1962 - செந்தாமரை - ...
 
Notifications

1962 - செந்தாமரை - செந்தமிழ் சுவை மேவும்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 237
10/03/2020 2:37 am  

148. 11.02.2020

பாடல் – செந்தமிழ் சுவை மேவும்
படம் – செந்தாமரை (1962)
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
குரல் – இசையரசி பி.சுசீலா

அந்நியோன்யமான அறுபதுகளின் வரிசையில் இன்று, 1962ம் ஆண்டில் வெளியான செந்தாமரை படத்திலிருந்து செந்தமிழ் சுவை மேவும் என்ற பாடல் இடம் பெறுகிறது. இசையரசி பி.சுசீலா அவர்களின் மெய் மறக்கும் குரலில் மன்னரின் பியானோ ஜாலத்தில் நம்மை கொள்ளை கொள்ளும் பாடல்.

செந்தாமரை படத்தை சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன் பார்த்தபடியால் அதிகம் நினைவில் இல்லை. எனவே படத்தின் காட்சியமைப்பு சூழல் இவற்றைப் பற்றி சொல்ல இயலாத நிலை. பொறுத்தருள்க. என்றாலும் படத்தின் கதைச்சுருக்கம் பாட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு கீழே தரப்படுகிறது. அது ஓரளவிற்கு பயனுள்ளதாய் இருக்கும்.

.....

“செந்தைமரைக்கு இணையாய் கூறுவார்கள் என்னைப் பற்றி. ஏன், - என் பெயரே செந்தாமரை தான்! நான் என்னை முழுதும் அறியாத நிலையில், கண்ணை இமை காப்பது போல் என்னை அன்புடன் வளர்த்தார் தந்தை நீதி மாணிக்கம். என்னைச் சமூகத்தின் உச்சிக் கோபுரத்தில் வாழ வைக்க அவர் எண்ணினார். அந்தஸ்தும் பண்பும் நிறைந்த வக்கீல் நாயகத்தின் அறிமுகம் ஏற்பட்டது எனக்கு. ஆனால் அவரை நாயகனாக அடைய வேண்டும் என்ற எண்ணமே என் நினைவில் மின்னியதில்லை. மாறாக, அவர் மீது ஒரு வகைப் பாசம், பக்தி, மதிப்பு, மரியாதை இவை என் நெஞ்சில் பெருகின.

அப்போது தான் அநாதரவான நிலையில் ஓர் அகதியாக அவர் – சந்திரன் – வந்து சேர்ந்தார். தாய் இறந்து, தமக்கை இருக்குமிடம் தெரியாமல், நண்பர் பச்சை ஒருவனே துணையாய் தாய்நாடு திரும்பி வாழ்வு தொடங்கினார் அவர். அவருடைய கதையைக் கேட்ட நான் அழுதே விட்டேன். கருணை பொழியும் இந்தச் சந்திரனுக்கா – களங்கம்! என் முயற்சியில் அவருக்குப் பத்திரிகை உலகில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

நாட்கள் நகர்ந்தன. அவரோ சந்திரன், நானோ தாமரை! சந்திரனைக் கண்ட தாமரையின் நிலை தெரிந்தது தானே … ஆனால், என் விஷயத்தில் இந்த இயற்கைப்போக்கு முற்றிலும் மாறி விட்டது. நான் அந்த சந்திரனைக் கண்டு மலர்ந்து நின்றேன்! மலர்த் தோட்டங்கள் எங்கள் நிலைக்கு மாவிலைத் தோரணங்கள் கட்டின. கடற்காற்று எங்கள் காதலுக்கு கானாமுத மங்கள கீதத்தை வாரி வழங்கியது. பொற்தாலி பூட்ட வேண்டியது ஒன்றே மிகுதி என்ற நிலையில் எங்களிடையே புயல் புகுந்தது. அதன் விளைவு, நாயகத்துக்கும் எனக்கும் திருமணம் என்ற உறுமல் எழுப்பியது. அப்பப்பா! இந்தப் புயல் புரட்டி வைத்த உண்மைகள் தான் என்னென்ன! நான் யார்? நாயகம் யார்? சந்திரன் யார்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என் தந்தை என்று நான் கண்டிருந்த நீதி மாணிக்கம் யார்? காணாமற் சென்றிருந்த சந்திரனின் சகோதரி இதுகாறும் எங்கிருந்தாள்? எப்படி வந்தாள்? இந்தச் செந்தாமரை பிறந்த விந்தைதான் என்ன?

நான் தெரிந்து கொண்ட இத்தனை உண்மைகளையும் அறிய நீங்களும் துடிக்கிறீர்கள் அல்லவா? அப்படியே சற்று வெள்ளித்திரையின் மேல் பார்வையைப் பதியுங்கள்.....!”

.....

மேலே உள்ள கதைச்சுருக்கம், படத்தைப்பற்றி ஓரளவிற்கு Idea கிடைக்க உதவியிருக்கும்.

படத்தில் சந்திரனாக நடிகர் திலகம், நாயகமாக கே.ஆர்.ராமசாமி, செந்தாமரையாக பத்மினி, மற்றும் பி.ஆர்.பந்துலு, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சந்திரபாபு, தங்கவேலு, ராமராவ், வி.கே.ராமசாமி, ராமராவ், லலிதா, ராகினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாடல்களை கவியரசர் கண்ணதாசன், மற்றும் கே.டி.சந்தானம் எழுதியிருந்தனர். ஏ.எல்.எஸ். அவர்களின் மதராஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை ஏ.பீம்சிங் அவர்கள் இயக்கியிருந்தார். வசனம் இராம. அரங்கண்ணல், ஒளிப்பதிவு ஜி.விட்டல் ராவ், எம்.கர்ணன், நடனம் ஹீராலால் சின்னி-சம்பத், ஒலிப்பதிவு – ஜீவா, ரங்கசாமி, கோடீஸ்வர்ராவ், லோகநாதன், டி.வி.நாதன், படத்தொகுப்பு – ஏ. பால்துரை சிங்கம், என பல்வேறு நிபுணர்களின் உழைப்பில் உருவான படம் செந்தாமரை. நீடித்த தயாரிப்பின் காரணமாக சில ஆண்டுகள் தாமதமாக வெளியானது செந்தாமரை.

அனைத்துப் பாடல்களுமே அற்புதமாய் அமைந்தவை. ஜி.கே. வெங்கடேஷ் குரலில் மெய் மறக்கும் பாடல் கனவே காதல் வாழ்வே. கேட்போரின் நெஞ்சை நெகிழ வைக்கும் குரல். டி.எம்.எஸ்., பி.சுசீலா, சந்திரபாபு, கே.ஆர்.ராமசாமி, ஜிக்கி, ஜமுனா ராணி, பி.லீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எல்.ஆர். அஞ்சலி, ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். இவர்களன்றி, பாட்டுப் புத்தகத்தில் பாடியோர் பட்டியலில் ராதா ஜெயலக்ஷ்மி பெயர் உள்ளது. ஆனால் புத்தகத்தில் அவர் பாடிய பாடலைப் பற்றி ஏதும் தகவல் இல்லை.

மெல்லிசை மன்னர்களின் இசையில் இன்றைய பாடல் கேட்கத் திகட்டாத கானம். கேட்டு மகிழுங்கள். எனக்கு மிக மிக பிடித்த பாடல். இதை முன்பு கேட்டிருந்தவர்களுக்கு மறக்க முடியாத அந்நாட்களுக்கு இப்பாடல் இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. இசைத்தட்டில் சுமார் 2-1/2 நிமிடங்களில் முடிந்து விடும் இப்பாடல் படத்தில் சற்றே கூடுதலாயிருக்க வாய்ப்புண்டு.

பாடலுக்கு நன்றி பிரதோஷம் இணையதளம் மற்றும் அஷோக் ஸ்ரீநிவாசன் அவர்கள்.

இன்னொரு அற்புதமான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 237
10/03/2020 2:40 am  

மீண்டும் பல்லவி என்ற பெயரில் மன்னரின் ரசிகர்கள் வாட்ஸப் குழுவிலிருந்து...


ReplyQuote
Share: