கேள்வியின் நாயகனே -...
 
Notifications

கேள்வியின் நாயகனே -1975  

  RSS

P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 1 year ago
Posts: 37
28/04/2019 1:48 pm  

சாதாரணமாக ஒரு திரைப்படத்தின் உச்ச கட்ட காட்சி சரியாக அமையவேண்டுமானால் அதில் இசையமைப்பாளரின் பங்கு மிகவும் முக்கியமானது,

அது மசாலாப் படமாக இருந்தால் - கட்டாயம் உச்சக்கட்ட காட்சி என்பது ஒரு சண்டைக்காட்சியாகத்தான் இருக்கவேண்டும். காட்சிக்கு விறுவிறுப்பை ஏற்றி ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்.

சமூகப் படமாக - குடும்பக் கதைப்படமாக இருந்தால் தாய்க்குலங்களின் புடவைத் தலைப்பை நனைக்கும் அளவுக்கு காட்சிக்கு உருக்கத்தை இசையால் ஏற்படுத்த வேண்டும்.

இதுதான் பொதுவாக நமது தமிழ்த் திரைப்படங்களின் எழுதப்படாத சட்டம்.

இந்தச் சட்டத்துக்கு விதிவிலக்காக படத்தின் உச்சகட்ட காட்சிக்கான பரபரப்பை ஒரு கர்நாடக இசைக் கச்சேரிப் பாடல் காட்சி மூலம் அமைத்தால் ....அது சரிப்பட்டு வருமா?

அதுவும் விறுவிறுப்பான வயலின்களின் வீச்சோ, தபேலா, ட்ரம்ஸ், பாங்கோஸ் ஆகியவற்றின் வேகமான தாளக்கட்டோ, கிடார் பியானோக்களின் இடைமீட்டல்கள் எதுவும் இல்லாமல், வெறும் கர்நாடக இசைக்க கச்சேரி மேடைகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை வயலின், ஒற்றை மிருதங்கம், கடம், கஞ்சீரா, மோர்சிங் ஆகியவற்றை மட்டுமே வைத்து அமைத்தால் ... சரியாக வருமா? க்ளைமாக்ஸ் சிறப்பாக அமையுமா?

அமையும். அந்தக்காட்சிக்கு இசை அமைப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனாக இருந்தால் ...

நூற்றுக்கு நூறு சிறப்பான ஒரு க்ளைமாக்ஸ் காட்சியை இயக்குனரால் கொடுக்க முடியும்.

இதற்கு மிகச்சரியான உதாரணம் 1975-இல் வெளிவந்த கே. பாலசந்தரின் "அபூர்வ ராகங்கள்".

முதல் முதலாக ஒரு பாடல் மூலம் உச்சகட்ட காட்சி அமைக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் "அபூர்வ ராகங்கள்" தான்.

அந்த வகையில் இந்தக் காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஒரு வசனகர்த்தாவின் வேலையை கவியரசரும் இயக்குனரின் பணியை மெல்லிசை மன்னரும் மேற்கொண்டதுதான்.

இவர்கள் இருவரும் இல்லை என்றால் இப்படி ஒரு பாடல் காட்சியை உச்சகட்ட காட்சியாக அமைக்கும் எண்ணம் இயக்குனருக்குத் தோன்றியே இருக்காது.

அந்த அளவுக்கு பாடலும் இசையும் காட்சியாக சங்கமித்த அற்புதம் இதுதான்.

பிரிந்து சேர்ந்த ஒரு தந்தையும் மகனும் மீண்டும் சந்திக்கிறார்கள்.

எப்படிப்பட்ட சூழ்நிலையில்..

தந்தை மறுமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணின் தாயை மனக்கவிருக்கும் மகனாக .. அதாவது தந்தைக்கு மகனே மாமனாராக, தாய்க்கு மகளே மாமியாராக..

இப்படி ஒரு சிக்கலின் ஆரம்பகர்த்தாவான மகன்தான் ஒரு தீர்வு சொல்லவேண்டிய இடத்தில் இருக்கிறான். அவன்தானே கேள்வியின் நாயகன்.

இதோ கவிஞர் வார்த்தைகளால் விளையாடுகிறார்.

பாடலின் பல்லவியிலேயே மெல்லிசை மன்னர் தர்பாரி கானடா ராகத்தை உச்சத்திலேற்றி தனது இசை விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்.

"கேள்வியின் நாயகனே. இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா" சட்டென்று மேலே ஏறி அதே வேகத்தில் கீழே இறங்கி.. ஒற்றை வயலினில் ஒரு ராக சஞ்சாரம்.

"இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை

எல்லோரும் பார்க்கின்றோம் நாமே எல்லோரும் ரசிக்கின்றோம்."

ஒரு இசைக்கச்சேரியில் பாடகியான அம்மா பாட, கீழே மகளும், மகனைப் பிரிந்த தந்தையும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, அவரது மகன் மேடையில் மிருதங்கம் வாசிக்க...

அவனுக்கு நிதரிசனத்தை உணர்த்தும் வண்ணம் மேடையில் பாடகி இசைக்கிறாள். அவளும் உணர்ச்சிக்கொந்தளிப்பில் தானே இருக்கிறாள்!

அந்தக் கொந்தளிப்பை இசையில் ஒற்றை வயலின், மிருதங்கம், கடம் ஆகியவற்றின் சேர்க்கையோடு மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதை எத்தனை லாவகமாக நமது மெல்லிசை மன்னர் செய்திருக்கிறார்!

"பசுவிடம் கன்று வந்து பாலருந்தும் - கன்று

பாலருந்தும் போதா காளை வரும்.

சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம்

சிந்தை செய்தால் உனக்கும் பிறக்கும் வெட்கம்.

தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா - வேலிக்கு

மேலொருவன் வேலி உண்டா.

கதை இப்படி அதன் முடிவெப்படி..

கதை இப்படி அதன் முடிவெப்படி...

மிருதங்கத்தை சிறப்பான தாளக் கட்டோடு முதல் சரணம் முடிய அதற்கு முத்தாய்ப்பாக வயலின் தர்பாரி கனடாவை ஒரு வீச்சு மூலம் பிரதிபலிக்க...

இசையின் துணையோடு ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும் திருப்புமுனைக் கட்டம்...

"தோம்..தோம்.." என்று மிருதங்கத்தின் தொப்பியிலிருந்து வரும் அதிர்வு .. காட்சியோடு சேர்ந்து நம்மையும் அதிர வைக்கிறது.

மேடைப்பாடகியை காதலித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கி விட்டு சென்ற காதலன் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது அந்த அரங்கின் கடைசியில் நின்று கொண்டிருக்கிறான். அங்கிருக்கும் ஒரு சிறுமியின் கையில் ஒரு சிறு காகிதத்தை கொடுத்து பாடகியிடம் அனுப்புகிறான்.

மேடையில் தனி ஆவர்த்தனம் களை கட்டி மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் ஆகியவற்றின் துரிதமான இசைக் கார்வைகள் விறுவிறுப்பை கூட்டி அடுத்தகணம் வயலினின் வீச்சுக்கேற்ப சர்வ லகுவுக்கு நகர்த்துகிறார் நமது மெல்லிசை மன்னர். பாடகி தன்னிடம் கொடுக்கப்பட்ட துண்டுச்சீட்டை நேயர் விருப்பப் பாடலைக் கேட்டு அனுப்பப்பட்ட சீட்டாக எண்ணி சாதாரணமாகப் பார்க்க - பரபரத்துப் போகிறாள். அவளது கண்கள் பாடிக்கொண்டே தனது தலைவனைத் தேடுகின்றன.

"தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான்.

மங்கை தர்மம் தரிசனத்தை தேடுகின்றாள் .. தேடுகின்றாள் ..

அலமேலு அவன் முகத்தைக் காண்பாளோ - நங்கை

அவனோடு திருமலைக்கு செல்வாளோ ..செல்வாளோ..

சரணத்தை முடித்து முத்தாய்ப்பாக கடைசி வரியில் பக்க வாத்தியங்கள் அடங்க...

உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருக்கும் அவள் பாட முடியாமல் திணற...

"கேள்வியின் நாயகனே .. இந்தக் கேள்விக்கு.. " மெல்லிய விசும்பலோடு அவள் தடுமாற , "தத்திங்கின்னத்தோம்ம்" என்று தாளவாத்தியங்கள் இடைவெளியை இட்டு நிரப்ப...

சமாளித்துக்கொண்டு மீண்டும் தொடர்கிறாள் அவள்.

""கேள்வியின் நாயகனே .. இந்தக் கேள்விக்கு.. ".. மேலே பாடமுடியாமல் பாடகி தவிக்க..."பதில் ஏதய்யா " என்று இன்னொரு குரல் எடுத்துக்கொடுக்க...

திரும்பிப்பார்த்தால்... பிரிந்து சென்ற மகள் மீண்டும் வந்து தாயினிடம் அமர்கிறாள்..

தாயும் மகளும் ஒன்று பிரிந்தவர் கூடினால்...பேச்சே எழாமல் சந்தோஷம், துக்கம், பரவசம் இன்னதுதான் என்று இனம் பிரித்துச் சொல்லமுடியாத தவிப்பும், உணர்ச்சிக்கொந்தளிப்பும் .. அனைத்தையுமே ஒற்றை வயலினில் வீச்சில் அற்புதமாகக் கொண்டுவந்து விடுகிறார் மெல்லிசை மன்னர். இதுவரை பவனி வந்த தர்பாரி கானடாவிலிருந்து சட்டென்று ராகத்தை மாற்றி விட உணர்ச்சிப்பெருக்கை "அமிர்தவர்ஷிணி" ராகத்தைக் கையாண்டு மழையாகப் பிரவகிக்க வைக்கிறார் மெல்லிசை மன்னர்.

கவிஞரின் வரிகளும் தாய் மகள் சம்பாஷணையாக வந்து விழுகின்றன.

இதுவரை இருந்த மென்னடை மாறி இப்போது துரிதகாலப் பிரயோகமாக இந்தச் சரணத்தை அமைத்து மகிழ்ச்சிப்பெருக்கை இடை வெளி இல்லாமல் வேகமாக பிரயோகங்களும் சங்கதிகளும் வருமாறு கையாண்டு இருக்கிறார் மெல்லிசை மன்னர்.

தாய்: ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் ..

மகள் : பார்த்துக்கொண்டால் ..

தாய்: அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?

மகள் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன.

தாய்: பேதம் மறைந்ததென்று கூறடி கண்ணே..

மகள் : நமது வேதம் தன்னை மறந்து நடக்கும் முன்னே.

தாய்: கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?

மகள்: உன்னைக் காணப் பிரிந்திருந்தேன் வேறே என்ன?

தாய்: உடல் எப்படி?

மகள்: முன்பு இருந்தாற்படி

தாய்: மனம் எப்படி?

மகள் : நீ விரும்பும்படி..

அமிர்தவர்ஷினியை உச்சத்தில் ஏற்றி சட்டென்று மீண்டும் பல்லவிக்கு வரும்போது தர்பாரி கானடாவை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறார் மெல்லிசை மன்னர்.

இப்போது ஒரு சிறுமாறுதலுடன் ...

"கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதிலேதம்மா

இல்லாத மேடை தன்னில் எழுதாத நாடகத்தை

எல்லோரும் பார்க்கின்றோம் நாமே எல்லோரும் ரசிக்கின்றோம்.

கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதிலேதம்மா..

இப்போது உச்சக்கட்டம் முடிவுக்கு வரும் நேரம். சாதாரணமாக ஒரு கர்நாடக இசைக்கச்சேரியின் முடிவில் பாடப்படும் ராகம் மத்யமாவதி. இந்த மேடை சம்ப்ரதாயம் மீறாத வண்ணம்.. இப்போது கடைசி சரணத்தை மத்யமாவதி ராகத்தைக் கையாண்டு அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இது பிரிந்த தந்தையையும் மகனையும் ஒன்று சேர்க்கும் சரணமாக கவிஞரின் கைவண்ணத்தில் மலர்கிறது..

"பழனி மலையில் வாழும் வேல் முருகா - சிவன்

பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா.

பிடிவாதம் தன்னை விட்டு விடு முருகா - வந்து

பிரியத்துடன் பக்கத்திரு முருகா.

திரு முருகா..திரு முருகா.."

என்று மத்யமாவதியை உச்சத்தில் ஏற்றிவைத்து உச்ச கட்டக் காட்சியை கச்சிதமாக முடித்துவைக்கிறார் மெல்லிசை மன்னர்.

வாணி ஜெயராம் - பி.எஸ். சசிரேகாவின் குரல்களில் வெளிப்படும் உணர்ச்சிகள் - பாடலுக்கு ஏற்றபடி காட்சி அமைப்புகள் .

இந்த இறுதிக்கட்ட காட்சியில் வென்றவர் இயக்குனர் கே. பாலசந்தரா - கவியரசரா - மெல்லிசை மன்னரா ? ஆண்டவனே வந்தாலும் தீர்ப்பு சொல்வது கடினம்.

மெல்லிசை மன்னரைக் கேட்டால் "நான் என்ன செய்தேன்? எல்லாம் அவங்க சிச்சுவேஷன் வச்சு அதுக்கு ஏத்தபடி பாட்டு கேட்டாங்க. நான் போட்டுக்கொடுத்தேன். அவ்வளவுதான்." என்று தான் சொல்வார்.

அதனால் தான் அவர் மெல்லிசை மன்னர்.

(ரசனை தொடரும்..)

https://www.youtube.com/watch…

 

Quote
Share: