Notifications
Clear all

1977 - Aaru Pushpangal - Atha Maga Kaathiruntha  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 82
10/09/2020 5:58 pm  

நாட்டுப்புற பாடல்கள்

பாடல் : அத்தை மக காத்திருந்தா அத்தானுக்காக
படம் : ஆறு புஷ்பங்கள்
பாடியவர்கள் : எல்.ஆர்.ஈஸ்வரி, பி.எஸ்.சசிரேகா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1977

அனைவருக்கும் வணக்கம்.

கதையை இதே படத்தில் இடம்பெற்ற "வாழ்வரசி தாயே" என்ற பாடல் பதிவில் விளக்கியுள்ளேன். அதனால் பாடல் காட்சிக்கான சந்தர்பத்தை மட்டும் விளக்குகிறேன்.

திருவிழாவின் போது தங்களை அவமானப்படுத்தும் வி.கே.ராமசாமியிடம் ஆண்களுக்கு பெண்கள் ஒருபோதும் சளைத்தவரல்ல, நாங்களும் வாழ்ந்து காட்டுவோம் என்று சவால் விடுகிறார். வீராவேசமாக சவால் விடுகிறார் என்றாலும், வருமானத்திற்காக என்ன செய்யலாம் என்று வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். அவர் வீட்டில் மூத்த மகள் என்பதால் அவருக்கு கீழ் இருக்கும் சகோதரிகளிடம் எப்போதும் ஒருவிதமான கண்டிப்புடன் தான் இருப்பார். அவர்கள் நன்றாக பாடக்கூடிய, ஆடக்கூடிய திறமை படைத்தவர்கள். இருந்தாலும், வீட்டில் தனக்கு கீழ் இருக்கும் சகோதரிகள் உறக்க பாடினால் அவர் கடிந்துகொள்வது வழக்கம். ஆனால், இப்போது பிழைப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பொழுது, அவரது இரு சகோதரிகள் வீட்டு வேலைகள் செய்துகொண்டிருக்கும் போது பாடிக்கொண்டே வேலை செய்கிறார்கள். அதை பார்த்ததும் ஸ்ரீவித்யாவிற்கு ஒரு யோசனை தோன்றுகிறது - சகோதரிகள் எல்லோருமாக கலைநிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவந்து விடலாம் என்று. அப்படி அவர் தீருமானித்த பிறகு முதலில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல் தான் இந்த பாடல்.

இந்த பாடலும் நாட்டுப்புற மெட்டில் குறும்பும், கும்மாளமும் நிறைந்த பாடல் என்றாலும் "ஏண்டி முத்தம்மா" மற்றும் "அழகர் மலையில்" வெற்றி பெற்ற அளவுக்கு வெற்றியை தொடமுடியாமல் போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால் அந்த காலத்தில் இந்த பாடலை வானொலியில் கேட்டதாக கூட ஞாபகம் இல்லை.

Prelude - Guitar chord ஒலித்து அதை தொடர்ந்து மிக அழகான புல்லாங்குழல் bit - இதுவே கிராமத்து சூழ்நிலையை கண்முன்னே கொண்டுவந்து விடுகிறது. அது மட்டுமல்ல, யாரோ யாரையோ எதிர்பார்த்துக்கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வையும் ஏற்படுத்துகிறது. இந்த prelude-டை நிறைவு செய்வதும் Guitar chord தான். புல்லாங்குழல் bit ஒலிக்கும் போது பின்னணியில் சுருதி ஓடிக்கொண்டிருக்கிறது.

Pallavi – எல்.ஆர்.ஈஸ்வரி ஆரம்பிக்கிறார் பல்லவியை தொகையறா பாணியில் - வாத்தியக்கருவிகள் ஏதுமின்றி - பல்லவியின் முழு வரிகளையும் அவர் பாடுகிறார். அங்கு அவர் ஒவ்வொரு வரிக்கும் கொடுத்திருக்கும் expressions மிகவும் மெச்சத்தக்கது - அதுவும் அந்த "ஆறு வகை பூவை முடிச்சு" மற்றும் "ஏய் புள்ளே...." அபாரம். தொடர்வது ஒரு interlude - Clarinet + புல்லாங்குழல் + Mandolin இவை மூன்றும் சேர்ந்த ஒரு piece. அதற்க்கு தாளமாக தவில் வாசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஈஸ்வரி பல்லவியை வாத்தியக்கருவிகளோடு சேர்ந்து பாடி பல்லவி முடிகிறது. இங்கு அவர் "ஏய் புள்ளே..." என்ற கொடுத்திருக்கும் throw எடுத்துச்சொல்ல வேண்டிய ஒன்று. இங்கு தாளத்துக்கு தபலா மற்றும் டோலக் பயன்படுத்துவப்பட்டுள்ளது.

ஐந்து வகை பூக்களாலான பாணங்களை ஏந்தியவன் "காமன்" என்று புராணங்கள் சொல்கிறது. இங்கு கவிஞர் "ஆறு வகை பூ" என்று சொல்கிறார். ஆறு வகை பூவுக்கும் இலக்கியத்துக்கும் / புராணத்துக்கும் ஏதாவது connection உள்ளதோ என நினைக்க தோன்றுகிறது. ஏனென்றால் கவிஞர் சும்மா எதோ வார்த்தைகளால் நிரப்பவேண்டும் என்று எழுத்தமாட்டார். அவர் பாடல்களில் இலக்கியம் / புராணம் இவற்றை எங்காவது இணைத்து விடுவார், அதனால் எழுந்த எண்ணம். அல்லது பூடகமாக இப்படி சொல்கிறாரோ - அவள் ஒரு வருடமாக தன் அத்தானுக்காக காத்திருந்தாள் என்பதை அந்த ஒரு வரி வாயிலாக சொல்கிறாரோ? - அதாவது ஆறு வகை பூக்கள் - ஆறு ரிதுக்கள் - aka six seasons என்ற அடிப்படையில்?

First BGM – Clarinet + புல்லாங்குழல் + Mandolin மூன்றும் சேர்ந்து ஒரு சிறிய piece. இங்கு தாளத்துக்கு தவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

First Charanam – இங்கு சசிரேகா அறிமுகமாகிறார். சரணத்தின் இரண்டு வரிகளை அவர் பாடுகிறார். அதற்க்கு ஒரு சிறு interlude - தவில் வாயிலாக - பாடல் வரியில் வரும் "காத்தடிக்குது மழை பொழியுது, வீட்டு கதவு படபடக்குது" என்பதை musically convey செய்வது போல். பிறகு அதே வரிகளை சசிரேகா repeat செய்கிறார். சசிரேகா பாடும் வரிகளுக்கு ஒரு மெட்டு, அதற்க்கு ஒரு வகையான தாள நடை. அதை தொடர்ந்து ஈஸ்வரி அடுத்த இரண்டு வரிகளை பாடுகிறார். இங்கு மெட்டும் தாளமும் சற்று மாறுபடுகிறது. அடுத்தது அனுசரணம் - இதை சசிரேகா ஆரம்பிக்கிறார் - இங்கு மீண்டும் மெட்டு தாளம் மாறுபடுகிறது. சசிரேகா இரண்டு வரிகளை பாட, அடுத்த இரண்டு வரிகளை ஈஸ்வரி பாடி அதன் கடைசி வரியை சற்று வித்தியாசமாக repeat செய்து சரணத்தை நிறைவு செய்கிறார் - இது எப்படி உள்ளதென்றால் சில விளையாட்டு விளையாடும் போது (chess / பாண்டி / தாயக்கட்டம் இத்யாதி) ஒருவருக்கு மற்றவர் check வைத்த பிறகு அவருக்கு எப்படி தன் அடுத்த movement செய்யவேண்டும் என்ற குழப்பம் வரும். அப்போது check வைத்தவர் மற்றவரை பார்த்து சற்று கேலியும், கிண்டலுமாக "இப்போ என்ன பண்ணுவே"ன்னு நையாண்டி செய்து கேட்ப்பார் அல்லவா அந்த பாணியை ஒத்தது போல் பாடப்பட்டுள்ளது. அந்த repeat portion-னுக்கு பின்னணியில் chord மற்றும் ஒலிக்கிறது. தொடர்ந்து ஈஸ்வரி பல்லவியை முழுவதுமாக பாடி சரணம் நிறைவு பெறுகிறது. பாடும் பகுதிக்கு தபலா மற்றும் டோலக் வாசிக்கப்பட்டுள்ளது.

Second BGM – முதலில் Clarinet + புல்லாங்குழல் + Mandolin மூன்றும் சேர்ந்து ஒரு நீண்ட piece. அதை தொடர்ந்து Mandolin (Rabab -பின் ஒலி போல் வாசிக்கப்பட்டுள்ளது) piece ஒலிக்க அதற்க்கு off-beat-டில் Clarinet bit சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து Mandolin piece ஒலிக்க அதற்க்கு counter effect போல் Clarinet சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு தாளக்கருவிகளாக தவில் மற்றும் தாரை / தப்பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.

Second Charanam – இந்த சரணத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்துள்ளார் மன்னர். முதலில் இரண்டு வரிகளை ஈஸ்வரி பாட, அடுத்த இரண்டு வரிகளை சசிரேகா பாடுகிறார். அதை தொடர்ந்து அதற்க்கு ஒரு சிறு interlude போல் ஈஸ்வரி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அதே வரிகளை பாட, தொடர்ந்து சசிரேகாவும் தான் பாடிய வரிகளை மீண்டும் பாடுகிறார். அது முடிந்ததும் மன்னர் ஒரு ஜாலம் செய்துள்ளார், which I doubt any other music director would have thought and executed – “தொப்" என்ற ஒலி வரும் வண்ணம் தாரை/தப்பட்டை-யில் ஒரு தட்டு - எதற்கு என்றால் அடுத்த வரப்போகும் வரியில் அந்த பெண் தண்ணீர் என்று நினைத்து தரையில் விழுகிறாளாம்! – his way of conveying through music that she is falling on the floor! தொடவார்வது அனுசரணம் - முதல் சரணத்தின் reverse இங்கே - அதாவதே எல்.ஆர்.ஈஸ்வரி ஆரம்பித்து வைத்து, சசிரேகா முடித்து வைக்கிறார் - முதல் சரணத்தில் அதே பாணியில். இங்கு மெட்டு / தாளக்கட்டு மாறுபடுவதை கவனிக்கவும். இந்த சரணத்தில் பல்லவியை பாடி முடித்து வைப்பது சசிரேகா.

Third BGM – இது சற்று சிறிய BGM தான் - இங்கும் Clarinet + புல்லாங்குழல் + Mandolin மூன்றும் சேர்ந்து ஒலிக்கும் ஒரு piece. இங்கு புல்லாங்குழலும் சற்று "கிளாசிக்கல்" touch கொடுத்திருப்பதை கவனிக்கவும்.

இப்படி சின்ன சின்ன நுணுக்கங்கள் பார்த்து பார்த்து செய்து அழகு சேர்ப்பதில் மன்னருக்கு நிகர் மன்னரே. வருத்தம் என்னவென்றால் இவை எல்லாம் அந்த காலத்தில் யாரும் சரிவர கவனிக்கவில்லை என்பதே - குறிப்பாக "critics".

Third Charanam – இந்த சரணம் முதல் சரணம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது - சசிரேகா தொடங்கி வைத்து, ஈஸ்வரி முடித்து வைக்கிறார். முதல் சரணத்தில் interlude ஆக "தவில்" ஒலித்ததென்றால், இங்கு "claps" சேர்த்துள்ளார் - ஏனென்றால் பாடல் வரியில் "கும்மியடிச்சா" என்று வருவதால். சரணம் முண்டிந்ததும் ஈஸ்வரி பல்லவியை முழுதும் பாடி பாடலை முடிக்கிறார்.

Postlude - Clarinet + புல்லாங்குழல் + Mandolin இவடி மூன்று சேர்ந்து பாடலின் follow on போல் ஒலிக்கிறது. இங்கு Clarinet சற்று அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளது. புல்லாங்குழல் சற்று ஓங்கி ஒலித்து , அதற்க்கு பின்னணியில் Mandolin கேட்க்கும் படி வாசிக்கப்பட்டுள்ளது. தாளமாக - தவில் + தபலா + டோலக் + தாரை/தப்பட்டை வாசிக்கப்பட்டுள்ளது. இதில் தபலா மற்றும் டோலக் கடைசியில் மட்டுமே நான் உள்ளேன் என சொல்லும்படி வாசிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சொன்னது போல் எல்.ஆர்.ஈஸ்வரியின் throw, zest, cuts and jerks எடுத்துச்சொல்லவேண்டிய விஷயம். சசிரேகாவை அப்படியே சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுகிறார்.

பாடல் மக்களை சென்றடையாததன் காரணம் தான் விளங்கவில்லை.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://youtu.be/D-9151yPem4


Quote
Share: