அன்பர்களே
சென்ற பதிப்பில் நான் அளித்த பட்டியலில் உள்ள 1966ம் வருடத்திய படங்களில் உண்மையிலேயே வரலாற்றுச்சிறப்பாக அமைந்தது "அன்பே வா". அதென்ன வரலாற்றுச்சிறப்பு ? நீண்ட கால திரைப்படத்தயாரிப்பு தொழில் செய்து வரும் பெருமை கொண்ட ஏவிஎம் நிறுவனம், முதன் முதலில் தயாரித்த வண்ணப்படம் -தான் " அன்பே வா" . மட்டுமல்ல. அதுவரை அவர்கள் தயாரிப்பில் நடித்திராத எம் ஜி ஆர் மற்றும் சரோஜா தேவி இப்படத்தில் தான் ஏ வி எம் banner ல் இடம் பெற்றனர்.
சிம்லா, ஊட்டி போன்ற எழில் மிகு ஊர்களில் வெளிப்புற காட்சிகள். மிகுந்த பொழுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய படம் ; எனவே மிகவும் பிரமிப்பூட்டும் வகை இசைக்கு களம் தரும் படம். எனவே விஸ்வநாதன் - தான் ஆட்டோமேட்டிக் சாய்ஸ் . நமக்கெல்லாம் “அன்பே வா” படத்தின் பாடல்கள் பத்தும் இன்றளவும் உயிர்த்துடிப்புடன் ரசிக்கப்படுவது நன்கு தெரியும் . [இவையெல்லாம் இந்நாளில் சரித்திரம் ஆகிவிட்ட நிகழ்வுகள் . ஆனால் , வி, ரா பிரிந்தபின் உருவான சூழல் சற்று மாறுபட்டது. எனவே தயாரிப்பு நிறுவனங்கள் பல தேவைகளையும் சீர்தூக்கிப்பார்த்த பின்னர் தானே விஸ்வநாதன் குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கும்? ]
இதற்கிடையில் வந்த பிற படங்களையும் அவற்றின் இசை வியாபகங்களையும் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள், மெல்லிசைமன்னர் விஸ்வநாதனிடம் மேலும் மேலும் கம்பீரமான இசை அமைப்புகளை எதிர்பார்த்தனர். இது உனக்கு எப்படித்தெரியும் என்ற கேள்வி எழும். எனது பதில்: “அன்பே வா” வெளியான அந்த கால கட்டத்தில் முதல் சில நாட்களுக்குள் திரை அரங்கில் படம் பார்த்த யாருக்கும் அது தெளிவாகப்புரியும்.
படத்தின் டைட்டில் கார்டுகள் திரையிடப்பட்ட அரங்குகளில் MGR பெயர் தோன்றியவுடன் விசில் /கைத்தட்டலில் அரங்கம் அதிரும்; மீண்டும் சில நொடிகளில் எம் எஸ் வி யின் பெயர் திரையில் வந்ததும் அதே வீரியத்துடன் விசில் /கைத்தட்டலில் அரங்கம் மீண்டும் அதிரும்.
இந்த நிகழ்வு உணர்த்துவது அன்பும் அபிமானமும் எதிர்பார்ப்பும் நிறைந்த கலவையாக ரசிகர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்ட ஒரு இயல்பான செயல் பாடு என்பதே. இந்தப்படத்தில் தான் ஒரு சிறப்பான signature tune ஒன்றினை எம் ஜி யாருக்காக எம் எஸ் வி பயன்படுத்தி, படத்தில் எம் ஜி யார் வரும்போதெல்லாம் வெவ்வேறு இசைக்கருவிகளின் மொழியாக தனித்தனியே இசைத்து ஒரு புதிய பின்னிசை பரிமாணத்தை அரங்கேற்றியிருந்தார் மன்னர் .
‘ராஜாவின் பார்வை’ பாடலில் மெல்லிசை மன்னர் வெளிப்படுத்தியுள்ள இசைபின்னல்கள், இசைக்கருவிகளின் அனுசரணையான இயக்கம் மற்றும் குதிரைகளின் குளம்பொலி , மற்றும் தேவதைகளின் குரலில் கோரஸ் வாயிலாக மற்றும் தேவநாதமான ஒலிகள் என வியப்பின் எல்லைக்கே ரசிகர்களை அழைத்துச்சென்றார்.
அந்த கனவு காட்சியை ஒரு தேவலோகக்கனவாக மாற்றிய மன்னர் நிச்சயம் இசையில் மன்னாதி மன்னன் தான் சந்தேகமே இல்லை.
வேறு தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம். அன்பன் ராமன் மதுரை