ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 102 'நாம் ஒருவரை ஒருவர் / நானன்றி யார் வருவார் / தேடினேன் வந்தது '  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 176
26/11/2020 6:46 am  

அன்பர்களே

இவன் ஏதோ தடம் மாறுகிறானே என்று தோன்றுகிறதோ? அதெல்லாம் ஒன்றுமில்லை; இன்னும் 10  தலைப்புகளை சூட்டினாலும் போதும் என்று சொல்லவோ - இதுதான் பொருத்தம் என்று இறுதி நிலைப்பாட்டை எடுக்கவோ முடியாத ஒரு பிணைப்பு ஸ்ரீதர் - விசு - கண்ணதாசன் கூட்டணி. இவர்கள் தமிழ்த்திரையி ல் வெளிப்படுத்திய மகோன்னதம்-- மீண்டும் இவர்களே மறுபிறவி எடுத்து வந்தால் மாத்திரமே அதுபோன்ற பொற்காலம் மலரக்கூடும். சரி, இவர்கள் என்ன சாதித்து விட்டார்கள் என்று சிலர் அங்கலாய்ப்பதை பார்த்து 'பாவம் இவர்களை மன்னியும்'  என்ற பொருள்பொதிந்த வாசகம் என்  மனதில் எழுகின்றது. நான் விசு-கண்ணதாசனின் அனைத்து ஆக்கங்களையும் கணக்கில் கொள்ளவில்லை ; ஸ்ரீதருக்கு இவர்கள் தந்த பாடல் கொடைகளையே முழுவதுமாக ஆய்வு செய்ய நமக்கு நேரமும் ஞானமும் போதாது என்பதே யதார்த்த நிலை.  இருப்பினும் அவைகுறித்த சிறிய தேடலே வியப்பும் பிரமிப்பும் ஊட்டவல்லன என்றால் ஏனையவற்றை அவரவர் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்

நாம் அறிந்தவரை , ஸ்ரீதர் ஏற்கனவே கவிஞரை நன்கு அறிந்திருந்தார் ; அவரைப்பொறுத்தவரை விஸ்வநாதன் தான் புதிய அறிமுகம். ஏனெனில் ஸ்ரீதர் தமிழ்த்திரை யில் நெடுங்காலமாக நன்கு அறியப்பட்ட கதை- வசனகர்த்தா ; ஆனாலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வடிவெடுத்தது 1957 ல் இருந்துதான். உண்மைநிலை என்னவெனில் விஸ்வநாதனும் அதே போன்றே  நெடுங்காலமாக திரையுலகில் பவனி வந்தவர் தான். ஆனாலும் மாபெரும் இசை அமைப்பாளர் என்ற எல்லையை எட்டிப்பிடிக்க பெரும் ஆளுமைகளோடு போட்டியிட வேண்டிய சூழலில் தன்னை நிரூபிக்க வேண்டிய சூழலில் இருந்தார். அவரது போட்டிக்களம் , ஜி ராமநாதன் எஸ் வி வெங்கடராமன் , ஆதிநாராயண ராவ் , டி ஜி லிங்கப்பா, கே வி மஹாதேவன், எஸ் எம் எஸ் , ஏனைய தெலுங்கு இசை அமைப்பாளர்கள் ராஜேஸ்வர ராவ் , சலபதி ராவ் போன்றோர் அணிவகுத்து வலம் வந்த  பெருமைகொண்டது. ஆனால் ஸ்ரீதருக்கும் போட்டி இல்லாமல் இல்லை ; எனினும் புதிய வகை கதைகளை தேடி வந்த தயாரிப்பாளர்களுக்கு , ஸ்ரீதரின் சமுக கதைக்களங்கள் பெரிதும் ஏற்புடையன ஆயின. எனவே அவர் எதிர்கொண்ட போட்டி வேறு வகை ஆனது. ஒரே தொழிலில் இருந்தவர்கள் தான் எனினும் ஸ்ரீதரும் விஸ்வநாதனும் நேரடியாக ஈடுபட காலம் எளிதில் கனியவில்லை என்றே சொல்லலாம். இது போன்ற வினோத அனுபவ ங்கள் யாருக்கும் அமையலாம். ஒரே துறையில் நீண்ட காலம் பயணித்து கோப்பெருஞ்சொழன் / பிசிராந்தையார் போல இருந்த [ மனதால் மட்டுமே அறிந்த ] நட்புகள் அலுவகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர் மட்டத்தில் அமைவது -நடக்கக்கூடியது தான்.இது போல காலம் உருண்டோட ,'நெஞ்சில் ஓர் ஆலயம்' தோன்ற பூர்வாங்க பணிகள் துவக்கிய நிலையில் திரு எம் ராஜா இசைஅமைக்கமாட்டேன் என்று முரண்டுபிடிக்க , இறையருளால் முகிழ்ந்ததே ஸ்ரீதர்- எம் எஸ் வி தொடர்பும் தொடர்ச்சியும். தமிழகத்தையே கட்டிப்போட்ட மெல்லிசைமன்னர்களுக்கு , ஸ்ரீதரைக்கட்டிப்போட எவ்வளவு கயிறும் காலமும் தேவைப்பட்டிருக்கும். இதை சிலமணி நேரத்தில் நிறைவேற்றிவிட்டார் என்றே உணரமுடிகிறது . அதிலும் தமிழ் சினிமாவில் ஆர்கெஸ்ட்ரேஷன் எனும் உத்தியை சிறப்பாக வடிவமைக்கத்துவங்கிய காலகட்டத்தில் அனைத்து தயாரிப்பாளர்களும் - திரு பீம்சிங், AVM , ஸ்ரீதர் , பி ஆர் பந்துலு ,வேலுமணி , பி எஸ் வீரப்பா அவ்வளவு ஏன் -                                                திரு எஸ் எஸ்  வாசன் உள்ளிட்ட பலரும்  எம் எஸ் வியை [ MSV -TKR ] துரத்திக்கொண்டிருந்தனர்  எனில் எள்ளளவும் மிகை அல்ல. [அதிலும் ஜெமினி நிறுவனத்தில் மெல்லிசை மன்னருக்கும், கண்ணதாசனுக்கும் நேர்ந்த முதல் அனுபவங்கள்  [ வாழ்க்கை படகு ] சற்று வித்தியாசமானவை ; கவியரசர் ,  விசு வை, டேய் வாடா போதும் போகலாம் என்று கொதிக்கும் அளவுக்கு சூடானவை ; எனினும் மன்னர் பொறுமைகாத்து தன து திறமையை வெளிப்படுத்தி வாசனின் வாயை அடைத்தார் . [இது குறித்து மன்னரிடம் நான் சேகரித்த சில தகவல்களை தெரிவித்தால் தயாரிப்பு நிறுவனங்களின் ஆஸ்த்தான போக்கும் கெடுபிடிகளும் நன்கு புலப்படும். பிறிதொரு நிலையில் அவற்றைப்பார்க்கலாம்]. சரி முதல் படத்தில் கவியரசரின்  பொருள் பொதிந்த வரிகளுக்கு மெருகேற்றி இசை அமைத்து சித்ராலயா நிறுவனத்தினரை திக்குமுக்காட வைத்தனர் மெல்லிசை மன்னர்கள். ஒவ்வொரு பாடலிலும் கதைக்கருவை நுழைத்த கவிஞரையும் கதை சொன்ன ஸ்ரீதரையும் ஒருசேர தூக்கிநிறுத்திய இசை அமைப்பல்லவோ நெஞ்சில் ஓர் ஆலயம் ?  இதோ உயிர் துடிப்பான  வரிகள்

'எங்கிருந்தாலும் வாழ்க ' -

"வருவாய் என நான் தனிமையில் நின்றேன் வந்தது வந்தாய் ,துணையுடன் வந்தாய் துணைவரை காக்கும் கடமையும் தந்தாய் தூயவளே நீ வாழ்க "

'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' 

"1000 வாசல் இதயம் அதில் 1000 எண்ணங்கள் உதயம், யாரோ இருப்பார் யாரோ வருவார் , வருவதும் போவதும் தெரியாது  "

'முத்தான முத்தல்லவோ'

"வாழாத மனிதரையும் வாழ வைக்கும் தாயல்லவோ , பேசாத தெய்வத்தையும் பேசவைக்கும் சேயல்லவோ "

'என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ?'

"பறவை பறந்துசெல்ல விடுவேனா அந்த பரம்பொருள் வந்தாலும் தருவேனா?"

'சொன்னது நீ தானா?'

" இன்னொரு கைகளிலே யார் யார் நானா ? என்னை மறந்தாயா ?"

'ஒன்றையே நினைத்திருந்து '                 "கருணைத்தெய்வம் கைகள் நீட்டி அணைக்கத்தாவும் ஆலயம் , காலமெல்லாம் கதவில்லாமல் திறந்து காணும் ஆலயம்" என்று கதையின் முக்கிய  நிலையை பாடலிலும் இசையிலும் பிழிந்து வைத்த ஆழ்சுவை யில் மயஙகாதவர் இருந்திலர்.                    இவர்களின் பிற பெருமைகள் தொடரும். 

அன்பன் ராமன்  மதுரை

                                                                                                                                     


Quote
Share: