மெல்லிசை மன்னரின் இ...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னரின் இசை உத்திகள் 6  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 143
03/08/2020 2:13 am  

  3 சொல் மாற்ற அமைப்பு , அதாவது ஒரே சொல்லை 2 முறை அல்லது வேறு வேறாக பிரித்து ப்பாடுதல் 

சொல் மாற்ற அமைப்பில் வேறு படுத்தல் என்ற உத்தியும் மெல்லிசை மன்னர் கையாண்ட ஒரு அற்புதம் எனில் மிகை அன்று. பாடலை கேட்டபின் இது எளிதான ஒரு அணுகுமுறை என புலப்பட்டாலும் , அவர் அதை செய்து ஆட்டும் வரை இதை நடைமுறையில் நாம் கண்டதில்லை. இதன் மூலம் அவர் எதை நிறுவ முற்படுகிறார் என்று ஆய்ந்தால் , பெரும்பாலும் பாவத்தின் அழுத்தத்தை உணர்த்தவே என்று அறியமுடிகிறது. இந்த முறை, பலவித காட்சிகளை மிக எளிதாக மேம்படுத்தியுள்ளது 

"சொன்னது நீ தானா "- நெஞ்சில் ஓர் ஆலயம்

இந்த ஒரு பாடலில் அமைந்த சிறு சொற்கள் --  'சொல்' மற்றும் 'ஏன்’' . இவ்விரண்டையும் பாடும் போது, சற்றே பிரித்து [இடைவெளி மாற்றம்] கொடுத்து துயரத்தின் ஆழத்தை வெளிக்கொணருகிறார்.

சொன்னது    நீ          தானா               சொல்  சொல்ல்   சொல்   ல் என்னுயிரே

சம்மதம்           தா     னா            ஏன்        ஏ   ன்         ஏ       ன்  என்னுயிரே

இன்னொரு கைகளிலே     யார்      யார்         நா      னா  

இன்னொரு கைகளிலே விரைந்து பாடப்பட்டு , யார்      யார்        நா    னா  

என்னும் பகுதியில்' யார்'  இருமுறை , நானா ஒருமுறை ஆனால் நா   

னா  என்று பிரிக்கப்பட்டு   [ ஒரு போதும் இல்லை என்ற ]உணர்வை விதைக்கிறார்  

எனை        மறந்            தாயா  ஏன்      ஏ    ன்       ஏன்  என்னுயிரே

எனை மறந்தாயா என்ற பகுதியில் "மறந்தாயா" வை, மறந்        தாயா  என  பிரித்து  பிரிவை உணர்த்தும் சோகத்தையும் நுழைத்திருக்கிறார்.

"ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை" 'பணத்தோட்டம்' 

இப்பாடலில் சொற்களை அழகாக பாடவைத்து ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் மெல்லிசை மன்னர். இசைக்குயில் பாடகி பி.சுசீலாவின் இனிமையான குரல் பாடலுக்கு மேலும் மெருகூட்டியுள்ளது.

ஒரு நாள் [என்று இழுத்து பாடிவிட்டு ] இரவில் [சற்று நிதானமாக] ,இரவு நீண்டு கொண்டே போவதாக உணர்த்தும் வகையில் பாடப்பட்டுள்ளது. கண் உறக்கம் பிடிக்கவில்லை [ வேண்டாத செயலை விளக்கும் விதமாக , பிடிக்கவில்லை என்னும் பகுதி பிடிக்க   வில்லை என அமைக்கப்பட்டுள்ளது.  பின்னர் வரும் குறிப்புகள் பாடலுக்கு எப்படி வலுசேர்க்கின்றன பாருங்கள்.

சரணத்தில்  "தோழியர் கூடி திருநாள் தேடி சென்றார் திரும்பவில்லை"

தோழியர் கூடி [விரைவாக ], திரு....  நாள் தே   டி [பிரித்து அமைந்துள்ளது] சென்றார் என்பது  சென்    றார் என்றும் திரும்பவில்லை என்பது திரும்ப   வில்லை என்று சற்றே விலக்கியும் பாடப்பட்டுள்ளன.. பின்னர்  'தினையும் [விரைவாக]    பனை       யாய் வளர்ந்தே   இருவிழிகள்   அரும்ப  வில்லை என்று உணர்ச்சிமயமாய் அமைந்த தொகுப்பு.

மேலும் , "இரவி  ல்  உல  வும் திரு  டன்  நான் என்றான்"   [சொல் பிரிப்பை பாரீர்]

" திருடா ........து  ஒருநா         ளும்  கா     தல் இல்லை என்றேன்" [இவ்விடத்தில் கவியரசு எடுத்த விஸ்வரூபம் காதல் என்பது மனம் திருப்படுவது தான் என்று பாடலின் வாயிலாக தெரிவிக்கிறார்],   மெல்லிசை மன்னர் என்று சும்மாவா சொன்னார்கள், பாவத்தை முன்னிறுத்த சொல்லை பிரிக்கும் மகோன்னத உத்தி அவரது டிரேட் மார்க் அன்றோ.! 

"எங்கள் கல்யாணம்" 'கலாட்டா கல்யாணம் ' படப்பாடல்.  இது கோஷ்டி கானம் என்றே சொல்லலாம் இழையோடும்  நகைச்சுவை -வாலியின் பாடல் -ஒருவேளை கோபு எழுதி இருப்பாரோ என்று எண்ண வைக்கும் . சரி மன்னரின் கலாட்டா ஆங்காங்கே

.மாப்பிள்ளைகள் செலவு செய்ய மாமனார் தான் வரவு வைக்க

கல் ..........   யாண  பந்தல் போட்டாராம் என்று பிரித்துள்ளார் .

இன்னோர் சரணத்தில்  மாமியார் தான்    மை  எழுத மாப்பிள்ளை தான் கண் விழிக்க கண் ...........ணாடி  பார்த்துக்கொள்வாராம் என்று பிரித்துள்ளார் .     

திருப்பதியில் மணமுடிக்க உருப்படியாய் வாழ வைக்க எப் ......போதோ வேண்டிக்கொண்டாராம் என  இன்னொரு சொல் பிரிப்பு என்று எம் எஸ் வி யின் அதகளம். 

இன்னொரு சுவையான தகவல்  : இந்த பாடல் அதன் ORGANISATION மற்றும்ஆர்கெஸ்ட்ரேஷன் எனும் கருவிகளின் நுண்ணிய இசைப்புக்காக  கனடாவின் டொராண்டோ [TORANTO ] பல்கலையில் இசை பயில்வோர் பாடத்திட்டத்தில் ' வெஸ்டர்ன் MUSIC BY நான்-வெஸ்டர்ன் COMPOSERS பிரிவில்இடம் பெற்றுள்ளது .இத்தகவலை தூண்டித்துருவி வெளிக்கொணர்ந்த அன்பர்களுக்கு நாம் மிகவும் நன்றி பாராட்டியே ஆக வேண்டும். இத்துணை பெருமை தாங்கிய மன்னர் இது பற்றி ஒருநாளும் நண்பர்களிடம் கூட பெருமையாக சொல்லிக்கொண்டதில்லை. முயற்சி அவரைப்பொறுத்தவரை எதோ தற்செயலாக நடப்பது போன்ற ஓன்று.

'விழியே கதை எழுது" - 'உரிமைக்குரல்'  படப்பாடலில் வரும் சரணத்தின் இறுதி பகுதியில்

ஊமைக்கு ஏதேதோ பாஷை , உள்ளத்தில்  ஏதேதோ  ஆ .............சை  என்று பிரித்து  ஆசையின் பெரிய பரிமாணத்தை அமைதியாக /அழுத்தமாக நிறுவியுள்ளார் மன்னர்.

 இது போன்ற சொல் பிரிப்பில் மன்னர் பல வித பாடல் தருணங்களில் தூக்கலாக செய்திருப்பதை ஊன்றி கவனித்தால் பாடலின் சுவை மேலும் கூடும்.

வேறு உத்திகளுடன் மீண்டும் சந்திப்போம் .

நன்றி அன்பன் ராமன்   மதுரை


Quote
Share: