1962 - தென்றல் வீசு...
 
Notifications

1962 - தென்றல் வீசும் - ஏ மாமா கோபமா  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 237
10/03/2020 2:46 am  

151. 15.02.2020

பாடல் – ஏ மாமா கோபமா
படம் – தென்றல் வீசும் (1962)
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள் – மாயவநாதன்
குரல்கள் – ஜி.கே.வெங்கடேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி

அந்நியோன்யமான அறுபதுகளின் பகுதியில் இன்று தென்றல் வீசும் படத்திலிருந்து ஏ மாமா கோபமா என்ற பாடல் இடம் பெறுகிறது.

முந்தைய பதிவில் இடம் பெற்ற வந்த நாள் முதல் பாடலுக்கும் இன்றைய தேர்வுப்பாடலுக்கும் தான் என்ன ஒரு Contrast! அதை அவ்வளவு அழகாக தன் குரலில் கொண்டு வந்துள்ளார் திரு ஜி.கே. வெங்கடேஷ் அவர்கள்!!

இந்தப் படத்தை ரிலீஸான போது பார்த்திருந்தாலும் கதை காட்சியமைப்பு எதுவும் நினைவில் இல்லை. அதற்குப் பிறகு பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே காட்சி தொடர்பான விளக்கம் தரமுடியாமல் உள்ளது. என்றாலும் பாடல் வரிகளிலேயே ஓரளவிற்கு நம்மால் சூழ்நிலையை யூகிக்க முடிகிறது. மன்னரின் மெட்டும் தாளக்கட்டும் அதற்கு பெரிதும் உதவுகின்றன.

முறைமாமனும் முறைப்பெண்ணும் பாடுவதாக வரும் பாடல். காதலர்களிடையே நிலவக்கூடிய செல்லமான ஊடலை இப்பாடல் மிக அழகாக பிரதிபலிக்கிறது. சீண்டுதலும் கோபித்தலுமாக இருவரும் பாட்டிலேயே பரிமாறிக்கொள்வது சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. பாடல் அதற்குள் முடிந்து விட்டதே என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

ஏட்டிக்கு போட்டியாக முதலில் இருவரும் பாடிக்கொண்டே வர, முடிவில் இருவரும் சமரசம் ஆவதற்கு அவள் சுட்டிக்காட்டும் தவமே காரணமாயிருக்கிறது. ஏரிக்கரையில் ஊசிமுனையில் ஒற்றைக்காலில் தவசு இருந்தாளாம். அந்தப் பாவம் சும்மா விடாது என அவள் செல்லமாய் மிரட்ட, அடுத்த விநாடியில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடாத குறையாக சரண்டர் ஆகும் காதலன். Interesting conversation makes the listening enjoyable.

ஈஸ்வரியின் குரலில் இயல்பாகவே இருக்கும் கம்பீரம் இந்த உணர்வுக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கிறது. மிகவும் குறைந்த இசைக்கருவிகள், பாடலின் ஓட்டத்தில் கூடவே சுகமாய் பயணிக்கும் தாளம், அவ்வப்போது அவளுக்கு அல்லது அவனுக்கு உற்சாகம் பிறந்து துள்ளி நடனமிடுவதை உணர்த்தும் தாளக் கருவிகளின் இசை நயம், ஒரு கிராமத்தில் தோப்பில் ஒரு ஜோடியின் சீண்டலை நேரில் பார்த்த உணர்வைத் தருகிறது மன்னரின் இசை.

தென்றல் வீசும், விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ் பி.எஸ். ரங்கா அவர்களின் தயாரிப்பு இயக்கத்தில் வந்த படம். நிச்சய தாம்பூலம் படத்தின் கதாசிரியர் விருதை ராமசாமி தான் இந்தப் படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.

கல்யாண்குமார், பிரேம் நசீர், எம்.ஆர்.ராதா, நாகையா, ஏ.கருணாநிதி, கிருஷ்ணகுமாரி, ராஜஸ்ரீ, ருக்மிணி, ராமா ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நிச்சய தாம்பூலம் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடினார் கவிஞர் பாடினார் பாடல் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.

பாடல்களை கவியரசர் கண்ணதாசன் அவர்களும் மாயவநாதன் அவர்களும் எழுதியிருந்தனர். டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, ஜி.கே. வெங்கடேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் எஸ்.சி. கிருஷ்ணன் ஆஸியோர் பாடியிருந்தனர். எஸ்.சி.கிருஷ்ணன் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருந்த ஆம்பள மனசு ஆசையினாலே என்ற பாடல் படத்தில் இடம் பெறவில்லை.

இன்றைய தேர்வுப் பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடித்திருக்கும்.

இன்னொரு அற்புதமான பாடலுடன் சந்திப்போம்.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 237
10/03/2020 2:46 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


ReplyQuote
Share: