ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -72  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 133
31/07/2020 1:56 am  

அன்பர்களே

திரு ஏ .வின்சென்ட் அவர்களின் சிறப்புகளை சென்ற பதிவில் பார்த்தோம்.கருப்பு வெள்ளை ஊடகத்தில் அவர் தோற்றுவித்த மலைப்புகள் அநேகம். அதிலும் பாடல் காட்சிகளுக்கு சிறப்பான கவனம் மேற்கொள்வார் என்பதை காட்சிகளில் உணர முடிகிறது.. அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை [நெஞ்சம் மறப்பதில்லை] காட்சியமைப்பை நினைவு கூறுங்கள் . சிறிய ரேக்ளா வண்டியில் எஸ்டேட் தோட்டத்தில் உலவும் காதலர்களை லைட் /  ஷேட் அமைப்பில், ஓடிக்கொண்டிருந்த நிலையில் துல்லியமாக பதிவிடப்பட்டது இன்றைக்கும் கூட கருப்பு வெள்ளையில் நிகழ்த்திய ஜாலம் என்றே சொல்லத்தோன்றுகிறது.

'சொன்னது நீதானா' பாடல் காட்சிப்படுத்த ப் பட்டிருந்ததை சமகாலத்திய ஒளிப்பதிவாளர்கள் ஏகமாக சிலாகித்திருந்ததை கவனம் கொண்டாலே வின்சென்டின் தொழில்நுணுக்கம் தனி முத்திரை பதித்ததை நன்கு உணரலாம்.காதலிக்கநேரமில்லை படத்தின் பல சிறப்புகளில் வண்ணப்படப்பிடிப்பில் அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் மறக்கவொண்ணாதது . அவ்வளவு நேர்த்தியாக பதிவிடப்பட்டது ;மேலும் வியப்பைத்தருவது ஏனெனில் முற்றிலும் சென்னையில் உருவானது மட்டும் அன்றி வின்சென்ட்-சுந்தரம் மற்றும் GEMINI  COLOUR LAB க்கும் அதுவே முதல் படம் என்பதே . இந்தக்களத்தில் பேசப்படவேண்டிய மற்றுமோர் ஆளுமை திரு பி,என் சுந்தரம் அவர்களே. ஆம் திரு வின்சென்டின் உதவியாளர் என்று அறியப்பட்டாலும் அவரும் ஒரு பெரும் ஒளிப்பதிவு நிபுணர் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை. அதாவது அவர் வின்சென்டிடம் இணைந்து பணியாற்றும் முன்பே நீண்ட காலம் விஜயா -வாஹினி யில் புடம் போடப்பட்டவர். இதில் நான் நினைவுகூர விரும்புவது  'நில் கவனி காதலி ' படத்தில் ஜில் என்று காற்று வந்ததோ ' பாடல் நீச்சல் குளத்தில் பாதி அமிழ்ந்த நிலையில் படமாக்கப்பட்டிருந்த அசாதாரணமான உத்தி பற்றியது.  இதனை பின்பற்றி திரு ஸ்ரீதர் ஒரு ஹிந்திப்படத்திலும் , பின்னர் அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் 'மலர் எது ' பாடல் காட்சியை வண்ணத்தில் ஒளிப்பதிவு செய்ததை கவனத்தில் கொண்டால் போதும் [உபயம் திரு சி வி ராஜேந்திரன் நமது MMFA அன்பர்களுடன் உரையாடிய நிகழ்ச்சி].

இதை அடுத்து தயாரிக்கப்பட்ட 'கலைக்கோவில்' படத்தில் புதிய ஒளிப்பதிவுக்கலைஞராக என்.பாலகிருஷ்ணன்  இணைந்தார். திரு என். பாலகிருஷ்ணன் மற்றுமோர் ஒளிப்பதிவு விற்பன்னர். அவரின் தகவல்களை திரட்ட முற்பட்டபோது அவர் நீண்ட காலம் ஜெமினி நிறுவனத்தில் திரு. எல்லப்பா தலைமையில் ஒளிப்பதிவாளராக  அநேக ஹிந்திப்படங்களில் செயலாற்றி இருப்பதை புரிந்து கொண்டேன் 'கலைக்கோவில்' ஒரு கலைப்படம் என்ற அந்தஸ்துக்குரிய வகையில் ஆழமான ஒளிப்பதிவு செய்திருந்தார்.அவரும் திறமைகள் பல உடையவர் ; சான்றாக  வெண்ணிற ஆடை,  ஊட்டி வரை உறவு, சிவந்தமண் காட்சிகளை நினைவூட்டலாம்.  சிவந்தமண் படத்தில் ஹெலிகாப்டர் காட்சிகள் மிகுந்த விறுவிறுப்பும் , சுறுசுறுப்பும் பின்னிப்பிணைந்த அமைப்பில் பிரமிப்பூட்டியவை . இப்படி ஒருவர் பின் ஒருவராக , கைதேர்ந்த ஒளிப்பதிவு விற்பன்னர்களை ஸ்ரீதர் பயன்படுத்தி வந்ததையும் , அ .ஓ.ம படத்திற்கு யு ராஜகோபாலை தேர்ந்ததையும் பார்த்தால் அவர் சிறப்பான கலைஞர்களை மிகவும் விரும்பினார் என்பது புலனாகிறது. திரு யு .ராஜகோபால்  மலையாளத்திரையில் நன்கு அறியப்பட்ட வித்தகர் [சுமார் 90 படங்கள்]. இவை அனைத்தும் திரு ஸ்ரீதர் ஒளிப்பதிவிற்கு வைத்திருந்த ஆழமான புரிதலை செம்மையாக விளக்குவன. திரு யு .ராஜகோபால் குறித்த தகவல்களை அறிய முற்படும் போது வேறொரு தகவல் கிடைத்தது . அது திரு மார்கஸ் பார்ட்லே பற்றியது. எனது ஒரு பதிவில் அவர் ஜெமினி நிறுவனத்தின் தலைமை ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டிருந்தேன், அது தவறு.                  அந்த தவறுக்கு மிகவும் வருந்துகிறேன்.

உண்மையில் திரு மார்கஸ் பார்ட்லே TIMES OF INDIA நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக துவங்கி தனது சொந்த ஆர்வத்தில் திரைப்பட ஒளிப்பதிவு மற்றும் உத்திகளை பயின்று பின்னர் பல ஸ்டுடியோக்களில் பணியாற்றி நீண்ட காலம் விஜயா-வாஹினிநிறுவனத்திலஅவர்களின்       அனைத்துமொழித்            தயாரிப்புகளிலும் முத்திரை பதித்தவர். இந்தியாவில் நன்கு அறியப்பட்டதனால் 'செம்மீன்' மலையாளப்படம் அவர் ஒளிப்பதிவில் தயாரானது.ஆனால் தயாரிப்பாளரிடம் கருத்துவேறுபாடு ஏற்பட இறுதிநிலையில் விலகிவிட்டார். விடுபட்டவற்றை திரு . யூ ராஜகோபால் ஒளிப்பதிவு செய்து படத்தை முடித்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. இருவர் பணியாற்றிய படம் என்பதால் அவருக்கு செம்மீன் படத்திற்கான NATIONAL AWARD   கை நழுவியதாம்.. ஆனால் அந்த விருது அவருக்கு 'சாந்தி நிலையம் ' படத்திற்கு கிடைத்தது. 

இதற்கும் ஸ்ரீதர் என்ற இயக்குனருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனினும் தென்னாட்டு ஒளிப்பதிவாளர்கள் இன்றுவரை உன்னதக்கலைஞர்கள் என்ற பெருமையை தக்கவைத்துக்கொண்டே வருகின்றனர் . இந்த ஒளிப்பதிவுக்கலைஞர்கள் தத்தம் பணியில் நிறைவேற்றிய உன்னதங்களை சரியான தருணத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். 

மேலும் வளரும்      அன்பன்  ராமன்


Quote
Share: