#சாந்தி நிலையம்
சுசீலாம்மா பாடல் ...1.
சுசீலாம்மாவிற்குத் தனிப்பட்ட முறையில் மூன்று பாடல்கள் முத்துக்கள் பிரகாசிப்பது போல் உள்ளன . நல்ல கருத்துக்களோடு மழலைகள் உணரும் விதத்தில் தத்துவப் பொருளுமாய் ...அவை எம் எஸ் வி அவர்கள் இசையில் தேனாகப் பாய்வன .
இதுபற்றி கவிஞர் மகன் அண்ணாதுரையார் பதிவு பார்த்தேன் ,ஒரு நுணுக்கம் கண்டேன் . சிறுவர் சிறுமியருக்கு ஆசிரியையாக காஞ்சனா அந்த வீட்டில் நுழைகிறார் . அவர்களுக்குப் பாடங்கள் நடத்துவது, கவனித்துக் கொள்வதுபோன்று வெவேறு சமயங்களில் பாடல்கள் எழுதவேண்டும் . அதை வெவேறு மனநிலையில் கவிஞர் வடித்துக் கொடுத்திருப்பார் .
முதலில் பிள்ளைகட்கு இறைபக்தியை அந்த வயதினர் உணரும் வகையில் அற்புதமாக எழுதி , அது சுசீலாம்மாவின் குரலில் ஒலிக்கும் பொது கேட்கும் அனைவர்க்கும் மனதில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது .
சமீப காலத்தில் மெகா தொலைக் காட்சியில் மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்களின் இசைத்தொடர் , பேட்டிகாணலுடன் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து கவனித்தவளுள் நானும் ஒருத்தி. பின்னணியில் இப்பாடல்தான் ஆரம்பத்தில் ஒலிக்கும் . அது சமயம் நானும் இதுபோன்ற பாடல் விமரிசன ங்கள் வைக்கும் பழக்கத்தில் இல்லை . நினைவு கூர்ந்து பார்க்கையில் ...என்னை அறியாமலே என்மனம் இதுபோன்ற பாடல்களில் குறிப்பாக சுசீலாம்மாவின் அறிமுகத்தோடு ரசனைப் பயணம் மேற்கொண்டிருந்ததை உணர்கிறேன் .
"இறைவன் இறைவன் இறைவன்
வருவான் வருவான் வருவான்...' இப்படி தொகையறா போன்று பின்னணியில் ஒலிக்கும் .
ஆஹா ஆஹா ஆஹா...என்று ஒரு குதூகலமனத் தோடு ,ஆனால் மென்மையான அடக்கத்தோடு
"இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்' ...ஆசிரியை பல்லவி எடுத்துக் கொடுக்க , பிள்ளைகள் தொடர்ந்து அதைப் பாடுவார். இயற்கையின் பின்னணியில் படப்பிடிப்பு .
"இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெரும் கருணை''
...இறை சிந்தையை ஊட்டும் ஆசிரியை ...இயற்கையில் அவனை அறியும் விதத்தில் பாடமாகச் சொல்லிப் பாடிச் செல்கிறாள் .
" வண்ண வண்ணப் பூவில்
காயை வைத்தவன்
சிற்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்'...அடுத்து அவன் அதிகம் நம்முள் எப்படி ஊடுருவியுள்ளான் என்று அழகாக கவிஞர் ஊட்டிவிடும் வரிகள்,
"சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்'
பேசுவது என்ன ? பிள்ளைகள் எப்படி அதைப் பேசுகின்றனர் . பாடல் வடிவாய் ...
"அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு'
இறைப்பற்றோடு நாட்டுப்பற்று அதனுள் அடக்கமாக வீட்டுப் பற்று ...என்று பெரிய சங்கதிகளையே பிஞ்சு மனதில் உணர்த்தி விடும் அழகு , சுசீலாம்மாவின் கனிந்த குரலில் இருப்பதை நாம் அறியலாம் .
"இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்'
அவன் காட்டும் வழியில் தானே நம் சிந்தனைகளும் ...
"உள்ளம் என்னும் கோயிலை
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை
காண சொன்னான்
நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான்..'...
ஆசிரியையாக உணர்ந்து சொல்லியாச்சு ... இனி மழலைகளுக்கு எப்படிச் சொல்ல ....?
"கண்கள் அவனை காண
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க'
இதற்குமேலும் ஒரு கவிஞரால் மனத்தால் அழகாக உணர்த்த முடியாது . அம்மாவின் குரலில் பாடலும் தெய்வீகப் பாடலாயிற்று . சாந்தி நிலையம் திரையில் .
' இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெரும் கருணை
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்'
கோதை தனபாலன்
https://www.youtube.com/watch?v=zB5yFOhVL7I