1968 - குழந்தைக்காக...
 
Notifications

1968 - குழந்தைக்காக - தேவன் வந்தான் தேவன் வந்தான்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
10/03/2020 3:12 am  

170. 07.03.2020

பாடல் – தேவன் வந்தான் தேவன் வந்தான்
படம் – குழந்தைக்காக (1968)
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
குரல்கள் – சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ்

அந்நியோன்யமான அறுபதுகளின் பகுதியில் மெல்லிசை மன்னர் தனித்து இசையமைத்த பாடல்களின் வரிசையில் இன்று குழந்தைக்காக படத்திலிருந்து தேவன் வந்தான் தேவன் வந்தான் பாடல் இடம் பெறுகிறது.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்ற சொல்லடைக்கு உதாரணமாக இந்த படத்தைக் கூறலாம். எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சையும் கரைக்க வல்லது ஒரு குழந்தையின் தூய்மையான அன்பு. அதை அடிப்படையாக வைத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மூன்று பேர் எப்படி திருந்துகின்றனர் என்பதை சித்தரிக்கிறது இத்திரைப்படம்.

தாங்கள் கொள்ளையடித்து கொலையும் செய்த ஒரு குடும்பத்திலுள்ள ஒரு குழந்தை தங்களோடு இணைவதும் தங்கள் மேல் அன்பைப் பொழிவதும் அந்த அன்பில் நெகிழ்ந்து நெக்குருகி மூன்று பேரும் உருகுவதும், இதுவே அவர்களைப் பிடிக்க உதவுவதுமே கதைக்களம்.

ஜம்பு, ஜோசஃப், நாசர் மூவரும் எப்பேர்ப்பட்ட கொடுஞ்செயலுக்கும் அஞ்சாதவர்கள். பிரபாகர் என்ற செல்வந்தர் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கும் போது அவர்கள் அதைத் தடுக்க முயல பெற்றோர் இருவரையும் கொன்று விடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய குழந்தை கீதா இவர்களைப் பிடித்துக் கொண்டு அழுகிறது. ஜம்புவால் அதைத் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்துச் செல்ல முயலும் போது மற்ற இருவரும் தடுக்கிறார்கள். தொழிலில் பந்த பாசத்திற்கு இடமில்லை குழந்தையைக் கொண்டு வராதே என தடுக்கிறார்கள். ஆனால் ஜம்பு விடாப்பிடியாக அழைத்து வருகிறான். நாளடைவில் மூவருமே குழந்தையிடம் அன்புடன் பழக, குழந்தையும் அவர்களை பாசத்துடன் கொண்டாட, அவர்களுக்குள் மனிதாபிமானம் மெல்ல மெல்ல துளிர்க்கிறது.

ஒரு கட்டத்தில் குழந்தைக்கு உணவு ஊட்ட முயலும் போது, ஆயா வேண்டும் என அடம் பிடிக்கிறது. அவர்கள் வீட்டு ஆயா கௌரி வந்து ஊட்டினால் தான் சாப்பிடுவேன் என ரகளை செய்கிறது. எப்படியாவது அவளை அழைத்து வரவேண்டும் என தீர்மானித்து கிளம்புகிறான் ஜம்பு.

பிரபாகர் குடும்பத்துக் கொலை மற்றும் குழந்தை காணாமல் போனது இதை போலீஸ் தீவிரமாக விசாரிக்கிறது. ஜம்பு தலைமையிலான குழு தான் கொலை செய்திருக்க வேண்டும் என கண்டறிந்து அவர்களைப் பிடித்து தருபவருக்கு சன்மானமும் அறிவிக்கிறார்கள்.

மாறுவேடத்தில் செல்லும் ஜம்பு, கௌரியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவளை கூப்பிடுகிறான். அவள் மறுக்கிறாள். ஆனாலும் விடாப்பிடியாக பிடித்து தங்கள் இருப்பிடத்திற்கு கூட்டி வருகிறான் ஜம்பு. அங்கே குழந்தை கீதாவைக் காணும் கௌரி மிகவும் சந்தோஷப்படுகிறாள். அதே சமயம் மூவரும் கௌரியை மிரட்டி வைக்கிறார்கள். எக்காரணத்தைக் கொண்டும் வெளியே தெரியக்கூடாது என அச்சுறுத்துகிறார்கள்.

கௌரியும் முதலில் சம்மதித்தாலும் தந்திரமாக அவர்களிடமிருந்து குழந்தையை அழைத்துப் போகவேண்டும் என தீர்மானிக்கிறாள். முதலில் அவர்கள் மூவருடைய உணவிலும் விஷத்தை கலக்குகிறாள். இதை ஜம்பு யூகித்து அவளை அடித்து விடுகிறான். இன்னொரு முறை இது போல் செய்தால் உயிரோடு விடமாட்டோம் என எச்சரிக்கிறான்.

இதையடுத்து வேறு விதமான உபாயத்தை மேற்கொள்கிறாள் கௌரி. முவரையும் தந்திரமாக காதல் வலை வீசி மயக்க முயல்கிறாள். நாசரும் ஜோசஃப்பும் ஏமாந்து விடுகிறார்கள். ஆனால் ஜம்பு சுதாரித்து அவர்களை எச்சரிக்கிறான்.

தன் முயற்சிகள் பலிக்காத நிலையில் வேறு வழியின்று தக்க தருணத்திற்காக காத்திருக்கிறாள் கௌரி. குழந்தை அவர்களுடன் பாசத்தோடு பழகுவது அவளுக்கு ஒரு விதத்தில் வியப்பைத் தருகிறது. அதை வைத்தே அவர்களிடமிருந்து மீட்கலாம் என திட்டமிடுகிறாள்.

இந்நிலையில் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவர்களுடைய குடும்ப டாக்டர் வந்தால் தான் குணப்படுத்த முடியும் என கௌரி சொல்லி விடுகிறாள். வேறு வழியின்றி ஜம்பு மாறு வேடத்தில் டாக்டர் ராமநாதனைப் பார்க்கப் போகிறான். அவர் ஒரு திருமணத்தில் இருக்கிறார். அவரிடம் விஷயத்தை சொல்லாமல் அழைத்து செல்ல தீர்மானிக்கிறான் ஜம்பு. மாறுவேடத்தில் இருக்கும் ஜம்புவைப் பார்க்கும் போலீஸூக்கு சந்தேகம் வருகிறது.

டாக்டரை அழைத்து வரும் ஜம்பு டாக்டரிடம் குழந்தையைப் பற்றிச் சொல்கிறான். சூழ்நிலையை யூகிக்கும் டாக்டர் சாமர்த்தியமாக, இந்த நோயை குணப்படுத்த ஒரு முக்கியமான மருந்து வேண்டும் அதை எப்பாடு பட்டாவது கொண்டு வரச் சொல்கிறார்.

ஜோசஃப் மாறு வேடத்தில் மருந்து வாங்க செல்கிறான். அவனை அடையாளம் கண்டு பிடிக்கும் ஒருவர் போலீஸுக்கு தகவல் சொல்கிறார்.

குழந்தை தங்கியிருக்கும் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் போலீஸ், அந்த இடத்தை ஏராளமான போலீஸாரோடு சுற்றி வளைக்கிறது.

குழந்தையின் உடல்நலம் சீரானதா
மூவரும் போலீஸில் சிக்கிக் கொண்டார்களா
முடிவு என்ன – படத்தைப் பாருங்கள்.

மூன்று சமூக விரோதிகளும் எப்படி மனிதாபிமானத்திற்கு அடிமையாகி குழந்தையின் மேல் பாசத்தோடு பழகுகிறார்கள் என்பதை சித்தரிப்பதே இன்றைய பாடல்.

ஜம்புவாக மேஜர் சுந்தர்ராஜன், ஜோசஃபாக மனோகர், நாசராக ராம்தாஸ், கீதாவாக பேப ராணி, கௌரியாக பத்மினி, டாக்டராக டி.கே.பகவதி, போலீஸ் அதிகாரியாக அசோகன், பிரபாகராக கிருஷ்ணா, மற்றும் சோ, எஸ்.வி.சஹஸ்ரநாமம், தேங்காய் சீனிவாசன், மனோரமா, பண்டரிபாய், தங்கவேலு, ஏ.கருணாநிதி, வெண்ணிற ஆடை நிர்மலா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ராஜேந்திர குமார் கலை வடிவமைப்பு, ஜி.வி.ரமணன் மற்றும் ஸ்வாமிநாதன் ஒலிப்பதிவு, பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் கே.எஸ்.ரெட்டி நடன அமைப்பு, சேதுமாதவன் சண்டைப்பயிற்சி, பி.என். சுந்தரம் ஒளிப்பதிவு, கே.ஏ.மார்த்தாண்ட் படத்தொகுப்பு என பல நிபுணர்களின் பங்களிப்பில் உருவான படம் குழந்தைக்காக.

நம்ம குழந்தைகள், வசந்த மாளிகை, திருமாங்கல்யம் என பின்னாளில் பிரபலமான திரைப்படங்களை அளித்த விஜயா-சுரேஷ் கம்பைன்ஸ் முதல் தமிழ் தயாரிப்பு இத்திரைப்படம். துறையூர் மூர்த்தியின் கதையை மிக சிறப்பாக உருவாக்கி இருந்தார் பி.மாதவன்.

இத்திரைப்படத்திற்காக 1968ம் ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் பேபி ராணி. மேலும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த பாடலாசிரியர் விருது முதன்முதலாக இப்பாடலுக்காக கவியரசர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான முதல் விருதும் 1968ம் ஆண்டிற்கான பட்டியலில் அறிமுகப்படுத்தப்பட்டு இசையரசி சுசீலாவிற்கு உயர்ந்த மனிதன் படத்திற்காக வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. இதுவும் மெல்லிசை மன்னர் இசையில் வெளியானது.

அந்த வகையில் திரை இசைத் துறையில் அறிமுகப்பட்ட இரு தேசிய விருதுகளும் மன்னர் இசையமைத்த பாடல்களுக்கே கிடைத்தன என்பதே அவருடைய திறமைக்கு சான்று. (அவர்களுக்கு கொடுத்த போது இசையமைப்பாளரை மட்டும் என் விட்டு விட்டார்கள் என்பது தான் புரியவில்லை).

பாடலின் ஒவ்வொரு வரியும் இதை வலுவாக நிலைநிறுத்துகின்றன. மதங்களை நதிகளாக பாவித்து அவை இறைவன் என்னும் கடலில் தான் கலக்கின்றன என்று உருவகப்படுத்தி மிக எளிமையாக அதே சமயம் ஆழமாகவும் கூறியிருக்கிறார் கவியரசர்.

மன்னரின் இசையும் பாடகர்களின் குரல்களும் பாடலின் கருத்தை மட்டுமின்றி அதில் அவர்களுக்குள் இருக்கும் பாச உணர்வையும் கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா என்ற வரியை மூவரும் சேர்ந்து பாடும் போது அந்த மூவரின் திசை நோக்கி கைகள் கும்பிடுகின்றன.

இந்நேரத்தில் இன்னொன்றைக் குறிப்பிட வேண்டும். இதே போல் தேசிய ஒருமைப்பாட்டை மிகச் சிறப்பாக, இந்திய நாடு என் வீடு பாடலில் வலியுறுத்திய கவிஞர் வாலிக்கு 1973ம் ஆண்டின் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதியும் அப்பாடலுக்கு உள்ளது. அந்த ஆண்டு அந்த விருதே வழங்கப்படவில்லை என்பது கொடுமை. ஆனால் அவர், தன்னுடைய பாடல்கள் மூலம், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இன்னும் பல காலத்திற்கு தமிழ் மொழி இருக்கும் வரை வாழ்ந்து கொண்டிருப்பார்.

இன்றைய பாடல் முடியும் கட்டத்தில் மூவரும் அந்தக் குழந்தையை ஆசையோடும் பாசத்தோடும் தூக்கி விளையாடி கொஞ்சும் போது இவர்களா சமூக விரோதிகள் என்று சொல்லும் வகையில் அந்தக் குழந்தை அவர்களுக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வைக்கிறது.

எத்தனை ஆண்டுகளானாலும் இது போன்ற பாடல்கள் சமுதாயத்தில் நல்லதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

இன்னொரு சிறப்பான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
10/03/2020 3:12 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189

ReplyQuote
Share: