :
மே 14ம் தேதி மாலை அந்த செய்தியை கேட்ட போது அதிர்ந்து போனேன். சார் MSV சார் மனைவி இறந்துட்டாங்களாம். நியூஸில் வந்தது என்று நண்பன் சொல்ல அன்றிரவே சென்னை பயணம். அம்மா மன்னரை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டவர்.மன்னரை எப்படி எதிர் கொள்வது? எப்படி தேற்றுவது? என்ன சொல்லி தேற்றுவது.? இசையை தவிர வேறு எதுவும் அறியாத குழந்தை மன்னர். தாயார் உயிரோடு இருக்கும் வரை தாயாரிடமும் பிறகு மனைவியிடமும் சம்பாதித்தை கொடுத்து விட்டு சென்றவர். இனி என்ன செய்வார்?
பஸ் முன்னோக்கி செல்ல நினைவுகள் பின்னோக்கி சென்றன. சில சமயம் பிறந்த நாளன்று நான் அவருக்கு போடும் மாலையை பக்கத்தில் இருக்கும் அம்மாவின் கழுத்தில் போட்டு HAPPY BIRTHDAY திருமதி. ஜானகி விஸ்வநாதன் அவர்களே என்று கூறி சிரிப்பார். காரணம் மன்னர் பிறந்த நாளுக்கு முதல் நாள் அம்மாவின் நட்சத்திர பிறந்த நாள். இரண்டு குழந்தைகளை பார்ப்பது போலிருக்கும்.
திருச்சி சங்கம் ஓட்டலில் மன்னரும் அம்மாவும் தங்கியிருந்த போது அம்மா என்னிடம் மனம் விட்டு பேசினார். தம்பி கணேஷ் உங்க அண்ணன் என்ன பண்ணுவார் தெரியுமா? என்று ஒரு குழந்தை போல் அம்மா ஏதோ ஒன்று சொல்ல வர, அறையில் அங்கும் இங்கும் நடை போட்டுக் கொண்டிருந்த மன்னர் தம்பி சேலம் கணேஷ் அவர்களே உங்க இரண்டு கையாலும் உங்க காதை பொத்திக்கங்க. எதையும் கேட்காதீங்க என்று ஒருவருக்கு ஒருவர் கிண்டலடித்துக் கொண்ட காட்சி நெஞ்சில் நிழலாடியது.
உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி. பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி என்று பின்னாளில் கவிஞர் எழுதியிருந்தாலும், அது அம்மாவிற்கும் மன்னருக்கும் மிக மிக பொருந்தும் வரிகள்.
ஏற்காடு செல்லும் வழியில், கேட்டீங்களா தம்பி உங்க அண்ணன் ஆசையை? குரங்கு குட்டிக்கு சட்டை ட்ராயர் போட்டு வளர்த்தணுமாம் என்று சொல்லி குழந்தையை போல் சிரித்த காட்சி நிழலாடியது.
மன்னரின் 55 வது ஆண்டு திருமணநாள் வாழ்த்து நிகழ்ச்சி தான் நான் சின்ன திரையில் செய்த முதல் நேரலை. புலவர் புலமைப்பித்தன், T.M.S. செல்வகுமார் , இயக்குநர் S.P. முத்துராமன் மெகா டிவி ஆதவன், நவ்ராக்ஸ் ஸ்ரீதர், ஆகியோரிடம் முன்பே சொல்லி வைத்து, அவர்களை நான் தொலைபேசியில் அழைத்ததும் அவர்கள் மன்னரையும் அம்மாவையும் வாழ்த்தி பேசினார்கள். இடையிடையே மன்னரின் பாடல்களை ஒளிபரப்பி ஒரு மணி நேரம் லைவ் செய்த விஷயத்தை அம்மாவிடமும் மன்னரிடமும் சொன்ன போது இருவரும் என்னை வாழ்த்தினர்.
இரவு சரியான தூக்கமில்லை. கையில் மாலையுடன் மன்னர் வீட்டுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7 மணி. ப்ரீஸர் பாக்ஸ் குள் அம்மாவை பார்த்து கண்ணீர் விட்டேன். மாலையை அணிவித்து வணங்கினேன். மன்னரை பார்க்கும் தைரியம் வரவில்லை. மெல்ல திரும்பி பார்த்தால் மன்னர் அங்கு இல்லை. அப்போது தான் மாடிக்கு அழைத்து சென்றதாக கேள்விப்பட்டு மாடிக்கு சென்றேன். மிக மிக தளர்ந்த நிலையில் மன்னர் இருந்தார்.அருகில் பேரன் பேத்திகள். மன்னரின் கையை பிடிக்கும் போது நடுக்கத்தை உணர்ந்தேன். கண்களில் கண்ணீர் பெருகியது. என்னால் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? கண்ணீர் மட்டுமே இருவருக்கும் பொதுவானது. மன்னர் அருகில் அமர்ந்தேன். அண்ணே நீங்க தைரியமாக இருக்கணும். உங்க உடல் நிலை முக்கியம். வார்த்தைகள் ஆயிரம் சொன்னாலும் சாதாரண நிகழ்வா அது?
போனால் போகட்டும் போடா பாடலை கொடுத்த மன்னர் அதே விரக்தி நிலையில் இருந்தார். கீழே விஐபிக்கள் வந்த விஷயம் தெரிந்து கீழே இறங்கி போனார். இளையராஜா SPB இருவரும் மன்னரை பார்த்து கண்கலங்கினர். மன்னர் அவர்களோடு அமர, சற்று தூரத்திலிருந்து மன்னரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.எத்தனையோ பேருக்கு தன் இசையால் மன ஆறுதலை தந்த மன்னர் இன்று மன உளைச்சலில் இருக்கிறாரே.மன்னரை எப்போதும் சுறுசுறுப்பாக பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு தளர்ந்த நிலையில் மன்னரை பார்க்கும் போது துக்கம் பீறிட்டது.இறுதி வரை இருந்து விட்டு முதல் முறையாக மன்னரிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினேன்.


Quote
Share: