ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -41  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 105
15/03/2020 6:48 am  

அன்பர்களே

இத்தலைப்பில் நான் பதிவிடும் 41 ம்  பகுதி,  இந்த  இணைய தளத்தில் எனது நூறாவது பதிவாகவும் அமைவதனால் இதனை இயக்குனர் ஸ்ரீதருக்கு அர்ப்பணிக்கிறேன். பொதுவாக இதுபோன்ற வாய்ப்புகளை ஆங்கிலத்தில் "LAND MARK POSTING " என்பார்கள். இதுபோன்ற சந்தர்ப்பம் அமைந்தால் அதை யாராவது புகழ் பெற்ற நபருக்கு காணிக்கை ஆக்குவது ஒரு இனிமையான அனுபவம். . எனவே இவ்விடத்தில் குறிப்பிட்ட திரைப்படம் என்ற அளவில் இல்லாமல் இயக்குனர் ஸ்ரீதர் எவ்வாறு அன்றைய தலமுறையினர் இடையே தன்னை  வெளிப்படுத்திக்கொண்டார், மற்றும் அவரின் ஆளுமைகள் குறித்த ஒரு தொகுப்பாக இதை அமைக்க விழைகிறேன். அறிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும், புதிய தகவல்களாக உணர்பவர்கள் இவற்றை ஏற்று ரசிக்கவும் வேண்டுகிறேன். 

ஸ்ரீதர் என்ற மனிதர் , இயற்கையிலேயே எழுத்துக்கலை  ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களிலேயே நாடகம் எழுதி தனது உணர்வுகளை வடிக்கும் எழுத்தாளனாக தன்னை வளர்த்துக்கொண்டார். ஆனால் பத்திரிகைகளுக்கு எழுதியதாக தகவல் இல்லை. இவருடை பள்ளி நட்பு தான்   டி . ஏ  சடகோபன் என்னும் கோபு என்னும் சித்ராலயா கோபு. இந்த வினோதம் வேறு யாருக்கும் அமையாத வாய்ப்பு . ஆம் ஸ்ரீதருக்கு -சித்ராலயா என்ற அடைமொழி கிடையாது, அது கோபுவிடம் ஐக்கியப்பட்டுவிட்டது. அபாரமான நட்பு ஸ்ரீதர்-கோபு இடையே இன்றளவும் நீடிக்கிறது, முன்னவர் மறைந்தார் எனினும் பின்னவர் நண்பனின் நினைவலைகளை மகிழ்ச்சியாக சுமந்து கொண்டு இளமையான எண்ணங்களுடன் பயணிக்கிறார். இவர்கள் ஐந்தாம் வகுப்பு முதலே தோழர்கள் செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளியில். இது இங்கே இடம் பெறக்காரணம் , ஸ்ரீதர் தனது  வாழ்வில் .ஒரு முக்கிய அங்கமாக கோபுவின் நட்பை தொய்வில்லாமல் காப்பாற்றி வந்தார் என்பதற்காகத்தான். திரு கோபு அவர்களும் இந்த நற்பண்புதனை காத்து இன்றளவும் நட்பின் சிறந்த உதாரணமாக திகழ்பவர். இதைப்பதிவிட வேண்டுமா என்ற வினா எழக்கூடும்; அனால் அவர்களின் வாழ்களம் ஆகிவிட்ட சினிமாத்துறையில்,  நட்பு இடி-மின்னல் போல இடமும் வலிவும் மாறும் தன்மையில் அமைவது. அதன் பாதிப்பே இல்லாது , உண்மையான நட்பு பாராட்டியவர்கள் இந்த இரு சினிமாக்காரர்கள்  என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். இதன் பிறிதொரு விரிவாக்கம் யாதெனில், கோபு ஸ்ரீதரிடம் இருந்து விலகாமல்பிற படங்களுக்கும் பணியாற்றி வந்தார் என்பதே. இனி பிற தகவல்களை காண்போம் .  ஸ்ரீதர் நீண்ட காலமாக தமிழ் திரை உலகில் வலம் வந்தவர், அதுவும் தேர்ந்த கதை- வசனகர்த்தா  என்ற அடையாளத்துடன். சிறப்பான வசன நடைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர். எதிர் பாராதது, யார் பையன் , மாதர் குல மாணிக்கம்  இன்னும் பல அக்காலத்திய படங்கள் ஸ்ரீதரை நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக உயர்த்தின.. இவ்வாறு மளமள என்று உயரந்த ஸ்ரீதர் "வீனஸ்பிக்சர்ஸ் " நிறுவனத்தில் ஆஸ்தான எழுத்தாளர் ஆனார். அந்த கால கட்டத்தில் அமர தீபம் , உத்தம புத்திரன் போன்ற வெற்றிப்படங்களில் ஸ்ரீதரின் பங்களிப்பு நன்கறியப்பட்டது. 'கல்யாண பரிசு ' கதை வசனமும் தயார் . ஆஸ்தான டைரக்டர் பிரகாஷ் ராவ்  நோயினால் பணிக்கு வர இயலவில்லை. சிகிச்சையும் ஓய்வுமாக இருந்தார். தயாரிப்பாளர்கள், கிருஷ்ண மூர்த்தி, கோவிந்தராஜன், பொறுமை இழந்துகொண்டிருந்தனர். ஏனெனில் படப்பிடிப்புக்கான அனைத்தும் தயார் இயக்குன ரைத்தவிர.  எனவே ஸ்ரீதரை அழைத்து, \நீ தானே கதை, வசனம் எழுதியிருக்கிறாய் ,நீயே படத்தை இயக்கி விடு ' என்றனர். ஸ்ரீதர் மிகுந்த குழப்பத்துக்குள்ளானார். கம்பெனி இயக்குனரை ஒதுக்கிவிட்டு நாம் இயக்குவதா - அது முறையாக இருக்குமா என்ற தயக்கம்; இன்னும் சில நாள் பொறுப்போம் என்று சொல்லிப்பார்த்தார். அனால் ராவ் உடனே பணிக்கு திரும்ப இயலாமல்  போய் , ஸ்ரீதர் இயக்குனர்  ஆனார். . கல்யாண பரிசு வெள்ளிவிழாப்படம்.25 வாரங்கள் ஓடி புகழும் பொருளும் ஈட்டியது. பின்னர்            வீனஸ் இல் இருந்து விலகி சித்ராலயா நிறுவனத்தை திரை நண்பர்களுடன் நிறுவினார். இவர்களில் கோபு , வின்சென்ட் , சுந்தரம், கங்கா, சி வி ராஜேந்திரன் , திருச்சி அருணாச்சலம் போன்றோர்  அடங்குவர்    பெரும்பாலும் முக்கோண காதல் கதைகளையே கொடுத்தார்; ஆனாலும் சுவை குன்றாமல் காட்சி அமைப்புகளை வடிவமைப்பதில் வல்லவர். எனவே நிறைய வெற்றிப்படங்களை இயக்கிய பெருமை பெற்றார். விதிவிலக்காக ரொமான்டிக் அமைப்பில் முதல் படம் தேன் நிலவு, காஷ்மீரில் படப்பிடிப்பு. 40 நாட்கள் முகாமிட்டு வெளிப்புற படப்பிடிப்பு செய்யப்பட கருப்பு - வெள்ளை காலத்திய படம். 1980களில் தான் வெளிப்புற படப்பிடிப்பை நாங்கள் அறிமுகம்   , செய்தோம் .என்று பெருமை கொள்பவர்கள் உண்மையை உணராதவர்கள். இப்படத்தில் ஸ்ரீதர் நீங்கலாக அனைவரும்  தத்தம் குடும்பத்தினருடன் காஷ்மீரில் முகாமிட்டு தொய்வில்லாமல் படப்பிடிப்புக்கு உதவினர்.. அவர் தன்னுடைய படங்களுக்கு, காமெராவும் இசையும் மிக இன்றியமையாதன என்ற  தாரக மந்திரத்தை ஆழமாக அறிந்திருந்தார்.  எனவே முதன் முதலில் தமிழ்ப்பட போஸ்டர்களில் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்களை இடம்பெறச்செய்தார். மேலும் ஒளிப்பதிவு டைரக்டர்  என்ற அந்தஸ்தை வின்சென்டுக்கு தந்தார். கலைநுணுக்கங்கள் கைகொடுக்க , மெல்ல மெல்ல நீண்ட வசனங்களை குறைத்து, பேச்சுநடையில் வசனங்களை அமைத்தார்.  கேமரா கோணங்களை ஒரு காட்சி ஊடகத்துக்குரிய உயரிய நிலைப்பாட்டில் பயன்படுத்தி தமிழ் சினிமாவில் நாடக அமைப்புகள் விலகி, திரை பண்புகள் மேலோங்கச்செய்தார். கருப்பு வெள்ளை அமைப்பில் க.பரிசு, நெஞ்சில் ஒரே ஆலயம், சுமை தாங்கி, போலீஸ்காரன் மகள் , நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சிருக்கும் வரை, கலைக்கோயில் போன்ற  தரமான படங்களை உருவாக்கினார்.  இவ்வனைத்திலும் கதை சொல்லும் உத்தி நேர்த்தியாக பயன் படுத்தப்பட்டு வெற்றிக்கு வித்திட்டது. ஸ்ரீதர் படம் என்றாலே பாடல்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு என்ற வலிமையான எண்ணத்தை விதைத்தார். அவரை சகாப்தம் என்று உயர்வாக குறிப்பிட வேறு சில திறமைகளையும் காண்போம்.

எனது அடுத்த பதிவையும் ஸ்ரீதரே ஆக்கிரமித்துக்கொள்வார் என்று உணர்கிறேன்.

 தொடரும்

 நன்றியுடன்  அன்பன்  ராமன் 


Quote
Share: