ஆயிரத்தில் ஒருவர் M...
 
Notifications
Clear all

ஆயிரத்தில் ஒருவர் MSV - 003  

  RSS

SVR
 SVR
(@svr)
Active Member
Joined: 1 year ago
Posts: 5
25/05/2019 6:35 am  
ஆயிரத்தில் ஒருவர் MSV. பாடல் - 0003
 
மெல்லிசை மன்னர்கள் 6 மாத காலம் மனம் தளராது கடுமையாக உழைத்து இசையமைத்த ஒரு பாடல்.
கவியரசரும் அவர்களுடனே துளியும் அலுத்துக் கொள்ளாமல் மாற்றி மாற்றி இயற்றிய பாடல்.
இயக்குனர் ஸ்ரீதரின் மற்றுமொரு காதல் காவியம் இது என்று சொன்னால் மிகையில்லை.
 
இந்தப் பாடலின் சிறப்பம்சம், இப்பாடலின் தன்மைக்கேற்ற இராகத்தில் வடிவமைக்கப்பட்டள்ளது. ஆம், மாண்ட் ராகத்தில் அமைந்த பாடல். இந்த இராகத்தை இசைக்க ஏற்ற மன நிலைகள்: காதல் நினைவுகள்.. அனைத்தையுமே உள்ளடக்கியுள்ள பாடல் இது. அதற்கேற்ற நேரம் பகல் வேளையின் நான்காவது ஜாமம். மாலை 3லிருந்து 6 வரை.
 
இந்தப் பாடல் காதலனை எண்ணி காதலி பாடுவது. இது ஒரு haunting melody ரகத்தை சேர்ந்தது.
இந்தப் பாடல் இசையமைக்க 6 மாத காலம் பிடித்தது . பல மெட்டுகள் போடப்பட்டும் இயக்குனருக்கு திருப்தி வரவில்லை. அவர் விஸ்வநாதனிடம், விட்டு விடுங்கள், நான் இந்த சூழ்நிலைக்கு வேறு சூழ்நிலை மாற்றி விடுகிறேன் என்று கூறியதும், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு 2 நாள் அவகாசம் கேட்டு, கடற்கரையில் அமர்ந்து சிந்தித்தபோது, கடலலையின் ஒலியால் ஈர்க்கப்பட்டு இந்த மெட்டு அமைக்கப்பட்டது. இயக்குனருக்கும் எதிர்பார்ப்பை விட மேலான திருப்தியைத் தந்தது இந்த மெட்டு . (இயக்குனர் ஸ்ரீதர் கல்கியில் எழுதிய "திரும்பிப் பார்க்கிறேன்" என்ற தொடரில் அவர் கூறியது). 6 மாத கால கடின உழைப்பு வீண் போகவில்லை. அனைவரது மனத்தையும் இன்றும் சுண்டியிழுக்கும் மிகச் சிறந்த பாடலாக இது அமைந்து விட்டது.
 
முன்னிசையாக கடலின் ஆர்ப்பரிக்கும் இசையுடன் இணைந்த புல்லாங்குழலிசை, பிறகு இனிய சிதார் சிற்றிசையுடன்
பி பி ஸ்ரீனிவாசன் தேமதுரக் குரலுடன் பாடல் துவங்குகிறது.
 
PBS "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை, என் கண்களும் மூடவில்லை,"
 
உடன் பி சுசீலா தன் குரலினும் இனிய குரலில் தொடர்கிறார்.
"நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை, என் கண்களும் மூடவில்லை,"
 
பல்லவியின் முதல் வரியை
"நெஞ்சம் மறப்பதில்லை ...ய்...ய்...ய் என்று சுசீலா முடிப்பது அழகு.
 
சரணத்திற்கு முன் இடையிசையாக சுழன்று சுழன்று ஒலிக்கும் புல்லாங்குழல், தொடரும் சிதார் இசை பின் அதன் முடிவாக வரும் வயலின் அனைத்துமே நம்மை எதோ ஒரு உலகத்திற்கு கொண்டு சென்று விடுகின்றது. முதல் சரணம் பி சுசீலாவின் குரலில் தொடர்கிறது
 
"ஒரு மட மாது உருகுகின்றாளே உனக்கா தெரியவில்லை
இது சோதனையா, நெஞ்சின் வேதனையா உன் துணை ஏன் கிடைக்கவில்லை
உன் துணை ஏன் கிடைக்கவில்லை"
 
நெஞ்சம் மறப்பதில்லை ...ய்...ய்...ய் "
 
இரண்டாவது சரணத்திற்கு முன்னும் அதே இடையிசை. இரண்டாம் சரணம் பி பி ஸ்ரீநிவாஸின் குரலில்.
 
"ஒரு பொழுதேனும் உன்னுடனே நான் உயிராய் இணைந்திருப்பேன் "
என்ன ஒரு கற்பனை கவியரசருக்கு. முன் ஜென்மத்தில் காதலியை இழந்த காதலன் ஒருமுறையாவது அவளுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை கவியரசர் உணர்த்துகிறார். சரணம் இரண்டுமே கவியரசரின் ஆட்சிதான் முன்னிலை வகிக்கின்றது.
 
"ஒரு பொழுதேனும் உன்னுடனே நான் உயிராய் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும் மறுபிறப்பினிலும் நான் என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்"
காதலில் என்ன ஒரு உறுதி. எப்பிறவியிலும் இதே காதலிதான் என்று உறுதி கூறுவது போல்!
 
இருவர் குரலிலும் பல்லவி மீண்டும் பாடப்பட்டு பாடல் நிறைவுறுகிறது.
 
இப்பாடலில் பல சிறப்பம்சங்கள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு இப்பாடலை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். பாடகர்களா, இசையமைப்பாளர்களா, கவியரசரா, அல்லது அழகான காட்சியாக இதை நமக்களித்த இயக்குனரா என்று நம்மால் வகைப் படுத்த இயலாது. ஒளிப்பதிவாளரையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவரது வெற்றி இக்காட்சி என்றும் நம் கண்களிலேயே நிற்கும். ஆனால் கவியரசரின் திறமை, இருமுறை ஒலிக்கும் இப்பாடலை இருசுவையுடன் வழங்கியிருக்கிறார், ஒருமுறை கொம்புத்தேன் என்றால் அடுத்த முறை மலைத்தேன்.
 
இருவர் பாடியது என்றா சொன்னேன், இல்லை இல்லை, மூவர், பி பி எஸ், பி சுசீலாவுடன் தப்லாவும் அல்லவா பாடியிருக்கிறது. நம் இதயத்தை அல்லவா அது தட்டியிருக்கிறது.
 
இதில் மெல்லிசை மன்னர்களின் விடாமுயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். காத்திருப்பு வீண்போகவில்லை. திரையசைப் பாடல்களில் காவியமாக அமைந்த பாடல் இது.
 
பாடலின் லிங்க்:
This topic was modified 1 year ago by SVR

Quote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 1 year ago
Posts: 41
26/05/2019 6:40 am  

ரமணி சார்,

அற்புதம்.

சரளமான நடை.

தபலா பற்றி சொன்னது நிஜம்


ReplyQuote
Share: