"கண்ணன் வந்தான்" - ...
 
Notifications
Clear all

"கண்ணன் வந்தான்" - (திரைப்படம் - ராமு - 1966)


P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 3 years ago
Posts: 37
Topic starter  

கண்முன்னே தாயை நெருப்புக்கு இரையாக்கிய கொள்ளையர்களின் அட்டகாசத்தினால் பேசும் சக்தியை இழந்த சிறுவன்.  அவனைப் பேசவைக்க படாத பாடும் தந்தை.   ஒரு கட்டத்தில் இருவருக்குமே விரக்தி மேலிட்டு விடுகிறது.  வாழ்வதில் நம்பிக்கை போய்விடுகிறது.  மகனோடு சேர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவெடுத்து மகனைத் தூக்கிக்கொண்டு கடலை நோக்கி நடக்கிறான் அந்த தகப்பன்.

அப்போது எங்கிருந்தோ காற்று மிதந்து வந்து அவர்கள் காதுகளில் மோதுகிறது பாடல்.

'நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு  - இந்த வரிகளைக் கேட்டதும் அவர்களுக்குள் ஒரு சிறு சலனம்.  

ஆம்.  நான்கு வேதங்களும் சொல்வது இதைத்தானே.  எந்த மதத்தவரானாலும் சரி,  அவர்களது வேத ஆகமங்கள் சொல்வதும் இதைத்தானே.மாற்ற முடியாத உச்ச நீதி மன்ற தீர்ப்பு அல்லவா இது.   பொதுவாக  யாராவது அழுத்தம் திருத்தமான கருத்து ஒன்றை வெளிப்படுத்தினால் "இது என்ன வேத வாக்கோ?"  என்று தானே கேட்கிறோம்.  அப்படிப்பட்ட மாற்றவே முடியாத வார்த்தை அல்லவா இது?

இந்த வார்த்தையைக் கேட்டதும் அவனுக்குள்  ஒரு சலனம் ஏற்பட... தற்கொலை எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது.. திரும்பி பாடல் வந்த திசையில் நடக்கிறான்.

இந்த இடத்தில் " நான்கு  மறைத் தீர்ப்பு' என்ற வார்த்தைகளின் முடிவில் ஆலய மணி ஓசையை ஒலிக்க வைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.  இதில் ஒரு நுட்பமான அழகு ஒளிந்திருக்கிறது. 

காட்சிப்படி தற்கொலைக்கு முனைகின்றவன் மனதில் நம்பிக்கை ஊட்டவேண்டும்.  அதுவும் முதல் வரியிலேயே.  சாதாரணமாக நாம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசும்போது ஆலயமணி ஓசை கேட்டால்.. அதை நல்ல சகுனம் என்று எடுத்துக்கொள்வதுதானே வழக்கம்!

அதே போல "நம்பினார் கெடுவதில்லை நான்கு  மறைத் தீர்ப்பு" என்ற முதல் வரி முடிந்ததும் கோவில் மணி ஓசை ஒலிப்பது அது உண்மைதான் என்ற நம்பிக்கையை அவன் மனதில் ஏற்படுத்துகிறது.   வார்த்தைகளின் கருத்து இசையால் ஆழப்பதிய வேண்டும் - காட்சிக்கு ஒரு ஏற்றத்தைக் கொடுக்கவேண்டும்  என்பதில் நமது மெல்லிசை மன்னர் காட்டும் கவனமும் ஈடுபாடும் வெளிப்படுத்தும் இசை நுணுக்கமும் நம்மை பிரமிக்க வைக்கிறது.                                                        

தொடர்ந்து வரும் வரிகளோ அவனது மனதில் ஆழத்தில் மறைந்து கிடந்த தன்னம்பிக்கையை தூண்டி ஒரு விருட்சமாக மாற்றுகின்றன.

"நல்லவர்க்கும் தீயவர்க்கும் ஆண்டவனே காப்பு

பசிக்கு விருந்தாவான்.  நோய்க்கு மருந்தாவான்

பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே.."

கவியரசு கண்ணதாசனின் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே  நெஞ்சை ஊடுருவும் வார்த்தைகள்.

பசிக்கு தேவை உணவுதான்.   அப்படி என்றால் பசிக்கு உணவாவான் என்று கவியரசர் சொல்லி இருந்தாலே போதுமே. 

ஒரு வாரம் கொலைப்பட்டினியோடு இருக்கும் ஒருவனுக்கு கூழோ கஞ்சியோ மிஞ்சி மிஞ்சிப் போனால்  ஒரு மோர்சாதமும் ஊறுகாய்த் துண்டும் கிடைத்தாலே போதும் என்று ஏங்கி இருப்பவன் முன்னே தலை வாழை இலை போட்டு அறுசுவை விருந்தை பரிமாறி சாப்பிடச் சொன்னால் அவனுக்கு எப்படி இருக்கும்?  அவன் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காதல்லவா.?  அப்படியே திக்கு முக்காடிப் போய்விடமாட்டானா?

அதுபோலத்தான் ஆண்டவனும், தன்னை நம்பும் மனிதருக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக அள்ளிக் கொடுத்து அவர்களை சந்தோஷக் கடலில் மிதக்க வைப்பவன்.  

இந்தக் கருத்தை "பசிக்கு விருந்தாவான்" என்ற இரண்டே வரிகளுக்குள் அற்புதமாக கவியரசர் வெளிப்படுத்தி இருக்கிறார். 

பசிக்கு விருந்தாகவும் நோய்க்கு மருந்தாகவும் இருக்கும் அந்த பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் என்று நெஞ்சை அழைக்கிறார்.  

இந்த தொகையறாவைத் தொடர்ந்து  சித்தார், புல்லாங்குழல், தபேலாவின் இணைவில் ஹிந்துஸ்தானி ராகமான 'யமன்" நம்மை வசீகரிக்கும் வகையில் அருமையான முகப்பிசை...ஒரு இனிமையான பாடலுக்கு கட்டியம் கூறுவது போல ஒலிக்கிறது.

தொகையறா என்றால் வேறு ஒன்றும் இல்லை.  நமது கர்நாடக இசையில் விருத்தம் என்று சொல்கிறோமே.  அதைத்தான் திரை இசையில் "தொகையறா" என்று சொல்கிறார்கள்.   

இனி பாடல்...   

"கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை

கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்.."   

ஆம்.  ஆதரவற்ற வறுமை நிலையில் இருக்கும் ஒருவன் கண்ணில் இருந்து சிந்திய கண்ணீரைக் கண்ட உடனேயே அங்கே கண்ணன் வந்து விட்டான்.  இத்தனைக்கும் அந்த வறியவன் அவனை அழைக்கக் கூட இல்லை.   தனது நிலையை எண்ணி கண்ணீரை மட்டுமே சிந்தினான்.  அதைக் கண்டதுமே அங்கு கண்ணன் வந்துவிட்டான்.. அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்காக.

பாடல் செவிகளில் விழுந்ததும் தற்கொலை எண்ணத்தை கைவிட்டுவிட்டு அந்த பாடல் வந்த திசை நோக்கி தனது ஊமை மகனைச் சுமந்தபடி நடக்கிறான் தந்தை.  பல்லவி முடிந்ததும் இணைப்பிசையாக வரும் வயலின் இசை தந்தையும் மகனும் வரும் வேகத்துக்கு இணையாக .. அதைத் தொடரும் சித்தார் இசையும் தபேலாவின் தாளக்கட்டும் ஆலயச் சூழலை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

**

அது ஒரு கண்ணன் ஆலயம்..அங்கு ஒரு பெரியவர் கண்ணன் புகழை பாடிக்கொண்டிருக்கிறார்.  சரணங்களில் கண்ணனின் பெருமை மலர்களாக விரிந்து மனங்களை நிறைக்கின்றன.

"தேடி நின்ற கண்களிலே  கண்ணன் வந்தான்

தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்

கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்

கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்

தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்

தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான் மாயக்கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான்."

தன்னை தேடி நிற்கும் அன்பர்களில் கண்களில் தென்படும் வண்ணம் கண்ணன் வருகின்றானாம்.  அதுவும் எப்படி?  தீபம் ஒன்றை கையில் கொண்டு வருகிறான்.  ஏன்?  அவனை கண் குளிரக் தீபத்தின் ஒளி கட்டாயம் வேண்டும்.  அதையும் அவனே தான் ஒளிரச் செய்யவேண்டும்.  ஆகவே  அந்த ஞான ஒளியின் பிரகாசத்தில் தன்னை காணவேண்டும் என்று துடிக்கும் மெய்யடியார்களுக்கு தன்னை காட்டவேண்டி வருகின்றான்.  

அதுவும் அந்த மாயக்கண்ணன் எப்படி வருகின்றான்?   நீதி, நேர்மை, நியாயம், அன்பு, அடக்கம், சீலம் என்று நாம் போற்றக்கூடிய உத்தம குணங்கள் எல்லாமே தர்மம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கி விடுகின்றன.  அந்த தர்மத்தேரில் ஆரோகணித்து கண்ணன் வருகின்றான். 

எதற்காக வருகின்றான்?  தாங்க முடியாத துயரச்சூழலில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் அந்த தாளாத துயர் நீக்கி அவர்கள் வாழ்வில் இன்பத்தை மலர்விக்க வருகின்றான் அந்தக் கண்ணன்.

"தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்"  - இந்த வார்த்தைகளில் "ஏறி" என்ற இடத்தில் ராகத்தின் ஸ்வரத்தை மேல் சஞ்சாரத்தில் - அதுவரை இருந்து வந்த மத்யம சஞ்சாரத்திலிருந்து சட்டென்று மேலே ஏற்றி கண்ணன் வந்தான் என்ற தொடரும் வார்த்தைகளில் மறுபடி சரேலென்று மத்யமத்தில் பயணிக்க வைத்து எம்.எஸ்.வி. அவர்கள் செய்திருக்கும் ரசவாதவித்தை அவருக்கே கைவந்த கலை

பெரியவர் தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கிறார்.

அடுத்த சரணத்துக்கு முன் வரும் இணைப்பிசையில்  சித்தார் - தபேலா அருமையாக நெஞ்சை அள்ளும் வண்ணம் ஒன்றோடு ஒன்று அழகாக இணைந்து வசீகரிக்கின்றன.

மூர்த்தி, தலம் என்பார்களே  அந்த வகைப்படி இதுவரை கண்ணனின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனவர் அடுத்த சரணத்தில் அவனது வாசஸ்தானமாய் விளங்கும் புகழ் பெற்ற பிருந்தாவனம் என்னும் தலத்தின் பெருமைகளை அடுக்குகிறார்.

பிருந்தாவனத்தில் பெருமைகள் கவியரசரின் கைவண்ணத்தில் மொட்டவிழ்க்கும் மலர்களாக விரிகின்றன.

"முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்

மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்

குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்

ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்

அடையாத கதவிருக்கும் சன்னிதானம்

அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்

சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்

சன்னிதானம்...

பாடலைப் பெரியவர் தொடர்வதற்கு முன்னால் "கண்ணா.."  என்று உள்ளத்து உணர்ச்சிகள் அத்தனையையும் தேக்கிய குரல் ஒன்று பாடலைத் தொடர்கிறது.

கண்ணா...கண்ணா..

கண்ணா.  கண்ணா..

தொடர்ந்து வரும் ஷெனாய் இசையில் யமன் ராகம் நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.  வெறும் பாடலாக மட்டும் கேட்டுப்பாருங்கள்..  சத்தியமாக நெஞ்சம் நெகிழ்ந்து நெக்குருகும்.

யாரென்று திரும்பிப் பார்த்தால்?   மகனுடன் தற்கொலைக்கு முயன்ற அந்தத் தந்தைதான் இப்போது தனது தாளாத துயர் தீர்க்க கண்ணனிடம் முறையிட்டு வேண்ட வந்திருக்கிறான். 

"கருணை என்னும் கண்திறந்து காட்ட வேண்டும்.

காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்.

கனிமழலை குரல் கொடுத்து பாட வேண்டும்

கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போனவனுக்கு தனது வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கப் போகின்ற கண்ணனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என்ற பரபரப்பு ஒருகணம் எழுகிறது.  

ஆலயத்துக்கு வெறும் கையோடு போகக் கூடாது என்பார்களே.  ஒரு பூ, பழம் என்று எதுவுமே கொண்டுவராமல் அல்லவா வந்திருக்கிறோம். என்று ஒரு கணம் நினைக்கிறான் அவன்.

மறுகணம் - அவனுக்குள் பொறிதட்டுகிறது.  நாம் வெறும் கையோடு ஒன்றும் வரவில்லை.  கண்ணனுக்கு கொடுப்பதற்காக அவனிடம் இல்லவே இல்லாத ஒரு அபூர்வமான பொருளை அல்லவா  கொண்டு வந்திருக்கிறோம்.  

ஆண்டவனுக்கு கவலைகள் என்று ஒன்றும் கிடையாதே.  அவற்றைத்தான் மடிநிறையக் காட்டிச் சுமந்துகொண்டு வந்திருக்கிறோமே.  அவற்றையே கண்ணனுக்கு கொடுத்து விடுவோம். என்ற முடிவெடுத்தவன் அதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்கிறான்.

'கவலைகளை உன்னிடத்தில்  தந்தேன் கண்ணா.

கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா. "

மீண்டும் அந்தப் பெரியவரும் சேர்ந்துகொள்ள பல்லவியை மறுபடியும் தொட்டுக்கொண்டு பாடல் முடிகிறது.

ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பான சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப்பெற்ற மாபெரும் வெற்றிப்படமாக 1966இல் வெளிவந்த "ராமு"  படத்தில் இடம் பெற்ற பாடல் தான் மேலே குறிப்பிடப்பட்ட பாடல்.

"மெல்லிசை மன்னர்" எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் அற்புதமான இசையில் எப்போது கேட்டாலும் நெஞ்சை நெகிழச் செய்யும் அருமையான பாடல் இது.

"இசை மணி" சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரலும்,  டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் கந்தர்வக்குரலும் சங்கமிக்கும் பாடல் இது.

இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம் "யமன்" என்ற ஹிந்துஸ்தானி ராகம்.

இந்தப் பாடலின் ஒரு சிறப்பம்சமே இதன் அமைப்பு தான்.

பாடலை சற்று கவனியுங்கள்..  பல்லவியிலும், தொடரும் முதல் சரணத்திலும் "கண்ணன் வந்தான்" என்ற சொற்றொடர் ஒவ்வொரு அடி முடியும் போதும் முத்தாய்ப்பாக வருகின்றன.

அடுத்த சரணத்தில் இதே போல "பிருந்தாவனம்" என்னும் வார்த்தை அதே பொருளில் ஒவ்வொரு அடிக்கும் முத்தாய்ப்பாக வருகின்றது.

கடைசிச் சரணத்திலோ  "வேண்டும்" என்ற வார்த்தை அதே பொருளில்...

இப்படி ஒரு வார்த்தையோ அல்லது சொற்றொடரோ அதே பொருளில் மீண்டும் மீண்டும் வருவதை "சொற்பொருட் பின்வரு நிலை அணி" என்று குறிப்பிடுவார்கள்.   இந்த அணிவகையை வெகு லாவகமாக கவியரசு கண்ணதாசன் கையாண்டு அற்புதமான ஒரு பாடலை கொடுத்திருக்கிறார்.

பாடல் பதிவானதும் காட்சி படமாக்கப் பட்ட வேளையில் இந்தப் பாடல் காட்சியில் நடிக்க கதாநாயகன் ஜெமினி கணேசன் சற்று தயங்கினார்.

"இதுவரைக்கும் எனக்கு பொருத்தமான குரலே பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களுடையது தான்.  இந்தப் படத்துலே எனக்காக அவர் பாடி "நிலவே என்னிடம் நெருங்காதே" பாடலே அதற்கு சாட்சி.. அப்படி இருக்கும் போது டி.எம்.எஸ்.  பாடி  நான் வாயசைச்சு நடிச்சா அது எடுபடுமா?" என்ற சந்தேகத்தை கிளைப்பினார் அவர்.

"அப்படி எல்லாம் பயப்படாதீங்க.  எல்லாம் சரியாவரும்.  இந்தக் காட்சியில் உங்க கூட நாகையா அவர்கள் நடிக்கிறார்.  அவரே அற்புதமா சொந்தக் குரலில் பாடக்கூடிய ஒரு பாடகர்.  அவருக்கே சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கார்.  இருவரின் சேர்க்கை கண்டிப்பா இந்த பாட்டுக்கு பெரிய வெற்றி கொடுக்கும்.  அதனாலே நீங்க பயப்படாம நடிக்கலாம்." என்றெல்லாம் அவருக்கு ஏ.வி.எம். சகோதரர்களும், படத்தின் இயக்குனர் ஏ.சி. திருலோகச்சந்தரும் தைரியமூட்டி சம்மதிக்க வைத்தனர்.

பாடல் அமைந்த இமாலய வெற்றி நாம் அனைவரும் அறிந்தது தானே.!

((ரசனை தொடரும்..)

பாடலைக் காட்சியுடன் கண்டும் கேட்டும் ரசிக்க இணைப்பு.. https://www.youtube.com/watch?v=oEp5BkFI630

 

 

 


Quote
K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 212
 

After this all-embracing treatment by Mr.Manian any further attempt may prove embarrassing. Still, the human nature, being what it is, I brave a small addition without the risk of spoiling the author's write-up. The young boy who portrayed the "dumb" character in the movie and in the song sequence is a Guitarist and he too participated in MSV's "Varththaigal sollum vaaththiyangal where MSV handled Piano and other orchestra with his usual gusto. Thanks everyone for this opportunity.

 


ReplyQuote
Share: