1969தெய்வமே.. தெய்வ...
 
Notifications
Clear all

1969தெய்வமே.. தெய்வமே/தெய்வமகன்


kothai
(@kothai)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 73
Topic starter  

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள்.... 70

இதுவும் MSV.. யின் இசைக்குத் தக்கபடி ..நிதானித்து நேர்த்தியாக கவிஞர் புனைந்த .. பாடல்... ஆனால்....ஒரு வித்தியாசம்..

சொற்றொடர்கள் ..இசையுடன் கூட்டி பாடலாக நம் செவியில் ..
தனிப்பட்ட ராகங்கள் கிடையாது..

பாவங்கள் மட்டுமே விதம் விதமாக எதிரொலிக்கின்றன..
காரணம் சிவாஜியின் நடிப்புக் காட்சியமைப்பு..

இதுவே இசையின் வெற்றிக்கும் வழி வகுத்தது எனலாம்.

MSV.. இசை யுக்தி இங்கு திறம்பட அமைந்தது என்றால் ..பாடியவரும்...பண்பான தமிழில் சொற்களை வடித்துக் கொடுத்த கவியரசரும்..
இப்பாடலை நம் மனதில் ஆழமாகப் பதித்துவிட்டனர் என்றால் அது மிகையில்லை.

முகம் அறியாப் பருவத்திலேயே.. அழகற்ற முகத்திற்காக தந்தையால் தாயை விட்டும் பிரிந்து அனாதையென
வளர்ந்த ஒருவன் ..
ஆளாகி தனக்கும்...தாய்தந்தையர் உண்டு என அறிந்த பிறகு அடைந்த மகிழ்ச்சி... உண்மை யுணர்ந்து...
அவர்கள் அறியாமல் ..தம்பியையும் சேர்த்து ஒவ்வொருத்தரையும் ஒவ்வொருவராய். ..அவர்கள் வீட்டில்..சந்தித்து ...மனம் களியாட்டம் போட ..
வளர்த்தவரிடம்....களியாட்ட தாளங்களை ...பாடலில் ....தட்டி எழுப்பிக் காண்பிக்கும்..

அற்புதப் பாடல்...காட்சி அமைப்பு... தெய்வமகனில்...TMS.... குரல் தரும். உற்சாக. உருக்கம்..

'தெய்வமே.. தெய்வமே...
நன்றி சொல்வேன் தெய்வமே..
தேடினேன்... தேடினேன் ...
கண்டுகொண்டேன் அன்னையை..
தெய்வமே... ஓஓஓ ..
மஞ்சள் பொங்கும் மகாலட்சுமி
என் தாய்
சந்தித்தேன் ..நேரிலே...
பாசத்தின். தேரிலே..
அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்....!
தெய்வமே... தெய்வமே..

ஆமாம் ... இத்தகைய உணர்வுகளை நம் மனம் முதலில் தெய்வத்தைத் தானே விளித்து. ..உரைக்கும்...
பின்னரே மற்றவரிடம் சொல்லும்..
கொஞ்சம் கொஞ்சமாக...
மனதின் உருக்கமான பாசத்திற்கும் இடம் விட்டே வார்த்தைகள் அமர்கின்றன...

முதலில் தெய்வத்திற்கு நன்றி..
வாழ்நாளில் தேடிக் கொண்டிருந்த அன்னை .. எனும் தெய்வத்தைக் கண்டு கொள்ள வைத்ததற்கு...
அக்காட்சி அவனுக்கு பாசத்தின் தேராக..அதில் அவள் வீற்றிருப்பவளாக..!
மகாலட்சுமியாக தாயிருக்க... இவன் எப்படி அவளுக்கு பிள்ளை... ?
இவனே மருகுகிறான்...
இங்கு வசன நடையில் பாடல்..

அடுத்து அவனைப் போலவே தம்பி...அழகு கொஞ்சும் முகத்தில் .. யார் யார் என்று இவனைப்பார்த்து கேட்டவிதம் ..இவன் விலகி வந்தது..எல்லாம் விளையாட்டாக....

அப்படியும் ...அவன் தன்னை அண்ணா... என அழைக்கமாட்டானா. என்றொரு ஏக்கம் ..நெகிழ்வாய் இவன் மனதில்...
அவன் இவனை விரட்டிய விதம்..
குழந்தை நம் கையைக் கடித்து விடுதல் போல் உணர்கிறான்..

'முத்துப் போல என் தம்பி வந்தவுடன்
முத்தம் சிந்த ஓடினேன்.....
ஓடினேன்!...அடுத்தடுத்து ராஜா என் தம்பி வாடா...
அண்ணா எனச. சொல்வானெனப்
பக்கம் பக்கம் சென்றேன்...
குழந்தை என் கையைக் கடித்து விட்டது..
போடா...போ...
தெய்வமே...தெய்வமே..!'

இருந்தும். அவனுக்கு அன்னையின் உருவம் எழுகிறது ..எழுவது மறையவில்லை...
அவனது நெஞ்சத்திற்கு இதைவிட சந்தோஷம் என்ன வேண்டும்..?
ஆனால் ஆசை என்ற ஒன்று இருக்கிறதே!

"அன்னையைப் பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே !
இன்று நான் பிள்ளை போலே
மாறவேண்டும் கொஞ்சமே..'

அவனுக்கு ஒரு நேரமாவது பிள்ளையாக மாறி அவளிடம் செல்லமாட்டோமா...!
எண்ணம் வாட்டுகிறது. மனமோ ..வேறு மார்க்கத்தில் அவனுக்கு தெளிவு கொடுக்கிறது..

'வேரில்லாமல் மரமா ..?
மரமில்லாமல் கிளையா..?
கிளையில்லாமல் கனியா..?
எல்லாம் ஒன்று..

தெய்வமே ..தெய்வமே..

மரம் என்றால் வேர் உண்டு ..கிளையுண்டு.. அதில் கனியுண்டு..ஆக
எல்லாம் ஒன்றே. யானாலும்...வேரில்லாமல் எதுவுமில்லை.

தாயில்லாமல் இவன் இல்லை.

நம் மனதை உலுக்கும் வரிகள் அடுத்து..

'கண்ணீரில் உண்டாவதே பாசம் எனும் தோட்டம்

விதி எனும் நதி ஒருபக்கமாகவே ஓடுகிறது...
போடா ..போ...'

இவனுக்கு பாசம் உரிய முறையில் கிடைக்கவில்லை..
அவன் சிந்திய கண்ணீரிலே தான் பாச உணர்வுகளை வளர்த்துக் கொண்டுள்ளான்..

அதற்கு அர்த்தமே இன்றுதான் அவனுக்கு கிடைத்தது..

இனி அவன் சொல்வது..சுருதி குறைகிறது...
தன்னை விலக்கி வைத்த தந்தையையும் பார்த்துவிட்டான்....
பாசம் மேலிடவே செய்தது ..அதில் வெறுப்பில்லை.. ஓடும் நதி போன்று அவரது பாசம் ..ஒரு. பக்கமே ..இனனொரு மகன் மீது விழுந்தாலும் ..
இவனது கண்ணீர் போட்ட பாசத்தோட்டத்தின் முன்னே ..அது எடுபடவில்லை..

'தந்தையை பார்த்தபின் என்ன வேண்டும் தெய்வமே..
தர்மமே
தந்தை தாயைக் காக்க வேண்டும்
தெய்வமே ....ஹோ...ஹோ..."

தந்தையை பார்த்ததும் ... எல்லா ஆசையும் பூர்த்தியான ஒரு நிலை .இனி இந்த தர்மம் ...அவனது தாய் தந்தையரைக் காப்பாற்றினால் ...அதுவே இவனுக்குப் போதும்.....
பாசத்தில் துடித்த. மனம் களைத்துவிட
தன்னிலை திரும்புகிறான்...

"ஹோ ..ஹோ.."
தனக்கே அவன் சொல்லிக் கொள்ளும் ..
மனதைத் தாலாட்டும் சங்கதிகள்..

 

Sivaji trible act... Super.. a great note worthy in cine field . 

Kothaidhanabalan
https://youtu.be/kzqpT0JK6-g


Quote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
 

இந்த பாடலை நானும் இங்கு வழங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கட்டுரை தயாராக இருந்தும் இங்கு பதிவே செய்ய சற்று தாமதமாயிற்று. அதனால், எனது கட்டுரையை உங்கள் பதிவுக்கு பதிலாக சேர்க்கிறேன்.

பாடல் : தெய்வமே, தெய்வமே
படம் : தெய்வமகன்
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1969

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைக்கு நான் ஆராய எடுத்துக்கொண்ட பாடல் சற்று வித்தியாசமான சூழ்நிலையில் அமைந்த ஓர் பாடல். சொல்லப்போனால் இது போன்ற மிக மிக வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு பாடல்கள் அமைக்கக்கூடிய பாக்கியம் மன்னரை போல் வேறு யாருக்கும் அமையவில்லை என்றே சொல்லவேண்டும். காதல் பாடல்கள், தத்துவ பாடல்கள், சோக பாடல்கள் போன்றவைக்கு கதையோட்டம், காட்சி, பாடலின் வரிகளுக்கு ஏற்ப மெட்டமைப்பது சற்றே எளிது என்று சொல்லிவிடலாம் (அதற்கும் கற்பனை வளம், அபார திறமை, அள்ள அள்ள குன்றாத சரக்கு, இத்தியாதி தேவை என்பது வேறு விஷயம்). ஆனால் இது போன்ற மிகவும் வித்தியாசமான, கடினமான சூழ்நிலைக்கு மெட்டமைப்பது என்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல. அதற்க்கு சரக்கு, கற்பனை வளம், திறமை இவை எல்லாவற்றோடு மற்றுமொரு விஷயம் கூட வேண்டும் - அதாவது அந்த இசை அமைப்பாளருக்குள் ஓர் நடிகனும் ஒளிந்திருக்கவேண்டும். திரைப்படத்திற்கு பின்னணி இசை (re-recording) அமைக்கும் போது அங்கு காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, வசனங்கள் dubbing செய்யப்பட்டுள்ளன, அதனால் அதற்க்கு ஏற்ப இசைக்கோர்வை சேர்த்துவிடலாம். ஆனால், இங்கு அப்படி அல்லவே. யாரை வைத்து, எந்த சூழ்நிலையில், எப்படி காட்சி அமைக்கப்போகிறோம் என்பதை மட்டுமே இயக்குனர் இசை அமைப்பாளரிடம் / பாடலாசிரியரிடம் எடுத்துரைப்பார். அதற்க்கு ஏற்ப ஒன்று பாடல் வரிகள் எழுதப்படும், அல்லது ஓர் மெட்டு அமைக்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளுக்கு பெரும்பாலும் முதலில் பாடல் வரிகள் எழுதப்பட்டு அதற்க்கு பிறகு தான் மெட்டு அமைக்கப்படும் என்பது என் கணிப்பு. பாடல் ஆசிரியர் அவர் கற்பனையை கொட்டி வரிகளை எழுதி விடுவார். ஆனால் அதற்க்கு ஈடுகொடுத்து மெட்டமைப்பது அவ்வளவு எளிதல்ல. இங்கு இசை அமைப்பாளர் இந்த பாடலை பாடி நடிக்கக்கூடிய கதாபாத்திரமாகவே உருமாறி, அவர் அந்த சூழ்நிலையில் எப்படியெல்லாம் react செய்வார் என்று எண்ணிப்பார்த்து (மனதுக்குள்ளேயே நடித்துப்பார்த்து) அதற்க்கு மெட்டு அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது தான் மிகசிறந்த படைப்பு உருவாக்க முடியும். என் கணிப்பில் மன்னரும் இந்த பாடலுக்கு மெட்டமைக்கும் போது அப்படி அந்த கதாபாத்திரமாகவே உருமாறி, பிறகு தான் இந்த மெட்டை அமைத்திருப்பார் என்று தோன்றுகிறது. இந்த கூடுவிட்டு கூடு பாயும் விதை, நடிப்பு எல்லாம் அவருக்குள் சில வினாடிகளில் நடக்கக்கூடியவை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த படத்தின் கதை ஏறத்தாழ எல்லோரும் அறிந்ததுதான் என்றாலும், அதை அறியாதவர்களுக்காக பாடல் இடம்பெறும்வரையிலான கதை என்னவென்பதை விளக்குகிறேன்.

சிவாஜி ஓர் பெரிய செல்வந்தர், சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையில் இருப்பவர். அவருடைய மனைவி பண்டரிபாய். சிவாஜியின் முகம் விகாரமானது என்பதால் அவர் பொது இடத்துக்கு எங்கும் போவதில்லை, தனது அலுவலகத்திற்கு போகும் போது கூட யாரும் பார்க்காமல் தான் போவார், திரும்பி வருவார். அவருக்கு நேர் எதிர் பண்டரிபாய். தேவதை போன்ற அழகுக்கு சொந்தக்காரர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையும் தன்னை போலவே விகாரமாக பிறந்ததினால் அதை கொன்றுவிடுமாறு தனது டாக்டர் நண்பர் மேஜர் சுந்தர்ராஜனிடம் சொல்கிறார். முதலில் அதை மறுத்தாலும், பிறகு சிவாஜியின் வற்புறுத்தலுக்கு கட்டுப்பட்டு சரி என்று சொல்கிறார். ஆனால் அந்த குழந்தையை கொல்லாமல் அதை ஓர் அநாதை விடுதியில் (ஆசிரமம்) சேர்க்கிறார். ஆசிரமத்தை நடத்திவரும் நாகைய்யாவிடம் குழந்தையின் பெற்றோரைக்குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன் என்று சொல்லி விடைபெறுகிறார். பண்டரிபாயிடம் குழந்தை இறந்துவிட்டது என்று சிவாஜி சொல்கிறார்.

அநாதை விடுதியில் குழந்தை வளருகிறது. அதை நடத்திவரும் நாகையா அந்த குழந்தையை மிகவும் அன்போடும், பாசத்தோடும் வளர்க்கிறார். விகாரமான தோற்றத்தை கொண்ட அவனை அங்கு வளரும் மற்ற குழந்தைகள் எப்போதும் கேலி செய்கிறார்கள். அதை தாங்க முடியாமல் அவன் அவர்களோடு முரட்டு தனமாக சண்டை போடுகிறான். அவனுக்கு அப்போது யானை பலம் வந்துவிடுகிறது. அவனது இந்த முரட்டு தனத்தை கட்டுப்படுத்த நாகையா அவனுக்கு சங்கீதம் கற்றுக்கொடுக்கிறார். அவன் சிறந்த பாடகனாக, இசைக்கலைஞனாக வளர்க்கிறான் - சித்தார் வாசிப்பில் திகழ்கிறான்.

அங்கு சிவாஜி-பண்டரிபாய் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை அன்னையைப்போலவே அழகுப்பதுமையாக பிறக்கிறது. காலம் உருண்டோடுகிறது. இரண்டு குழந்தைகளும் வாலிபப்பருவம் அடைகின்றனர். மூத்த குழந்தை அன்பும், பண்பும் கொண்டவனாக வளர்கிறான் - கூடவே தான் விரூபியாக பிறந்துவிட்டோமே என்ற தாழ்ந்த மனப்பான்மை அவனுள் தொற்றிக்கொள்கிறது / வாட்டி வதைக்கிறது. இரண்டாவது மகன் ஊதாரியாக, பெண்கள் பின்னால் சுற்றும் பிளேபாய் ஆக வளர்கிறான்.

அரூபியான சிவாஜியை பராமரிக்கும் நாகையா இறந்து போகிறார். இறப்பதற்கு முன் அவரிடம் நீ அநாதை இல்லை, உன்னை ஈன்றவர்கள் யார் என்பது டாக்டர் ஒருவருக்கு தெரியும், உன் பெற்றோர்கள் உயிருடன் இருந்தால் உன்னால் அவர்களை டாக்டர் வாயிலாக சந்திக்க முடியும் என்று சொல்கிறார், டாக்டரின் விலாசத்தையும் கொடுக்கிறார். அதன்படி, சிவாஜி டாக்டர் வீட்டிற்கு வருகிறார். தன் தாய்-தந்தை யார் என கூறும்படி அவரிடம் கேட்க்கிறார். முதலில் மறுக்கும் டாக்டர் பிறகு சிவாஜி அவரை துன்புறுத்தி கேட்க்கும் போது சொல்கிறேன் என்று ஒத்துக்கொள்கிறார், அவனிடம் ஓர் சத்தியம் வாங்கிக்கொண்டு - அதாவது எந்த சூழ்நிலையிலும் சிவாஜி தான் அவர்களது மகன் என்று காட்டிக்கொள்ளக்கூடாது என்ற உறுதி மொழியுடன். மேலும், அவர்களை இப்போது சந்திக்கவேண்டாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் சொல்கிறார்.

ஆனால் சிவாஜி ஓர் நாள் பொறுக்க முடியாமல் டாக்டர் கண்ணில் மண்ணை தூவி தன் பெற்றோர்களையும், உடன்பிறப்பையும் சந்தித்து வருகிறார். அப்படி சந்தித்து டாக்டர் வீட்டிற்கு திரும்பியதும் சந்தோஷக்களிப்பில் பாடும் பாடல் தான் இந்த பாடல்.

ஆரம்பத்தில் கூறியபடி மன்னர் அந்த கேரக்டர் ஆகவே மாறி சிந்தித்துப்பார்த்திருப்பார் - எல்லாம் சில வினாடிகள் தான். தன் பெற்றோர்களையும், தம்பியையும் சந்தித்த பூரிப்பில் அவன் எப்படியெல்லாம் ரியாக்ட் பண்ணுவான் - அவன் பார்ப்பதற்கு முரடன், ஆனால் மென்மையான மனம் படைத்தவன். முதலில் வெறித்தனமாக / காட்டுத்தனமாக சிரிப்பான். பிறகு தன் பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு அமைத்து தந்த அந்த மனிதருக்கு நன்றி சொல்வான் - உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருப்பதால் முதலில் அவனால் பாட இயலாது - வசனம் சொல்வது போல் தான் சொல்வான். பிறகு மீண்டும் உணர்ச்சிகளை / சந்தோஷத்தை கட்டுப்படுத்தமுடியாமல் ஓடுவான், தாவுவான், குதிப்பான். பிறகு பாட ஆரம்பிப்பான். அப்படி பாடுவது அவன் அந்த வீட்டில் எந்த order-றில் ஒவ்வொருவரையும் சந்தித்தான் என்ற வரிசையில் தான் அமையும் - அவன் முதலில் சந்திப்பது ஈன்றெடுத்த தன் அன்னையை. பிறகு அழகு தம்பியை. அதன் பிறகு தந்தையை. கடைசியாக எல்லோரையும் ஒன்றுசேர. முதலில் தேவதையை போல் காட்சியளிக்கும் தன் அன்னையைப்பற்றி கூறுவான் - அப்போது அவளது அழகையும், தன் அரூபத்தையும் ஒப்பிட்டு காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவான். பிறகு தம்பியைப்பற்றி கூறுவான். அப்போது மீண்டும் உணர்ச்சிவசப்படுவான் - காரணம் அவனால் தம்பியை அணுகவோ, பாசம் காட்டவோ முடியாதே நிலை. மேலும், அவனை கண்டதும் தம்பி பயப்படவும் செய்கிறான் மற்றும் திருடன் என நினைத்து அவனை அடிக்கவும் செய்கிறான். ஆனால் அது அவனுக்கு வலிக்கவில்லை, மறித்து குழந்தையின் அடி போல் தோன்றுகிறது. பிறகு மீண்டும் தன் தாயைப்பற்றி நினைப்பான் - தான் மீண்டும் குழந்தையாகி மாறி அவள் தன்னை கொஞ்சமாட்டாளா என அவன் மனம் எங்கும் / துடிக்கும். பிறகு அந்த குடும்பத்துடன் தானும் இணைய மாட்டோமா என அவன் மனம் எங்கும். கடைசியில் தந்தையைப்பற்றி நினைப்பான் - தன்னை அனாதையாக்கியவன் என்றாலும் அவரும் குடும்பவும் நன்றாக வாழவேண்டும் என இறைவனிடம் வேண்டுவான். இவை அத்தனையும் மன்னர் மனதில் மின்னல் வேகத்தில் மறைந்திருக்கக்கூடும். அதை அப்படியே இசைப்படுத்தி பாடலாக வடிவமைத்திருப்பார் – with variable emotions. அவை தான் எத்தனை - காட்டுமிராண்டி தானம், மிகுதியான சந்தோசம், நன்றியுணர்ச்சி, கட்டுப்படுத்த முடியாத சோகம், பாசம், அன்பு, சாகசம், காழ்ப்புணர்வு, forgiving, என எத்தனை விதமான உணர்ச்சிகள்.

பாடல் காட்சியின் ஆரம்பத்தில் மேஜர் சிவாஜியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார். அப்போது அதற்குரிய இசை – which conveys his anxiety. பிறகு சிவாஜி சிரித்துக்கொண்டே உள்ளே வருகிறார். அதைக்கண்டு அவர் மனம் அச்சமடைகிறது - அவரது confused mind -டை சுட்டிக்காட்டுகிறது அப்போது ஒலிக்கும் fluttering Flute. பிறகு சிவாஜி பாட ஆரம்பிக்கிறார் - வாத்தியக்கருவிகளின் support இல்லாமல் வசனம் சொல்வது போல். இங்கு ஒவ்வொரு வார்த்தை சொல்லி முடித்த பிறகு சற்று இடைவெளி விட்டு interludes அமைந்துள்ளது – Violins மற்றும் பெல்ஸ் சேர்ந்து. Violins pizzicato பாணியில் வாசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு piece-ஸின் முடிவிலும் கிட்டார் chord வாசிக்கப்பட்டுள்ளது. இங்கு பெல்ஸ் ஏன் சேர்க்கப்பட்டுள்ளது என யோசிக்கக்கூடும் - ஏனெனின் அவனது மனம் இப்போது சிறு குழந்தையைப்போல உள்ளது என்பது காண்பிக்க. பிறகு ஒரு lengthy interlude - வயலின்ஸ் சுழல்வது போல் ஒலிக்க, அதனோடு சேர்ந்து பெல்ஸ், trumpet, trombone இவைகளும் சேர்ந்து ஒலிக்கின்றன – எல்லாமே off-beat-டில். பிறகு ரிதம் ஆரம்பிக்கிறது - தபலா, brush டிரம்ஸ் மற்றும் Beaded Maracas -ஸில் - மூன்றும் ஒன்றுக்கொன்று contrast ஆக வாசிக்கப்பட்டுள்ளது – அதாவது off-beat-டில். ஏன் இத்தனை off-beats - காரணம் அவனது பலவேறு விதமான உணர்ச்சிகள் மற்றும் செய்கைகள். This has been conveyed musically thru off-beats.

BGM- ம்மில் வாசிக்கப்பட்டுள்ள வயலின் runs, trumpet, trombone, Guitar pieces, Accordion, fluttering Flute, எல்லாமே அவனது வேறுவேறு emotions-ஸை பிரதிபலிக்கிறது / conveys the thrilling acts performed by him.

மன்னர் + சிவாஜி + TMS + கண்ணதாசன் இவர்களின் ஒரு போட்டியே நடந்துள்ளது இந்த பாடலில். யாருக்கும் யாரும் சளைத்தவரல்ல என நிரூபித்துள்ளனர் இவர்கள். இருந்த போதிலும் சற்று கூடுதல் பாராட்டுக்குரியவர் மன்னர் என்பது என் கருத்து - ஏன் / எதற்கு என்று அனைவரும் யோசிக்கக்கூடும். காரணத்தை ஆரம்பத்திலேயே கூறியுள்ளேன். அதாவது, படத்துக்கு பின்னணி இசை சேர்ப்பது சற்று ஈஸியான விஷயம் (அது திறமை படைத்தவர்களுக்கு என்பது வேறு விஷயம்). ஆனால் இது போன்ற வித்தியாசமான பாடல் காட்சிக்கு பாடல் அமைப்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல. ஏனென்றால், இங்கு அந்த காட்சி ஏற்கனவே படமாக்கப்படாதவை, சம்பந்தப்பட்டவர்கள் இசை அமைப்பாளரிடம் இந்த பாடலை எப்படி படமாக்கவுள்ளோம் என்று ஓர் outline போல தான் விளக்குவார்கள். அதை மனதில் வாங்கிக்கொண்டு, தன் கற்பனையில் அந்த காட்சி எப்படி இருக்கும் என்று நினைத்து, மனதிலேயே அந்த கதாபாத்திரமாகவும், மற்ற கதாபாத்திரங்களாகவும் உருமாறி நடித்து அதற்க்கு ஏற்றாற்போல் பாடலை வடிவமைக்கவேண்டும். அப்படி உருவானதை தான் பிறகு படமாக்குவார்கள். ஆகவே, இல்லாத ஒன்றை நினைத்து அற்புதமாக படைத்ததினால் தான் மன்னருக்கு கூடுதல் பாராட்டுக்கள் கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.

Lyrics-சை கவனித்தீர்களானால் அதை arrange பண்ணியிருக்கும் order-றில் ஓர் வித்தியாசத்தை உணர முடியும். அதாவது பல்லவியில் அன்னையைப்பற்றி சொல்கிறான், பிறகு முதல் சரணத்தில் தம்பியைப்பற்றி சொல்கிறான். அடுத்த சரணத்தில் மறுபடியும் அன்னையைப்பற்றி சொல்லவேண்டும். சரியான order படி போயிருந்தால் அடுத்தது தந்தையைப்பற்றியல்லவா சொல்லவேண்டும்? ஆனால் அதை அங்கும் சொல்லவில்லை, அடுத்து வரும் சரணத்திலும் சொல்லவில்லை - அங்கு அந்த குடும்பத்தைப்பற்றி சொல்லி கடைசியில் தான் தந்தையைப்பற்றி சொல்கிறான். காரணம் இந்த பாடலுக்கு முன் நிகழும் சம்பவம் தான். அந்த வீட்டிற்குள் போனதும் முதலில் உறங்கிக்கிகொண்டிருக்கும் அன்னையை பார்க்கிறான், பிறகு தம்பியை பார்த்து அவனுடன் மோதல், அங்கிருந்து ஓடும் போது இரண்டாவது மகனின் பேரை சொல்லி அலறியடித்துக்கொண்டு ஓடி வரும் அன்னையை மீண்டும் பார்க்கிறான். பிறகு அவள் பக்கத்தில் நிற்கும் தந்தையை பார்க்கிறான். இதை வரிசைப்படுத்தி தான் இந்த பாடலை எழுதியுள்ளார் கவிஞர். அதனால் தான் முதலில் அன்னையை குறித்து சொல்கிறான், பிறகு தம்பியைப்பற்றி சொல்கிறான். இரண்டாவது முறை அன்னையை சந்தித்ததினால் அதன் பிறகு அன்னையைப்பற்றி மீண்டும் சொல்கிறான். அவள் மகன் மீது காட்டும் அன்பை கண்டதினால் அடுத்து வரும் சரணத்தில் அந்த குடும்பத்தைப்பற்றி சொல்கிறான். கடைசியாக தந்தையை சந்தித்ததால் கடைசி சரணத்தில் தந்தையைப்பற்றி சொல்கிறான். இரண்டு முறை தந்தை தன் உயிரை பறிக்க நினைத்தும் அவரை வாழ்த்துகிறேன் என்கிறான் - காரணம் அவனுக்கு அவர் மீது வெறுப்பில்லை என்பதால். இதிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால், இயக்குனர் கவிஞரிடம் கதையை விரிவாக எடுத்துரைத்துள்ளார் என்றும், கவிஞர் அதை நன்கு புரிந்துகொண்ட பாடல் எழுதியுள்ளார் என்றும். இதனால் தான் நான் அடிக்கடி சொல்கிறேன் - மன்னரின் பெரும்பாலான பாடல்களை (if not all) முழுவதுமாக உணரவேண்டும் / ரசிக்க வேண்டும் என்றால் கதை, கதாபாத்திரங்கள், பாடல் இடம்பெறும் இடம், காட்சி, என அத்தனை விஷயங்களையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.


ReplyQuote
kothai
(@kothai)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 73
Topic starter  

@k-t-ramanan//அதாவது அந்த இசை அமைப்பாளருக்குள் ஓர் நடிகனும் ஒளிந்திருக்கவேண்டும். //.  True . Otherwise  he might not have given us such a music ofcourse along with Kaviyarasu and TMS. Your details in music along with this post  makes me feel really I am gifted . For I am not so expressive in composing attitude but be selective  in admiring everlasting music . Thank you Sir .


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
 

ஆம் மேடம், ஒரு சிறந்த இசைப்பாளருக்குள் ஒரு நடிகரும் ஒளிந்திருக்கவேண்டும், அப்போது தான் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போன்ற பாடல்கள் உருவாக்க முடியும்.


ReplyQuote
Share: