ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -98 [ சற்றே அதிர்ந்திருப்பார் திரு ஸ்ரீதர். ]  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 166
27/10/2020 10:20 am  

அன்பர்களே

இது என்ன புதுக்கதை என்கிறீர்களா ? இல்லவே இல்லை ; பழைய கதைதான்ஆனாலும் என் பார்வையில் நிச்சயம் இந்த தலைப்பிற்கு அடிப்படை நியாயம் உண்டு. அது என்ன?  'காதலிக்க நேரமில்லை' படத்தின் இமாலய வெற்றிக்குப்பிறகு யாரும் சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பமாக வின்சென்ட்-சுந்தரம் இருவரும் கூட்டாக சித்ராலயா நிறுவனத்தில் இருந்து விலகி சொந்த அடிப்படையில் free lancer களாக செயல் பட முடிவெடுத்தனர். இது சித்ராலயா நிறுவனத்தினரை விட ரசிகர்களை கிட்டத்தட்ட பெரும் சோகத்திற்குள்ளாக்கியது. ஏனெனில் அன்றைய தமிழ்த்திரை ரசிகர்கள் ஸ்ரீதர்- வின்சென்ட் இருவரையும் ஒருமித்தே ரசித்தனர் என்பது மட்டுமல்ல இவ்விருவரும் திரையில் வெளிப்படுத்திய காட்சி நளினம் மறக்கவொண்ணாதது.அதே சமயம் யாருக்கு முதலிடம் என்றே தீர்மானிக்க இயலாத அளவிற்கு இருவரின் ஆளுமைகள் ஒன்றில் ஒன்றாக இயைந்து கறுப்பு  வெள்ளையில் துவங்கி சென்னையின் முதல் வண்ணப்படம் [கா. நே ] வரை நேர்த்தியாகவே பயணித்தது .

இனி வேறு அமைப்புகள் எப்படி இந்த உன்னதத்தை எட்டும் என்றெல்லாம் விவாதங்கள் கல்லூரி ஹாஸ்டல் அறைகளில் வெகுவாக இடம் பிடித்தன.  அந்த அளவுக்கு நீ இன்றி நான் இல்லை என்பதாக மாணவர்கள் மத்தியில் ஸ்ரீதர் -வின்சென்ட் எப்போதும் ஒரு hot topic என்றால் மற்றவற்றை நீங்கள் மனதில் சீர்தூக்கி பார்த்துக்கொள்ளுங்கள். இதில் சில தகவல்கள் விளக்கப்பட வேண்டியவை.  இன்றைய இளைய தலைமுறை முந்தைய தலைமுறைக்கு  சினிமா குறித்து எதுவும் தெரியாது அவர்கள் கிணற்றுத்தவளைகள் என்பது போலவும் ,திரை இசை என்பது ஏதோ 1980 களி ல் தான் துவங்கியது எனவும் உளறிக்கொண்டிருப்பதை கவனித்தால் இவர்கள்  தான் கிணற்றுத்தவளைகள் அதுவும் வெறும் வற்றிய கிணற்றுத்தவளைகள் என்றே தோன்றுகிறது. அன்றைய திரைக்களம் மனிதத்திறமைகளை அரங்கேற்றியது; பின்னதோ தொழில் நுட்ப உத்திகளால் பிரம்மாண்டம் என காட்டிக்கொள்ள முயலுகிறது. ஆனால் அன்றைய வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் ,திருவிளையாடல், ராஜராஜ சோழன், சிவந்தமண் போன்ற படங்களின் அமைப்புக்கும் இசைக்கும் இருக்கும் மகோன்னதத்தின் நிழலைக்கூட பிற்காலத்தவை தொட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு சுவாரசியம் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதாவது "கா  நே " படத்திற்கு பின் கலைக்கோயில் ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த படம். அதன் ஒளிப்பதிவு [ஜெமினி பட்டறையில் திரு எல்லப்பா அவர்களிடம் பயின்ற] திரு என்.பாலகிருஷ்ணன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது  அனால் அடுத்ததாக வந்த ஸ்ரீதரின் ஆக்கம் வெண்ணிற ஆடை யில் ஒளிப்பதிவு என்னவோ என்.பாலகிருஷ்ணன் தான் செய்தார் ஆனால் அவருக்கு மேல் ஒரு ஒளிப்பதிவு டைரக்டர் என்று திரு. ஜி பாலகிருஷ்ணா [வடநாட்டு பிரபலம்] அமர்த்தப்பட்டார். அது ஏன் ?. 

வின்சென்டுக்கு இணையாக ஒரு திறமைசாலி இல்லாமல் வண்ணப்படத்தை சிறப்பாக பதிவு செய்ய முடியுமா என்ற வினா ஸ்ரீதருக்குள் எழுந்திருக்க வேண்டும். அதற்காகவே ஹிந்தியில் janak janak paayal baaje, dho  aanken baara haath போன்ற ஷாந்தாராமின் படங்களின் ஒளிப்பதிவில்  வெற்றி கண்ட படக்கலைஞர்                                       திரு. ஜி  பாலகிருஷ்ணாவைத்தேர்வு செய்தார் ஸ்ரீதர் என்பது எனது புரிதல். அதாவது ஸ்ரீதரின் படங்களில் காட்சி அமைப்பில் ஒரு தெளிவும் பொலிவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கண்டிப்பாக ஈடேற்ற வேண்டிய நிலையில் ஸ்ரீதர் இருந்தார். எனவே தான் புகழ்மிக்க ஜி.பாலகிருஷ்ணாவை தனது வெண்ணிற ஆடை மற்றும் பியார் கியே ஜா [ ஹிந்தி -கா.நே ] படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார்.

இதே நேரத்தில் வின்சென்ட்- சுந்தரம் எங்கவீட்டுப்பிள்ளையில் தங்களின் சிறப்பை நிலை நாட்டினர். அவ்வப்போது திரு பி,என். சுந்தரம் சி.வி.ராஜேந்திரன் படங்களிலும் பணியாற்றி தனது நட்பை விடாமல் இருந்தார். அதில் ஒரு வினோதம் யாதெனில் வி- சு இணைக்குப்பிறகு , சித்ராலயா நிறு வனத்தில் ஒளிப்பதிவாளர்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்தனர். முதலில் என்.பாலகிருஷ்ணன், அதன் பின்னர் யூ .ராஜகோபால் , அடுத்து பி எஸ். லோகநாதன் ,திவாரி என்று வெவ்வேறு கலைஞர்களின் பங்களிப்பு தொடர்ந்தது. எனினும் பிற பணிகள் அநேகமாக எப்போதும் ஒரே தொழில் நுட்பாளர்கள் பங்களிப்பினால் நிறைவேற்றுப்பட்டு வந்தன.       ஸ்ரீதர் - வின்சென்ட்- சுந்தரம் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்த்திரை வரலாற்றில் இன்றளவும் புகழுடன் பயணிக்கிறது. இதனால் ஸ்ரீதர் வின்சென்டின் விலகலால் சற்றே  அதிர்ந்திருப்பார் என்று இப்பதிவிற்கு தலைப்பு வழங்கி உள்ளேன்.                  வேறு தகவல் களுடன் மீண்டும் தொடர்வோம்.    அன்பன்  ராமன்  மதுரை.


Quote
Share: