ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -45  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 127
05/04/2020 11:56 am  

இத்தொடரில் நான் உணர்ந்த அனுபவங்களை வெளியிட்டு வருகிறேன். அனைவரும் அதைத்தானே செய்கிறோம் என்றாலும் எங்கள் காலத்திய   பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் -பின்னர் நிகழ்ந்துவிட்ட மாற்றங்களுடன் ஒப்பிடும் போது மிகுந்த வேறு பாடுடையன . குறிப்பாக திரைப்பட கதை , பாடல், நடிகர் நடிகையர் இவை குறித்து பேச எந்த வீட்டிலும் , படிக்கும் பையன்/ பெண் இவர்களுக்கு எள் முனை அளவு சுதந்திரம் கூட கிடையாது. இவைபற்றி பேசுவது . சதி திட்டம் தீட்டுவது போல, பரம ரகசியமாக செய்யப்பட வேண்டும்.                                          இ ல்லையேல்   - படிப்பு நிறுத்தப்படும் என்ற அச்சுறுத்தல் தவறாது அரங்கேறும் மேலும் தினமும் பள்ளிக்கு வந்தான் என்று ஆசிரியரின் குறிப்புடன் வீட்டிற்கு வரவேண்டும் என்ற பெரும் நிபந்தனை வைக்கப்படும். இதனால் பையன்கள் 20 நாள் ஆகிவிட்டால் முடி நிறைய வளர்ந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு சிகை அலங்கார நிலையங்களுக்கு படை எடுப்பது சாதாரண நிகழ்வு. [பெண்களுக்கு- பாவம் அந்த வழியும் இல்லை]. ஏனெனில் அங்கு தான் சினிமா பத்திரிகைகள் படிக்கவோ, படங்களை பார்க்கவோ இயலும் - முடிவெட்டிக்கொள்ள காலம் தாழ்த்திக்கொண்டே பொழுது போக்கலாம்.   மேலும் அங்கோ, அல்லது அருகிலோ ரேடியோ சிலோன் - பாடல்கள் கேட்கமுடியும் . எனவே எங்கள் திரை ஞானங்களை பட்டை தீட்டியவை - சிகை அலங்கரிக்கும் நிலையங்களே. சற்று உயர் வகுப்புகளில் உணவு இடை வேளை - பெரும்பாலும் திரை விவாதங்களுக்கானதாகிவிடும். என் போன்றோர்  வெறும் பார்வையாளர்கள்., ஏனையோர் விடுதிகள் அல்லது திரை அரங்கின் அருகில் வசிப்பவர்கள். அவர்களின் கூற்றை எதிர்த்து வாதிட இயலாமல் கேட்க வேண்டியது தான்.   என் காலத்தவர்க்கு ரேடியோ சிலோன் ஒரு அசரீரி  தெய்வம் எனில் மிகை அல்ல. அதுவே அனைத்து தமிழ் படங்களுக்கும் சாரளம். இவை அனைத்தும் எல்லா தடைகளையும் தாண்டித்தான். இவ்விடத்தில் கனகசபை மீண்டும் ஒரு தானைத்தலைவனாக என் மனதில் ஒளிர்கிறான். இது போன்ற விவாதங்களில் மிக எளிதாக பங்கேற்பான். தான் சொல்ல வந்ததை அழகாக நிறுவுவான். அவனை வெல்வது எளிதல்ல. அதே சமயம் நல்ல திறமைகள் கொண்டவன். ஆம் மிமிக்ரி செய்வான்., மிருதங்கம் வாசிப்பான் ;மற்றும் பாடல்களை அவன் சீர்தூக்குவது ஒரு மாறுபட்ட அனுபவம். இத்துணையும் கடந்து அனைவரிடமும் இயல்பாக பழகுவான். திடீரென்று ஆசிரியர்களை வியத்தகு முறையில் வீழ்த்திவிடுவான். ஒரு சமயம் வருகைப்பதிவு முடிந்ததும் ஆசிரியர் " WHAT ABOUT KALYANASUNDARAM ? என்றார். உடனே கனகசபை நாப்பத்தி ரெண்டு பேர் வந்திருக்கோம் ; எங்களை விட்டுட்டு கல்யாணசுந்தரத்தை தேடறீங்களே , வந்தவனை கவனியுங்க சார் என்றதும் ஆசிரியர் வெலவெலத்துப்போனார். அவனிடம் பேச்சுகுடுத்து சமாளிக்க முடியாது. ஆசிரியருக்கும் இது தெரியும், மேலும் இந்த சம்பவத்தில் நியாயம் என்னவோ கனகசபை பக்கம் தான்.  இதெல்லாம்  அவனுக்கு.சர்வ சாதாரணம். பள்ளி ஆண்டு விழாவில் அவன் ஏதாவது செய்து , முக்கிய விருந்தினரை அசத்தி விடுவான்; எனவே ஹெட் மாஸ்டர் உள்பட யாரும் அவனை கடிந்துகொள்ள மாட்டார்கள். இந்த கனகசபை , எனக்கு நண்பன் , அவ்வப்போது பாட விளக்கங்கள் கேட்பதற்கு என்னை அழைப்பான். எனவே நான் சிறந்த மாணவன் என்று யாரும் கற்பனை செய்ய வேண்டாம். நான் ஒரு AVERAGE வகையினன் ; பின்னாளில் , மிகவும் ஆர்வமாக என்னை மாற்றியது கல்லூரிக் களம். மிக சிறப்பான பேராசிரியரிடம் பாடம் கேட்கும் ஒரு பரவசமான அனுபவம் என்னை உயர்த்தியது மட்டுமல்ல, வேலைக்கு சொல்வதெனில் ஆசிரியராகத்தான் என்ற முடிவுக்கும் என்னை உந்திய அனுபவம் அது. இதற்கிடையே கனகசபை காட்டிய திரை -ப்பண்புகளை நன்கு உள்வாங்கி படம் பார்க்க வேண்டும் என்ற புதிய தீர்மானம் எனக்குள்  எடுக்க, நான் முற்றிலும் புதிய 'பார்வையாளன்' ஆனேன். மேலும் முடி திருத்தகங்களும் அவற்றில் கூடும் ரசிகர் பட்டாளமும், என்னை ஆழ்ந்து யோசிக்கவைத்தன. இந்நிலையில் நான் கல்லூரி கல்விக்காக MYSORE பயணிக்க வேண்டியதாயிற்று.அந்த புதிய ஊரில் மக்கள் தமிழ் படங்களை ஆர்வமாக ப்பார்த்த காலம்;   மட்டுமல்ல , தமிழ் வசனங்களை நம்மவர்போல் ரசிப்பதும், கை தட்டுவதும் எனக்கு ஒரு மனப்பான்மையை விளக்கியது. வெறும் படங்களை ப்பார்த்தே மொழிகளை எளிதாக பயின்று விடும் உத்தியை நாம் அறிந்தோமில்லை. கர்நா டக மாநிலத்தில் இன்றும் பலர் சரளமாக உரையாடுவதை பார்க்கலாம். நம்மவரோ -அப்பாடா  என்று அவ்வூர் மொழியறியாமல் நம் மொழியிலேயே பேசி வாழ முயல்வதை இன்றும் காணலாம்.. இதனால் இந்த தொடருக்கு என்ன என்போர் , அவ்வமயம் நெஞ்சில் ஓர் ஆலயம் வெளியாகி ,நான் , அதைMYSORE ல் பார்க்க நேர்ந்து, அம்மக்கள் அந்த படத்தை அணு அணுவாக ரசித்த அந்த சூழல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. துல்லியமான வசனம் கை தட்டி வரவேற்பை பெற , சில நண்பர்கள் சொன்னது- ஸ்ரீதர் ஒரு பெரும் தாக்கத்தை கல்யாண பரிசி ல் தந்தார், இப்போது  அதை அதிகமாக நிரூபித்துள்ளார்.              

என் மனம் ஸ்ரீதர் என்னும் கலைஞனை ஆய்வு செய்ய வேண்டும் - என்று அல்ல, முழுமையாக புரிந்துகொள்ள திரைப்பட விமரிசனங்களை பத்திரிகைகளில் கவனமாக படித்தேன்; அட MYSORE பையன்கள் ஸ்ரீதர், டைரக்டர் என பேசுவது ஏன் என்ற அலசல் துவங்கியது.  இது ஒரு மாறி வரும் திரைக்களம் -குறிப்பாக ஸ்ரீதரால் என்று பரவலான ஏற்பு ஸ்ரீதருக்கு கிடைத்தது. எனது அன்றைய வயது 16. ஸ்ரீதர் ஒரு சகாப்தம் என நான் கருதுவது -வெகு ஜன அபிப்ராயம் சார்ந்ததும் தான்  எனில் என் முடிவு புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று என்றே கருதுகிறேன் . மீண்டும் பிற தகவல்களுடன் சந்திப்போம் .

அன்புடன்  ராமன்   மதுரை     


Quote
Share: