அன்பர்களே
1965 இசையில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் முற்றிலும் விற்பன்னர்களால் அலசி ஆராய உகந்த ஒரு பகுதி. அந்த கால கட்டத்தில் வெவ்வேறு படங்களில் வி –ரா, வித விதமான இசைக்கோவைகளை அரங்கேற்றினர். வெண்ணிற ஆடை குறித்து நிறைய பேசியாகிவிட்டது.
நமது தலைப்புக்கு தொடர்பில்லாவிடினும் "ஆயிரத்தில் ஒருவன்" மறக்கவொண்ணாத ஒரு இசைசாம்ராஜ்ஜியம் . இப்படி வலம் வந்த வி- ரா, வி என்றும் , ரா என்றும் பிறந்தது கலைநயம் மிகுந்த சிற்பம் உடைந்தது போல் ஆயிற்று. மாணவர்கள் ஒரு புறம் கோஷ்டிகளாக மோதிக்கொண்டிருக்க, திரைத்துறையினர் சிவராத்திரி விரதமென மௌனம் காத்தனர். ஆனால் பட்டும் படாமலும் மெல்லிய கிசுகிசுக்கள் ஒரு சில பத்திரிகை களில் கசிந்தன .
முன்னர் இதுபற்றி பேச வேண்டாம் சொல்லிவிட்டு இப்போது ஏன் இதனைப்பற்றி கிளப்புகிறாய் என்கிறீர்களா ? வேறொன்றுமில்லை அன்பர் விஜய் கிருஷ்ணன், அந்த நேரத்தில் பொது மக்கள் பார்வை என்னவாக இருந்தது என்று கேட்டார் - சரி அவற்றின் சாரத்தை குறிப்பிடலாம் என்று முயற்சிக்கிறேன் . பேசும் படம் உள்ளிட்ட எந்த சினிமா பத்திரிகையும் வி , ரா குறித்த செய்தியோ, பேட்டியோ ,கட்டுரையோ வெளியிடவில்லை. செய்தித்தாள்களில், தினத்தந்தி வி, ரா பிரிக்கப்பட்டனர் என்று செய்தி வெளியிட்டது.
இதை வைத்துக்கொண்டு ஆங்காங்கே பட்டி மன்றம் போல பொது மக்கள் இந்தடைரக்டர் சண்டை மூட்டிவிட்டார், அந்த டைரக்டர் வத்திவைத்தார் , சில தயாரிப்பாளர்கள் பின்னணியில் வேலை பார்த்தனர்என்று கற்பனை குதிரைகளை அவிழ்த்து விட்டனர். இதில் எந்த கருத்துக்கும் வி யோ ,ரா வோ கருத்தோ மறுப்போ தெரிவிக்கவே இல்லை.
பிரிவிலும் கௌரவம் காத்து , மௌனிகளாக வாழ்ந்து , மீண்டும் இணைந்து, தமிழ் நாடு அரசின் பெரும் அங்கீகாரமும் பெற்று அகங்காரமின்றி வாழ்ந்து நிறைவு பெற்ற மனதினறாய் விடைபெற்றுச்சென்று விட்டனர். அவர்தம் மறைவுக்குப்பின் இப்போது அவர்களின் சரித்திர நிகர் படைப்புகள் பற்றி வியந்து போற்றி சுகத்தையும் சோகத்தையும் ஏக காலத்தில் உணருகின்றனர்.
எந்தக்காலத்தில் இனி இதுபோன்ற இசை ஆளுமைகள் நமக்கு வாய்க்கும் என்று உள்ளூர செல்வத்தை தொலைத்து விட்டவன் மன நிலையில் மூத்த தலைமுறை விசனித்து நிற்பதை , நேரடியாக அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
வேறு தகவல்களுடன் . மீண்டும் சந்திப்போம் , அன்பன் ராமன் மதுரை.