ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 119 எழில் ஊட்டிக்கா -இசைக்கா ?  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 199
02/03/2021 1:39 am  

அன்பர்களே

உங்கள் யூகம் சரிதான். ஆம் ஊட்டி வரை உறவு படம் பற்றிய தகவல்கள் இடம்பெறும் பகுதி இது. ஊட்டியின் எழில் மிகு மலைச்சரிவுகளையும் , மேகம் தழுவும் முகடுகளையம், தெளிந்த நீரோடைகளையும் தாங்கிவந்த படம் தான் எனினும் ஊட்டியின் எழில்தனை எளிதில் மிஞ்சிய பாடல்கள் எனில் மிகை அன்று. படத்தின் பல சிறப்புகளில் முதன்மையானதுஎது எனில் படம் வருமா வராதா ; எப்போது வரும் என்பதே. அப்படி என்ன குழப்பம் என்கிறீர்களா ? நாயகி யார்? என்ற கேள்விக்கு இறுதி விடை காணும் முன் நேர்ந்த தாமதம் அன்றைய ஸ்ரீதர் படங்களில் நாம் அறிந்திராத ஒன்று.   முதலில் ஜெயலலிதா தான் நாயகியாக இடம் பெற்றார். சில காட்சிகளுக்குப்பின் கால் ஷீட் பிரச்சனைகளால் படம் சற்று தடைப்பட்டது.. தாமதத்திற்கு பின் கே ஆர் விஜயா ஒப்பந்தம் ஆனார்.

இத்தனைக்கும் நல்ல தயாரிப்பாளர் தான் கோவை செழியன். நேரம் அப்படி போலும். அது மட்டுமா? / எத்தனை தலைப்புகள்  இந்த ஒரே படத்திற்கு.   படத்தின் பெயர்கள். 1. காலமெல்லாம் காத்திருப்பேன் 2. தேவை ஒரு தங்கை 3 வயது 18 ஜாக்கிரதை 4 . ஊட்டி வரை உறவு. . இதன் கதையை எழுதியவர் ஸ்ரீரங்கம் நரசிம்மன் ; அவர் ஒரிஜினல் கதைக்கு வைத்திருந்த பெயர் "தேவை ஒரு தங்கை"..

இப்படியாக தொடர்ந்து ஏதேதோ காரணங்களுக்காக தொடர்ந்து படப்பிடிப்பில் தொய்விருந்தது என்பது உண்மை. ஆனாலும் படம் வருமா என்று கேள்வி எங்கள் மனதில் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. இதையெல்லாம் கடந்து திடீரென்று ஒருநாள் படம் வெளியிடப்பட இருப்பதாக விளம்பரம் வெளியானது. ஒருவகையில் ரசிகர்களில் ஆர்வம் கூடியதென்றே சொல்லலாம்.

இதில் என்ன பெரிய தொய்வு என்று கேள்விக்கு மேலும் சில முடிச்சுகளை விளக்க வேண்டும். ஆம் ‘தேடினேன் வந்தது’ பாடல் பதிவிடும் சமயத்தில் திடீரென்று ஸ்ரீதர் காணாமல் போய்விட , அதிர்ந்து போன எம் எஸ் வி , ரெக்கார்டிங்கை நிறுத்தி விட்டு ஸ்ரீதரைத்தேடிப்பிடித்து விசாரித்ததில் அவருக்கு டியூன் பிடிக்கவில்லையாம் ! இது இரவு 9.30 மணி சமயம். எல்லாரையும் இருக்கவைத்து டியூனில் ஒரு சிறு மாற்றமும் தக் தக் தக் என்ற ட்ரம்ஸ் ஒலியை இணைத்தும், எம் எஸ் வி  பாடலை சிறப்பாக்கி , பாடல் பதிவு முடிந்த போது மணி இரவு 2.00. தமிழில், சொல்லி அடிப்பது என்றொரு வழக்கு உண்டு. அதற்கொப்ப எம் எஸ் வி இந்தப்படத்தில் சொல்லி சொல்லி அடித்திருக்கிறார்.

இப்படத்தின் பிற பாடல்கள் மிகவும் விரும்பப்பட்டன . அவற்றுள் தலையாயது 'பூ மாலையில் ஓர் மல்லிகை' . அதியற்புதமான 'ஆ அ ஆஆ ஆ அ என்ற கம்பீர ஆலாபனையுடன் TMS குரலில் துவங்கியவுடன் சுசீலாவும் சேர்ந்துகொள்ள , இவற்றை இணைக்கும் தபலாவின்  நளினமான நர்த்தனத்தில் எடுத்தவுடனேயே பாடல் சிகரம் நோக்கி பறந்து அங்கேயே  இறுதிவரை  சஞ்சரிப்பது பாடலின் மகத்துவம் , எம் எஸ் வி யி ன் மனோதத்துவம்.

பிற பாடல்களில் பெரிதும் முழங்கியது 'தேடினேன் வந்தது ' பாடல். அதில் கே ஆர் விஜயா ஒரு கவர்ச்சிப்பாவையாக காட்சியளித்தார்.அதில் நான் குறிப்பிட விழைவது -கவர்ச்சி ஆடைக்குறைப்பிலோ / ஆடை அவிழ்ப்பிலோ அல்ல ; மாறாக ஆடைகளை அணியும் பாங்கிலும், நடையின் மிடுக்கிலும் என்பதாக மிக சிறப்பாக உணர்த்திய அன்றைய புதுமை. அக்காலத்தில் இக்காட்சியில் கே ஆர் வி அணிந்திருந்தபுடவை , எங்கெங்கோ அலைந்து திரிந்து வாங்கப்பட்டதாம்..அதன் அன்றைய விலை ரூபாய் 2000/-. ஐயோ இவ்வளவு விலையா? என மலைத்துப்போய் சில பத்திரிகைகள் எழுதியதை இப்போது நினைத்தால் காலம் எவ்வளவு மாறி விட்டது என்பதும் இன்று பணம் தண்ணீராய் செலவழிவதும் Rs 2000/- என்று பேசினாலே, நாம் பிச்சைக்கார்கள் வரிசையில் சேர்க்கப்படுவது உறுதி என்ற நிலைக்கு வந்துள்ளோம்.

பட்டையைக்கிளப்பிய மற்றுமோர் பாடல் - happy இன்று முதல் happy . இப்பாடலில் சிவாஜி கணேசன் காட்டிய குதூகலம்  வெகு சிறப்பானது. மற்றுமோர் பாடல் 'அங்கே மாலை மயக்கம் யாருக்காக ' , இது கதையின் போக்கிற்கு மிகுந்த வலு சேர்த்தது. பாலையா, தனது இரு குழந்தைகளுமே ஒருவரை ஒருவர் முறை தவறி காதலிப்பதாக புரிந்து கொண்டு மிகுந்த சஞ்சலம் அடைவதாக அமைக்கப்பட்ட காட்சி. கண்ணதாசன் -விஸ்வநாதன் படத்தின் வெற்றிக்கு தாராளமாக பங்களித்திருந்தனர். மேலும் ஸ்ரீதர்- கோபு வசனம் , என். பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு , ஸ்ரீதரின் இயக்கம் இவை யாவும் படத்தின் ELEPHANTINE GESTATION [ கஜ கர்ப்ப] நிலையையும் தாண்டி வெற்றி பெற்றது. இவையெல்லாம் முன் நிறுத்துவது, மனிதர்களின் கடும் உழைப்பைத்தான் என்றே குறிப்பிட முடியும்.                                                                                            மேலும் தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம்.   அன்பன் ராமன்  மதுரை


Quote
Share: