ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -40  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 105
13/03/2020 2:13 pm  

அவளுக்கென்று ஓர் மனம் -  இயக்கம்

ஸ்ரீதரின் கதை வசனம் -இயக்கத்தில் வெளிவந்த இப்படம் பல வகையிலும் சிறப்புடையது. தெளிவான கதை அமைப்பு , இசை,நடிக-நடிகையர் தேர்வு, ஒளிப்பதிவு, மற்றும் இயக்கம் என ஒவ்வரு அங்கமும் முறையாக வடிவமைக்கப்பட்டு , ஒரு நேர்த்தியான படமாக வெளியானது. எப்போதும் மாறுபட்ட முறையில் பட ங்களை வெளியிட்டு, முத்திரை பதித்த ஸ்ரீதர் அந்த பெருமை குன்றாது தயாரித்திருந்த படம் இது. இப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், படிப்படியாக ஒரு பாத்திரப்படைப்பு எனும் உத்தியே. அதாவது, இருவர் இடையே மலரும் காதல் உணர்வு, உள்ளார்ந்த எண்ணங்களின் வெளிப்பாடு , துவேஷம் மற்றும் போர்க்குணம் இவை சினிமாத்தனமின்றி மெல்ல மெல்ல வலுவூட்டப்பட்டிருந்தமை.  யதார்த்தம் , யதார்த்தமாக வெளிப்படுவதான  அமைப்பே , சினிமாத்தனத்தை தலைதூக்க விடாமல் காப்பாற்றியிருந்தது. இதனாலேயே ஸ்ரீதர் மேல்மட்ட ரசிகர்களை வெகுவாகவும் விரிவாகவும் கவர்ந்திருந்தார்.

ஆரம்ப காட்சிகளில் முத்துராமன் காஞ்சனாவை சந்திக்க முற்படும் போது , இவ்விருவரின் வாழ் சூழல் , உடை மற்றும் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே ஒருவரை ஒருவர் நெருங்குவது இவற்றில் அன்றைய தமிழக நடுத்தட்டு மக்களின் நடை உடை செயல் பாடுகள் துல்லியமாக காட்டப்பட்டிருந்தன. . மழைக்கு பார்க்கில் ஒதுங்கியிருந்த காஞ்சனா , திடீர் இடி ஓசையில் மிரண்டு ஜெமினியை கட்டிப்பிடுத்து விட அடுத்த வினாடியே சுதாரித்தவராக , வெட்கமும், அசிங்கமும் தவிறிழைத்த உணர்வும் முகத்தில் மின்னலாய் தோன்றி மறைய சிட்டாய் பறந்து அகன்று விடுவது இயல்பான கூச்சத்தின் பரிமாணமாய் - சிறப்பான காட்சி அமைப்பு. இதே சம்பவம் ஜெமினி  கணேசனின் உள்ளத்தில் கிளர்ச்சியை தோற்றுவிக்க என கதை விரைகிறது. கல்லூரி  வளாகத்தில் , பாரதி ஜெமினியின் காரில் அமர்ந்தவாறே காஞ்சனாவின் நோட்டுப்புத்தகத்தை கேட்க, பின்னவர் காரின் அருகில் வந்ததும் உள்ளே ஜெமினி டிரைவர் இருக்கையில் இருதத்தைக்கண்டு, காரைச்சுற்றி வந்து தோழியிடம் நோட்டை கொடுத்து விட்டு திரும்பிப்பாராமல் அகலுவது , இயல்பான உணர்வுகளை சிறைப்பிடித்த இயக்கம்.[டைரக் ஷன் ]. காஞ்சனாவின் ஏழ்மை சூழல் மற்றும்  பண்பு குறையாத தன்மை நிறுவப்பட்டுள்ளது. இன்னொரு தருணத்தில், ஜெமினி,   தான் காஞ்சனாவை மணக்க விரும்புவதாக உணர்த்தும் இடத்தில் மனதிற்குள்   ஏமாற்றம் அடைந்தாலும், தனது விருப்பத்தை அடக்கிக்கொண்டு , தோழியின் தேர்வை ஆதரிப்பவராக பாரதி வெளியிடும் நடிப்பில்,  இளமையில் தியாகம் செய்யும் உன்னத பண்பை நிறுவி அதன் மூலம் பாராட்டையும் நமது பரிதாப பச்சாதாபத்தையும் பெற்றுவிடுகிறார் பாரதி.

இதே போல , முத்துராமனின் பாத்திரமும் நிதானமாக விரிவடைந்து கொடூர வில்லனின் உச்ச கட்ட நடைமுறை ஆகிய துன்புறுத்தல், மானத்தை கப்பலேற்றி விடுவதாக மிரட்டுதல், நினைத்த போதெல்லாம் இளம் பெண்களை வசப்படுத்தி அவர்களின் வாழ்வை சீரழித்தல் என்று எல்லைகளை தாண்டிக்கொண்டே இருப்பதும் மிக வலுவாக பதிவிடப்பட்டுள்ளது. பாரதியை மனத்தளவில் சிறைப்பிடித்தவன் அவளை உடல் ரீதியாக துன்புறுத்த எத்தனிக்கும் காட்சியில் , சாதுர்யமாக தன்னை காத்துக்கொள்ள வேண்டுகோள் வைக்கும் போது , கொடியவன் மனமிரங்கி மனித நிலைக்கு வருவதாக சித்தரிப்பு -அனைத்து கொடூரங்களிலிருந்தும் தப்பிக்க முடியாத பெண் , இதில் சிக்காமல் மீண்டது -மாறுபட்ட அணுகுமுறை.இது முத்துராமனிடம் ஈரம் நிறைத்த உள்ளம் உள்ளதை மெய்ப்பிக்கும் படைப்பு. இந்த வகை முத்துராமன் பாத்திரம் தமிழ் சினிமாவில் காண இயலாத அறிவுசார்ந்த வில்லத்தனம்.   ஆமாம்   கத்தியும் அரிவாளுடன் திரியும் ஆட்கள் புடை சூழ வரும் தாதாக்கள் வில்லன் களாக அடையாளப்படுத்தியே பழகிவிட்ட சினிமாவில் ஆயுதம் இன்றி  ரத்தம் என்ன , உயிரையே பறிக்கும் வித்தகன் இந்த வில்லன் . இவன் பேச்சால் அனைவரையும் வசப்படுத்தத் தெரிந்த வித்தகன். இந்த பாத்திரப்படைப்பு எவ்வளவு நுணுக்கமானதோ அதை மிக இயல்பாக அரங்கேற்றிய நடிகர் முத்துராமன் வெளிப்படுத்திய ஆழமான முகபாவங்கள் -மிக நிறைவாக இந்தப்பாத்திரத்தை   மிகுந்த உயரத்திற்கு இட்டுச்சென்றது நடிகனின் திறனுக்கு மற்றுமோர் சான்று.

ஆழ்ந்த கற்பனையில் உதித்த சம்பவங்களை படமாக கோர்க்கும் கலை சிலருக்கே வயப்படும். அவர்களில் முன்னணியில் இடம் பிடித்தவர் ஸ்ரீதர்.

நிதானமாகவும் உன்னிப்பாகவும் இந்தப்படத்தை அணுகினால், ஒரு உண்மை புலப்படும். நகைச்சுவை உணர்வு நிறைந்த ஸ்ரீதர் , இந்த படைப்பை நகைச்சுவை என்ற அம்சமே இல்லாமல் ஆக்கியுள்ளார் என்பது அவரின் அபார தொழில் திறமைக்கும் , தொழில் நுட்ப உத்திகளை முறையாக நிர்வகிக்கும் திறனுக்கும் உரை கற்களாக அமைந்திருப்பதை சிறப்பாக காணலாம்

மீண்டும் வேறு ஒரு தொகுப்புடன் சந்திப்போம் .   அன்புடன்      ராமன்     மதுரை..


Quote
Share: