மெல்லிசை மன்னரின் இ...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னரின் இசை உத்திகள் -2  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 210
31/07/2020 12:39 pm  

அன்பர்களே

மெல்லிசை மன்னர் என்ற அடைமொழி அவரைப்பற்றிக்கொள்ளும் முன் அவர் விஸ்வநாதன் [ராமமூர்த்தி] என்றே அறியப்பட்டார் .  இன்னும் சொல்லப்போனால் விஸ்வநாதன் என்ற பெயர் பரவலாக பேசப்படுவதற்கு முன் அவரின் பாடல்கள் [ யாருடைய ஆக்கம் என்பதை அறியாமலே ] பெரும் தாக்கத்தை விளைவித்துக்கொண்டிருந்தன என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.. நான் தேவதாஸ் படம் அதற்கு முந்தைய அவரின் ஆரம்பகாலகங்களைப்பற்றிப்பேச வரவில்லை. நான் என் நேரடி அனுபவம் மற்றும் நினைவில் பதிந்து விட்டதை மட்டுமே ஐயம் திரிபற க்கூறமுடியும். அந்த அடிப்படையில் ,வலம்புரி பிக்ச்சர்ஸ் படம் [பதி பக்தி   ] , கமால் பிரதர்ஸ்- புதையல் போன்ற படப்பாடல்கள் தமிழகத்தில் புயலெனப்ரவேசித்ததை நினைத்துப்பார்க்கிறேன்.விஸ்வநாதன் பெயர் அறியாத கூட்டத்தில் நானும் ஒருவன் - ஆனால் அவர் ஆக்கங்கங்களை வெகுவாக ரசித்திருக்கிறேன். எப்படி எனில் இந்த படங்களின் பாடல்கள் ஏதோ ஒரு மாறுபாடும் முழுமையும் புதுமையும் பின்னிப்பிணைந்த ரம்மியமான வகையின என்று உள்ளம் வயப்பட்டது.  புதையல் படத்தில் இடம் பெற்ற "விண்ணோடும் முகிலொடும்" பாடலின் ராகப்போக்கும் ஊடடித்து கிளம்பும் குழலும், வயலின் குழைவும் இன்று கேட்டாலும் வயதுதான் குறைகிறதே அன்றி அலுப்புத்தட்டுவதே இல்லை. இவ்வாறாக விஸ்வநாதன் அமைத்த இசை வலையி ல் விரும்பி வீழ்ந்த பறவைகளும் குஞ்சுகளும், ஏராளம். மிகவும் பெரிதாக அறியப்பட்ட பாகப்பிரிவினை , பாவ மன்னிப்பு போன்ற இசை வித்தைகள் வெளிப்படுமுன், மஹாதேவி , பாச வலை , குலேபகாவலி போன்ற படப்பாடல்கள் ஏதோ ஒரு வகையில் மாறு பட்ட அமைப்பில் பிரமிப்பூட்டிக்கொண்டிருந்தன. இந்த பார்வைகள் அன்றைய என் போன்ற சிறுவர்களின் கருத்து; ஒருவேளை அன்றைய கல்லூரி மாணவர்கள் வி-ரா குறித்து நன்கு அறிந்திருக்கக்கூடும். ஆனால் இன்றைய சமுதாயம் போல் சினிமா  வீட்டில் நுழைந்திராத ஒருகாலம் அது. ஆனாலும் மெல்ல மெல்ல இளைய தலை முறையை தனக்கே உரிய பாணியில் சினிமா சிறைப்பிடித்துக்கொண்டிருந்தது என்பதும் உண்மை. சரி சினிமாவுக்கே வீடுகளில் தடை விதிக்கப்பட்ட சூழலில் சினிமா எப்படி இளைய மனங்களை பிடித்தது என்ற கேள்வி எழும்.  இந்த இடத்தில் தான் பின்னாளில் இலங்கை வானொலி என்ற புகழ் பெற்ற அந்நாளைய சிலோன் ரேடியோ என்ற சாதனம் ஒரு இறைக்கொடை . அதையும் விரும்பிய போதெல்லாம் கேட்டு ரசிக்க வாய்ப்பில்லை ; ஏனெனில் அநேக வீடுகளில் ரேடியோ ஒரு கனவு சாதனம். அப்படியே இருந்திருந்தாலும் தகப்பனாரின் ஏகபோக உரிமை தான் ரேடியோ. வேறு எவரும் அதை தொடவோ,திருகவோ அனுமதி இல்லை. தப்பித்தவறி அந்த ஏகபோக உரிமையாளர் 2 நாட்கள்  எங்காவது வெளியூர் போனால் அக்கா, தங்கை தம்பி என அனைவரும் அம்மாவை தாஜா செய்து சிறிது நேரம் ரேடியோ சிலோனையோ ஒலி க்க விட்டு வாயெல்லாம் பல்லாக , ஈ என்று ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து , பாடல் கேட்பார்கள். அந்த சமயத்தில் யாராவது தலைவர் [ சிலோனில் தான்] இறந்தால் அந்த 2 நாளும் சோகம்  ; சிலோனில் அல்ல நம்ம நண்பர்கள் வீட்டில் தான். ஏகபோகம் திரும்பி வந்ததும்  கூர்ந்து பார்ப்பது ரேடியோ டயல் பகுதி மற்றும் அந்த ஸ்டேஷன் செலெக்டர் pointer எனும் முள் . அது இடம்பெடர்ந்து இருந்ததும் பாட்டு அம்மாவுக்குத்தான் ; நீ எங்காவது அரட்டை அடிக்க போயிருப்பாய் இவனுக ரேடியோவை நல்ல திருகி வெச்சு  இருக்கானுக - இந்த புயல் அடங்க அரை மணி ஆகும்  இப்படியெல்லாம் இயற்கை சதி செய்தாலும், ஒரே ஆபத்பாந்தவன்  , சிகை அலங்கார நிலையங்கள். சனி , ஞாயிறு பார்த்து போய்விட்டால் , மனம் நிறைவு பெரும் அளவுக்கு சிலோன் ரேடியோ எங்களை மகிழ்விக்கும். இப்படியெல்லாம் ஒளிந்து மறைந்து பாடல்களை கேட்ட எங்களுக்கு விஸ்வநாதன் என்ற ஆளுமையை அவரின் பெயரால் அறிந்து கொள்ள சிறிது காலம் பிடித்தது . ஆனால் அவரின் இசை எங்களை வெகுவாக பீடித்தது மாத்திரம் அல்ல , கற்புடை பெண்டிர் போல வேறு எவர்க்கும் எம் மனங்களில் இடம் இல்லை என்பதே   அவர்   ரசிகர்களின் வயப்பட்ட நிலை.

மேலும் பேசுவோம்.

அன்பன் ராமன் மதுரை  


Quote
Share: