தென்றலாக ஒரு பாடல் ...
 
Notifications

தென்றலாக ஒரு பாடல் - கண்ணே பாப்பா - 1969  

  RSS

P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 1 year ago
Posts: 37
28/04/2019 1:52 pm  

வசனமே இல்லாமல் பாடல் மூலமாகவே கதையை நகர்த்துவது என்பது ஒரு திரை உத்தி. இந்த வகையான பாடலை “சிச்சுவேஷனல் சாங்” (SITUATIONAL SONG) என்று சொல்வார்கள்.

இந்த வகையான உத்தியில் பாடலாசிரியர், இசை அமைப்பாளர் ஆகிய இருவரின் பங்கு இருக்கிறதே அது மிகவும் சவாலான ஒன்று.

இதோ இப்படி ஒரு காட்சி அமைப்பு::

தலைவன் ஒருவன் மேற்கொண்ட வசிய நடவடிக்கைகளால் காலை அரும்பிய அந்தக் காதல் இரவில் யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் சந்தித்து உறவில் கலக்கும் வரை கொண்டுபோய் விட்டுவிட்டது. தன் ஆசை தீர்ந்ததும் அவளை விட்டு விட்டு பிரிந்து ஊரைவிட்டே போய்விட்டான் அவன். நம்பி அவனிடம் தன்னை கொடுத்ததன் விளைவு ஒரு குழந்தைக்கும் தாயாகி பெருத்த அவமானத்தை சுமந்து வாழும் அவல நிலை அவளுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஒரு நாள் ...

கடந்த காலத்தை அவனைக் கண்டு தன் மனதையும் பெண்மையையும் பறிகொடுத்த நிகழ்வுகளை அசை போடுகிறாள் அவள்.

இப்போது அவமானத்தால் தலை குனிந்து நிற்கும் அவள் கடந்த காலத்தில் என்னவென்ன உணர்வுகளால் தலை குனிந்தாள் என்று என்னிப்பார்க்கிறாள் அவள்.

வெட்கத்தால், நாணத்தால், அச்சத்தால் - என்று அவள் தலை குனிந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்த வேண்டும்.

இப்படிக் கதையின் போக்கு இருந்தால் அதற்கு எத்தனை காட்சிகள் தேவைப்படும்?

குறைந்தது ஒரு நான்கு ஐந்து காட்சிகளாவது - பதினைந்து பக்க வசனங்களாவது - தேவைப்படும். திரையில் ஒரு இருபது நிமிடக் காட்சியாகக் காட்டியாக வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மூன்று சுருள்களாவது தேவைப்படும்.

ஆனால் இதையே வெறும் மூன்று நிமிடம் ஐம்பத்து நான்கு நொடிகள் மட்டுமே இடம் பெறக்கூடிய ஒரு பாடல் காட்சியாக - வெறும் பாடலாக மட்டுமே கேட்டாலும் காட்சி அமைப்பு கேட்பவர் கற்பனையில் ஓடக்கூடிய வண்ணத்தில் அமைப்பது என்பது பாடலாசிரியர் இசையமைப்பாளர் ஆகிய இருவரைப் பொறுத்தவரையில் அமைப்பது என்பது பாடலாசிரியர் இசையமைப்பாளர் ஆகிய இருவரைப் பொறுத்தவரையில் கம்பிமேல் நடக்கும் லாவகத்துடன் செயல்பட வேண்டிய ஒன்று.

ஏனென்றால் இருவரில் யார் சொதப்பினாலும் காட்சி அமைப்பே எடுபடாமல் போய்விடும்.

சவாலான இந்தக் காட்சி அமைப்புக்குப் பொருத்தமான பாடல் வரிகளைக் கவியரசு கண்ணதாசன் அவர்கள் அற்புதமாக உருவாக்க கவிஞர் தரும் உணர்வுகளை தனது மெல்லிசையின் மூலமாக நம் மனத்திலும் ஊடுபாவாக படரவிடுகிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள்.

இசை அரசி பி. சுசீலா அவர்களின் குளுமைக் குரல் அந்த உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.

காட்சி அமைப்பாக விரியும் பாடலுக்கு அற்புத நடிப்பால் புன்னகை அரசி திருமதி. கே. ஆர். விஜயா அவர்களும் நவரசத் திலகம் திரு..ஆர். முத்துராமன் அவர்களும் உயிரூட்டி இருக்கின்றனர்.

1969-இல் வெளிவந்த "கண்ணே பாப்பா" என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த பாடலையும், அதன் அதன் இசை நயங்களையும் சற்று விரிவாகவே பார்க்கலாமா?

******

காட்சி - 1 : வெட்கம்.

தேனருவி மலை மீதிருந்து பொழிந்துகொண்டிருக்கிறது. காலை நேரம்.

மங்கை அவள் அதில் ஆசை பொங்க நீராடி தன் அங்கங்களை நனைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த வேளையில் பார்த்தும் பாராதது போல அவளது உடல் வனப்பை யாரோ ஒரு அந்நிய ஆடவன் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதை அவள் தற்செயலாக கவனித்துவிட்டாள். அறிமுகமே இல்லாத ஒருவன் தன்னை ஒரு அசந்தர்ப்பமான சூழலில் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டதும் அவளுக்கு நேரம் மறந்துவிட்டது. தலை குனிந்தாள் அவள். அது முதல் தலை குனிவு.. வெட்கத்தால்.

"தென்றலில் ஆடை பின்ன தேனருவி மேனி மின்ன -

அன்று நான் குற்றாலத்தில் ஆசையாய்க் குளித்திருந்தேன்.

அங்கங்கள் நனைத்திருந்தேன்.

பாவாடை சரசரக்க மேலாடை பாய்விரிக்க பாராமல்

விழி இரண்டு பார்ப்பதை நானறிந்தேன்.

நேரத்தை நான் மறந்தேன் வெட்கத்தில் தலை குனிந்தேன்.”

*******************************************************************************

காட்சி - 2 : நாணம்.

அந்தி மயங்கும் மாலை நேரம். ஆணைமுகக் கடவுளின் கோவிலில் அந்தக் கன்னி சந்நிதியை வலம் வந்துகொண்டிருக்கிறாள். அந்த சமயத்தில் காலையில் அவளை பார்த்த அதே கண்கள் தன்னை இப்போதும் பார்த்துக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். ஆம்.. அவனேதான். காலையில் அவளைப் பார்த்த அதே ஆடவன்தான் ! இப்போது அவன் முற்றிலும் புதியவன் அல்லவே?. காலையில் பார்த்த அறிமுகமானவன் அல்லவா?. பேசவில்லை என்பதை தவிர இந்த இரண்டாவது சந்திப்பில் அவன் அறிமுகமானவன் தானே? முதலில் முற்றிலும் புதியவனாக இருந்தபோது அவளை வெட்கம் ஆக்கிரமித்து தலை குனிய வைத்தது. இப்போது அறிமுகமான பிறகோ நாணம் தலை குனிய வைக்கிறது. ஆம்..அறியாத போது வருவது வெட்கம். அறிந்த பிறகு வருவது நாணம்.

ஆகவே இப்போது அவள் நாணத்தால் தலை குனிந்தாள் என்கிறார் கவிஞர்.

"ஆனைமுகன் கோவிலிலே அந்திபடும் வேளையிலே

கன்னி வலம் சுற்றிவந்தேன் கண்ணிரண்டை அங்கும் கண்டேன்.

நேரத்தை நான் மறந்தேன் நாணத்தில் தலை குனிந்தேன்.

***************************************************************************

காட்சி - 3 : அச்சம்.

கடைவீதியில் ஒரு வளையல் கடை. அந்தக் வளையல் கடைக்கு வந்து பிடித்தமான வண்ணத்தில் ஒரு செட் கண்ணாடி வளையல்களை தனக்கு பொருந்துகிறதா என்று பார்க்க கையோடு எடுத்தாள் அந்தக் காரிகை. வளையல்களை அவள் எடுத்த அதே நேரம் அவளது கரத்தை "அந்த" வாலிபன் அங்கு வந்து துணிச்சலாகப் பற்றி விட்டான். அதிர்ந்து சிலிர்த்தாள் அவள். "இப்படி துணிச்சலாக பலரும் கூடும் ஒரு பொது இடத்தில் வைத்து தன் கையைப் பற்றிவிட்டானே. யாராவது பார்த்துவிட்டால் என்ன ஆவது?" என்ற அச்சம் ஆக்கிரமித்தது. அந்த அச்சத்தால் தலை குனிந்தாள் அவள்.

"கண்ணாடி வளையல்களை கையோடு நான் எடுத்தேன்.

என்னோடு கையிரண்டு இணைவதை நானும் கண்டேன்.

அம்மம்மா உடல் சிலிர்த்தேன்.. அச்சத்தால் தலை குனிந்தேன்.”

*******************************************************************************************

காட்சி - 4 - காதல்.

மலைக்கோவிலின் மேல் படியில் இருந்து இருகைகளிலும் அள்ளிய மலர்களோடு மேலிருந்து கீழே இறங்கி வந்துகொண்டிருக்கிறாள் அவள். அவள் கைகளில் இருந்து நழுவி மலர்கள் கீழே போய்க் கொண்டிருந்தன. அவை சென்று சேர்ந்த இடமோ இரு கால்கள். தன் கை மலர்கள் விழுந்து மூடிய கால்களைக் கண்டதும் தலை நிமிர்ந்து அந்தக் கால்களுக்கு சொந்தக்காரன் யாரென்று பார்த்தாள் அவள். அவனேதான்.

வெட்கத்தால், நாணத்தால், அச்சத்தால் - அவளை தலை குனிய வைத்தானே அந்த "அவனே"தான் இவன். கால் பார்த்து நிமிர்ந்த அவள் தலை அவன் கண் பார்த்ததும் தலை குனிகிறது.

இப்போது இன்னதென்று இனம் பிரித்து சொல்லமுடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவள் மனம் சிக்கித் தவிக்கிறது. அதனால் "கால் பார்த்து நிமிர்ந்த தலை கண்பார்த்து குனிவதாக" கண்ணதாசன் எழுதுகிறார். காதல் வயப்பட்ட மனதில் தனது ஆசைக்குரிய நாயகனைப் பார்த்ததும் எழும் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது அல்லவா? அதனால் தான் இப்படி.

பாடல் வரிகள் இதோ:

"கை நிறையப் பூவெடுத்து காற்றுப்போல் நடந்துவந்தேன்.

கை நழுவிப் பூவிழுந்து கால் தேடிப்போகக் கண்டேன்.

கால் பார்த்து தலை நிமிர்ந்தேன் கண்பார்த்து தலை குனிந்தேன்.”

***

காட்சி 5 - கலத்தல்.

இரவு நேரம். அங்கு அவளும், அவனும் தனித்திருக்கின்றனர். அவள் முகத்தில் வந்து மோதிய அவன் முகத்தோடு தன் முகத்தை இணைத்துக்கொள்கிறாள் அவள். இப்போது அவள் நேரத்தை மட்டும் அல்ல. தன் தேகத்தையே மறந்துவிட்டாள். அவனை அவள் மனதார தன் மணாளனாக வரித்துவிட்டாள். மங்கைக்கு மணாளன் தானே தெய்வம்! அவன் மீது அவள் வைத்திருந்த காதல் தந்த நம்பிக்கை அவனை மாலையிடாமலே மணாளனாக்கி விட்டது. ஆகவே அவனுடன் இணைந்ததை சொல்லும்போது "தெய்வத்துள் நான் இணைந்தேன்" என்று சொல்வதாக வரிகளை அமைத்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

இதோ அவரது வைர வரிகள்:

"மேகம் மறைத்த நிலா விளக்கொளி ஏதுமில்லை.

மோதும் திருமுகத்தில் முகத்தில் முகம் இணைந்தேன்

தேகம் மறந்துவிட்டேன் தெய்வத்துள் நான் இணைந்தேன்.”

*************************************************************************

இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணத்துக்கும் இணைப்பிசையை முன்னதற்கு மாறாக வித்தியாசமாக நெஞ்சம் அள்ளும் வண்ணம் அமைத்ததோடு சரணத்துக்கு இசை அமைக்கும் போது ஒரு நுட்பமான அழகையும் புகுத்தி இருக்கிறார் எம்.எஸ். வி.

பாடல் ஆரம்பிக்கும் முன் வரும் முகப்பிசையாக சித்தார் குற்றால அருவிச் சாரலாக மனதை நிறைக்கிறது. ஒவ்வொரு சரணத்தின் ஆரம்பத்திலும் ஒவ்வொரு இசைக் கருவியை மெல்லிசை மன்னர் பயன்படுத்தி இருக்கும் அழகே மனதை அள்ளுகிறது. முதல் சரணத்துக்கு சித்தார்.

இரண்டாவது சரணத்தில் ஷெனாய் ஆலயச் சூழலுக்கு கட்டியம் கூற, சித்தாரும், வயலினும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வரும் லாவகம் மனதை நிறைக்கிறது.

மூன்றாம் முகப்பிசையை சாக்ஸபோன் ஆரம்பித்துவைக்க வயலின் தனது வீச்சால் முடித்து வைக்கிறது.

நான்காம் சரணத்தின் முன்னால் வரும் வயலின் வீச்சு அந்த கட் ஷார்ட்டிற்கு முன்னாலேயே தொடங்கி விடுகிறது. அடுத்த காட்சியின் துவக்கத்தில் வரும் குழலிசை சரணத்தின் முன்னணிக்கு வந்து விடுகிறது.

இறுதிச் சரணத்துக்கு முன்னால் புல்லாங்குழல், மற்றும் வயலின் என்று மெல்லிசை மன்னரின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது.

கொஞ்சம் உற்றுக் கவனித்தால் இணைப்பிசைகளில் தாள வாத்தியங்கள் எதையுமே பயன்படுத்தி இராதது தெரியும்.

"கை நிறைய பூவெடுத்து காற்றுப்போல் நடந்து வந்தேன்" என்று துவங்கும் சரண வரிகளுக்கு இசையமைக்கும் போது ஒரு நுட்பமான அழகை கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் எம்.எஸ்.வி.

உயரமான இடத்தில் காற்று வீசும்போது நாம் குரல் எழுப்பினால் எதிர்க் காற்றோடு மோதி எதிரொலி கேட்கும் அல்லவா? இந்த வரிகளை பி. சுசீலா பாடும்போது அந்த எதிரொலி (echo ) எபக்ட் கேட்கும்வண்ணம் பாடவைத்து இசை அமைத்து இருக்கிறார் எம்.எஸ்.வி.

அதே சரணத்தின் அடுத்த வரிகளான

"கைநழுவிப் பூவிழுந்து ..| என்ற வரிகள் வரும்போது அந்த எதிரொலி எபெக்ட் இருக்காது.

ஏனென்றால் இப்போது கீழே இறங்கிவிட்டதால் சமதளத்துக்கு வந்துவிட்டதால் எதிரொலி ஏற்படாதல்லவா? அதனால் இரண்டாவது வரியில் அதை தவிர்த்துவிட்டிருக்கிறார்.

காட்சி அமைப்பை மட்டும் அல்ல, அது சம்பந்தமான ஒரு சிறு நுணுக்கமான விஷயத்தைக்கூட எப்படி கவனமாகக் கையாண்டு இசையமைத்திருக்கிறார் !

அதனால் தானே அவர் மெல்லிசை மன்னர்!

இப்படி கவிநயமும், இசை அமைப்பும் , காட்சி அமைப்பும் போட்டிபோட்டுக்கொண்டு அமைந்திருக்கும் இந்த கானத்தைப் பற்றி நான் சொல்லி இருப்பவை எந்த அளவுக்கு உண்மை?

இதோ பாடலுக்கான இணைப்பை தருகிறேன்..

http://www.youtube.com/watch?v=bfYrYPTGkkg

நீங்களே பாடலைக் காட்சியோடு கண்டு கேட்டுவிட்டு சொல்லுங்கள் நண்பர்களே.

*****************

அடுத்தது ஒரு உச்ச காட்சியை இயக்குனர் பாடல் வடிவில் அமைக்க வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா,மோர்சிங் ஆகிய ஐந்தே ஐந்து வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்தி ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கு மெல்லிசை மன்னர் கொண்டு வந்த பாடலோடு,.

மீண்டும் வருகிறேன்.

 

Quote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 9 months ago
Posts: 68
30/09/2019 5:05 pm  

Excellent analysis.  Hearty congratulations sir 🌺 


ReplyQuote
Share: