ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் – 83  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 143
10/09/2020 3:34 am  

   " நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லையே"

அன்பர்களே

நமது பயணம் விட்ட இடத்திலிருந்து துவங்குகிறது . மேலே இருக்கும் துணைத்தலைப்பு "படித்தால் மட்டும் போதுமா " படப்பாடலின் சரணத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். இன்றைய நமது பகுதிக்கு மிகுந்த வலு சேர்க்க வல்லது. இதுவே ஸ்ரீதர் -விஸ்வநாதன் இசைப்பயணத்தை தெளிவாக விளக்கும் சொற்றொடர்.. ஆம், விஸ்வநாதன் என்ற ஆளுமை  இன்றி ஸ்ரீதர் படங்கள் அந்த அளவு சோபித்திருக்குமா  என்பது விவாதத்துக்குரிய ஒரு பொருள். நான் எனது அளவில் ஸ்ரீதரின் ரசிகன் தான் எனினும் மெல்லிசை மன்னரை விலக்கிவைக்க இயலாது என்றே ஆழமாக உணருகிறேன் . ஏனெனில் ஸ்ரீதரின் திரைக்கதைக்கு, ஆழமான ஆதாரமாக இசையை வழங்கிய விஸ்வநாதனை எவ்வாறு புறக்கணிக்க இயலும்? . 

ஸ்ரீதர் முதன் முதலில்      ஏ.எம் ராஜாவை பெரிதும் பயன்படுத்திவந்தார் . அனால் அந்த ராஜாவையே விட்டு விட வேண்டிய சூழலை ராஜாவே உருவாக்கிவிட்டார் என்றே பலரும் தெரிவித்துள்ளனர். அந்த நிலையில் தான் வி-ரா வை ஸ்ரீதர் தனது சித்ராலயா நிறுவனத்தின் "நெஞ்சில் ஓர் ஆலயம் " படத்தின் இசைப்பணிகளுக்கு மிகுந்த முயற்சிக்குப்பின் ஒப்பந்தம் செய்தார். அந்த காலகட்டத்தில் விஸ்வநாதனின் மின்னல் வேக செயலையும் கவிஞரிடம் விசு கொண்ட நெருக்கம் மற்றும் நட்பு சார்ந்த ஆளுமையையும் கண்ட ஸ்ரீதர் "ஐயோ இந்த மனிதரை முன்னரே பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டேனே" என்று   நிச்சயம் மனதிற்குள் குமைந்திருப்பார். இதை என்னால் ஒரு அனுமானமாக ஊகிக்கமுடிகிறது. இந்த எண்ண ஓட்டத்திற்கு அடிப்படை என்ன என்பதை அவ்வப்போது தெளிவு படுத்த முயலுகிறேன். சரி , ஸ்ரீதரின் முதல் படம் வி-ரா விற்கு நெஞ்சில் ஓர் ஆலயம். என்ன பெயர் பொருத்தம் அனைவருக்கும் அது நெஞ்சில் ஓர் ஆலயம் தான் இன்றளவும்.- நடிக நடிகையர் தயாரிப்பாளர் இயக்குனர் , கவிஞர் , இசை அமைப்பாளர்கள்,ஒளிப்பதிவாளர்கள், பாடகர்கள் என அனைவரும்  பெருமை கொள்ளவைத்த  ஒரு 1962ம் வருடத்திய தமிழ் திரைத்துறையின் திருப்புமுனை.

அதையெல்லாம் விட வியப்பின் உச்சம் யாதெனில் அனைத்து முக்கிய பாடல்களும் சோகமே உருவானவை. ஒரே படத்தில் இத்துணை சோகப்பாடல்கள் அநேகமாக நாம் அறிந்ததில்லை. அதனாலென்ன என்பது போல்  மெல்லிசை மன்னர் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் பாவத்தை விருட்சமாக வளரவிட்டு ஊனை உருக்கும் இசையை படரவிட்டு இன்றளவும் பாடல்கள் கம்பீரமாக வலம் வருவதை நாம் அறிவோம்.  படமோ  குறுகியகாலத்தயாரிப்பு ; அப்படியானால் மன்னர் எவ்வளவு விரைவாகவும் விரிவாகவும் செயல் பட்டிருக்கிறார்? எனவே தான் ஸ்ரீதர் தான் நழுவவிட்ட காலங்களை யோசித்திருப்பார் என்று  முழுமையாக நம்புகிறேன். இதென்ன வெறும் ஊகமா என்றால் இல்லை. நமது 'விருந்தினர் சந்திப்பு ' நிகழ்ச்சிகளில், கோபு மற்றும் சி வி .ராஜேந்திரன் இருவரும் மன்னர் பற்றி பேச முற்பட்டாலே  மகிழ்ச்சியும் குதூகலமும் பற்றிக்கொள்ள பேசும்போது அவர்களின் நன்றி கலந்த வியப்பே நம்மை ஆழ்ந்து யோசிக்க வைக்கிறதல்லவா? ஆங்கிலத்தில் "FIRST IMPRESSION  IS THE BEST IMPRESSION”  என்பர் . நெஞ்சில் ஓர் ஆலயம் ஸ்ரீதர் - எம் எஸ் வி இடையே, இதை வலுவாக நிறுவியுள்ளது.  

மேலும் , இந்த இணை [ ஸ்ரீதர் -மெ .ம ] ஒருவரை ஒருவர் முற்றாகப் புரிந்து கொண்டமையால் தொடர்ந்து படத்துக்குப்படம்  , வெற்றிப்பாடல்களை வழங்க, இந்தக்கூட்டணியின் படமும் பாடல்களும் கண்டிப்பாக சிறப்பாகத்தான் இருக்கும் என்பதை விட இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது என்பதே உண்மை. ஆனால் அவர்கள் மிக சிறப்பாக தங்களை வெளிப்படுத்திக்கொண்டு தமிழ்த்திரையின் பொற்காலம் என்ற மதிப்பீட்டை எட்டினர். மேலும் தகவல்கள் தொடரும் 

அன்பன்  ராமன்   மதுரை  

 

 


Quote
Share: