Notifications
Clear all

1977 - Ormakal Marikkumo - Shobha's Visit to her previous birth place


K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

பின்னிசையின் இலக்கணம்
An effort to decode MSV’s re-recording

003
Scintillating scene from ஓர்மகள் மரிக்குமோ

இன்று ஒரு மலையாள படத்தின் அற்புதமான பின்னணி இசையை பார்ப்போம்.

கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயன், விதுபாலா, ஷோபா, சோமன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் "ஓர்மகள் மரிக்குமோ" (ஞாபகங்களுக்கு மரணம் உண்டோ?). "நெஞ்சம் மறப்பதில்லை" போல் மறுபிறவியில் கதை சொன்ன படம். படம் பரபரப்பாக பேசப்பட்டது என்றாலும், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், பாடல்கள் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

Flashback-ல தான் கதை சொல்லப்படுகிறது. பருவ வயதை எட்டிய பள்ளி மாணவி ஷோபாவிற்கு தன் முன் ஜென்மத்து ஞாபகங்கள் வந்துகொண்டே இருக்கிறது. இப்போது அவள் ஒரு ஏழைக்குடும்பத்தின் ஒரே குழந்தை. முன் ஜென்மத்தில் அவள் பெரும் செல்வந்தர் வீட்டு செல்லப்பெண். அவளுக்கு ஒரு சகோதரன். திருமணம் ஆன பிறகு அவள் சில நாட்களிலேயே இறந்து போகிறாள். கணவனது வீட்டவர் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என சொல்கிறார்கள். மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் போய்விடுகிறது. ஷோபாவிற்கு தன் முன் ஜென்மத்து நினைவுகள் மீண்டும் மீண்டும் தோன்ற, அவளது அன்னை வீட்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் வீட்டின் டாக்டர் ஒருவர் ஷோபாவை அவள் சொல்லும் அந்த வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கு அவள் தன்மீது மிகவும் அன்பு வைத்திருந்த தந்தை இறந்துவிட்டதை கண்டு கலங்குகிறாள், மற்ற எல்லோரையும் அடையாளம் கண்டுகொள்கிறாள், தனக்கு பிரியமான பொருள்களை கண்டு மெய்மறக்கிறாள். இதையெல்லாம் பார்க்கும் அந்த வீட்டார்கள் என்ன செய்வதென்றறியாது திகைத்து நிற்கின்றனர். பிறகு முன் ஜென்மத்து அண்ணன் வந்து அவளது கணவனிடம் அழைத்து செல்கிறார். அங்கு ஷோபா அவனிடம் முன் ஜென்மத்தில் நடந்ததையெல்லாம் சொல்ல, இவள் சொல்வதெல்லாம் உண்மைதான் என்கிறான். கணவனின் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அவளை அவன் நடத்தை கெட்டவள் என்று முடிவு செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறான். இப்போது ஷோபா, அன்று நடந்ததையெல்லாம் சொல்ல, அவன் செய்த தவறு அவனுக்கு விளங்க, தங்கையிடம் விளக்கம் கேட்க ஓடுகிறான். அவளும், அண்ணி தவறேதும் செய்யவில்லை, என்னை காப்பாற்றத்தான் அன்று அப்படி நடந்து கொண்டால் என்று சொல்ல, வெறி பிடித்தவன் போல் அவன் கார் ஒட்டி சென்று விபத்தில் இறந்து போகிறான். இங்கு, தான் மறுபிறவி எடுத்த பயன் முடிந்து விடுவதால் ஷோபாவும் இறந்து விடுகிறார்.

இன்று நான் எடுத்துக்கொண்ட காட்சி, ஷோபா டாக்டருடன் தனது முன் ஜென்மத்து வீட்டிற்கு வரும் scene.

அந்த பங்களாவிற்கு சென்றதும், அதன் தோட்டத்தில் காறை விட்டு இறங்கியதும் அவளது சிலிர்ப்பு - Piano-வில் ஒரு roll, அதை தழுவி சந்தூர் சன்னமாக ஒலிக்கிறது. இந்த சிலிர்ப்பு வீட்டிற்குள் அம்மா, அம்மா அழைத்துக்கொண்டு ஓடி வரும் வரை தொடர்கிறது. ஹாலில் வந்து நேரே தந்தையின் மாலையிட்ட புகைப்படத்தை பார்த்ததும் மறைந்து விடுகிறது - இப்போது அவள் அதிர்ச்சியை பிரதிபலிக்கும் இசை ஒலிக்கிறது. பிறகு, கலக்கத்துடன் அவள் டாக்டரிடம் தன் தந்தைகுறித்து சொல்லும் போது சன்னமாக புல்லாங்குழல் ஒலிக்கிறது - அவளுக்கு ஆறுதல் கூறுவது போல்.

அப்போது அங்கு வரும் அன்னையை பார்த்து, அம்மா என்று சிரித்துக்கொண்டு அவளிடம் ஓடும் போது மீண்டும் சந்தூர் பின்னணியில் ஒலிக்கிறது - அவளது சந்தோஷத்தின் பிரதிபலிப்பு. ஆனால், அந்த பெண்மணியோ இவளை யார் என்று அடையாளம் தெரியவில்லை என்று சொல்ல, மீண்டும் அதிர்ச்சி இசை. பிறகு அவள் சுதாரித்துக்கொள்ளும் போது வயலின், கிட்டார் chords, பியானோ chords என்று மாறுபட்டு ஒலிக்கிறது. அதை தொடர்ந்து அவள் டாக்டரிடம் அந்த பெண்மணியின் கையை பிடித்து இவர் தான் என் தாய் என்று சந்தோஷத்துடன் அறிமுகம் செய்து வைக்கும் போது மீண்டும் சந்தூர் ஒலிக்கிறது.

இதற்க்கு பிறகு தான் highlight என்றே சொல்லலாம் - நம்மை வேறெங்கோ கொண்டுசென்று விடுகிறது, அல்லது நாமும் அவளுடன் சந்தோஷக்களிப்பில் திக்குமுட்டாடுகிறோம். Totally an unexpected twist in background score. Simply scintillating!!!!!

அதாவது, அவள் தனது அண்ணனை தேடி மாடிக்கு செல்கிறாள் - அண்ணன் என்றால் அவளுக்கு அவ்வளவு உயிர். அவனை பார்க்கப்போகிறோம் என்ற அவளது எல்லையில்லா மகிழ்ச்சி, அந்த பரபரப்பு, அந்த சிலிர்ப்பு, பல வருடங்களுக்கு பிறகு தான் ஓடியாடி நடந்த இடங்களை பார்க்கப்போகிறோம் என்ற த்ரில், தான் பார்த்து மகிழ்ந்த பொருள்களை மீண்டும் பார்க்கப்போகிறோம் என்ற பரபரப்பு - இவையெல்லாம் "Fluttering Flute" வாயிலாக உணர்த்துகிறார். Really an hair-raising experience!

காட்சி மீண்டும் கீழ்தளத்திற்கு மாறுகிறது - சில வினாடிகள் - அங்கு டாக்டர் ஷோபாவை பற்றி அவர்களிடம் சொல்கிறார் - அப்போது அவர்களுக்கு ஏற்படும் திகைப்பு + மனதில் நடக்கும் போராட்டம் - இதை String Section வாயிலாக உணர்த்துகிறார்.

மீண்டும் காட்சி மாடிக்கு செல்கிறது - இப்போது அவள் அங்கு வைத்திருக்கும் பொருள்களை மிக ஆவலுடன், பூரிப்புடன் பார்க்கிறாள், முகர்கிறாள் - பின்னணியில் வீணையோடு சேர்ந்து தபலா தரங் ஒலிக்கிறது! பிறகு அதே குதூகலத்துடன் அவள் கீழே ஓடிவர, மீண்டும் "Fluttering Flute" ஒலிக்கிறது.

கீழே வந்து அந்த பெண்மணியை (அன்னையை) கட்டிப்பிடித்து தனக்கு பிடித்த உணவு பொருளை கேட்க்கும் போது சோகம் தொற்றிக்கொள்வதால் - அங்கு மீண்டும் String Section. பிறகு அவள் தனக்கு பிடித்த உணவை தேடி அந்த பொருள் இருக்கும் அறையை நோக்கி ஓடும் போது அதற்க்கு முன் இருக்கும் அறையில் தான் வாசித்த வீணைகள் வரிசையாக இருப்பதை கண்டு அதை அணைத்துக்கொண்டு மெய்மறந்து நிற்கிறாள் - இங்கு மீண்டும் வீணையோடு சேர்ந்து தபலா தரங் ஒலிக்கிறது!

மீண்டும் காட்சி ஹாலில் அமர்ந்திருக்கும் டாகடர் + அன்னை + மற்றவர்கள்-க்கு தாவுகிறது. இங்கு சில வினாடிகளுக்கு பின்னணி இசை ஏதும் இல்லை. பிறகு ஷோபா மீண்டும் ஹாலுக்கு வந்து, அங்கு வெளியிலிருந்து வேலைக்காரன் வருவதை கண்டு அவனிடம் மகிழ்ச்சி போங்க ஓடுகிறாள் - அங்கு எந்த வாத்தியக்கருவி பயன்படுத்தியுள்ளார் என தெரியவில்லை - பினனோவா அல்லது Harp-பா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஷோபா அவரிடம் உரையாடும் போது பின்னணி இசை ஏதும் சேர்க்கப்படவில்லை. அடுத்து வெளியே கட்டப்பட்ட பசுவை தேடி ஓடும் பொழுது மீண்டும் குதூகல இசை சேர்க்கப்பட்டுள்ளது - வீணை, சந்தூர் மற்றும் தபலா தரங் சேர்ந்து ஒலிக்கிறது.

தொடர்ந்து ஷோபா திரும்பி வந்து வேலைக்காரியிடம் தான் முன்பு பயன்படுத்திய கிளாசை எடுத்து வா என்று சொல்ல எல்லோருக்கும் அதிர்ச்சி - பின்னணியில் String section ஒலிக்கிறது. தொடர்ந்து ஷோபா அந்த கிளாஸின் மகிமை பற்றி டாக்டரிடம் குதூகலம் பொங்க சொல்லும் போது மீண்டும் வீணை + தபலா சந்தூர் ஒலிக்கிறது. பணிப்பெண் கிளாசில் தண்ணீருடன் வந்ததும், இது தான் நான் மட்டும் பயன்படுத்திய அந்த கிளாஸ் என்று பூரிப்போடு ஷோபா தண்ணீரை குடிக்கும் போது எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி / குழப்பம் - பின்னணியில் தபலா தரங் மட்டும் ஒலித்து அதிர்ச்சி/குழப்பத்தை பிரதிபலிக்கிறது.

பிறகு அவர்கள் விடைபெற்றுக்கொள்ளும் பொழுது, ஷோபா அங்கிருந்து வர மறுக்க பின்னணியில் சற்றே சோகத்துடன் வயலின் ஒலிக்கிறது. கடைசியில் பிரியாவிடை கொடுக்கும் போது Synthesizer கலக்கமாக ஒலிக்கிறது.

நடிப்போடு பின்னணி இசையும் போட்டி போடுகிறது இந்த காட்சியில்.

வருத்தம் என்னவென்றால், படத்தின் பின்னணி இசையை சிலாகித்து இன்றுவரை ஒருவர் கூட எங்கும் சொல்லிக்காணவில்லை.

அடுத்த presentation வரும் வரை, உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.


Quote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

Link for the video clip :

https://app.box.com/s/gtzurlx4tx9c8ujedmrqjs5dykhxex16


ReplyQuote
Share: