1962 - நிச்சய தாம்ப...
 
Notifications

1962 - நிச்சய தாம்பூலம் - அலங்காரம் அலங்காரம்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
10/03/2020 2:50 am  

153. 17.02.2020

பாடல் – அலங்காரம் அலங்காரம்
படம் – நிச்சய தாம்பூலம் (1962)
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
குரல்கள்- எஸ்.சி.கிருஷ்ணன், டி.எல்.ராஜேஸ்வரி

அந்நியோன்யமான அறுபதுகள் பகுதியில் இன்று, நிச்சய தாம்பூலம் படத்திலிருந்து அலங்காரம் அலங்காரம் என்று துவங்கும் பாடல் இடம் பெறுகிறது.

மெல்லிசை மன்னர்கள் இரட்டையரின் திரையிசைப் பயணத்தில் முக்கியமான பங்கு வகித்தவர் திரு பி.எஸ். ரங்கா. அவருடைய படங்களுக்கு தொடர்ந்து மன்னர்களையே இசையமைப்பாளராக பணித்து, அவர்கள் இசையில் பல்வேறு புதுமைகளை செய்ய ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்தவர். அந்த வரிசையில் நிச்சய தாம்பூலம் படத்திற்கு தனியிடம் உண்டு. அத்தனை பாடல்களுமே பிரமாதமாகவும் பிரபலமாகவும் அமைந்தன.

அனைவரும் பார்த்திருக்கக்கூடும் என்பதால் இந்தப் பாடல் காட்சிக்கான அமைப்பு மட்டும் சுருக்கமாக இங்கே கூறப்படுகிறது.

காவல்துறை உயரதிகாரியான ரங்கநாதம் (எஸ்.வி.ரங்காராவ்) காமாக்ஷி (கண்ணாம்பா) தம்பதியின் செல்ல மகன் ரகுராமன் (நடிகர் திலகம்). ரங்கநாதம் அவர்களின் சகோதரி பார்வதி (மாலதி) ராமண்ணா (நாகையா) தம்பதியின் மகள் சீதா (ஜமுனா). சீதாவும் ரகுராமனும் ஜோடியாக பாவித்து வளர்க்கப் படுகிறார்கள். அதே போல் இருவரும் ஒருவருக்கொருவர் உளமார விரும்புகிறார்கள்.

ஆனால் அந்தஸ்தும் செல்வாக்கும் ரங்கநாதம் அவர்களின் பார்வையில் பெரிதாக படுகின்றன. சீதாவை மருமகளாக ஏற்க மறுக்கிறார் ரங்கநாதம். காமாக்ஷியோ சீதாவே மருமகளாய் வரவேண்டும் என விரும்புகிறார். சீதாவை உளமார விரும்பும் ரகுராமன், தன் தந்தையின் எதிர்ப்பை மீறி அவளையே திருமணம் செய்து கொள்கிறான்.

ரங்கநாதம் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர் பிச்சைமுத்து (டி.எஸ்.துரைராஜ்). தன் மகள் சரளாவை (ராஜஸ்ரீ) ரகுராமனுக்கு மணமுடிக்க வேண்டும் என விரும்புகிறார். சரளாவின் சகோதரன் பட்டுசாமிக்கோ சீதாவின் மீது ஒரு கண். அவளைத் தான் மணமுடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறான். அது நிறைவேறாமல் போகவே அவனுக்கு தாங்க முடியாத கோபத்தை உருவாகிறது.

ரங்கநாதம் வீட்டில் சமையல்காரராக பணிபுரிபவன் குப்பண்ணா. அவனுக்கும் சரளாவுக்கும் காதல் மலர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் குப்பண்ணா, தான் தான் ரங்கநாதம் மகன் ரகுராமன் என சரளாவிடம் பொய் சொல்கிறான். பிச்சமுத்து ரங்கநாதம் அவர்களிடம் சம்பந்தம் பேசப் போகிறார். உண்மையான ரகுராமனை சம்பந்தம் பேசுகிறார் பிச்சமுத்து. பேச்சின் குழப்பத்தில் அவருடைய அந்தஸ்தை வைத்து ரங்கநாதமும் அவருடைய கோரிக்கையை பரிசீலிக்கிறார்.

ரகுராமன் சீதா இல்வாழ்க்கை சுமுகமாக நடந்ததா, பட்டுசாமியால் சீதாவுக்கு பிரச்சினைகள் உருவானதா, குப்பண்ணா சரளா காதல் என்னவாச்சு இது போன்ற கேள்விகளுக்கு படம் விடை கூறும்.

சமையல்காரன் குப்பண்ணா சரளாவிடம் தன் பெயர் ரகுராமன் என கூறிக்கொள்ள அவளும் அவன் காதலை ஏற்கிறாள்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இன்றைய தேர்வுப் பாடல் இடம் பெறுகிறது. அதற்கேற்ப பாடலில் குப்பண்ணாவை ரகுராமா என சரளா அழைக்கிறாள். கவியரசரின் பாடல் வரிகள் அனைத்தும் இதை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டுள்ளன.

இந்தப் பாடலும் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடலாகும். குறிப்பாக என் பாட்டுக்கு தாளம் நீயும் போட்டுக்க வேணும் என்ற வரிகளை திருமண விழாக்களில் கச்சேரியில் மணமக்களை கிண்டல் செய்து இசைக்குழுவினர் பாடுவதுண்டு.

இந்தப் படப்பாடல் இசைத்தட்டுக்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பெயர் டி.எல்.ராஜேஸ்வரி எனக்குறிப்பிட்டிருப்பதாக நினைவு.

சற்றும் போரடிக்காமல் விறுவிறுப்பாக செல்லும் இன்றைய பாடல், மன்னர்களின் திறமைக்கு இன்னுமொரு சான்று.

நிச்சய தாம்பூலம் படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், பெரும்பாலும் படம் முழுதும் அல்லது அடிக்கடி, பின்னணி இசையிலும், மற்றும் பாடல்களிலும் பரவலாக Harmonica இசைக்கருவி பயன் படுத்தப்பட்டிருப்பதே. ஆண்டவன் படைச்சான் பாடலிலும் சரி, படைத்தானே பாடலிலும் சரி, இன்றைய தேர்வுப்பாடலிலும் சரி Harmonica முக்கிய பங்கு வகிக்கிறது. இதைப் பற்றி நண்பர்கள் கூற வேண்டுகிறேன்.

இன்னொரு அற்புதமான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
10/03/2020 2:51 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


ReplyQuote
Share: