எம் எஸ் வி 3 இசையும...
 
Notifications

எம் எஸ் வி 3 இசையும் காலமும்  

  RSS

palaniappansubbu
(@palaniappansubbu)
Active Member
Joined: 9 months ago
Posts: 6
17/05/2019 11:00 am  

பாகப்பிரிவினை” படத்தில்தான் இவர்களின் தனித்துவம் வெளிப்பட துவங்கியது. இதில் உள்ள சில அருமையான பாடல்களைப் பின்னர் பார்க்கலாம். இது 1959ல் வந்த படம். 1960ல் வந்த “தங்கப்பதுமை, “மன்னாதி மன்னன் போன்ற படங்களிலும் முந்தைய படங்களின் சாயம்1961 இருந்தது. அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் கண்ணிகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட ஆண்டு 1961. என்ன ஒரு ஆண்டு அது! அந்த வருடம்தான் தமிழ்த் திரையிசை நவீன காலங்களுக்குள் பிரவேசித்தது, இந்திப் பாடல்களைவிட பத்து வருடம் பின்தங்கி.

1961- திருப்புமுனை ஆண்டு

விஸ்வநாதன்- ராமமூர்த்திக்கு 1961ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாய் இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் திரையிசையின் முதலிடத்தில் அவர்கள் தங்களை நிறுவிக் கொண்ட ஆண்டு அது. இந்த ஆண்டில்தான் அவர்களுக்கேயுரிய ஓசை தீர்மானமாக உருவானது- இந்த ஓசை அடுத்த ஐந்தாண்டுகள் திரையிசை நேயர்களைக் கட்டிப் போடுவதாய் இருந்தது.

முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்களிடம் 1961ஆம் ஆண்டு வந்த இந்தப் படங்களின் பெயர்களைச் சொல்லிப் பாருங்கள், அவர்கள் முகம் சந்தோஷத்தில் மலர்வதைக் காணலாம். அந்த மாதிரி இப்பல்லாம் படம் எடுக்கறதில்லை, என்ற வருத்தத்தையும், ஒழுக்கம் கெட்டுப் போயிடுச்சு, என்ற அங்கலாய்ப்பையும் கூடவே கேட்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை. “பாசமலர்“, “பாலும் பழமும்“, “பாவ மன்னிப்பு“. இந்த ஒவ்வொரு படமும் இப்போது ஒரு கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது. பீம்சிங் இயக்கிய “பா” வரிசை படங்கள் இவை. எதிர்கால தமிழ்த் திரை வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மூன்று படங்களை ஒரு இயக்குனர் ஒரே ஆண்டில் வெளியிடுவது என்பது திகைக்க வைக்கும் விஷயம் (பாசமலர் திரைப்படம் அண்ணன்- தங்கை உறவை எவ்வளவு உறுதியாக வரையறை செய்தது, அதன்பின் எத்தனை எததனை இயக்குனர்கள் இந்த உறவை ஒரு தங்கச் சுரங்கமாய் கண்டனர்!). மூன்று படங்களிலும் சிவாஜி கணேசன்தான் நாயகன்.

மேலே சொன்னது போல், விசுவநாதன்- ராமமூர்த்தியின் முத்திரை ஓசை தாங்கி வந்த முதல் படம் “பாகப்பிரிவினை“. 1959ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியதும் பீம்சிங்தான். இதிலிருந்து ஒரு பாடலை எடுத்துக் கொண்டு, முத்திரை ஓசை என்று நான் எதைச் சொல்கிறேன் என்று பார்க்கலாம்- “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்” என்ற பாடல்.

ஐம்பதுகளில் வந்த பாடல்களோடு ஒப்பிடும்போது இது எவ்வளவு நவீனமாக இருக்கிறது என்பதைதான் நாம் முதலில் கவனிக்கிறோம். அதற்கு இதன் ட்யூன் ஒரு முக்கியமான காரணம். சுசிலாவின் குரலும் அடங்கி ஒலிக்கிறது, அக்காலத்துக்குரிய பிற பாடல்கள் போல் உரக்க ஒலிப்பதில்லை.

இது ஒன்று மட்டுமல்ல, விஸ்வநாதன்-ராமமூர்த்தி முத்திரை. அவர்களின் தனித்துவம் என்று தேடினால், முதலில் இந்தப் பாடல் ஒரு அமைதியான நதியின் அழகும் நளினமும் கொண்டிருப்பதை உணர்கிறோம். சரணத்தில் உச்சம் தொட்டாக வேண்டும் என்ற வேகம் இல்லை. மாறாய், சரணத்தின் முடிவில் மிக மென்மையாய் ஒலித்து பல்லவியுடன் இயல்பாய் இணைகிறது. இரண்டாவதாக, இந்தப் பாடலின் தடையற்ற ஓட்டத்தில் ரிதம் எப்படிப்பட்ட பங்களிப்பு கொடுக்கிறது பாருங்கள். இதுவும் நவீனமாக இருக்கிறது. முன்னெல்லாம் ஒரு பாடலில் மிருதங்கம் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது கர்நாடக இசையை அடிப்படையாய் கொண்ட பாடலாய் இருக்கும், மிருதங்கமும் கர்நாடகமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் நாம் ஆச்சரியப்படும் வகையில் இந்தப் பாடலில் மிருதங்கம்தான் நவீனத்துவம் கூட்டுகிறது. இப்படியொரு தனிப்பட்ட வகையில் மிருதங்கத்தைப் பயன்படுத்துவதில் விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் மேதைமை வெளிப்படுகிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பெண்குரலில் ஒலிக்கும் பாடல்கள் பலவற்றில் சுதந்திரமாய்ச் செல்லும் ட்யூனும் மிருதங்கம் அல்லது தபலாவின் நிலையான ரிதமும் இணைந்திருப்பதை ஒரு பொதுத் தன்மையைப் பார்க்க முடிகிறது.

பாக்யலக்ஷ்மி (1961) படத்தில் வரும் பாடல் இந்தப் பொதுத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது பாருங்கள் –மாலைப் பொழுதின் மயக்கத்திலே...

பாடல் எவ்வளவு இயல்பான ட்யூனில் அமைந்திருக்கிறது என்பதையும் அதன் அற்புதமான ரிதத்தையும் நான் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. மிருதங்கம் இந்தப் பாடலுக்கு ஒரு நவீன ஒலி கூட்டுவது மட்டுமல்ல, அது எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது பாருங்கள்.

இவர்கள் இசையில் உள்ள வேறொரு முக்கியமான தனித்தன்மையைக் காட்ட 1961ஆம் ஆண்டு வந்த இரு பாடல்களை எடுத்துக் கொள்கிறேன்.

பாலும் பழமும்” திரைப்படத்தில் வரும் “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்ற பாடல் இது-

ப்ரிலூடில் வேகமாய் ஒலிக்கும் வயலின்களும் கிதாரின் மெல்லிய அதிர்வும் இந்தப் பாடலின் நவீனத்துவ உணர்வை விரைவில் நிறுவி விடுகின்றன. ஜி ராமநாதன் சகாப்தத்தைக் கடந்து எவ்வளவு தூரம் இந்த இரட்டையர் வந்திருக்கின்றனர் என்பதை உணர்த்த இதுவே போதும். இங்கு தபலா எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனித்திருப்பீர்கள், அது நிலையான ரிதம் ஒன்றில் இப்பாடலை நிறுவுகிறது. சமவெளியில் பாயும் நதி போல் தங்கு தடையின்றி இப்பாடல் ஒலிக்கிறது, இது மலையிலிருந்து பிரவகிக்கும் வெள்ளமல்ல. இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன்- இந்தப் பாடல் எந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது? பலரையும் இந்தக் கேள்வி தோற்கடித்து விடுகிறது. அது ஒரு காரணத்துடன் கேட்கபப்ட்ட கேள்விதான், இதற்கு பதில் எதுவும் நான் எதிர்பார்ப்பதில்லை. இந்தப் பாடலின் பின்னணியில் செவ்விசையின் தளம் இருந்தாலும், அதன் ராகம் முழுமையாய் வெளிப்படுவதில்லை. மாறாய், நமக்குக் கிடைப்பது ஒரு ட்யூன். அது நம் இதயத்தில் நுழைந்து நம் உணர்வுகளைத் தொட்டு மறக்க முடியாத தாக்கத்தை விட்டுச் செல்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையின் முக்கிய இயல்பாக இது இருந்தது, பின்னர் எம்எஸ்வி இசையின் தனித்தன்மையாகவும் ஆனது. வேர்களை இழக்காமல், ஆனால் அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் ட்யூன் கம்போஸ் செய்யும் திறமை செவ்வியலுக்கு புது நிறம் சேர்க்கிறது. பல சமயம் இவர்கள் பாடல்களின் ராகத்தை அடையாளம் காண்பது கடினமாக இருக்கிறது, அது முக்கியமும் அல்ல.

பாசமலர் படத்தில் வரும் பாடல் இது- .... பல தலைமுறை திரையிசை ரசிகர்களின் மேல் நிலையான தாக்கத்தை ஏற்படுத்திய பாடல் என்ற வகையில், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மிகச் சிறந்த பாடல் என்றால், அது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடும். ஆம், “மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்ற” என்ற பாடல்தான் இது. ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த பாடல் என்று ஒப்புக்கு ஒரு அடையாளம் கொடுக்கலாம், ஆனால் யாருக்கு அதில் அக்கறை- இந்தப் பாடல் எவ்வளவு வலுவாக நம்மைத் தாக்குகிறது பாருங்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இந்தப் பாடல் ரசிக நெஞ்சங்களை வெற்றி கொண்டது. மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரன் தனக்கு இந்தப் பாடல் அளித்த உந்துதலைப் பேசியிருக்கிறார்.


Quote
Share: