Notifications
Clear all

ARTICLE 34 35 36 மெல்லிசை மன்னர் நினைவுகள்


Salem Ganesh
(@salem-ganesh)
Active Member
Joined: 4 months ago
Posts: 18
Topic starter  

மெல்லிசை மன்னர் நினைவுகள் 34:

கொஞ்சம் வெளியே போறேன் வர்றீங்களா என்று மன்னர் கேட்டால் மாட்டேன் என்றா சொல்வேன்? மன்னருடன் காரில் பயணம். ஆனால் ஆர்மோனிய பெட்டி ஏற்றப் படவில்லை. அதனால் கம்போசிங்கோ ரிகார்டிங்கோ இல்லை என்பது மட்டும் தெரிந்தது.மன்னரின் கார் சென்ற இடம் திரு. லேகா ரத்னகுமார் அவர்களின் ஆபீஸ். லேகா ரத்னகுமார் ஒரு மியூசிக் லைப்ரரி வைத்திருப்பவர். உங்களுக்கு எந்த சூழ்நிலைகளுக்கு பாட்டு தேவை என்றாலும் இவரிடம் இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு ரெடிமேடாக பாடல்கள் கிடைப்பதால் தயாரிப்பு செலவு குறையும். மன்னரின் மெட்டுக்களும் இவர் லைப்ரரியில் இருப்பதாக கேள்விப்பட்டேன். திரு. லேகா ரத்னகுமாரிடம் மன்னர் பேசும் போது இந்த விவரங்கள் தெரிந்தன. லேகா ரத்னகுமாரிடம் பேசி விட்டு கிளம்பிய கார் ஒரு வீட்டின் முன் நின்றது. மன்னர் கேட்டை திறந்து உள்ளே செல்ல பின் தொடர்ந்தேன். அப்போது தான் தெரிந்தது அது இயக்குநர் R.C. சக்தி அவர்களின் வீடு. உள்ளே இன்னொரு ஆச்சரியம். புலவர் புலமைப்பித்தனும் சக்தியும் சீட்டுக்கட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.இருவரும் மன்னரை வரவேற்க., புலமைப்பித்தன் மன்னரிடம் பேச, புலமைப்பித்தன் அவர்களின் முதுகை தட்டி பாட்டு வாத்தியாரே பார்த்து விளையாடுங்க என்கிட்ட பேசிட்டே ஜோக்கரை போட்டுடாதீங்க என்றார். ஆட்டம் முடிந்தவுடன் மன்னரும் விளையாட்டில் இணைந்துக் கொண்டார். R.C. சக்தி அவர்கள் என்னை பார்த்து சார் விளையாட வர்றீங்களா என்று கேட்க, சீட்டு மிக நன்றாக விளையாட தெரிந்தாலும் சக்தி சாரை முதன் முதலாக அவர் வீட்டில் பார்ப்பதால் தயக்கத்தில் பரவாயில்லை சார் என்றேன். மன்னர் என்னை பார்த்து விளையாட தெரிந்தால் விளையாடுங்க என்று அழைக்க நானும் இணைந்துக் கொண்டேன்.
என்னால் எதையுமே நம்ப முடியவில்லை. இப்படி எல்லாம் என் வாழ்க்கையில் நடக்கும் என்று நினைத்து பார்த்தேனா? மன்னரை பார்க்க வேண்டும் என்பது சிறு வயது ஆசை. அது நிறைவேறியதே மகிழ்ச்சி.ஆனால் சக்தி சார்? கைகளில் சீட்டுக்களை எடுத்தேனே தவிர நினைவுகள் அங்கே இல்லவே இல்லை. உணர்ச்சிகள் படம் பார்க்கும் போது நினைத்திருப்பேனா இந்த படத்தின் இயக்குநரோடு ஒரு நாள் சீட்டு விளையாடுவோம் என்று?
என்னடா கணேஷ் என்ன நடக்குது? டேய் நீ என்ன பண்ற தெரியுமாடா? நான் யார் நான் யார் நீ யார் பாடலை எழுதியவருக்கும் அதற்கு இசையமைத்தவருக்கும் நடுவில் உட்கார்ந்து சீட்டு ஆடறடா. என் மனசுக்குள் இருந்து யாரோ பேசிக் கொண்டே இருந்தார்கள். மனம் ஒரு நிலையில் இல்லாததால் என்ன ஆடுகிறேன் என்றே தெரியவில்லை. புலவர் புலமைப்பித்தன் வெற்றி பெற்றார். மன்னர் அவர்கள் இருவருடனும் பேசிக் கொண்டிருந்தார். ஒரு அரை மணி நேரம் பேசி விட்டு கிளம்பினார்.
இன்று வீட்டில் அருகில் பார்த்த இயக்குநர் சக்தியை இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தூரத்திலிருந்து பார்த்தேன். இதே கூட்டணி மன்னர்,சக்தி சார் புலவர் புலமைப்பித்தன் பார்த்த இடம் பிரசாத் ஸ்டூடியோ. 

மெல்லிசை மன்னர் நினைவுகள் 35 :
1980 களில் மன்னரின் ரசனையோடு ஒன்றியவர்களில் முதன்மையானவர் இயக்குநர் R.C. சக்தி. உணர்வு பூர்வமான கதைகள் படமான போது அது மன்னரின் இசையோடு கலந்து பரிமளித்தது. மன்னரும் இயக்குநர் சக்தியும் இணைந்த உண்மைகள் ,சிறை ,கூட்டுப் புழுக்கள்,தாலி தானம் , மனக்கணக்கு பத்தினிப் பெண் போன்ற படங்களில் மன்னரின் இசை தனி இடத்தை பிடித்தது.
மன்னரின் ரிகார்டிங் பிரசாத் ஸ்டூடியோவில் என்று அறிந்து பிரசாத் ஸ்டூடியோ சென்ற போது, வாயிலில் தடுத்து நிறுத்தப் பட்டேன்.
சார் இங்கே வந்த மாதிரி தெரியலைங்களே என்ற செக்யூரிட்டியிடம் , மன்னர் ரிகார்டிங் தியேட்டருக்கு வர சொன்னார் என்றவுடன் அனுமதி கிடைத்தது.
மன்னரும் புலமைப்பித்தனும் அமர்ந்திருக்க இயக்குநர் சக்தி அவர்களிடம் காட்சியை விளக்கி கொண்டிருந்தார். ஒரு ஓரமாக சென்று அமர்ந்துக் கொண்டேன். மன்னர் தீவிரமாக யோசித்தவாரே விரல்களை ஆர்மோனியத்தில் அலைய விட, புலமைப்பித்தன் எழுத தொடங்கினார். மன்னர் முதலில் போட்ட மெட்டில் தானே சில மாற்றங்களை செய்தார். ஒரு அரை மணி நேரத்தில் பாடல் தயாரானது. மன்னர் இசை கலைஞர்களிடம் ஆலோசித்து கொண்டிருந்தார். கதவை திறந்துக் கொண்டு திரு. ஜேசுதாஸ் வந்தார். ஆஹா இன்று ஜேசுதாஸ் சார் ரிகார்டிங்கா என்று மனம் துள்ளி குதித்தது.சக்தி சாரும் ஜேசுதாஸ் சாரும் பேசிக் கொண்டிருக்கும் போதே மன்னர் வந்து அமர்ந்தார்.பாடல் எழுதிய பேப்பர் அவரிடம் தரப் பட்டது. மன்னர் பாடி காட்ட ஜேசுதாஸ் அவர்கள் உன்னிப்பாக கவனித்தார்.ஏறக்குறைய ஒரு ஒரு மணி நேரத்தில் எல்லாம் தயாராகி பாடல் ஒலிப்பதிவு தொடங்கியது.
படத்தின் பெயர் தாலி தானம். அது ஒரு சோகப் பாடல். மென்மையான இசையில் ஜேசுதாஸின் குரலில் கணீரென்று பாடல் பிறந்தது.
என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன?
ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன?
நான் அழைக்கும் குரல் கேட்குமா?
உன் அமுத விழி பார்க்குமா?
ஒலிப்பதிவு கூடத்தில் பல முறை கேட்கப் பட்டதால் மெட்டும் பல்லவியும் மனதில் பதிந்தது.ஜேசுதாஸ் அவர்கள் பாடி நான் பார்த்த முதல் ரிகார்டிங் மனதை விட்டு அகலவேயில்லை. பாடல் முடிந்து கேட்ட போது பாடலை படைத்தவர்கள் எல்லோர் முகத்திலும் திருப்தி.
நான் மன்னரிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை அண்ணே உங்க முத்தை மட்டும் பார்த்துக் கொண்டே உட்கார்ந்து இருந்தாலே போதும். நீங்க என்னிடம் பேச வேண்டும் என்று கூட இல்லை. நீங்க பாட்டுக்கு உங்க வேலையை பார்க்கலாம், நான் பாட்டுக்கு உங்களை ரசித்துக் கொண்டிருப்பேன் என்பேன்.
அன்றும் மன்னரை ரசித்து விட்டு வந்தேன். மாலையில் வீட்டிற்கு சென்று பேசி விட்டு இரவு ஊர் திரும்பினேன். ஒரு ஒரு வாரத்திற்கு அந்த மெட்டும் அமைதியான சூழலில் கணீரென்று திரு. ஜேசுதாஸ் பாடியதும் நினைவில் வட்டமடித்துக் கொண்டே இருந்தது. தாலி தானம் படத்தை திரையில் பார்க்கும் போது பாடல் காட்சி வரும் போது ரிகார்டிங் ரூம் காட்சிகள் கண் முன்னே வந்து போனது.

மெல்லிசை மன்னர் நினைவுகள் 36 :
சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது.மன்னர் இசைத்த இந்த வரிகள் மன்னருக்கும் அவர் ரசிகர்களுக்கும் பொருந்தும்.
1964ம் வருடம் பிப்ரவரியில் வந்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை. நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா என்ற சூப்பர் ஹிட் பாடலை கேட்டால் என் தந்தைக்கு பயம்.உடனே ரேடியோவை அணைக்க சொல்வாராம். காரணம், தூளியில் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆறு மாத குழந்தை அந்த பாடலை கேட்டால் எவ்வளவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் கண் விழித்துக் கொண்டு தா தா தா என்று சொல்ல ஆரம்பித்து விடுவானாம். தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா பாடல் அவனுக்கு ஒரு வயதில் பிடித்த பாடல். அவனுக்கு பிடித்த பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். பாடல்கள். காரணம் அவனது அண்ணன் அன்பே வா பாடல்களை பாடி தூங்க வைப்பாராம். அன்பே வா படத்திற்கு அவனை அழைத்து சென்ற போது எல்லா பாடல்களையும் இவன் கூடவே சத்தமாக பாட, அருகில் அமர்ந்திருந்தவர்கள் அந்த 3 வயது குழந்தையை ஆச்சரியமாக பார்த்ததாக வீட்டில் சொல்வார்கள். சத்யராஜ் படத்தில் சொல்வது போல் அந்த குழந்தையே நான் தான். இப்படி மெல்லிசை மன்னரின் இசையோடு வளர்ந்த நான், என் மகனுக்கும் மெல்லிசை மன்னர் இசையில் வந்த மக்கள் திலகம் பாடல்களை பாடியே தூளி ஆட்டுவேன்.
1992ம் ஆண்டு மெல்லிசை மன்னர் ஒரு திருமணத்திற்காக அம்மாவுடன் சேலம் வந்திருந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன் மன்னர் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பறக்கும் பந்து பறக்கும் பாடலுக்கு சதன் அவர்கள் வாயினுள் விரலை விட்டு எவ்வாறு சத்தத்தை உண்டாக்கினார் என்பதை சொல்லியிருந்தார். அதை கவனித்த என் 3 வயது மகனும் அதை வீட்டில் அடிக்கடி செய்து பார்ப்பான். சதன் கொடுத்த அதே எபக்டை கொடுப்பான். திருமணத்திற்கு வந்த மன்னரையும் அம்மாவையும் நான் குடும்பத்துடன் சென்று பார்த்தேன்.
கார்த்திக் M.SV. தாத்தாவிற்கு குட் ஈவினிங் சொல் என்றவுடன் என் மகன் சொன்னான். அண்ணே நீங்க பறக்கும் பந்து பறக்கும் பாட்டிற்கு செய்ததை இவன் செய்வான் அண்ணே என்றதும். அப்படியா? எங்கே செய்யுங்க என்றவுடன் என் மகன் செய்து காட்டவும், மன்னருக்கு ஒரே மகிழ்ச்சி. அவனை வாழ்த்தி ஆசீர்வதித்தார். உடனே அம்மா தன் ஹேண்ட் பேக்கில் இருந்து இரண்டு 5 ஸ்டார் சாக்லெட்டை எடுத்து கொடுக்க மன்னர் அதை தன் கையால் என் மகனிடம் கொடுத்து மீண்டும் GOD BLESS YOU என்று ஆசீர்வதித்தார்.காலங்கள் உருண்டோடின.2007 ம் ஆண்டு குடும்பத்துடன் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த போது மன்னரை காண சென்றோம்.அப்போது என் மகனுக்கு வயது 18. மன்னரிடம் அறிமுகப் படுத்தும் போது அண்ணே இவன் தான் உங்களுக்கு முன்னால் பறக்கும் பந்து பறக்கும் எபக்ட் செய்து காட்டியவன் என்று நினைவூட்ட மன்னருக்கு மகிழ்ச்சி.
காலங்கள் உருண்டோடின 2013ல் எனக்கு பேரன் பிறந்தான். அவனுக்கும் ஆயர்பாடி மாளிகையில், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று மன்னரின் பாடல்களே தாலாட்டாக அமைந்தது.
நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது.
காலங்கள் மாறலாம், கோலங்கள் மாறலாம் ஆனால் மன்னருடன் ஏற்பட்ட பந்தமும் பாசமும் என்றுமே அவர் தம் ரசிகர்களுக்கு தொடர்கதை தான்.நினைவ

This topic was modified 2 months ago by Salem Ganesh

Quote
Share: