#கண்ணதாசன்பாடல்கள்ரசனைகள் ..18
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பாடல் தொடர்ச்சியாக..
கண்ணதாசனின் நயமிகு காதற்பாடல்களை, காலத்திற்கும் எத்தனை முறை ரசித்தாலும் மாறாத ரசனைத் தன்மையை அறியலாம். அந்த வகையில் இப்பாடல். .
நெஞ்சம் மறப்பதில்லை ...திரையில் ஸ்ரீனிவாஸ்..ஜானகி..அவர்கள் பாடிய சுகமான பாடல்.. ஜனரஞ்சகமான மெல்லிசை மன்னர்கள் இசையில். ஒரு அற்புத சங்கதி ... தேவிகாவின் முகம் காட்டும் ரசனைமிகு பாவங்கள்... வண்டியின் ஓட்டத்தோடு இணைந்ததா... ? ராகபாவங்களோடு பயணிக்கிறதா..?
கனவுக்காட்சி பாடல் ஆனாலும் உறுதிப்பட்ட தங்கள் காதலை இருவருக்கும் தாண்டிய மூன்றாம் நிலையில் எடுத்து வைத்துப் பாடி..தங்கள் இருவருக்குமாய் உருவகப்படுத்தி.. தாங்களே தங்கள் காதலின் வெற்றியை களிப்புடன் ரசிப்பதாய்..கவிஞர் தன் நடையில் சொல்லியிருக்கும் அழகே அழகு .
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை - நெஞ்சில்
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்கு பகலிடம் கோபமில்லை- இந்த
ஏழையின் காதலில் பாவமில்லை..
சின்ன ஜமீந்தாரான நாயகன் கல்யாணகுமார்... பண்ணையில் வேலை செய்யும் ஏழையின் மகள்.. தேவிகாவின் மன நிலையைத் தேற்றும் வகையாக...
மலர் என்றாலே அழகு...அந்த அழகுக்கும் மலருக்கும் ஜாதி உண்டா ..என்ன? இல்லையே. அதுபோல் மனித நெஞ்சில் உண்டாகும் ஆசைக்கும் ..கொள்ளும் உறவுகளுக்கும் வேறுபாடு இல்லையே..
இரவும் பகலும் வேறுநிலை காண்பித்தாலும் இணைந்தே ஒன்றையொன்று தொடர்கின்றன. அதுபோல்... ...தன்னையும் ஏழையாக.. அன்பிற்கு ஏங்கும் ஏழையாகக்
கருதி ..இந்த ஏழையின் காதலில் பாவமில்லை ...என நாயகியும் அதை அங்கீகரித்து அதைத் தொடர்கிறாள்.
அவன்..
ஒரு மாலையில் பலவித மலருண்டு
ஒரு மனதில் ஆயிரம் நினைவுண்டு..
இவளும் புரிந்து கொண்ட ரசனையில், ஒரு படி மேலே செல்கிறாள்..
அந்த ஆயிரம் நினைவுக்கும் அழகுண்டு
அதில் காதல் என்றால் ஒரு கனிவுண்டு..
தேவிகாவின் கனிவான பார்வை இதன் பொருளுக்கு கட்டியம் கூறும்.
மேலும் சூட்சுமமாய்த் தொடர்கிறாள்..
அந்த நெஞ்சினிலும் ஒரு நிழலுண்டு....
அவனும் புரிந்து,
அதில் நீலப்பூவிழி மயிலுண்டு..
இவள்,
இந்த தோட்டத்திலும் ஒரு துணையுண்டு..
அவனும் புரிந்து,
எந்தன் தோள்களிலும் ஒரு கிளியுண்டு...
ஆஆஆ. .. ஒருவழியாக இவனே தன்னை ..வெளிப்படுத்திக் கொள்கிறான்.
இனி அடுத்து, நேரடியாக...
உந்தன் கண்ணிலும் முகத்திலும் மோதிவரும்
இளங்காற்றின் விலையே கோடி பெறும்..
சாரதியாக இருந்தாலும் காற்றின் வேகத்திலும் அவள் அழகை ரசிக்க..
இவள்..
உந்தன் எண்ணத்தில் எழுந்தே ஆடிவரும்
அந்த இன்பத்தின் விலையே கோடி பெறும்..
இருவருமே ஒருவர்க்கொருவர உரிமை எனும் நிலைப்பாடு..
இனி அடுத்தென்ன...அவன்
நாம் ஒன்றுபடும் நாள் வந்வந்துவிடும்
உந்தன் ஓரப்பார்வை வென்று விடும்..
நம்மையும் இந்த இடத்தில் தேவிகாவின் ஓரப்பார்வை வென்று விடுகிறது..
அவள்..
அந்தப் பாதையெல்லாம் மலர் தூவி வரும்..
இவன்..
இந்தப் பாவையுடன் எந்தன் ஆவி வரும்...ஆஆஆ...ஆ
இறுதி இருவரிகளில் திரைக்கதையும் சேர்ந்து சூட்சுமமாய் வெளிப்பட்டிருக்கும்.
https://youtu.be/T-xbn8qH7-k
கோதைதனபாலன்