1967 - அனுபவி ராஜா ...
 
Notifications

1967 - அனுபவி ராஜா அனுபவி - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
10/03/2020 3:10 am  

169. 06.03.2020

பாடல் – மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
படம் – அனுபவி ராஜா அனுபவி (1967)
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
குரல் – டி.எம்.சௌந்தர்ராஜன்

அந்நியோன்யமான அறுபதுகளில் மெல்லிசை மன்னர் தனித்து இசையமைத்த பாடல்களின் வரிசையில் இன்றும் அனுபவி ராஜா அனுபவி படத்திலிருந்து பாடல் இடம் பெறுகிறது.

அய்யா ஃபிலிம்ஸ் தயாரித்து கே.பாலச்சந்தரின் திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்தில் உருவான இராம. அரங்கண்ணலின் கதை தான் அனுபவி ராஜா அனுபவி திரைப்படம். விளையாட்டு வினையானால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை சொல்வதே படத்தின் சாராம்சம்.

சீமான் சிதம்பரம் மதுரையில் பெரிய தனவந்தர். அவருடைய மகன் ஜானகிராமன். தங்கமுத்து என்ற பையனையும் தன் மகனுக்கு மகனாக வளர்க்கிறார்கள் சிதம்பரமும் அவர் மனைவி மரகதம் அம்மையாரும்.

ஜானகிராமனும் தங்கமுத்துவும் செய்யும் குறும்புகளும் சேட்டைகளும் தந்தைக்கு பெரிய பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அதே ஊரில் வக்கீலாகவும் சித்த வைத்தியராகவும் தொழில் புரியும் வரதராஜனின் மகள் ராஜாமணி. அதே ஊரில் பணிபுரியும் காவல் அதிகாரியின் மகள் ரமாமணி, ராஜாமணியின் நெருங்கிய சிநேகிதி. இந்த இரண்டு பெண்களையும் ஜானகிராமனும் தங்கமுத்துவும் Eve Teasing செய்ய அதனால் வெறுப்புற்று பகார் சொல்ல முனைகிறார் வரதராஜன். ஆனால் சீமான் சிதம்பரம் தான் அவர்களுடைய தந்தை என்றதும் தன் முடிவை மாற்றிக்கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் ஜானகிராமன் ராஜாமணியையும் தங்கமுத்து ரமாமணியையும் காதலிக்கிறார்கள். கல்யாணம் செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். அதற்கு ராஜாமணியின் தந்தை சம்மதம் தெரிவிக்கிறார். சிதம்பரமும் தன் மகன்களின் கல்யாணத்திற்கு தடை சொல்லவில்லை என்றாலும் அவர்களின் விஷமங்களால் தலைகுனியும் நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் கோபமுற்று நீங்கள் என் மகன்களே இல்லை என சத்தம் போட்டு, வீட்டை விட்டே துரத்தி விடுகிறார். தாயார் மரகதம் அம்மாளுக்கு இது வருத்தத்தைத் தருகிறது. தந்தைக்கு தெரியாமல் பிள்ளைகளிடம் பணம் கொடுத்து கொடைக்கானல் பங்களாவில் ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

ஜானகிராமனும் தங்கமுத்துவும், எப்படியாவது மகனே என்று தங்கள் தந்தை கூப்பிட்டு தான் செய்த தவறுக்கு வருத்தப்பட வைக்க வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். அதற்காக பல்வேறு உபாயங்களை யோசிக்கிறார்கள். கடைசியில் அனுதாபத்தினால் வரவைப்பதே சிறந்த வழி என தீர்மானித்து ஒருவருக்கொருவர் சண்டை செய்து அதன் மூலம் ஒருவர் மற்றவரை கொலை செய்து விட்டதாக செய்தி பரப்பவேண்டும் எனவும் அது பொய் என தெரிந்தவுடன் தந்தை மகனே என்று அழைப்பார் என்றும் தீர்மானிக்கிறார்கள்.

இதற்கிடையில் தங்கள் திட்டத்தை ராஜாமணியிடம் சொல்வதற்காக, வரதராஜனின் வீட்டிற்கு செல்ல முயற்சிக்கும் போது வரதராஜன் ஒரு கோபத்தில் வாட்ச்மேனிடம் சொல்லி வீட்டிற்குள் வரவிடாமல் செய்து விடுகிறார். அந்த நேரத்தில் மாடியில் சகோதரிகள் பட்டம் விட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கும் இருவரும் ஒரு பட்டத்தில் இருவரையும் கொடைக்கானல் வருமாறு எழுதி அவர்கள் பார்வையில் படும்படி பறக்க விடுகிறார்கள். அந்த வாசகத்தை தோழியர் படித்து விட்டு கொடைக்கானல் செல்ல தயாராகிறார்கள். இந்தப் பட்டத்தில் உள்ள வாசகத்தை அவர்கள் வீட்டு வாட்ச்மேன் பார்த்து படித்து விடுகிறான்.

கொடைக்கானலில் சகோதரிகள் வரும் சமயம் பார்த்து சண்டை போடுவதாக ஏற்பாடு. அதற்கு முன் அந்த பங்களா வாட்ச்மேனை சரிக்கட்டுவதற்காக அவனிடம் ரூபாயும் 4 நாள் லீவும் கொடுத்து அனுப்புகிறார்கள். சரியாக சகோதரிகள் இருவரும் வரும் நேரத்தில் சண்டை போட, அவர்கள் வந்து சமாதானப்படுத்தி விட்டு கிளம்புகிறார்கள். அறை முழுதும் பொருட்களை சிதற வைத்து விட்டு சண்டை நடந்த அறிகுறிகளை உண்டாக்கி விட்டு செல்கிறார்கள் ஜானகியும் தங்கமுத்துவும்.

திட்டப்படி ராஜாமணியின் வீட்டிற்கு சென்று, தான் தங்கமுத்துவை கொன்று விட்டதாக ஜானகிராமன் கூறுகிறான். அந்நேரத்தில் ராஜாமணியின் வேறு ஒரு தோழி வர, ஜானகிராமன் ஒளிந்து கொள்கிறான். தோழியிடம் கொலையைப் பற்றி ஜானகிராமன் கூறியதை உளறி விடுகிறாள் ராஜாமணி. எதேச்சையாக இதை வாட்ச்மேன் கேட்டு விடுகிறான். ரகசியம் ஊரெங்கும் பரவுகிறது. இருக்கும் தடயங்களெல்லாம் ஜானகிராமனுக்கு எதிராக இருக்க, ஒரு பொய் உண்மை வடிவம் பெறுகிறது. ஜானகிராமன் லாக்கப்பில் அடைக்கப்படுகிறான்.

பங்களாவை விட்டு வெளியேறிய தங்கமுத்து வழியில் ஒரு கொள்ளை கூட்டத்தை சந்திக்கிறான். அவர்களின் திட்டத்தைக் கேட்டு எதேச்சையாக குரல் கொடுக்க தங்கள் திட்டத்தை தெரிந்து கொண்ட தங்கமுத்து உயிருடன் இருக்கக்கூடாது என அவர்கள் தீர்மானித்து ஏரியில் அவனை தள்ளிவிடுவதற்காக படகில் கொண்டு போகிறார்கள். அவர்களிடமிருந்து சாமர்த்தியமாக தப்பித்து தண்ணீரில் குதித்து நீந்தி கரை செல்கிறான் தங்கமுத்து.

.....
தூத்துக்குடி துறைமுகத்தில் கூலியாளாக வேலை செய்பவன் மாணிக்கம். அவனுடைய தாயாருக்கு மாணிக்கம், மருதமுத்து என்று இரட்டைக் குழந்தைகள். இன்னொருவனை சிறு வயதிலேயே ரயில்வே ஸ்டேஷனில் தவற விடுகிறாள். மாணிக்கத்திற்கு முத்தம்மா என்ற காதலி இருக்கிறாள்.

ஒரு முறை துறைமுகத்தில் கப்பலில் சரக்கெடுத்துப் போடும் வேலையில் இருக்கும் போது அசதியில் தூங்கி விடுகிறான் மாணிக்கம். கண் விழித்துப் பார்க்கும் போது கப்பல் மதராஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திடுக்கிட்டு கப்பல் கேப்டனை கேட்டால் இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் திரும்பவும் கிளம்பும் என சொல்லி விடுகிறார். அது வரை என்ன செய்வது என திண்டாடும் மாணிக்கத்திடம் பணத்தைக் கொடுத்து நகரத்தை சுற்றிப் பார்க்க சொல்கிறார் கப்பல் கேப்டன்.

இதற்கிடையில் தன் மகன் தங்கமுத்துவை காணவில்லை கண்டு பிடித்து கொடுப்பவருக்கு ரூபாய் பத்தாயிரம் சன்மானம் என பேப்பரில் விளம்பரம் கொடுக்கிறார் சிதம்பரம். சென்னை வந்திறங்கும் மாணிக்கம் தங்கமுத்துவைப் போலவே இருக்க, அவனை பிடிக்கும் இருவர், சிதம்பரம் வசம் ஒப்படைப்பதற்காக மதுரைக்கு அழைத்து வருகின்றனர். மாணிக்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர்களிடமிருந்த டிக்கெட்டுகளை நைஸாக எடுத்து, ஒன்றை தனக்காக வைத்துக் கொண்டு மற்றவற்றை கடித்துத் தின்று விடுகிறான்.

.....

இதே நேரம் கரை சேர்ந்து மயங்கிய தங்கமுத்துவை ஒரு வயதான தம்பதி காப்பாற்றி சிகிச்சை அளிக்கின்றனர். மயக்கம் தெளிந்து தான் இருக்கும் இடம் பற்றி அவர்களிடம் கேட்கிறான் தங்கமுத்து. விவரம் தெரிந்ததும் வெளியே வரும் போது பேப்பரில் தன்னைப் பற்றிய விளம்பரத்தைப் பார்க்கிறான். உடனே மதுரை கிளம்புகிறான்.

தூத்துக்குடியில் மாணிக்கத்தை காணாமல் திண்டாடும் அவன் தாயார் அவனைத் தேடி மதுரை பஸ் ஸ்டாண்டிற்கு முத்தம்மாவுடன் வரும் போது தவறுதலாக பஸ்ஸில் ஏறி விடுகிறார். பஸ் கிளம்பி விடுகிறது. சாப்பிடுவதற்கு பலகாரம் கொண்டு வருவதற்காக சென்ற முத்தம்மா திரும்பி வந்து பார்க்கும் போது மாணிக்கத்தின் தாயாரைக் காணாமல் திடுக்கிடுகிறாள். இருவரையும் தேடிப் போகும் போது வழியில் தங்கமுத்துவைப் பார்க்கிறாள் முத்தம்மா. அவனை மாணிக்கம் என தவறுதலாக எண்ணி வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.

இதே நேரம் தங்கமுத்துவைத் தேடி ரமாமணி அலையும் போது வழியில் முத்தம்மாவுடன் தங்கமுத்துவைப் பார்க்கிறாள். ரமாமணியைப் பார்த்தவுடன் தங்கமுத்து சந்தோஷப்படுகிறான். முத்தம்மாவோ அவனை அனுப்ப மறுக்கிறாள். ஒரு வழியாக மூவரும் கிளம்புகின்றனர்.

தங்கமுத்து கொலை செய்யப்பட்டு விட்டதாக பதிவு செய்யப்படும் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

வழக்கின் விவாதங்கள் எப்படிப் போயின
தடயங்கள் எதிராக இருக்கும் நிலையில் ஜானகிராமனின் கதி என்னவாகும்
தங்கமுத்து மாணிக்கம் இருவரைப் பற்றிய ரகசியம் என்ன

இப்படி பல்வேறு சுவாரஸ்யமான முடிச்சுக்களோடு நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்களுடன் விறுவிறுப்பாக செல்லும் படம் அனுபவி ராஜா அனுபவி.

நாகேஷூக்கு சவாலான பாத்திரம். மாணிக்கம் தங்கமுத்து என இரட்டை வேடம். அருமையாக செய்திருப்பார். குழப்பமின்றி இரு வேடங்களையும் நன்கு வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். அதுவும் மாணிக்கம் தங்கமுத்துவாகவும் தங்கமுத்து மாணிக்கமாகவும் நடிக்க வேண்டிய கட்டங்கள் சவாலான காட்சிகள். அருமையாக தன் திறமையால் அதை மெருகேற்றியிருப்பார்.

ஜானகிராமனாக முத்துராமன், நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பறக்கிறார். அழகுப்பதுமைகாளக ராஜஸ்ரீ, ஜெயபாரதி, முத்தம்மாவாக மனோரமா, நாகேஷின் தாயாராக எஸ்.என்.லட்சுமி, சிதம்பரமாக மேஜர் சுந்தர்ராஜன், மரகதம் அம்மாளாக டி.பி.முத்துலட்சுமி, வக்கீல் வரதராஜனாக ஹரிகிருஷ்ணன், காவல் அதிகாரியாக விஜயன், மற்றும் பலர் நடித்திருந்தனர். கை தேர்ந்த நிபுணர்களின் தொழில் நுட்ப பங்களிப்பில் இன்றும் ரசிக்கத்தக்க இப்படத்திற்கு மெல்லிசை மன்னரின் பங்களிப்பு அளப்பரியதாகும். பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசைக்காட்சிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார்.

தூத்துக்குடி கப்பல் சென்னை வந்தபின் கேப்டனின் உதவியோடு சென்னையை மாணிக்கம் சுற்றிப்பார்ப்பதாக வரும் இடத்தில் தான் இன்றைய தேர்வுப் பாடல் இடம் பெறுகிறது.

நல்ல களத்தில் உருவான பாடல். அதை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஓர் ஆவணப்படமாக விளங்குகிறது இன்றைய பாடல் காட்சி. சென்னை நகரின் பல்வேறு இடங்களை காணலாம். எரிந்து போன ஸ்பென்ஸர் கட்டிடம், கடலில் தரை தட்டி நின்ற கப்பல், போக்குவரத்தைப் பற்றிய பயமே இல்லாமல் கிராமத்தான் நடுரோட்டில் நடந்து செல்வதை எதார்த்தமாக படம் பிடித்திருக்கிறார்கள். அந்நாளைய சென்னையைப் பார்க்க விரும்புவர்களுக்கு இப்பாடல் இலவச சுற்றுலா பயணமாய் அமையும். ஒரு கட்டத்தில் ரிக்ஷாவில் பயணிக்கும் நாகேஷ், ரிக்ஷாகாரன் அதிகம் பணம் கேட்க, அவனை உட்கார வைத்து தான் ஓட்டி, கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்து, பணத்தை திரும்பி வாங்கி விடுவது ஸ்வாரஸ்யம்.

என்றும் நம்மை வசீகரிக்கும் பாடல் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ். கவியரசரின் வரிகள் ஒரு அயலூர் காரன் பார்வையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலாக பட்டணத்தைப் பார்க்கும் பார்வை. டி.எம்.எஸ். அவர்களின் குரலில் இந்தப் பாடலில் வெளிப்படும் உணர்வுகள் உயிரோட்டமாய் அமைந்துள்ளன. முந்தைய பாடலும் சரி, இந்தப் பாடலும் சரி, மாணிக்கமாக வரும் நாகேஷ் அடிக்கடி சிரிப்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அந்த சிரிப்பில் என்ன லயம் உள்ளது என்பதைக் கண்டு பிடித்து அதன் அடிப்படையில் மாணிக்கம் பாடும் பாடல்களை அமைத்துள்ளார். அதை பாடுவதற்கு டி.எம்.எஸ். தான் சரியானவர் என தீர்மானித்து, தங்கமுத்து பாடும் பாடலுக்கு சீர்காழியாரின் குரலை பயன்படுத்தியிருக்கிறார்.

அற்புதமான பாடல். என்றும் நிலைத்து நிற்கும் உன்னதம்.

Tail piece: ஊரு கெட்டுப் போவதற்கு வரியின் போது கருப்புப் பேண்டும் வெள்ள சட்டையுடன் நாகேஷை சிக்னல் செய்பவர் இயக்குநர் பாலச்சந்தராக தோன்றுகிறது.

இன்னொரு அற்புதமான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
10/03/2020 3:11 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


ReplyQuote
Share: