ஆயிரத்தில் ஒருவர் M...
 
Notifications
Clear all

ஆயிரத்தில் ஒருவர் MSV - 002  

  RSS

SVR
 SVR
(@svr)
Active Member
Joined: 1 year ago
Posts: 5
18/05/2019 4:44 pm  
அனைவருக்கும் வணக்கம். முதல் பாடலாக கர்ணன் படத்திலிருந்து "ஆயிரம் கரங்கள் நீட்டி" என்ற பாடலைப் பதிவிட்டேன். இன்றும் அதே படத்திலிருந்து இன்னொரு பாடல். முதல் பாடல் ஆதித்ய ஹிருதயத்தை ஒத்தது என்றால் இப்பாடல் கீதோபதேசம் போன்றது. கீதையின் சாரத்தை எளிய தமிழில் கவியரசர் வடித்துக் கொடுக்க அதற்கு உயிரூட்டியிருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.
 
யுத்த காலத்தில் எதிரிகள் சேனையில் இருக்கும் பீஷ்மர் போன்றோரைக் கண்டதும், அவர்கள் தன் உறவினர்கள் அவர்களை கொல்ல மனம் வரவில்லை என்று அர்ஜுனன் மனம் தளர்ந்து தனது வில்லை கீழே போட்டதும், பகவான் கண்ணன் அவனுக்கு உபதேசம் செயகிறார். அப்போது பாடப்படும் பாடல் இது. "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா: இப்பாடல் ராகமாலிகையில் அமைந்துள்ளது.
 
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ
விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ..
 
ஓ அர்ஜுனா, மரணத்தை எண்ணி மனம் கலங்கிடும் உனக்கு மரணம் என்றால் என்னவென்று சொல்கிறேன் கேள்; மானிடரின் ஆன்மா ஒருபோதும் மரணம் எய்துவதில்லை. மறுபடி மறுபடி பிறந்து வரும். இங்கு உனது கடமை உயிர்களைக் (எதிரிகளின்) கொல்வது. ஒவ்வொரு எதிரியையும் கொல்வாய், வீரத்தில் அதுவும் ஒன்றுதான் என்று அறிவுறுத்துகிறார் கண்ணன். இந்த வரிகள் நாட்டை இராகத்தில் அமைந்துள்ளன.
 
என்னை அறிவாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிவாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ
 
என்னை நீ அறிந்து கொண்டால் எல்லா உயிர்களும் எனதே என்பதும் உனக்கு புரியும். நீ இந்தக் கண்ணனின் மனது கல்மனது என்றெண்ணி உனது காண்டீபத்தை நழுவ விட்டாயோ! சகல உயிர்களும் நானே ஆவேன், மன்னரானாலும், மக்களானாலும், மரம் செடி கொடி போன்ற ஜீவராசிகளானாலும் அனைத்தும் நானே. இதை சொன்னவனும் சொல்பவனும் கண்ணனாகிய நானே. தர்மம் வாழ்வதற்கு நீ இப்போது துணிந்து நில் என்று அவனுக்கு தைரியமூட்டுகிறார் பகவான் கண்ணன். இந்த வரிகள் சஹானா இராகத்தில் அமைந்துள்ளன.
 
புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!
 
இதுதான் புண்ணியம் என்று இந்த உலகம் கூறினால் அந்த புண்ணியம் கண்ணனுக்கே சேரும் போற்றுபவர்கள் போற்றுவதும் தூற்றுபவர்கள் தூற்றுவதும் கண்ணனையே அடையட்டும். இங்கு அனைத்தும் கண்ணனே. கண்ணனே வழி காட்டினான், கண்ணனே செய்யென்று உரைத்தான், கண்ணனே இங்கு கொலையும் செயகின்றான் (நீ செய்யும் கொலையை) ஆகையால் நீதான் அவர்களைக் கொல்லப் போகிறாய் என்று மனம் கலங்கி உனது கடமையை செய்யத் தவறாதே, காண்டீபத்தை கையிலேந்தி இப்போர்க்களமெல்லாம் சிவக்கும் வண்ணம் உன் கடமையை செய்வாயாக என்று கடமையைப் போதிக்கிறார் கண்ணன். இந்த வரிகள் மத்யமாவதி இராகத்தில் அமைந்துள்ளன.
 
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
 
இதுவும் மத்தியமாவதி இராகத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள்:
 
நல்லோர்களின் முன்னேற்றத்திற்கும், தீய சக்திகளை அழிப்பதற்கும்,
தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், நான் எல்லா யுகங்களிலும் வருவேன்.
என்று கூறுகிறார் பகவான் கண்ணன்.
 
இப்பாடலை தனது கணீர்க் குரலில் மிகவும் உணர்வு பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பாடியிருக்கிறார் டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன். அவர் ஒருவரால் மட்டுமே பாட முடியும் இது போன்ற பாடல்களை. கவியரசர் இப்பாடலிலேயே கீதையின் பொருள் முழுவதையும் நமக்கு உணர்த்திவிடுகிறார். இவர் வால்மீகி, வியாசர் போன்றோரது காலத்தில் பிறந்திருந்தால் இன்னொரு இதிகாசம் நமக்கு கிடைத்திருக்கும். மெல்லிசை மன்னர்களோ காலத்தைக் கடந்து நிற்கும் அருமையான இசையை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அது நாம் செய்த பாக்கியம். இப்பாடலைக் கேட்டதும் அனைவரும் வாழ்க்கை என்றால் என்ன என்று நிச்சயம் சிந்திப்பார்கள் சிறிதேனும். அவ்வளவு பொருள் நிறைந்த பாடல் இது.
 
பாடலின் லிங்க்

Quote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 1 year ago
Posts: 41
26/05/2019 6:51 am  

ரமணி சார்,

சீர்காழி ,அசரீரி என முத்திரை குத்தப்பட்டாலும் மன்னரின் இசையில் அவர் பாடிய ஜோடிப் பாடல்கள் அத்தனை

சுகம்.

கவிஞர் கண்ணதாசன் தனது இறுதி ஊர்வலத்தில் சீர்காழிதான் பாடவேண்டும் எனப் பணித்தார்.


ReplyQuote
bhas
 bhas
(@bhas)
New Member
Joined: 1 year ago
Posts: 1
13/06/2019 7:16 pm  

karnan movie music deserves whatever award is there for music--national and or international.another musical score like this is not possible unless kannadasan and MSV-TKR reborn


ReplyQuote
Share: