Notifications
Clear all

ARTICLE 31 32 33 மெல்லிசை மன்னர் நினைவுகள்


Salem Ganesh
(@salem-ganesh)
Active Member
Joined: 4 months ago
Posts: 18
Topic starter  

மெல்லிசை மன்னர் நினைவுகள் 31 :
என் நண்பர் ஒருவர் தீவிரமான மெல்லிசை மன்னரின் ரசிகர். அவருடைய நீண்ட நாள் ஆசையே மன்னரை சந்திக்க வேண்டும் என்பது தான்.
யோவ் நீ மட்டும் நினைத்தால் அண்ணனை போய் பார்த்துட்டு வர, என்னை சென்னை கூட்டிட்டு போய்யா, அண்ணன் ரிகார்டிங் ஒன்றாவது பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.ஆனால் தனியாரிடம் வேலை செய்வதால் அவரால் நினைத்த படி லீவ் போட வாய்ப்பில்லை. ஒரு நாள் சென்னை போகும் போது அவரையும் அழைத்து போனேன்.சென்னையிலிருந்த என் அக்கா மகன்கள் இருவரும் எங்களோடு இணைந்துக் கொள்ள நால்வரும் சாந்தோம் சென்றோம். மன்னரை கண்டவுடன் என் நண்பனுக்கு பிறவி பயன் அடைந்தது போல் ஒரு திருப்தி.எல்லோரையும் மன்னருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். பேசும் போது என் நண்பன் அண்ணே உங்களோட ரிகார்டிங் பார்க்கணும் என்று ரொம்ப நாளாக ஆசை , எனக்கு இத்தனை நாள் வர முடியாமல் போய் விட்டது. (என்னை காட்டி) இவரு நினைச்சா உங்களை வந்து பார்த்துடறாரு.என்னால் முடியலை என்று வெள்ளந்தியாக சொல்ல மன்னர் சிரித்தவாறே நாளை மறு நாள் என் ரிகார்டிங் இருக்கு தங்கி பார்த்துட்டு போறீங்களா? என்று கேட்க, என் நண்பரின் முகம் வாடி விட்டது. இன்று இரவே ஊருக்கு கிளம்பணும் எனக்கு கொடுப்பினை இல்லை அண்ணே என்றார்.
மன்னரின் மனித நேயம் வெளிப்பட்ட தருணம் அது. அப்படியா அப்போ ஒன்ணு பண்ணுங்க அடுத்த முறை என்னை கேட்டுட்டு ரிகார்டிங் இருக்கும் போது வாங்க. இன்று ராஜா சார் ரிகார்டிங் பாருங்க நான் போன் பண்றேன் என்றார். இப்படியும் ஒரு மனிதரா? தன்னை நம்பி வந்தவர்கள் ஏமாந்து போக கூடாது என்று நினைக்கும் மனம் எத்தனை பேருக்கு வரும்.
மன்னர் உடனே ராஜா சாரின் உதவியாளர் சுந்தரராஜனுக்கு போன் செய்தார். எங்க FAMILY FRIENDS (எவ்வளவு பெரிய வார்த்தை இது) நாலு பேர் ரிகார்டிங் பார்க்க வராங்க. அவங்களை ரிகார்டிங் பார்க்க அனுமதிங்க தம்பி என்றார். மன்னரிடம் விடை பெற்று பிரசாத் ஸ்டூடியோ சென்றோம். விவரத்தை சொன்னவுடன் கேட்டில் அனுமதி கிடைத்தது. உள்ளே சென்றால் ரிகார்டிங் தியேட்டர் வாசலில் சுந்தர்ராஜன் சார் எங்களுக்காக காத்திருந்தார். எங்களை அடையாளம் கண்டு வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். MSV சார் நீங்க வருவீங்க என்று போன் பண்ணியிருந்தார் என்றார். உள்ளே சென்றால் அமைதியோ அமைதி. ராஜா சார் நோட்ஸ் எழுதிக் கொண்டிருந்தார். இசைக் கலைஞர்கள் அருகில் நின்று குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.நோட்ஸ் எழுதி முடித்ததும் சுந்தர்ராஜன் சார் ராஜா சாரிடம் ஏதோ சொல்ல ராஜா சார் எங்களை திரும்பி பார்த்தார் வணக்கம் வைத்தோம். படம் ஓடத் தொடங்கியது. ஏழுமலையான் மகிமை என்ற படம். நான்கு ரீல்கள் பின்னணி இசைக் கோர்ப்பை பார்த்து விட்டு சுந்தர்ராஜன் சாரிடம் விடை பெற்று கிளம்பினோம். ராஜா சாரிடம் பேசவில்லை. சூழ்நிலை அவ்வாறு இல்லை. மறு நாள் சேலம் வந்ததும் மன்னரை அழைத்து நன்றியை தெரிவித்தேன். அதே பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த இன்னொரு சுவையான சம்பவம்.....

மெல்லிசை மன்னர் நினைவுகள் 32 :
காலம் எவ்வளவு விந்தையானது.நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லையே என்று எண்ணும் போதே எதிர்பாராதது நடந்து நம்மை வியக்க வைக்கும்.
மன்னருக்கு ஒரு செண்டிமென்ட் உண்டு. அவர் ஒரு படத்திற்கு பின்னணி இசைக் கோர்ப்பு செய்ய தொடங்கும் போது முதலில் ஐந்தாவது ரீலை எடுத்து அதற்கு தான் பின்னணி இசை சேர்ப்பார். 1986ல் ஒரு நாள் பிரசாத் ஸ்டூடியோவில் கண்ணே கனியமுதே என்ற படத்திற்கு பின்னணி இசைக் கோர்ப்பை தொடங்கினார் மன்னர். அவரை காண பிரசாத் ஸ்டூடியோ சென்றேன். அன்று என்னுடன் மன்னரை காண இன்னொருவரும் வந்திருந்தார். அவர் பெயர் மீரா கிருஷ்ணன்.( வீணை மீரா கிருஷ்ணா அல்ல) பெங்களூரில் கர்நாடக இசை கச்சேரிகள் செய்பவர். இவரது மாமா தாத்தா பிரபல இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.
மன்னரை சந்தித்து பாட வாய்ப்பு கேட்க வேண்டும் என்று என்னுடன் வந்தார்.
மெட்டமைக்கும் போதோ ரிகார்டிங் செய்யும் போதோ மன்னர் அதே நினைவில் டென்ஷனாக இருப்பார். அதனால் அந்த மாதிரி சமயங்களில் மன்னரிடம் பேச பயம். ஓரமாக உட்கார்ந்து மன்னரையே பார்த்துக் கொண்டிருப்பேன்.
நாங்கள் உள்ளே நுழையும் போது ஒரு காட்சி திரையில் ஓடிக் கொண்டிருந்தது. மன்னர் அதை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ரீல் முடிந்தவுடன் இசைக் கலைஞர்களிடம் தனக்கு வேண்டிய இசையை ஆர்மோனியத்தில் வாசித்து அதை அவர்களை வாசித்துக் காட்ட சொன்னார்.ஒத்திகை முடிந்து திரும்பும் போது எங்களை பார்த்தார். எழுந்து நின்றோம். அங்கிருந்தவாறே உட்காருமாறு சைகை செய்தார். மீண்டும் திரையில் காட்சி ஓட வாத்திய கருவிகள் இசைக்கப் பட்டன.நோட்ஸில் சில மாற்றங்களை சொன்னார். அந்த காட்சிக்கான இசை ஒத்திகை முடிந்து டேக் எடுக்கப்பட்டது. . மன்னர் ஒலிப்பதிவு முடிந்ததும் எங்களிடம் வந்தார். மன்னரிடம் மீராகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்தேன். G. ராமநாதனின் உறவினர் என்று கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார். அண்ணே இவங்க உங்க முன்னால பாட ஆசைப்படறாங்க என்றவுடன் மன்னர் ஆர்மோனியத்தில் ஸ்ருதி கொடுக்க மீரா ஒரு பக்தி பாடலை பாடினார். வாய்ஸ் நல்லா இருக்கு தம்பி சமயம் வரும்போது வாய்ப்பு தரேன் என்றவர் அவரிடம் திரும்பி லைட் மியூசிக்கும் நல்லா பயிற்சி எடுத்துக்கங்க என்றார். மீரா கிருஷ்ணன் அவர்கள் பாடிய மந்திராலய மகான் என்ற கேசட்டை மன்னரிடம் கொடுத்தார். பேசி விட்டு விடை பெற்றோம். கிளம்பும் போது மீண்டும் மன்னர் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சமயம் வரும் போது வாய்ப்பு தருகிறேன் என்றார்.
ஆனால் மன்னரால் தர இயலவில்லை.
1993ம் ஆண்டு கே.சங்கர் இயக்கத்தில் மணிகண்டா மகிமே என்ற கன்னடப் படத்திற்கு இசையமைக்கிறார் மன்னர். அந்த படத்தில் S.P.B ஜேசுதாஸ் வாணி ஜெயராம் ஆகியோர் பாட அந்த சமயம் கன்னட படங்களில் பாடிக் கொண்டிருந்த இளைஞன் ராஜேஷின் குரல் மன்னருக்கு பிடித்து விட அவனுக்கும் இரண்டு பாடல்களை தருகிறார்.மணிகண்டே மகிமே தமிழில் வருவான் மணிகண்டன் என்று மொழி மாற்றம் செய்யப்பட்ட போது அதிலும் மன்னர் அந்த இளைஞன் ராஜேஷுக்கு இரண்டு பாடல்களையும் தமிழில் பாடும் வாய்ப்பை தருகிறார்.
அதன் பிறகு ராஜேஷுக்கு மேகமாய் வந்து போகிறேன் பாடல், அஜித்தின் ராஜா படத்தில் ஒரு பாடல் வட்டாரம் படத்தில் இரண்டு பாடல்கள் என்று ஏறக்குறைய பத்து பாடல்கள் பாடுகிறான். தமிழில் ராஜேஷை அறிமுகப் படுத்தி பிள்ளையார் சுழி போட்டவர் மன்னர்.
ஆனால் மன்னருக்கு தெரியாது 1986ம் ஆண்டு தன்னிடம் பாட வாய்ப்பு கேட்டு வந்த மீரா கிருஷ்ணனின் மகன் தான் ராஜேஷ் என்பது. தாய்க்கு கிடைக்காத வாய்ப்பு மகனுக்கு கிடைத்தது. பின்னாளில் நான் இதை மன்னரிடம் சொன்ன போது அவருக்கு ஒரே ஆச்சரியம். 

மெல்லிசை மன்னர் நினைவுகள் 33 :
சேலத்தை அடுத்த மேச்சேரிக்கு அருகில் மன்னரின் கச்சேரி. T.M.S. அவர்களும் அந்த கச்சேரிக்கு வந்திருந்தார்.நேஷனல் ஓட்டலில் தங்கியிருந்த மன்னரை காண என் நண்பர்கள் விருப்பம் தெரிவித்தனர்.ஏறக்குறைய பத்து பேரை அழைத்துக் கொண்டு ஓட்டல் அறைக்கு சென்றேன். அனைவருடனும் அன்பாக பேசி நலம் விசாரித்து மிக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இது மன்னரிடம் நான் கண்ட அருங்குணங்களில் ஒன்று. ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறேன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லியிருக்கலாம். அல்லது அறை வாசலில் நின்று அனைவரிடமும் பேசி விட்டு சென்றிருக்கலாம். ஆனால் அனைவரையும் மதித்தார். அன்பால் அரவணைத்தார்.அன்று மாலை கச்சேரியில் மன்னருக்கு ஒரு சோதனை காத்திருந்தது. அது ஒரு கோவில் விழாவில் நடக்கும் கச்சேரி. வான வேடிக்கைகள் அதிர் வேட்டுக்கள் என்று களை கட்டிக் கொண்டிருந்தது.மன்னர் மேடை ஏறியவுடன் மன்னரையும் பாடகர்களையும் வரவேற்க பட்டாசுகளை வெடித்தனர். வேட்டு சத்தம் காதை துளைத்தது.மன்னர் மைக்கை பிடித்து அனைவரையும் அமைதியாக இருக்கும் படி கூறினார். ஆனாலும் வேட்டுகள் வெடித்துக் கொண்டே இருந்தன. நீங்கள் ஒத்துழைத்தால் தான் நாங்கள் பாட முடியும் என்று மைக்கில் சொன்னவுடன் சத்தம் குறைந்தது. திரு.TMS அவர்கள் பாட வந்ததும் மீண்டும் பட்டாசுகள் வெடிக்க துவங்கின. ஏகப்பட்ட சத்தம். TMSம் அமைதியாக இருக்கும் படி கூறினார். ஆனால் தொடர்ந்து வேட்டுகள் வெடிக்க டென்ஷனான TMS அவர்கள் பாடாமல் கோபமாக மேடைக்கு பின்னால் சென்று விட்டார்.அவரது கோபத்திலும் நியாயம் இருந்தது. காரணம் கலைஞர்களுக்கு மூட் அவுட் ஆகிவிட்டால் பாடுவது கடினம். மன்னர் சென்று TMS ஐ சமாதானம் செய்தார். ஆனாலும் அவரின் கோபம் தணியவில்லை. நீண்ட நேரம் மன்னர் சமாதானப் படுத்திய பின்னரே அவர் பாட வந்தார். அதன் பிறகு எந்த இடைஞ்சலும் இல்லாமல் கச்சேரி நடந்தது.
இதே போல் வேறு ஒரு சம்பவம் ஈரோடில் நடந்தது. ஒரு வி.ஐ.பி. வீட்டு கல்யாண ஆர்க்கெஸ்ட்ராவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள மன்னர் வந்திருந்தார். அதற்கு முதல் நாள் திண்டுக்கல்லில் ஒரு கச்சேரி. அதில் கங்கை அமரனுடன் கலந்துக் கொட்டு விட்டு ஈரோடு வருகையில் கங்கை அமரன் அவர்களும் ரொம்ப மூட் அவுட்டாக இருக்கு நான் உங்க கூட வரேன் அண்ணே என்று கூறி மன்னருடன் வந்திருந்தார்.ஓட்டல் அறையில் கங்கை அமரனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த சமயம் கங்கை அமரன் அவர்கள் அண்ணே உங்களோட ரயில் பாடல்களை மட்டும் நான் கலெக்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று சில பாடல்களை சொன்னார். நானும் என் பங்கிற்கு பயணம் பயணம், திருப்பதி மலையில் ஏறுகின்றாய், வ்ருந்தாதே மனமே, எத்தனை மனிதர்கள் உலகத்திலே போன்ற பாடல்களை நினைவு படுத்தினேன். மன்னர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறீங்களா என்று கேட்க இல்லை அண்ணே நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார். ஒவ்வொரு ரயில் பாடலையும் ரசித்து சிலாகித்து பேசினார். மன்னரின் புகழை மட்டுமே பாடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் ஓய்விற்கு பிறகு மன்னர் கிளம்ப கங்கை அமரனும் கிளம்பினார். கங்கை அமரன் வருவது கல்யாண வீட்டில் யாருக்கும் தெரியாததால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அந்த திருமண விழாவிற்கு நடிகர் சிவகுமாரும் வந்திருந்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன் என்று மைக்கை பிடித்த கங்கை அமரன் மன்னரை வானளாவ புகழ தொடங்கினார். மன்னரும் மைக்கில் தம்பி அட்க்கி வாசிங்க என்று கூற கூற கங்கை அமரன் மேலும் மேலும் புகழ்ந்துக் கொண்டிருந்தார். பொன் மானை தேடி நானும் பூவோடு வந்தேன் என்ன பாட்டுன்னு நினைச்சீங்க அண்ணனோட பாட்டுக்கு பாட்டெடுத்து பாட்டை தான் போட்டிருக்கேன். இது போல நாங்க அண்ணனோட நிறைய பாட்டை போட்டிருக்கோம் என்று பேச, மன்னர் போதும் தம்பி என்று செல்லமாய் அவர் வாயை பொத்த, என் மனசில் இருப்பதை எல்லாம் பேச விடுங்க அண்ணே என்றார் கங்கை அமரன்.ஓட்டல் ரூமிற்கு வந்தும் கூட என்ன அண்ணே உங்களை பற்றி மனசில் இருப்பதை கூட பேச விடமாட்டேங்கறீங்களே என்று வருத்தப்பட்டார். மெல்லிசை மன்னர் அவர் கன்னத்தை தட்டியபடி நீங்க என் மேலே வச்சிருக்கற பாசத்தை மைக்கில் சொன்னால் தான் எனக்கு தெரியுமா?இல்லாட்டி தெரியாதா என்று சமாதானப் படுத்தினார்.


Quote
Share: