1962 - படித்தால் மட...
 
Notifications

1962 - படித்தால் மட்டும் போதுமா - காலம் செய்த கோமாளித்தனத்தில்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 237
10/03/2020 2:47 am  

152. 16.02.2020

பாடல் – காலம் செய்த கோமாளித்தனத்தில்
படம் – படித்தால் மட்டும் போதுமா (1962)
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
குரல்கள் – பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜி.கே. வெங்கடேஷ், ஏ.எல்.ராகவன்

அந்நியோன்யமான அறுபதுகளின் பகுதியில் இன்று, படித்தால் மட்டும் போதுமா படத்திலிருந்து காலம் செய்த கோமாளித்தனத்தில் என்ற பாடல் இடம் பெறுகிறது.

இத்திரைப்படத்தை அனேகமாக அனைவருமே பார்த்திருப்பர் என்பதால், காட்சியமைப்பு மட்டும் சுருக்கமாக இடம் பெறுகிறது.

ராஜூ (நடிகர் திலகம்) கோபால் (கே.பாலாஜி) இருவரும் உடன் பிறவா சகோதரர்கள். ராஜுவின் பெற்றோர் சிறு வயதிலேயே காலமாகி விட்டதால், கோபாலின் பெற்றோர் ராஜூவை எடுத்து வளர்க்கிறார்கள். ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் ராஜூவும் கோபாலும் வசதியாக வாழ்ந்து பழக்கப்படுகிறார்கள் என்றாலும் நற்குணங்களோடு அவர்களை வளர்த்திருக்கிறார் கோபாலின் தாயார் மங்களம் (கண்ணாம்பா). ராஜூ நன்கு படித்து எம்.ஏ. பட்டம் வாங்குகிறான். கோபால் படிப்பு ஏறவில்லை என்றாலும் உலக விஷயம் நன்கு அறிந்தவன். அதே சமயம் கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை மனதுக்கு சொந்தக்காரன். கோபால் வேட்டையில் புலி. மிருகங்களை வேட்டையாடி அவற்றின் உருக்களை வீட்டில் அலங்கரித்து வைத்திருப்பான்.

ராஜூ கோபால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார் ஜமீன்தார் (எஸ்.வி.சஹஸ்ரநாமம்). அதற்காக தரகர் கைலாசத்திடம் (எம்.ஆர்.ராதா) வரன் பார்க்க சொல்கிறார். அவரும் அவரவர் படிப்பு தகுதி இவற்றுக்கேற்ப வரன் சொல்கிறார். ராஜூவுக்கு நன்கு படித்த மீனா என்ற பெண்ணையும் (ராஜசுலோச்சனா) கோபாலுக்கு அதிகம் படிக்காவிட்டாலும் குடும்பப்பாங்கான அன்பும் அடக்கமும் உருவான சீதா (சாவித்திரி) என்ற பெண்ணையும் சிபாரிசு செய்கிறார் தரகர் கைலாசம். உள்ளன்போடு ஆத்மார்த்தமான நண்பர்களைப் போல் பழகும் ராஜூவும் கோபாலும், ஒரு மாறுதலுக்காக தம்பிக்காக அண்ணனும் அண்ணனுக்காக தம்பியும் பெண் பார்க்க போவதாய் தீர்மானிக்கிறார்கள். கோபாலுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் முக்கியமான சில வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து தனக்காக பெண் பார்க்க அனுப்புகிறான் ராஜூ.

கோபாலுக்காக பெண் பார்க்கப் போன ராஜூவுக்கு சீதாவை மிகவும் பிடித்துப் போகிறது. அவளையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்.

ராஜுவுக்காக பெண் பார்க்கப் போன கோபாலின் நடை உடை பாவனைகளைக் கண்டு மீனாவுக்கு பிடித்துப் போகிறது. தான் படிக்காதவன் என கோபால் சொல்ல முயன்றும் முடியாமல் அவர்களே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சீதாவை திருமணம் செய்து கொள்வதற்காக ராஜூ தந்திரமாக நடவடிக்கை மேற்கொள்கிறான்.

அந்த ஏற்பாட்டின் படி சீதா ராஜூ மற்றும் கோபால் மீனா திருமணம் நடைபெறுகிறது.

இதனால் பொருந்தா இல்லறமாய் கோபால் மீனா வாழ்க்கை அமைகிறது.

இதனுடைய விளைவுகள் தான் படத்தின் அடிப்படை.

புது கல்யாண ஜோடி கோபால் மீனா இவர்களுக்கான வரவேற்பு விழாவில் மேடையில் பாடப்படுவதாய் அமைந்ததே இன்றைய பாடல் தேர்வு.

பாடலின் ஒவ்வொரு வரியும் ஆழ்ந்த, நுட்பமான பொருளை உள்ளடக்கியதாய் உள்ளது. ஒன்றிலிருந்து ஒன்று என்ற அடிப்படையில் பல்லவியை அமைத்திருக்கிறார் கவியரசர்.

காலம் செய்த கோமாளித்தனத்தில்
உலகம் பிறந்தது
உலகம் செய்த கோமாளித்தனத்தில்
உள்ளம் பிறந்தது
உள்ளம் செய்த கோமாளித்தனத்தில்
காதல் பிறந்தது
காதல் செய்த கோமாளித்தனத்தில்
ஜோடி சேர்ந்தது ஐயா
ஜோடி சேர்ந்தது...

பல்லவியிலேயே படத்தின் கருவைச் சொல்லி விட்டார் கவியரசர். சாதாரணமாக காதலித்து கல்யாணம் செய்தால் அது நல்ல விஷயமாகும். ஆனால் இங்கோ இன்னொருவன் தான் மனதார விரும்பிய ஒரு பெண்ணை மணம் கொள்வதற்காக செய்த உபாயத்தை கவியரசர் இங்கே கோமாளித்தனம் என்கிறார். அதனால் ஜோடி சேர்ந்தது என்று அந்த மணமக்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இங்கே இயக்குநரின் புத்திசாலித்தனத்தையும் பாராட்ட வேண்டும். இந்த வரவேற்பில் கோபால் மீனா தம்பதி மட்டுமே கலந்து கொள்ளும் விழாவாக அமைத்திருப்பதன் மூலம் பாடலில் சொல்லப்படும் விஷயத்திற்கு நேரடியாக காட்சியை அமைக்க எளிதாயிற்று.

பாடுபவர்கள் எதேச்சையாக பாடும் வரிகளாக அமைய வேண்டும் என்பதற்காக இவர்கள் பஃபூன் வேஷம் போட்டு குழந்தைகளையும் மக்களையும் குஷிப்படுத்துவதாக கேளிக்கை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதில் அவர்களை பாட வைத்துள்ளார்கள்.

அந்த காலத்தில் இது போன்ற கோமாளி நிகழ்ச்சிகள் பொருட்காட்சிகள் திருவிழாக்கள் போன்றவற்றில் நடப்பதுண்டு. மிகப் பெரிய பணக்காரர்கள், கிராமப் பெரியவர்கள், ஜமீன்தார்கள், இவர்களைப் போன்றவர்கள் பிரத்யேகமாக தங்களுக்கென நடத்துவார்கள். அதைத் தான் இந்தக் காட்சியமைப்பு சித்தரிக்கிறது. குறிப்பாக இந்த ஜோடியைப் பொறுத்த வரையில் இரண்டு வீட்டாருமே நல்ல பணக்காரர்கள் என்பதால் இது பிரத்யேகமான நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. கோமாளிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பாட்டும் ஒன்றாகும். அந்த வகையில் இந்த பாடலுக்கான சூழலை மிக அருமையாக உருவகம் செய்துள்ளார்கள் திரைக்கதாசிரியரும் இயக்குநரும். அப்படி பாடும் போது கோமாளிகளாக நடிப்பவர்கள் தங்களைப் பற்றி அல்லது தங்கள் தொழிலில் உள்ள சிறப்புகளைப் பற்றி அல்லது சமூக அக்கறையில் வாழ்வியலைப்பற்றி பாடுவதும் பேசுவதும் பாடுவதும் வழக்கம். இவையெல்லாமே இந்த காட்சியமைப்புக்கு நல்ல அஸ்திவாரமாய் அமைந்துள்ளன.

அந்த அடிப்படையில் இவர்கள் பாடும் பாடல் எதேச்சையாக அன்றைய நாயக நாயகியரைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளதும் கவியரசரின் கற்பனை வளத்திற்கு இன்னுமொரு சான்று.

பாடல் காட்சியில் நடித்துள்ள மூவருமே பாடலின் ஒவ்வொரு வரிக்குகம் ஜீவனூட்டியுள்ளனர். நம்பிராஜன், ஏ.வீரப்பன், சதன், மூவரும் காட்சியின் சிறப்பிற்கு பெரிதும் உதவியுள்ளனர். ஏ.வீரப்பனுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ், சதனுக்கு ஏ.எல்.ராகவன், நம்பிராஜனுக்கு ஜி.கே. வெங்கடேஷ் குரல் கொடுத்துள்ளனர்.

பாடலின் காட்சியமைப்பைப் பொறுத்தவரை அந்நாளைய பிரபலமான Hank Williams என்ற இசைக்குழுவைப் போன்று நடிக நடிகையரின் உடையலங்காரம் அமைந்துள்ளது. அந்த குழுவின் இசைக் கோர்வைகளும் நம் மனதில் நிழலாடுகின்றன. ஆனால் முற்றிலும் மன்னரின் உருவகத்திலேயே பாடலின் இசை அமைக்கப்பட்டுள்ளது.

சின்னி சம்பத் அவர்களின் நடன அமைப்பு இப்படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக இந்தப் பாடலும் நல்லவன் பாடலும் காலங்களைக் கடந்து மிகச் சிறப்பாக இன்றும் ரசிக்கும் படி அமைந்துள்ளன. அதுவும் இன்றைய தேர்வுப் பாடல் இவர்கள் மூவரின் நடன மூவ்மெண்டுகளுக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.

பாடலின் துவக்கத்தில் வீரப்பனும் சதனும் பக்க வாட்டில் ஸ்டெப் வைத்து செல்லும் காட்சி மைக்கேல் ஜாக்சனை நினைவூட்டினால் வியப்பில்லை.

கோமாளியாக நடித்தவர் யாரெனத் தெரியவில்லை. அவருடைய ஒவ்வொரு Reactionம் பிரமாதம். ஆடியன்ஸோடு அருமையாக Communicate செய்யும் வகையில் அவருடைய நடனம் அமைந்துள்ளது.

ஜோடி சேர்ந்தது என்ற வரியின் போது மணமக்களை காமிரா காட்டுகிறது. இருவருடைய முகமும் பிரதிபலிக்கும் உணர்வுகள் அந்த உள்ளங்களை தத்ரூபமாய் நமக்கு சித்தரிக்கின்றன.

இடையிசையில் ராஜூ சீதா ஜோடியை காட்டுகிறது காமிரா. அது முடிந்தவுடன் வரும் பல்லவியின் வரி மிகவும் குசும்புத்தனமாகவும் அதே சமயம் சீரியஸாகவும் அமைந்துள்ளது.

அழுகிற கூட்டம் வாழ்கிற இடத்தில்
சிரிப்பவன் கோமாளி
அறிவற்ற கூட்டம் அருகினில் இருந்தால்
அறிஞனும் கோமாளி..
இதில் பொதுவான தத்துவத்தையும் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர். யாருமே, எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தால் தான் மரியாதை என்பதை மேற்கூறிய வரிகள் உணர்த்துகின்றன.

படித்ததையெல்லாம் பயன்படுத்தாதவன்
முதல் தர கோமாளி – ரொம்ப
படித்தவன் போலே நடிப்பவன் உலகில்
என்னாளும் கோமாளி

என்ன எதார்த்தமான உண்மை. இது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. காட்சியமைப்பைத் தாண்டி சமுதாயத்திற்கே பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளன கவியரசரின் வரிகள்.

இதைத் தொடர்ந்து வரும் இடையிசையில் சதன் வீரப்பன் நடனம் கண்ணை கவரும் வகையில் இருக்கும். இரு கைகளையும் தொங்கப் போட்டு குனிந்து நின்று இசைக்கேற்றவாறு உடலை அசைத்து, வரி முடியும் போது அப்படியே சுழலும் காட்சி மிக அழகாக இருக்கும்.

இதற்குப் பிறகு வரும் Yodelling பின்னால் வந்த மலரென்ற முகமொன்று பாட்டுக்கு முன்னோடி எனலாம். அதைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசைக்கு ஏற்ப குனிந்து நின்றவாறே இரு கால்களையும் மாற்றி மாற்றி குதித்து அப்படியே மைக்கில் வந்து சரணத்தின் முதல் வரியைப் பாடி விட்டு வீரப்பன் நகர்வது வரை ஒரே ஷாட். இது எத்தனை டேக் வாங்கியிருக்குமோ தெரியவில்லை. நல்ல நடன அமைப்பு. குறைந்த எண்ணிக்கையில் டேக் வாங்கியிருந்தால் நிச்சயம் பாராட்ட வேண்டியது தான்.

காசுக்கும் பணத்துக்கும் ஆசையில்லாமல்
வாழ்பவன் கோமாளி – வரும்
காலத்தைக் கையில் பிடித்துக் கொள்ளாமல்
அலைபவன் கோமாளி
ஆசையில்லாமல் திருமணம் செய்து
துடிப்பவன் கோமாளி
(இந்த வரி நாயகனின் மனதில் காயத்தை ஏற்படுத்துவதை நடிகர் திலகம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவார்)

இதற்கடுத்த வரியில் அந்த காலத்தில் பரவலாக இருந்த குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை சொல்லியிருப்பார் கவியரசர் –

தினம் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெறுபவன்
எந்நாளும் கோமாளி
பீம்சிங் அவர்களின் Favourite Camera Movement ஆக ஒவ்வொரு கலைஞரிடமும் நகர்ந்து நின்று நகர்ந்து நின்று செல்லும் யுக்தியுடன் பாடல் காட்சி முடிவடைகிறது.

இந்த ஒரு பாடல் காட்சிக்கே இந்த அளவிற்கு அந்நாளைய படைப்பாளிகள் இந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்றால் ஒரு படத்திற்கு எந்த அளவிற்கு உழைத்திருப்பார்கள் என்பதை நாம் யூகிக்கலாம்.

அதிலும் குறிப்பாக இசையமைப்புத் துறையில் மன்னர் உருவாக்கிய புதிய பாதை, பின்னாளில் அதில் பயணம் செய்வோருக்கு மிகவும் இலகுவாக அமைந்ததாகும். அவர் போட்ட ரோட்டில் தான் இன்று அனைவரும் பயணிக்கின்றனர். அதற்கு இந்த படமும் பாடலும் இன்னுமொரு சான்று.

இதில் அவர் கையாண்டிருக்கும் இசைக்கருவிகள் அதிகம் கிடையாது. ஆனால் அதே சமயம் கேட்பதற்கு ரிச்சாக இருக்கும் வகையில் அமைத்திருப்பார். தேர்வு செய்த மூன்று பாடகர்களுமே அதற்கு முழுமையாக Justify செய்திருக்கிறார்கள்.

காலங்களைக் கடந்து நிற்கும் இன்றைய தேர்வுப் பாடல் மன்னரின் இசை மகுடத்தில் மற்றுமோர் வைரமாகும்.

இன்னொரு அற்புதமான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 237
10/03/2020 2:47 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


ReplyQuote
Share: