மெல்லிசை மன்னரின் இ...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னரின் இசை உத்திகள் -4  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 212
31/07/2020 12:43 pm  

நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த அம்சங்களை தனித்தனியே அவற்றின் உதாரணங்களோடு பார்ப்போம்.

 

1           பாடப்படும் முறை

இது சற்று விரிவாக அலசப்படவேண்டிய பகுதி.  ஆம் , இந்த உத்தி எம் எஸ் வி முன்னணி இசை அமைப்பாளர் என்ற நிலையை எட்டிய பிறகு மிகவும் சிறப்பாகவே கையாளப்பட்டது . பொதுவாக பாடல் என்பது ஒரு கவிஞனின் கற்பனையில் உதித்த சொற்கோவை. அந்த சொற்கோர்வை யை பாடல் என்ற அமைப்புக்குள் கொண்டுவருபவன் ஒரு இசைஅமைப்பாளனே. அவ்வாறு இசை அமைத்தல் என்பது, வெறும் இசைக்கருவிகளை இசைக்கச்செய்வது மட்டுமே அல்ல. மாறாக ஒரு பாடலுக்கு உயிர் ஊட்டுபவன் இசை அமைப்பாளன் அன்றி வேறு யார்?  இந்த உயிரூட்டல் என்பது முதலில் உணர்ச்சியை அதாவது கதா பாத்திரங்களின் மனநிலை அடிப்படையில் , உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இருத்தல் வேண்டும். அதிலும் அன்றைய படங்களில் காதல் , சோகம் வீரம் , நகைச்சுவை என காட்சிகளில் பாடல் அமைக்கப் பட்டிருக்கும்.. அந்த உணர்வுகள் இயல்பான பாடலின் பண்பாக அமையவேண்டும். இசையமைப்பாளரின் பங்குப்பணி  எவ்வளவு கடினமானது என நாம் சற்று கருத்தில் கொள்ள வேண்டும் .

மகிழ்ச்சியில் அமைந்த அமைப்பை பார்ப்போம்.

மாலை சூடும் மண நாள் [ நிச்சய தாம்பூலம்]

ஆரம்பச்சொல் 'மாலை'    அதை மனமெங்கும் படரவிட்டு [மா       லை சூடும் ] என்று பாட வைத்துள்ளார் .

பூ மாலையில் ஒரு மல்லிகை [' ஊட்டி வரை உறவு']    பூ             மாலையில் என்று பாடப்பட்டு -- 'மாலை ' விரைவாக ஓடுவதை பார்க்கிறோம்.

அங்கே மாலை மயக்கம் யாருக்காக [ஊட்டி வரை உற வு ]  இதில் ---- அங்       கே  மாலை மயக்கம்  [என்று மாலையும் மயக்கமும் நெருக்ககமாக பாடப்பட்டுள்ளன ] ஆனால் யாருக் காஆஆ க என்று பாடப்பட்டு உணர்ச்சியின் வெளிப்பாடாக அமைந்ததை காணலாம்.

'மல்லிகை என் மன்னன் மயங்கும் ' [தீர்க்கசுமங்கலி ']  'மல்       லிகை  என்  மன்னன்மயங்கும்  பொன்      னான    என்று மனமுழுதும் வியாபித்திருக்கும்  குதூகலத்தை காட்டும் பாடும் முறை என்றே நினைக்கிறேன்

குதூகலமும் குரூரமும் ஒரே சூழலில்

'மங்கையரில் மஹ ராணி" " அவளெக்கென்று ஒரு மனம் "  இந்தப்பாடலில் பல வித உத்திகள்                    ஒரு புறம் காதல் மறுபுறம் வேறு ஒருத்தியின் மீது அவளது விருப்பத்திற்கு மாறாக ஆளுமை செய்ய முற்படும் கொடூரன் இருவரும் ஒரே பாடலில் பங்கேற்கும் மாறுபட்ட கள அமைப்புள்ள காட்சி. குதூகலம் கொப்பளிக்க மென்மையான காதல் உணர்வுடன் பல்லவி , சரணம் பயணித்த பின் இடை இசை போல பெண் குரல் சோகத்தின் எதிரொலியாக - ஆ ஆஹ் ஆஹ் ஆ ஆஅஆ  ஆஅ  ஆ அ  ஆ என்ற துயர் மிகும் ஒலியில் ... மன்னர் என்ற பட்டம் பெருமை பெறும் வகையில் எம் எஸ் வி நிகழ்த்திய அற்புதம்.

இதே படத்தில் வேறொரு பாடலில் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்வான பூஜைக்கு கூட போக விடாமல் பாரதியை ஒரு நடன மங்கையாக ஆட வைத்து வில்லன் முத்துராமன்  ஆட்டிப்படைக்க , அதே நேரத்தில் வீட்டில் பூஜை செய்யும் தோழி, இங்கே இவளோ வீட்டில் பூச்சியாய் துடித்துக்கொண்டே ஆடுவது போல் நடித்துக்கொண்டு ...  என்ன கொடுமை.  பூஜையின் பாடலுக்கு தாளமே இல்லாமல் மெலிதே ஊர்வது போல குரல் பதிவு . இதற்கான இடை இசையே துயருற்ற பெண்ணின் நடன அமைப்பெற்கென என்று  எம் எஸ் வி காட்டிய மெகா உத்தி இப்பாடலில்.

மகிழ்ச்சி த் திளைப்பில் பாடல்

"குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா "  'உத்தரவின்றி உள்ளே வா

ஒரு குழுவாக நண்பர்கள் நீரோடையில் குளிப்பதாக -காட்சி . மிகுந்த உற்சாக பாடல்; அதற்கேற்ற துள்ளல் இசை [எனது தனிப்பட்ட கருத்து : இந்த பாடலின் சில கருவி இசைப்பு/ பயன்பாடு பின்னாளில் வந்த நினைத்தாலே இனிக்கும் பாடல்களுக்கு தகப்பன் என்பதே ].எஸ் பி .பி -எல் ஆர் ஈஸ்வரி கூட்டணி -கேட்கவேண்டுமா பரவசத்துக்கு ?  பாடும் முறையில் பின்னி எடுத்து விட்டார்கள். இரண்டாம் சரணத்தில் 'சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ என்ற இடத்தில் எல் ஆர் ஈஸ்வரி மயக்கம் தரும் வகையில்

[ லைட்டா சிரிச்சா என்னும் இடத்தில் ] அனாயாசமாக பாடியிருக்கிறார். பல்லவியில் குளிரடிக்குதே  எனும் போதெல்லாம் நடுங்கி கொண்டே பாடுவது இதெல்லாம் ஈஸ்வரியின் கோட்டைகள் அன்றோ அவருக்கு சொல்லியா தரவேண்டும்? 

யூக்ளிங் எனும் சொல்லில்லா உத்தி.

தமிழ் திரை பாடல்களில் யூக்ளிங்  பிரபலமாகும் உயரத்திற்கு உயர்த்தியதும் மெல்லிசை மன்னர் தான். வார்த்தையில்லா  ஓசை என்பதனால் பாடலின் பாவத்திற்கு கட்டுப்பட்டு பாட வேண்டிய கடினமான செயல். எம் எஸ் வி யின் நீண்ட கால இசைக்குழுவினரில் ஒரு முக்கிய அங்கம் திரு எம் எஸ்.ராஜு அவர்கள். இது போன்ற ஜால இசையில் தனித்திறன் கொண்டவர் . அவரின் குரலில் நாகேஷ் பயணித்தது 'மலரென்ற முகம் ' காதலிக்க நேரமில்லையில், மற்றும் மூர்த்தி வெண்ணிற ஆடையில் = அல்லி பந்தல் பாடலில். எம் எஸ் ராஜு திறம்பட செயல் பட்ட பெருமைக்குரியவர் 

இதுகாறும் சொல்லப்பட்ட பாடல் வகைகளில் எப்போதும் சுவை குன்றாமல் காப்பாற்றும் திறன் மெல்லிசை மன்னருக்கு கை வந்த கலை . அவரின் பாடல்களின் தனிச்சிறப்பாக மூன்று அம்சங்களை காணலாம். பாடலுக்கு வயது ஏற ஏற தொடர்ந்து இளமைகுன்றாத  தன்மை , 2 கேட்க கேட்க மேலும் கேட்கத்தூண்டும் அலாதி ஈர்ப்பு  மற்றும் 3 எத்துணையோ பாடல்களுக்கு அவர் இசை அமைத்திருந்தாலும் ஒன்று போல் ஒன்று repeat ஆனதே இல்லை. இது போன்ற இசையின் காலத்தை நமது  இளமைக்காலத்தில் முழுதும் கேட்டுக்கொண்டே வாழ்ந்தோம் என்பது இறைவன் நமக்களித்த அன்புக்கொடை -வேறென்ன சொல்ல?                                  நன்றியுடன் அன்பன் ராமன் மதுரை . 

 

 


Quote
Share: