ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம்-82  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 143
10/09/2020 3:31 am  

அன்பர்களே

விஸ்வநாதன் -ராமமூர்த்தி திரு பீம்சிங் அவர்களின் புத்தா பிக்சர்ஸ் நிறுவனத்தில் நீண்ட நெருக்கம் உடையவர்கள் . எனவே பதிபக்தி படத்திலேயே பணியாற்றி நன்கு அறியப்பட்டவர்கள். அதனால் அதே இயக்குனரின் பாகப்பிரிவினை படத்தில்  இசை அமைத்து மேலும் பெரிய தாக்கத்தை விளைவித்தனர்.நான் முன்னரே தெரிவித்துள்ள கனகசபையின் ஞான விளக்கங்கள் இந்தப்படத்தின் மூலம் எனக்கு கிட்டியது. பாகப்பிரிவினை படத்திற்குப்பின் திரு பீம்சிங், ஏ .வி. மெய்யப்பன் அவர்களின் ஏ.வி எம் நிறுவனத்துடன்  இணைந்து தயாரித்த படம் "பாவ மன்னிப்பு" இந்தப்படத்தின் பாடல்கள் தென்னிந்தியாவையும் , இலங்கை மக்களையும் ஒருசேர கலக்கி , விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற புதிய சகாப்தம் ஆழமாக வேரூன்ற உதவியது.அந்தக்கால கட்டத்தில் நான் பள்ளிக்கல்விக்குப்பின் கல்லூரி கல்விக்காக மைசூர்       சென்றேன் . அவ்வூரில் பாவமன்னிப்பு படத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் அப்படப்பாடல்களின் தாக்கத்தை மைசூர் ரசிகர்கள் வியந்து போற்றியதையும் இன்றும் பசுமையாக நினைவு கூறுகிறேன். அந்த வயதில் எனக்கு இசை குறித்து மேலோட்டமான ரசனை இருந்ததே தவிர , இசையின் நுணுக்கங்கள், இசைக்கருவிகள் அவற்றின் பயன்பாடு பற்றிய ஏதும் அறிந்திராதவன். ஆனால் நான் முன்னம் குறிப்பிட்ட 'இசையின் தாக்கம் ' என்னை வசீகரித்திருந்து என்னவோ விளக்கவோ விலக்கவோ ஒண்ணாத ஒரு பிடிப்பு மற்றும் பீடிப்பு. சரி இவற்றை பற்றிய எனது புரிதல்தான் என்ன என்று தேடும்போது -ஒரு பிரமிப்பூட்டும் அமைப்பு தென்பட்டது வி-ரா வின் ஆக்கங்களில். அதாவது ஒவ்வொருபாடலும் ஏதோ ஒரு மையப்புள்ளியை சுற்றி வலம் வருவதாக  எனக்குத்தோன்றிக்கொண்டே இருந்தது.  

ஆங்கிலத்தில் 'total attraction ' என்பார்களே அவ்வகையான ஒரு காந்த ஈர்ப்பு போன்ற வசீகரம். சிறு வயதில் அன்றைய தமிழக சிறுவர்கள்/ பையன்கள் / பெண்கள் எம் எஸ் வி என்ற ஒரு ஆளுமையினால் கவர்ந்திழுக்கப்பட்டு தமிழ்த்திரை பாடல்களை [ பலத்த எதிர்ப்புக்கு இடையே ] பெரிதும் ரசிக்கத்தலைப்பட்டனர் . இவ்வகை அன்றைய புதுமைகள்  தான் விண்ணோடும் முகிலோடும்[ புதையல்], தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், ஒற்றுமையாய் வாழ்வதாலே , தாழையாம் பூ முடிச்சு [ பாகப்பிரிவினை]. இந்த ஒவ்வொரு பாடலையும் மனதில் அசை போட்டுப்பாருங்கள்  அவை தமக்கென அமைக்கப்பட்ட மையப்புள்ளியை சார்ந்தே இயங்குவதை காணலாம் உதாரணமாக தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் என்ற பாடல் ஒரு பெண்ணின் காதல் வயப்பட்ட நிலை யில் அமைந்ததெனினும் , அதே காதல் வயப்பட்ட 'விண்ணோடும் முகிலோடும் ' பாடல் முற்றிலும் வேறுபட்ட இயக்கத்தை வெளிப்படுத்திவதையும், முன்னதில் ஒரு ஆணுக்குதெம்புசொல்லும் பெண் மன ஆக்கபூர்வமான கருத்து ஒட்டி இழையும் இசையையும் கவனிக்காமல் கடந்து போய்விட முடியுமா என்ன ? இவ்வகை அமைப்புக்கூறுகள் , என்னை பிடித்து ஆட்டிய நிலையில் தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பெயரையே நண்பன் கனகசபை எனக்கு போதித்தான். மட்டுமல்ல பாடலையும் தாளத்தையும் கவனி அவற்றின் ஒருங்கிணைந்த தன்மை [ harmony ] வி-ரா வின் பாடல் என்று உணர்த்தும் - தெரிந்துகொள் என்றொரு  குறியீட்டையும் அடையாளம் காட்டினான். பிறகென்ன கனகசபை எனக்கு வசிஷ்டன் அல்லவா.! அவன் தந்த சூத்திரம் எனக்கு வி-ரா  குறித்த ஒரு தெளிவான புரிதலுக்கும் , தீர்ப்புக்கும் என்னை இட்டுச்சென்றது.

ஏதும் அறியாத எனக்கே இப்படி ஒரு தெளிவை அவர்களின் பாடல்கள் உண்டாக்கின என்றால் ,சினிமாத்துறையை வாழ்வாதாரமாகக்கொண்ட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் எவ்வாறு ஈர்க்கப்பட்டிருப்பார்கள் என்பதை நான் சொல்லியா  அன்பர்கள் விளங்கிக்கொள்ளவேண்டியிருக்கும் ? இவ்வாறெனில் அன்றைய இயக்குனராக  புதுமைகளை அரங்கேற்றிக்கொண்டிருந்த திரு .ஸ்ரீதர் ஏன்  விஸ்வநாதன்-ராமமூர்த்தி யை இசைத்தேவைகளுக்கு  அணுகினார் என்பதை சொல்லவும் வேண்டுமோ ? அதிலும் திடீரென்று ஏ எம் ராஜா முறுக்கிக்கொண்டு முரண்டு பிடிக்க , அப்பாடா என்று ஸ்ரீதர் , வி ரா வை நெஞ்சில் ஓர்  ஆலயம் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய , ஸ்ரீதர் சகாப்தத்தில் , விஸ்வநாதன் என்றோர் சகாப்தம் இணை ந்து கொண்டு. தோற்றுவித்தவை சரித்திரங்களாக அழியாப்புகழு டன் வலம் வந்துகொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். 

 மேலும் வளரும்    அன்பன்  ராமன்  மதுரை


Quote
Share: