Notifications
Clear all

ARTICLE 43 44 45 மெல்லிசை மன்னர் நினைவுகள்


Salem Ganesh
(@salem-ganesh)
Active Member
Joined: 4 months ago
Posts: 18
Topic starter  

மெல்லிசை மன்னர் நினைவுகள் 43 :
அறிவு, திறமை, முயற்சி , கடமை புரிஞ்சுக்கோ. இவை நாலும் இருந்தால் நலம் பெறலாம் என்று தெரிஞ்சுக்கோ. சோறு போட்டு படிக்க சொன்னவன் பேரை சொல்லுங்க பிள்ளைகளே ....பாடல் வரிகளுக்கு மன்னர் மெட்டமைத்துக் கொண்டிருந்தார். இடம் AVM C தியேட்டர். தியேட்டரே விழாக் கோலம் பூண்டிருந்தது. ஏகப்பட்ட V.I.P.கள். படத்தின் பெயர் உங்களில் ஒருவன். இயக்குநர் ரஞ்சித்குமார்.
சார் நீங்களே ஹீரோ மாதிரி இருக்கீங்க என்று சிலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்.திடீரென்று பரபரப்பு. அமைச்சர் கா. காளிமுத்து வந்தார். மெல்லிசை மன்னர் அருகில் அமர்ந்தார். இந்த பாடல் அவர் எழுதிய பாடல் என்ற பேச்சு அங்கிருந்தது. ஆனால் கவிஞர் வாலியும் வந்திருந்தார். அவர் பூஜைக்கு வந்தாரா? இல்லை பாடல் அவர் எழுதியதா? தெரியவில்லை. மன்னர் பல்லவியை கம்போஸ் செய்து முடிக்கவும், ஏதோ மீட்டிங்கிற்கு வந்தது போல் அனைவரும் கை தட்டினர். மீண்டும் பரபரப்பு. S.P.B. வந்தார். SPB மன்னர் காளிமுத்து கவிஞர் வாலி நால்வருக்கும் இயக்குநர் ரஞ்சித்குமார் மாலைகள் அணிவித்தார். மன்னர் கோரஸ் செக்ஷனுக்கு வந்து ஹம்மிங் சொல்லிக் கொடுத்தார். S.P.B. அ னா என்றவுடன் கோரஸ் அ னா என்பார்கள். தி னா என்றதும் கோரஸ் தி னா என்பார்கள் மு னா என்றதும் கோரஸ் மு னா என்பார்கள் க னா என்றதும் கோரஸ் க னா என்பார்கள். உடனே SPB அறிவு திறமை முயற்சி கடமை புரிஞ்சுக்கோ இவை நாலும் இருந்தால் நலம் பெறலாம் என்று தெரிஞ்சுக்கோ என்று பாட கோரஸும் ரிபீட் செய்வார். தொடர்ந்து SPB சோறு போட்டு படிக்க சொன்னவன் பேரை சொல்லுங்க பிள்ளைகளே என்று பாடத் துவங்குவார். மிகவும் இனிமையான பாடல். சூப்பர் ஹிட் ஆக வேண்டிய பாடல் படமாக்கப் படவில்லை. பாடல் பதிவுடன் நின்றது.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புகழ் பாடும் ஒரு பிரச்சார பாடல். மக்கள் திலகத்திற்கும் தனக்கும் உள்ள பந்தத்தை மெல்லிசை மன்னர் அடிக்கடி கூறுவார். தம்பி என்னை விட என் தாயிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர். ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்றால் என் தாய் மூலம் போனால் நான் மறுக்க மாட்டேன் என்பதை அறிந்தவர்.
அதிமுக தொடங்கப் பட்ட போது அதில் சினிமா துறையை சேர்ந்த யாரை எல்லாம் சேர்க்கலாம் என்று ஒரு பட்டியல் எம்.ஜி.ஆரிடம் தரப்பட்டது. அதில் ஏழாவதாக இருந்தது என் பேர் தம்பி. பட்டியலை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர். முதலில் என் பேரை அடித்தார். அவர் சொன்ன விளக்கம் என்னை கண்கலங்க செய்தது தம்பி.
விசு எல்லோருக்கும் பொதுவானவர். அவர் தம்பி கணேசன் படத்துக்கும் ஒர்க் பண்ணுவார்.என் நண்பர் கருணாநிதி படத்துக்கும் ஒர்க் பண்ணுவார். திரு. சோ அவர்கள் படத்துக்கும் ஒர்க் பண்ணுவார். விசுவை ஒரு வட்டத்துக்குள் அடைக்க கூடாது. மேலும் விசுவிற்கு இசையை தவிர ஒன்றும் தெரியாது. அவரை கட்சியில் சேர்த்தால் அவருடைய தொழிலுக்கு பாதிப்பு வரும் என்று சொன்னார் தம்பி என்று கூறி கண்கலங்குவார். ஜெனோவா படத்தில் என்னை வேண்டாம் என்று சொன்னவரும் அவர் தான். ஒரு காலத்தில் விஸ்வநாதன் இசையமைக்க ஒப்புக் கொண்டால் மட்டும் நான் அந்த படத்தில் நடிக்கறேன்னு சொன்னவரும் அவர் தான்.எம்.ஜி.ஆர் படங்களுக்கு இசையமைப்பது என்பது எனக்கு ஒரு சவாலாக இருக்கும். பல சமயங்களில் சங்கடமாகவும் இருக்கும். என்னடா இப்படி பிழிந்து எடுக்கறாரே என்று. ஆனால் அது தான் என் வெற்றிக்கு அடிக்கல்லாக அமைந்தது என்பார்.
பிள்ளையோ பிள்ளை படத்தில் மு.க. முத்துவை பாட வைக்க வேண்டும் என்பது அன்றைய முதல்வர் கருணாநிதியின் விருப்பம். படத் துவக்க விழாவிற்கு ஒரு மூன்று நாள் இருக்கும் போது ஒரு நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டு இருந்தாங்க. அதில் மேடையில் மு.க.முத்து பாடல்களை பாடினார். அவர் பாடியதும் என்னை பேச கூப்பிட்டாங்க. நான் சொன்னேன். தம்பி மு.க.முத்து வாய்ஸ் நல்லா இருக்கு. ஆனால் இன்னும் நல்லா பிராக்டிஸ் பண்ணனும் என்று மனதில் பட்டதை பேசிட்டேன் தம்பி. அப்புறம் தான் பார்த்தால் கருணாநிதி மேடைக்கு முன்னால் உட்கார்ந்திருக்கார். நான் அதை எல்லாம் மறந்துட்டு பேசிட்டேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு பேராசிரியர் கூட என்ன விசு இப்படி பேசிட்டீங்க ? முதல்வர் என்ன நினைப்பார்? என்றார். சிலர் பிள்ளையோ பிள்ளை படத்தை மறந்துடுங்க. மியூசிக் டைரக்டரை மாற்ற தான் போறாங்க என்றனர். எனக்கே ஒரு மாதிரி இருந்தது. ஆனால் நடந்தது வேற தம்பி. அன்றைக்கு நைட் ஒரு ஒரு மணி சுமாருக்கு எனக்கு போன் வருது. இந்த நேரத்தில் யாருன்னு போனை எடுத்து பேசினால் விசு நான் கருணாநிதி பேசறேன்யா. நீ சொன்னது ரொம்ப சரி. அவனுக்கு இன்னும் பயிற்சி வேணும். நீ பிள்ளையோ பிள்ளை படத்தில் சௌந்தரராஜனை பாட வச்சுக்கோ.முத்துவிற்கு பிறகு வாய்ப்பு கொடு என்றார்.அதற்கு பிறகு நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா பாடல் மூலம் முத்துவை அறிமுகப் படுத்தினேன் தம்பி என்றார். இப்படி கட்சிகளை கடந்து அனைவராலும் விரும்பப்பட்டவர் அனைவருக்கும் நண்பரானவர் மன்னர்.
நினைவுகள் தொடரும்.

மெல்லிசை மன்னர் நினைவுகள் 44 :
மெல்லிசை மன்னர் தனக்கு நெருங்கியவர்களிடம் சில விஷயங்களை மனம் விட்டு பேசுவார். எனது ஆருயிர் நண்பர்கள் தூத்துக்குடி ரமேஷ் சபேசன் மற்றும் என்னிடம் அவர் சொன்ன விஷயங்கள் பல. அதில் ஒன்றை இன்று உங்களுடன் பகர்கிறேன்.
1976ம் ஆண்டு ஒரு நாள் கவிஞர் கண்ணதாசனை தஞ்சாவூர் ஆர்ச் பிஷப் திரு. ஆரோக்கியசாமி தலைமையில் ஏழெட்டு பேர்கள் சந்திக்கின்றனர். அவர்கள் எட்டு பாடல்களுடன் சந்திக்கின்றனர். திரு. குழந்தைராஜன், தஞ்சை ஏசுதாசன், பரசுராமன், திருமதி. ரூபி ஜோசப் ஆகியோர் அந்த பாடல்களை எழுதியுள்ளனர். அவர்கள் கண்ணதாசனை சந்தித்து அந்த பாடல்களுக்கு மன்னர் இசையமைக்க வேண்டும் என்றும் அதற்கு கவிஞர் சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். கவிஞர் கண்ணதாசனும் மன்னருக்கு போன் செய்து விவரத்தை கூறி,அவர்களை மன்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.அன்று ஞாயிற்றுக்கிழமை . மாலை அவர்கள் மன்னர் வீட்டுக்கு வருகின்றனர்.மன்னர் பொதுவாக ராகு காலத்தில் எதையும் செய்ய மாட்டார்.ஆனால் அவர்கள் வந்ததோ மாலை 4.30 மணிக்கு. வந்தவர்கள் மன்னரிடம் பேசி விவரங்களை சொல்லி விட்டு பாடல்களை தருகின்றனர். மன்னருக்கோ தர்ம சங்கடம். ஆனாலும் இது ஏதோ தெய்வ செயல் நாம் தட்டிக் கழிக்க கூடாது என்று மெட்டமைக்க தொடங்குகிறார். மன்னர் தொடங்கும் முன் வந்திருந்தவர்கள் ஒரு மெழுகுவர்த்தியை டேபிளில் ஏற்றி வைக்கின்றனர். சார் இந்த மெழுகுவர்த்தி எரிந்து முடியும் முன் நீங்கள் பாடல்களுக்கு மெட்டமைக்க வேண்டும் என்கிறார்கள். மன்னர் மெட்டமைக்க தொடங்குகிறார். அதில் ஒரு பாடல் மன்னருக்கு மெட்டில் அடங்கவில்லை. ஆனால் வந்தவர்களோ இந்த பாடல்களில் எந்த வரியையும் மாற்ற முடியாது, மாற்ற கூடாது என்று மன்னரிடம் முன்பே சொல்லி விடுகின்றனர்.
பாதி மெழுகுவர்த்தி கூட எரியாத நிலையில் மன்னர் எட்டு பாடல்களுக்கும் மெட்டமைத்து விட்டார்.ஒரு வரியை கூட மாற்றவில்லை. வந்தவர்கள் அதிசயித்தனர். அவர்களுக்கு பரம திருப்தி.மன்னருக்கும் மெழுகுவர்த்தி எரிந்து முடிக்கும் முன் மெட்டமைத்து விட்டோமே என்ற திருப்தி. ரிகார்டிங் தேதியை அவர்கள் முடிவு செய்து விட்டு செல்கின்றனர்.
இரவு கவிஞரிடமிருந்து போன். என்னடா விசு ஆச்சு?
கவிஞரே அவங்க கேட்ட படியே ஒரு வார்த்தை கூட மாற்றாமல் மெட்டமைத்து விட்டேன். அவங்களுக்கு திருப்தி. ஆனால் ஒன்று புரியலை கவிஞரே அந்த மெழுகுவர்த்தி எரியறத்துக்குள்ள மெட்டமைக்க சொன்னாங்க. அது என்ன தாத்பரியம்?
அது நான்தான்டா சொல்லி அனுப்பினேன். என் தம்பி விசு எவ்வளவு வேகமாக கம்போஸ் பண்ணுவான் என்று அவங்களுக்கு தெரியணும் இல்ல.நீ தான் பாதி மெழுகுவர்த்தி முடியறத்துக்கு முன்னாடியே எட்டு பாட்டையும் கம்போஸ் பண்ணிட்டியே . ஏன்டா நான் ஒரு பாட்டை எழுதி கொடுத்தால் அதை மாத்து இதை மாத்துனு சொல்வ, ஆனால் அவங்க கொடுத்த பாடல்களுக்கு எதையுமே மாத்த சொல்லாமல் ட்யூன் போட்டிருக்க. இனி எங்கிட்ட எதையாவது மாற்ற சொல்லி பாரு தெரியும் என்று செல்லமாக கடிந்து கொண்டாராம்.
குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே
உம்மை தேடி வந்தேன் சுமை தீருமம்மா
வண்ண வண்ண லீலிமலர் அன்னை மரி நீயே ஆரோக்ய தாயே
அலை கடலின் ஓசையிலே அன்பு மொழி கேட்குதம்மா
போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் அடங்கிய வேளாங்கண்ணி ஆல்பம் தான் அது.
இந்த ஆல்பத்தின் படத்தை எனக்கு கொடுத்து உதவிய என் ஆருயிர் நண்பர் தூத்துக்குடி ரமேஷுக்கு நன்றி.

மெல்லிசை மன்னர் நினைவுகள் 45 :
கவிஞர் காமகோடியான் தான் எழுதிய வரிகளை மீண்டும் வாசித்து பார்க்கிறார். பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கவுண்ட மனி பாடுவது போல் அமைந்த பாடல்.
அட நானா பைத்தியம்
நீ தான் பைத்தியம்
சத்தியத்தை சொன்னவனும்
சொன்னதுக்கு சுட்டவனும்
எல்லாம் பைத்தியம்
இங்கே ஓட்டுகளை கேட்டவனும்
கேட்டதுக்கு போட்டவனும்
தேர்தல் பைத்தியம்
அட காலையில மந்திரியாம்
மாலையிலே எந்திரியாம்
பாவம் பைத்தியம்.
இதுல முதல் வரிக்கு அடுத்து ஒரு டூப் வார்த்தையை போட்டால் மற்ற பைத்தியங்கள் பாடுவது போல் பண்ணிடலாம்.காமகோடியான் அவர்களே அந்த முதல் வரிக்கு அடுத்து சிக்கா சிடுக்குசிக்கா சிடுக்கு சிக்கா சா என்று போடலாம் அதையே இரண்டாவது வரிக்கு அடுத்தும் போட்டுடலாம்.டூப் வார்த்தைகளை மன்னர் கொடுத்து விட்டு கம்போஸ் செய்ய தொடங்குகிறார்.
S.P.B. அவர்கள் தனக்கே உரிய ஸ்டைலில் குழுவினருடன் பாட பாடல் ஒலிப்பதிவாகிறது.
டூப் வார்த்தைகளை தருவதில் மன்னர் கில்லாடி. முத்தமிடும் நேரம் எப்போ சிவந்த மண் பாடலிலும் பாடலுக்கு முன் ஒலிப்பது மன்னரின் டூப் வார்த்தைகளே.
டப்பாங்குத்து ஸ்டைலில் அமைந்த பாடல் மன்னர் கொடுத்த டூப் வார்த்தைகளால் தான் முழுமை பெறுகிறது. அந்த வார்த்தைகள் இல்லாமல் அட நானா பைத்தியம்
நீதான் பைத்தியம் என்று பாடும் போது ஒரு தொடர்பு இல்லாதது போலவே தோன்றும்.எல்லோரையும் கிண்டலடிப்பது போல் அமைந்த அந்த பாடல் இடம் பெற்றது நூறாவது நாள் படத்தை தயாரித்த S.N.S திருமால் அவர்கள் தயாரித்த கவுண்டமணி கதாநாயகனாக நடித்த கிளி ஜோசியம் திரைப்படம். இந்த பாடல் பதிவையும் ஏறக்குறைய ஒரு ஒரு வருடம் கழித்து இந்த படத்தின் ரீரிகார்டிங் முழுவதையும் காணும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இந்த படத்தில் இந்த பாடல் ஹிட் ரகம். இதை தவிர டாக்டர். பரத்வாஜ் மற்றும் சித்ரா இணைந்து பாடும் ஒரு டூயட் மிக இனிமையாக இருக்கும். ஆனால் என்ன காரணம் தெரியவில்லை, படம் வெளிவரவில்லை. வெளி வந்த மாதிரி தெரியவில்லை. இது போன்ற சமயங்களில் மன்னர் வருத்தப் படுவது உண்டு.
மன்னர் மிகவும் எதிர்பார்த்த ஒரு படம் பத்தினிப் பெண். இயக்குநர் சக்தி அவர்கள் இயக்கிய இந்த படத்தில் பாடல்கள் இனிமையாக இருக்கும். ஆனால் படத்தின் கதாநாயகன் ஜனகராஜ் அவர்கள் டிஸ்ட்ரிபியூஷனில் கவனக் குறைவாக இருந்ததால் படத்தின் ஆடியோ வெளிவரவில்லை. படத்திலோ யூ ட்யூபிலோ மட்டுமே பாடல்களை கேட்கலாம். இது போன்ற சமயங்களில் மன்னர் தன் உழைப்பு வீணானதை எண்ணி ஆதங்கப் பட்டதுண்டு.
மை டியர் குட்டி சாத்தான், அன்னை பூமி போன்ற 3 D படங்கள் வெளி வந்த காலத்தில் சூப்பர் பாய் என்று ஒரு 3D படம் பூஜை போடப்பட்டது. பூஜையன்று மன்னரின் அதிரடி இசையில் ஒரு ஆங்கில பாடல் L.R. ஈஸ்வரி அவர்கள் பாட பதிவானது. அந்த பாடல் பதிவோடு சரி. படம் வளரவில்லை.
கிளி ஜோசியம் படத்தை தயாரித்த S.N.S. திருமால் அவர்கள் அதற்கு சில வருடங்களுக்கு முன் தயாரித்த ஒரு படத்தில் மன்னரின் இசையில் அமைந்த ஒரு பாடல் இனிமையோ இனிமை. அந்த பாடல் பதிவன்று நடந்த விஷயம்.......
நினைவுகள் தொடரும்.


Quote
Share: