அன்பர்களே
நாம் இப்போது 1967 ம் வருடத்திய இரு முக்கிய படங்கள் குறித்து பார்க்க உள்ளோம். ஆம் ஏழ்மையின் களமாக " நெஞ்சிருக்கும் வரை", செல்வச்செழிப்பின் மிளிர்வாக " ஊட்டி வரை உறவு" . இரண்டிலும் ஸ்ரீதர் விஸ்வநாதன் இணை வழங்கிய உன்னதங்கள் பல உண்டு. வசனங்களில் விசனமும் விஷயமும் பின்னிப்பிணைந்த " நெஞ்சிருக்கும் வரை", காட்சி அமைப்பிலும் மிகுந்த கவனம் செலுத்த ப்பட்டு , உணர்ச்சிகளின் குவியலாக, தியாகத்தையும் உள்ளடக்கிய கருப்பு வெள்ளை காவியம். பட்டெனத்தெறிக்கும் வார்த்தைகள் சட்டென உணர்த்தும் யதார்த்தம் எனும் கோட்பாட்டை நிறுவிய திரைக்கதை மற்றும் காட்சிகளின் வீரியம். இப்போது நினைத்தால் வியப்பும் மலைப்பும் ஒருசேர பற்றிக்கொள்கின்றன.
இந்த வீரிய வெளிப்பாட்டிற்கு அடித்தளம் நடிப்பு. அதை மிகவும் சாதுர்யமாக கையாண்டிருந்தனர் மூவர் ; இவர்கள் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா மற்றும் வீ எஸ் ராகவன். ஒவ்வொருவரும் தனித்தனியே இயங்கினாலும் அவர்களைப்பிணைத்ததென்னவோ ஏழ்மையும் பசியும் பிறர்க்குதவும் பண்பும் ஆகிய மூன்றும்.ஏழைக்கு ஏழை சோறுபோடும் நிகழ்வுகள் மிகுந்த கண்ணியத்துடன் வடிவமைக்கப்பட்ட காட்சிகளால் கம்பீரமாக அமைந்த படம்.
நான் முன்னரே தெரிவித்திருந்த படி மெல்லிசை மன்னர் தனித்து இயங்க துவங்கிய பின் ஸ்ரீதர் தயாரிப்பில் இசை அமைத்தது " நெஞ்சிருக்கும் வரை" படத்திற்குத்தான். பிற படங்களில் நாம் அதிகம் கண்டிராத காட்சிகள் என்பதால் மன்னர் சிறப்பாக இசை வேள்வியை அரங்கேற்றியிருந்தார் இப்படத்தில்.
அதிலும், நாட்டியப்பாடலாக இடம்பெற்ற 'நினைத்தால் போதும் பாடுவேன் ' , தன்னிலை விளக்கமாக 'எங்கோ நீயோ நானும் அங்கே உன்னோடு ' காலத்தால் அழியாத இசை ஓவியமாக 'முத்துக்களோ கண்கள்' , வாழ்ந்தே தீருவோம் என்ற நம்பிக்கையின் முழக்கமாக ; நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு' [வாலி], ஒரு திருமணத்தையே பாடலாக வடிவமைத்த கவிஞர், மன்னர் மற்றும் ஸ்ரீதர் என்று ஒவ்வொரு பாடலையும் ஒரு உள்ளார்ந்த நோக்கத்தை சுமந்ததாக வெளிப்படுத்திய ஆளுமைகள் இன்றைய சூழலில் பார்ப்பதரிது என்ற நிலை வந்து விட்டதை மறுக்கவோ பொறுக்கவோ இயலவில்லை.
'முத்துக்களோ கண்கள்'ஒரு கவிதைப்பெட்டகம். பாடலில் எல்லாமே சிறிய சொற்கள் ஆனால் கேள்வி வடிவில் . மேலும் சொற்கள் சிறு மாற்றங்களால் வெவ்வேறு பொருள் உணர்த்திய மேதமை மிக்க ஆளுமை.கவியரசரின் எல்லைகளில்லா ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவிய சொல்லாட்சி. பாருங்கள் கவிஞரின் விளையாட்டை : சந்தித்த - சிந்திக்க 'கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட' வேறு எ ப்பாடலிலும் காணாத புதுமை., விருந்து கேட்பதென்ன - விரைந்து கேட்பதென்ன சொற்கோவைகள் , உன்கைகள் மாலையாவதென்ன என்ற ரசனைமிக்க வர்ணனை .
இவ்வனைத்தையும் , வாய்யா வா என்று சவால் விடும் பாணியிலே ராகத்தின் மயக்கத்தில் இசையின் நளினத்தில் பாடலை பட்டி தொட்டி எங்கும் முணுமுணுக்க வைத்த எம் எஸ் வி யின் ஆளுமையில் கவியரசரை மேலும் தூக்கிப்பிடித்தவர் செவியரசர் மெல்லிசை மன்னர். படத்தின் கதை தான் ஏழ்மை குறித்ததே அன்றி, இசையின் வீச்சில் மிகுந்த செழுமையுடன் மிளிர்ந்ததை மன்னரின் எல்லையில்லா கற்பனையின் வடிவாகவே பார்க்கிறேன். ஏழ்மையும் தாழ்மையும் கதையில் தானே அன்றி மன்னரின் இசையில் ஒரு போதும் இல்லை.இதனால் தான் அவர் எப்போதோ மெல்லிசை மன்னர் என்ற ஏகோபித்த பாராட்டையும் எண்ணிலடங்கா ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்று கம்பீரமாக வலம் வந்தார்.
மேலும் தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம் .
அன்பன் ராமன் மதுரை.