ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -44  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 104
27/03/2020 1:41 am  

அன்பர்களே ,

நான் அவ்வப்போது குறிப்பிடுவது போல ஸ்ரீதர் ஒரு மாறு பட்ட மனிதர். அவரைப்பற்றி நான் அறிந்ததெல்லாம் முதலில் ஒரு கதாசிரியர் ,பின்னர் ஒரு இயக்குனர் என்பதாகத்தான். அனால் காலப்போக்கில் எனது பார்வை விரிவடைந்த போது , இந்த மனிதர் பல ஆளுமைகளை உள்ளடக்கியவர் என்று உணரத்தலைப்பட்டேன்.. இதை ஏன் இப்போது பேசுகிறேன் -எனில் மேலும் சில திரைப்பட தகவல்களை நாம் அறிய முற்படுமுன் , இந்த ஒரு சிறிய விலகல் எனது தொகுப்பிற்கு வலு சேர்க்கும் என்று நான் தெளிவாக நம்புகிறேன். மேலு, இதுபோன்ற மாறுதல், தொடர்ந்து ஒரே வகை எழுத்துக்களை எதிர்கொண்டு  வரும்   தள அன்பர்களுக்கு ஒரு மாறுதலாகவும் அமையும் என்பதே .  நான்  1959 ல் பள்ளி மாணவன் - 9 ம் வகுப்பு என ஞாபகம். அப்போது தான் "கல்யாண பரிசு" தமிழகத்தை ஈர்த்து வைத்திருந்தது.  பிறிதொரு பிரிவில் நமது MMFA அன்பர்கள் குறிப்பிட்டிருந்ததைப்போல , திரைப்படங்கள் பெரும் தீமைக்கு வழிவகுக்கும் என்று அன்றைய பெற்றோர், குழந்தைகளை [எந்த நிலையில் படித்துக்கொண்டிருந்தாலும்] படங்கள், பாடல்கள் , ரேடியோ கேட்பது, பாட்டுப்புத்தகம் வைத்துக்கொண்டிருப்பது  அனைத்திற்கும் அனைத்து  144    விதித்து வைத்திருந்த சமுதாயம். இந்த சூழலில் பள்ளியில் சிலர் திரைப்படங்கள் குறித்து பெரிய விமரிசகர்கள் போல விவாதிப்பதை நாங்கள் வாய் பிளந்து [குருவிக்குஞ்சுகள் போல] அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்போம் -ஆசிரியர் வரும் வரை. இது உணவு இடை வேளையில் தொடரும் அல்லது திடீரென்று யாரவது ஒருவன் செந் - தமிழ் தேன் மொழியாள், அல்லது மின்னல் பூச்சி ஜாக்கெட்டு  என்று பாடுவான். இவை சினிமாவில் வருவன என் பது கூட தெரியாத ஜடங்களாய் இருந்த சிறுவர்களில் நானும் ஒருவன். இவ்வாறான ஒரு கால கட்டத்தில் , ஒரு விடுமுறை நாளில் , தெருவில் அக்கம் பக்க வீடுகளில் இருக்கும் சில பெரிய [பெரிய என்ன பெரிய -SSLC முடித்த ] பையன்களுடன் , 'கல்யாண பரிசு' பார்க்க வீட்டில் அனுமதி                

 கிடைத்தது. [ அதாவது "க .பரிசு' பெரியவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது என பொருள் கொள்க ].அந்த வயதில் கூட இந்த படம் ஒரு இனம் புரியாத புதுமையாக எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. நமது 'பெரிய பையன்கள்" சிலர் ஸ்ரீதர் முதன்  இப்பதான்டா "டைரக்ட் "  பன்றான் எப்பிடி பின்னி இருக்கான் பார் என்றெல்லாம்  பேச,  என்ன -"டைரக்ட் "  பன்றான்  அப்பிடின்னா என்ன என்று கேட்க , பிடரியில் விழுந்தது ஒரு அடி ; உடனே ஒரு குரல் "முண்டம் நீ எல்லாம் ஏன்டா சினிமா பாக்க போற? " என்ற அதட்டல்.  அதற்குள் பெரிய மனது பண்ணி ஒருவன் 'பாவம் டா  அவன் , நம்மளும் அவன் வயசில அப்படித்தானேடா இருந்தோம் ' என்று சொல்ல எனக்கு உதறல் எடுத்துவிட்டது. சேராத கூட்டத்தினுள் சேர்ந்து விட்டோமோ -நம்ப கிளாஸ் பையன் யாரும் இல்லாத இடத்துக்கு போயிருக்கக்கூடாது என்ற ஞானோதயம் மேலிட ஓரமாக திண்ணையில் அமர்ந்து விட்டேன். ஆனால் மனம் அமர மறுக்கிறது.  "டைரக்ட் "  பன்றான் ' னா என்ன என்று துளைத்துக்கொண்டே இருக்க , மனக்குரங்கின் ஆட்டம் துவங்கி விட்டது . சரி இனி மண்டை வெடித்துவிடும், நாளைக்கே  கனகசபையை கேட்க வேண்டியதுதான்.  அவன் என் கிளாஸ் மேட் , ஏழை குடும்பம். ஆனால் அவன் வீடு ஒரு டூரிங் தியேட்டர் அருகில். வீட்டில் இருந்தே தட்டி இடுக்கில் எல்லா சினிமாவும் பார்ப்பவன். 'நம்ம பெரிய பையன்' களை  தூக்கி சாப்பிட்டுவிடுவான். [பின்னாளில் எனக்கு  எம் எஸ் வி பற்றிய  ஞான துவக்கம்   தந்தவனும் இவனே ; சும்மா இல்லை ஏ -முண்டம் என்று திட்டி விட்டுத்தான்  ] மறு நாள் திங்கள் கிழமை , துல்லியமாக அன்று கனகசபை பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு வழியாக, புதன் கிழமை வந்து சேர்ந்தான் ; அதிகம் லீவு எடுக்காதவ ன் , நமக்கு வேண்டும் போது தலை மறைவானான். என்ன செய்வது நம்ம நேரம் அப்படி. இது என்ன உன் சொந்த கதையை கேட்கவா இங்கு வந்தோம் என அன்பர்கள் அங்கலாய்க்க வேண்டாம். இதை ஏன் பேசுகிறேன் என்றால் , அன்றைய தமிழ்நாட்டில் சிறுவயதில் நிலவி வந்த ஒரு இறுக்கமான கட்டுப்பாடு -சினிமா மற்றும் ஹோட்டல் களுக்கு செல்ல 1008 அனுமதிகள் பெற்றாக வேண்டும்.. இது போல ஏதாவது முயற்சிக்குள் இறங்கினால் "நீ கணக்கில் எவ்வளவு மார்க் அல்லது பூகோளத்தில் எவ்வளவு" என்று உடனடி அவமானங்கள் தயார் நிலையில் இருக்கும். அன்றைய பெற்றோர் நாலு பேருக்கு நடுவில் தமது குழந்தைகளின் தகுதிக்குறைவுகளை மூடி மறைக்க மாட்டார்கள் ; எனவே ஒரு வித "எதையும் தாங்கும் இதயம்" எங்களுக்குள் ஏற்பட்டது. இன்றோ எப்போதும் தாங்கிப்பிடிக்கப்  பட்ட   சிறார் , எளிதில் உணர்ச்சிவசம் , மனத்தொய்வு மற்றும் வாழ்வில் வெறுப்பு அடைகிறார்கள்..

சரி,  கனக சபை  என்ன செய்தான். எனக்கு ஒரு நிபந்தனை விதித்தான். "நீ எனக்கு மரியாதையாக 7 ages of man ,மற்றும் Gulliver's    TRAVELS 'இரண்டையும் ஒழுங்காக சொல்லித்தரணும்; எனக்கு புரியணும் -அப்ப தான் 'டைரக்ட் பண் றான்' னா என்னானு நான் சொல்வேன். ஏதாவது ஏடா கூடம் பண்ணுன - அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது என்ற மிரட்டல் விடுத்தான்; ஆனால் அவன் மிக நல்லவன் எனவே தெம்பாக செயலில் இறங்கி ஒரு நான்கு நாள்  இடைவேளைகளில் அவனுக்கு விளக்கமாக சொல்லிக்கொடுத்தேன். மகிழ்ந்து போன கனகசபை "டேய் நீ வாத்தியார் வேலைக்கு போடா நல்ல பேர் எடுப்படா ' என்று மனமார சொன்னான். அது  மட்டுமல்ல , டைரக்ஷன் , டைரக்டர் , கேமரா மேன் என்று என்னை மிகுந்த ஆழத்துக்கு கொண்டு சென்றான் ; ஆனால் இசை பற்றி அவன் அப்போது வாய் திறக்கவில்லை. பின்னாளில் அது குறித்து பேச வேண்டிய ஒரு தருணம் அவனுக்கு வந்தது. இவ்வாறு பல நுணுக்கங்களை அறிந்து விட்டதாக ஒரு நினைப்பில் அதன் பின்னர் மேலும் படங்களை பார்த்தபோது  ஸ்ரீதர் மிகுந்த உயரத்துக்கு போ ய் இருப்பதாக தோன்றியது..மெல்ல மெல்ல பிற நுணுக்கங்களை கவனிக்க துவங்கி, ஆனால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கல்வியிலும் நாட்டம் செலுத்தி வந்தேன். இவ்வாறாக நான் ஸ்ரீதரை ரசிக்க, அவர் எனக்கு பி டித்த இயக்குனர் என்பதையும் தாண்டி , என்னை பீடித்த இயக்குனர் ஆனார் அடுத்த 5 ஆண்டுகளில்.அக்கால சூழலில் எனது நிலைப்பாடு மிகவும் நியாயமானது என்பது எனது தலைமுறையினர் பலருக்கு ஸ்ரீதரின் தாக்கம் உள்ளதை பார்த்தால் நன்கு விளங்கும்.

மேலும் தகவல்களுடன் விரைவில்

அன்பன் ராமன்  மதுரை.


Quote
Share: