மெல்லிசை மன்னரின் இ...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னரின் இசை உத்திகள் -5  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 143
03/08/2020 2:11 am  

சொற்களை சற்றே நீட்டி/சுருக்கி  பாட வைத்தல்

திரு எம் எஸ் வி அவர்களின் பிரத்தியேக முத்திரை உத்தியாக சொற்கள் /பதங்களை அழகு செய்வது என்ற கலையை குறிப்பிடலாம் .

இந்த முத்திரை உத்தியை சிறிது காண்போம் .

சொல்லாட்சி கவிஞரின் திறமை எனில் , சொல்லின் மாட்சிமையை மேம்படுத்துவது இசையமைப்பாளரின் பணி. இதில் பின்னவரின் திறமையினால் பளிச்சிடுவது பாடலின் தனிச்சிறப்பு.

சரி,   ஒரு சொல்லை எப்படி எல்லாம் அழகூட்ட முடியும் என்ற பெரிய ஆளுமையை தனது ஆக்கங்களில் வெளிப்படுத்திய வித்தகர் எ ம் எ ஸ் வி அவர்கள். இதில் அவர் ஏற்படுத்திய எந்த தாக்கத்திற்கும் ஆதார நாதாமாய் இயங்கியது அவர் கதா பாத்திரங்களின் உணர்வு எனும் பாவத்தினை சரியாக உள் வாங்கி இருந்த 'புரிதல்' மற்றும் இயக்குனர் தெரிவித்திருந்த காட்சி அமைப்பின் தன்மை என்ற இரு அம்சங்கள்.  இதனால் அவர் தனது டியூன் எனப்படும் 'அமைப்புகளை ' எந்த ஒரு குறிப்பிட்ட ராகத்துக்குள்ளும் கட்டிப்போட முயற்சிக்காமல் , சொல்லின் தன்மைக்கேற்ப பாட வைத்தார். இதனால் அவர் மிக எளிதாக தண்டவாளம் மாறி பயணிக்கும் ரயிலைப்போல , பல்வேறு ராக அமைப்பில் பாடலை பயணிக்க வைத்து , பல்லவியுடன் , சரணத்தை மிக இயல்பாக இணைய வைத்துவிடுவார். இதைத்தான் அவரது ரசிகர்கள் " SEAMLESS BLENDING" என்பர் . இதையே கர்நாடக இசையின் விற்பன்னர்கள் 1960 களில், எம் எஸ் வி 'ராக அமைப்புகளை மீறுகிறார் 'என்று விமரிசித்த வரலாறும் உண்டு. அனால் எம் எஸ் வி யை பொறுத்தவரை பாடலின் [எனவே சொல்லின்] பாவமே அடிப்படையே அன்றி ஒரே ராகத்தில் பாடலை பயணிக்க வைப்பது அல்ல என்று மிக ஆணித்தரமாக நம்பினார், நிறுவினார் மற்றும் கடைப்பிடித்தார் என்றே சொல்லலாம் .

இந்த பண்பில் தான் அவர் சினிமா இசையை கர்நாடக இசையில் இருந்து பாதை விலக்கி மிளிர வைத்தார். இவ்வாறு விலகிய அமைப்பில் இருந்தாலும் அவரது பாடல்களில் செவியை ஈர்க்கும் , மதியை மயக்கும் சற்றே மயக்கம் தரும்  இசை அமைப்புகளும் அமைந்த 'பஞ்சாமிர்த' கலவையாக சுவையை ஏற்றிய தயாரிப்புகளாக , அமைக்கப்பட்டன.   சுவைத்தவர் எவரும் மீண்டும் சுவைத்திட தயங்கியதே இல்லை. தனக்கு என ஒரு பாதையில் பயணித்த இந்த இசை கோர்வை பெரும் அளவில் திரைப்படங்களின் பொருளாதார வலிமைக்கு வித்திட்டது. இந்த தொழில் முன்னேற்றம் மக்கள் மன்றத்தில் பரி பூரணமாக அங்கீகாரம்  பெற்றதும் , மெல்லிசை என்ற ஒரு புதிய GENRE [வகை] இயற்றப்பட்டதும் தமிழ் திரை வரலாற்றின் பொற்காலம் என்றும் மதிப்பு பெற்று ,  இதனால் 1963லேயே . மெல்லிசை மன்னர்கள்  என்ற வெகு ஜன பட்டதாரிகள் ஆனவர்கள் - எம் எஸ் வி- டி கே ஆர் என்ற விஸ்வநாதன் -ராமமூர்த்தி .

சொல்லின் அமைப்பு மாத்திரம் அல்ல , அவை பயணிக்கும் வழியை நிர்வகித்து இட்டுச்செல்லும் இடை இசை எனும் interlude மற்றும் பிற இசைக்கோர்வைகள் ludeஸ் இவற்றையும் பாடலின் பாவ குணங்களுக்கு ஏற்ப அமைத்து முற்றிலும் ஒரு மென்மையான /மேன்மையான பாதையில் பாடல்களை பயணிக்க வைத்தனர் இவ்விருவரும்..

இந்த சில பாடல்களின் அமைப்பை பார்ப்போம்.

"இந்த மன்றத்தில் ஓடி வரும்"  "போலீஸ்காரன் மகள்' , " இதோ எந்தன் தெய்வம் "  -'பாபு '. "அதோ அந்த பறவை போல"-'ஆயிரத்தில் ஒருவன் , "தேரில் வந்த ராஜ ராஜன் என் பக்கம்"  -'ராமன் எத்தனை ராமனடி ', "சொர்க்கம் பக்கத்தில் " - 'எங்க மாமா '  இவற்றில்  குறிப்பிட்ட இடங்களை பாவத்தின் வெளிப்பாடாக மன்னர் அரங்கேற்றி இரு ப்பதை  காணலாம் .  

"இந்த மன்றத்தில் ஓடி வரும்"  "போலீஸ்காரன் மகள்' , " இதோ எந்தன் தெய்வம் "  -'பாபு '. 

இவ்விரு பாடல்களிலும், இந்த / இதோ என்ற சொற்களில் பல்லவி தொடங்குகிறது. இரண்டும் 'குறில்களாக பாடப்படுவதை காணலாம். இந்த மன்றத்தில் என்று விரைவாக  துவங்கி, ,[ பின்னர் ]  ஓ ஓ ஓ டி வரும் என்று தென்றலின் வேகத்தை உணர்த்தும் உத்தி பளிச்சிடுகிறது.  அதே போல இதோ எந்தன்  தெய்வம் முன்னாலே என்று வேகநடை போட்டு ஒரே ஒரு புன்னகையில் என்ற சொற்கோவையில், ஒரே வை ஓங்கி ப்பாட  வைத்து ஒரு சிறிய புன்னகையின் தாக்கத்தை பரிமளிக்க வைத்துள்ளார் .

இதோ மற்றும் அதோ இரண்டும் ஒத்த அமைப்புடையன ; ஆனால் "அதோ அந்த பறவை போல"-'ஆயிரத்தில் ஒருவன் பட பாடலில் அதோ என்று உயரத்தை எட்டும் அளவிற்கு  காலப்ரமாணம் கொடுத்து நீட்டியுள்ளார். இதே போன்ற மற்றுமோர் களம் , 'கன்னிப்பெண் ' படத்தில் வரும் "பௌர்ணமி நிலவில்"  ,இப்பாடலின் துவக்கமே உச்சியில்  இருந்து கீழிறங்கும்  நீர் வீழ்ச்சியாக  பாயும் பாவம். பௌர்ணமி நிலவு உயரத்தில் அல்லவா  தவழ்கிறது ; எனவே பாடலின் துவக்கமே உயரத்தில் இருந்துதான். ,எனவே பௌர்ணமி நிலவில் என்று கீழ்  நோக்கி பாய்கிறது .

"தேரில் வந்த ராஜ ராஜன் என் பக்கம்"  -'ராமன் எத்தனை ராமனடி ', "சொர்க்கம் பக்கத்தில் " - 'எங்க மாமா '

இவ்விருபாடல்களில் 'சொர்க்கம்' என்ற சொல் முறையே சரணத்திலும் , பல்லவியிலும் இடம் பெற்றுள்ளன  .   

முன்னதில் சொர்க்கமோ நீயும் நானும் போகுமிடம் , பின்னதில் சொர்க்கம் பக்கத்தில்.

நமது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் சொர்க்கம் எப்போதும் ஒரே இடத்தில் தான் இருக்கும் என நம்புகிறோம். ஆனால் பாடல் களங்கள் மாறுபட்டவை. ஒன்றில் நாயகி  சொர்க்கமோ என்று நீட்டி, போகவேண்டிய உயரம் அதிகம் என புலப்படுத்த , வேறொருத்தி இன்பக்களிப்பில் இருப்பதை 'சொர்க்கம் பக்கத்தில்' என்று உடனே அணை த்துக்கொள்ள  வேகம் காட்டும் வகையில்   பாடலை பாய்ச்சலில் அவிழ்த்து விட்டிருப்பதை காணலாம்.. இதுபோல நீட்டுதல் மற்றும் சுருக்குதல் உத்திகளுக்கு எப்போதும் ராகங்கள் இடம் கொடுக்குமா என்பது கேள்விக்குரியதே. 

மேலும் பல சமயங்களில் அவருடன் உரையாடிய தருணங்களில் , எந்த பாடலை குறித்து விவாதித்தாலும் , அதன் ராகங்கள் /ராக சாயல்கள் பற்றிய எந்த கருத்தையும் அவர் ஆமோதித்ததி;ல்லை ; மாறாக அவர் குறிப்பிட்ட ராகத்தை நினைத்து நான் இசை அமைப்பதில்லை என்றே கூறி இருக்கிறார். எனவே படைப்பாளியின் கூற்றை நாம் ஏற்பது தேவை இ ல்லாத  வாத/விவாதங்களை தவிர்க்க உதவும்.  அதே நேரத்தில், அவருக்கு ராகங்களில் நாட்டம் இல்லை என்றோ , அவற்றை அவர் விரிவாக அறியாதவர் என்றோ நாம் முடிவுகட்ட இயலாது. ஏனெனில் , சில பாடல்களில் முறையான ராகங்களை பயன்படுத்தி இசை அமைப்பதில் கைதேர்ந்தவர் தான். [ லதாங்கி , ஆபோகி , சாமா , ஆனந்தபைரவி போன்ற ராகங்களை முற்றிலும் தழுவிய பாடல்களையும் படைத்தவர் தான் எம் எஸ் வி ]

எனவே மெல்லிசை மன்னரை நாம் புரிந்துகொள்ள , ஒன்றை மட்டும் நினைவில் கொண்டால் போதும். அதாவது, சினிமாவுக்குள் அமையும் காட்சியின் தேவை மற்றும் பாவத்தை வலுவாக நிறுவிட ராகங்களை  மட்டுமே பின்பற்றும் இசையை விட , சொல்லே நீட்டியோ , குறு க்கியோ பாடப்படும் போது பல புதிய ஏற்கத்தக்க அலங்காரங்களை உண்டாக்கி பாடலை வெற்றியின் சிகரத்தை எட்ட வைக்கலாம் என்பதே .       

மேலும் தொடரும்            அன்புடன்    ராமன்   மதுரை    


Quote
Share: