கண்ணதாசன் பாடல் "பாலிருக்கும் பழமிருக்கும் " குரல்கள்: பி. சுசீலா -எம் எஸ் விஸ்வநாதன்
தமிழ்த்திரை இசையின் பொற்காலத்தில் விளைந்த நன் முத்துக்கள் 1961 ன் பாவ மன்னிப்பு படத்தில் இருந்து தான் இத்தரணியெங்கும் பரவத்தொடங்கின எனில் மிகை அன்று. ஏன் அதற்கு முன் நல்ல பாடல்களை எம் எஸ் வி குழுவினர் வழங்கவில்லையா என்று அன்பர்கள் வினவக்கூடும். எனது கூற்றின் உட்பொருள் விளக்க முற்படுவது, 1961மற்றும் 1961க்குப்பின் இசை அமைப்பில் கட்டவிழ்த்து விடப்பட்ட நளினமும் நவீனமும் வேறு வகையின என்பதே. ஆம் இசை அமைப்பில் பாவ மன்னிப்பு ஒரு மாறுபட்ட வடிவமும் மென்மையும் கொண்ட கருப்பு வெள்ளை காவியம். மேலும், இசைக்கருவிகளின் சிறப்பான நாதம் மிளிர்ந்த அந்த பசுமையின் வசீகரம் இன்றளவும் குன்றாமல் பாடல்கள் நம் மனதை வருடும் சிறப்புடையன. அதிலும் சுசீலா குரலில் , எ ம் எஸ் வி வடிவமைத்த இரண்டு பாடல்களும் வெல்வெட் வகை மெ [மே]ன்மைகள். சரி , பாடல் புனைந்ததென்னவோ கவியரசு கண்ணதாசன் தான். புனைந்ததை பனை உயரத்திற்கு உயர்த்தி வானில் விட்டது யார்? இந்தவினாவிற்கு நியாயமான விடைகாணல் அவ்வளவு எளிதன்று. ஏன்? முதலில் சில கேள்விகள்;
இந்தப்பாடல் - பெண்ணுக்கான பாடலா , இருவர் பாடும் பாடலா ? [கேள்வியை ஆழ்ந்து கவனிக்கவும் . இவருக்காக புனையப்பட்டதா , பெண் பாட ஆண் தன்னையறியாமல் இணைந்து பாடலின் சொற்களின் வசீகரத்தில் மயங்கி வெளிப்படுத்தும் " சொல்லில்லா உணர்வுகளா?] எனது தனிப்பட்ட கருத்து -பெண்ணுக்காக எழுதப்பட்ட பாடலில் மெல்லிசை மன்னர் சர்வ சுதந்திரமாக தனது கற்பனைக்கு மேனி தந்து , ஒரு புதியவகை அமைப்பில் பாடலை வடிவமைத்துள்ளார் என்பதே. மேலும் பாவத்தின் வெளிப்பாட்டிற்கு மன்னர் authority என்றால் -அதை மறுக்க இயலுமா? சர்வ சுதந்திரமாக மன்னர் இப்படி செய்தார் என்று தெரியுமா என்ற கேள்வி எழும். அது போன்ற சாத்தியக்கூறுகள் இப்பாடலுக்கு உண்டு.
1 பொதுவாக இயக்குனர் பீம்சிங் பாடல் காம்போசிங்கில் தலையிடுவதில்லை என்பதையும் விட, எம் எஸ் வி அவர்களின் பொறுப்பிலேயே பாடல் பணிகளை ஒப்படைத்துவிடுவார். பின்னர் காட்சியை தன் விருப்பப்படி அமைத்துக்கொள்வார் என்பது நாம் அறிந்த ஒன்று.
2 காட்சியில் நடிகர் திலகம் என்பதை விட, நாயகியின் பாடலுக்கு ஆணின் குரல் பாவ எதிர்வினைக்கு [ voice response ] சொல்லில்லா பதிலிறுப்பு என்ற உத்தியை மன்னர் கையிலெடுத்தாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
3 .இதைப்போன்ற சில சூழ்நிலைகளில் மன்னர் இயல்பாகவே response எனும் பதிலிறுப்பு உத்தியை தானே மேற்கொள்வார் என்று ஒலிப்பதிவாளர்கள் சொல்ல கேட்டதுண்டு.
4 ஆண் , தன் பங்கிற்கு இது போல் குரல் கொடுப்பதாக கவிஞர் எழுதியிருப்பாரா - என்ற ஐயம் தான் மேலிடுகிறது.
5 கவியையும், கவிதையையும், மொழியையும், பாவத்தையும் எப்போதும் உயர்த்திப்பிடிக்கும் தன்னலமில்லா இசை வித்தகர் எம் எஸ் வி அவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். இந்த இசை வித்தகர் எம் எஸ் வி -பாடலின் மேன்மைக்கு எந்த உழைப்பையும் நல்கும் உத்தமர். அந்த வகையில் இந்த உத்தி ஆழமாக வெளிப்படும் பாடல் இது என்று சொல்ல முடியும். பொதுவாக மன்னர் ஹம்மிங் என்பதை பாடலின் நிறைவுப்பகுதியிலும், கோரஸ் வகை சொல்லில்லா நயங்களை எப்போது வேண்டுமானாலும் பாடலில் பயன்படுத்தும் வித்தையையும் நன்கறிந்தவர். சரி இப்போது பாடலின் நளினங்களை பார்ப்போம். இப்பாடலின் சிறப்பு மென்மையான பெண் குரலில் ஒலிப்பதும் , அதற்கேற்ப ஆண் குரலில் ஹம்மிம் செய்யப்பட்டிருப்பதும் என்பது ஒவ்வொருமுறை பாடலைக்கேட்கும்போதும் தோன்றும் உணர்வு. எம் எஸ் வி யின் குரலை எளிதாக இனம் காணும் நம்மால் கூட இப்பாடலில் நேரடியாக உணரமுடியாத படி மிக நேர்த்தியாக ஹம்மிங்கில் எம் எஸ் வி குழைந்திருப்பது மற்றுமோர் சிறப்பு. அடுத்த சிறப்பு, இப்பாடலை பயனுள்ள அனுபவமாக உணரவிரும்பினால் ,இதை காட்சியுடன் பார்த்து ரசிப்பது சாலச்சிறந்தது ஏனெனில் - முகபாவனையால் மேலும் பாடலுக்கு உரமேற்றும் உடல் மொழி -மன்னிக்கவும் விழிமொழியில் நடிகர் திலகத்தின் விழி வீச்சுக்கு சற்றும் அயராமல் ஈடு கொடுத்து இயங்கி இருக்கும் தேவிகாவின் விழிகளும் காணப்பட வேண்டியன. சொல் ஆளுமை , இசை ஆளுமை மற்றும் விழிஆளுமைகள் என அனைத்தும் சங்கமித்து நம் மீது அனாயாசமாக செலுத்தும் ஆளுமைகளை அவரவர் உணர்வால் அன்றி மொழியால் கட்டமைப்பது எளிதன்று. பாவ மன்னிப்பு படத்தில் எம் எஸ் வி கையில் எடுத்த அஸ்திரம் - அமைதியாகத்தாக்கி , ரசிகர்களை மயக்கமுறச்செய்வது ; அதிரடி தாக்குதல்கள் நிலைத்து நிற்பன அல்ல. மென்மையான தாக்குதல்கள் மேன்மையான மற்றும் நீடித்த பீடிப்பை ஏற்படுத்துவன. இதை தனது ஆட்சிக்காலம் கனியக்காத்திருந்து , பாவ மன்னிப்பு முதல் களப்படுத்திவிட்டார். நாம், PIED PIPER வசப்பட்ட எலிகள் போல அவர் பின் அணிவகுத்தோம் ; ஒரு வித்யாசம் , எம் எஸ் வி நம்மை மகிழ்ச்சிக்கடலில் மிதக்கவைத்தார். எனது இந்த கருத்துக்கள் பாடலுக்கு இட்டுச்செல்லும் பூர்வ பீடிகை மாத்திரமே. பாடலையும் அவற்றின் சிறப்புப்புள்ளிகள் [ SPECIAL SPOTS ] எனது அடுத்த பதிவில்..
மீண்டும் சந்திப்போம் அன்பன் கே,ராமன் மதுரை
Dear Prof
நீங்கள் குறிப்பிட்ட விழி வீச்சுகளை நண்பர்கள் ரசிக்க இதோ அந்தக் காணொளி
https://youtu.be/OoNSI3k7tkc
நீங்கள் சொல்வது போல் பீம்பாய் மெல்லிசை மன்னர் combination கம்போசிங் ,நாம் நினைப்பதுபோல் அப்படி நீடித்த விவாதம் இருக்காது எனக் கேள்வி .
அவர்கள் இரண்டு பேருடைய புரிதல் வியப்பிற்குரியது .
அவர்களும் விழியால் பேசிக்கொள்வார்களோ
இந்த பாடல் பதிவின் பின்னூட்டங்கள் ஆண் குரல் மெல்லிசை மன்னர் தானா என்று சந்தேகப்படும் அளவிற்கு குரலில் மென்மை கலந்து பாடல் மேன்மை அடைய வைத்திருப்பார்
நீங்கள் யூகிப்பது சரியாக இருக்கக்கூடும் .இது கடைசி நேர சேர்க்கையாய் இருக்கக்கூடும் .இல்லை ஒரு பாடல் முழுவதும் நடிகர் திலகத்தை எப்படி பயன்படுத்துவது ஆண் குரல் இல்லாமல் என்ற விவாதமும் எழுந்து இருக்கக்கூடும் .
அதை நமக்கு தெளிவுபடுத்த திரு கணேஷ் தான் வாயை திறக்க முடியும் அது கம்போசிங் போது தீர்மானித்திருந்தால் . பாடல் பதிவு போது இருந்தால் இசை அரசி சொல்லக்கூடும் .
அவர்களிடம் கேட்க முயற்சிப்போம் .
என்ன ஒரு மனதை வருடும் ஒரு மெட்டு ,ஊக்கத்தை ஊடுறும் ஒரு இசை , உள்ளத்தை அசைக்கும் குரல் .
சுசீலாம்மா போல் ஒருவர் பாடினால் ,யோசை எது காதலில் விழவேண்டியது தானே .
நிச்சயம் இது தமிழ் திரை பாடல்களில் உன்னத இடத்தை தக்க வைக்கும் பாடல் .
கவியரசு மெல்லிசை மன்னர் இசையரசி பாடல் லிஸ்ட் இல் மேலிடத்தில் தான் இதன் இடம்
மெல்லிசை மன்னர் புதிய பாதையை இதில் தான் வகுத்தார் என்பார்கள்
இது பட்டு விரித்த ப் பாதை
இதைப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தற்கு நன்றி
best Regards
vk
அன்பு விஜய் கிருஷ்ணன் அவர்களே,
தங்களின் கிண்டல் புரிகிறது [இப்பாதையில் பயணிக்க துவங்கியதற்கு என்னும் பொருளில்].நான் மன்னரின் தீவிர ரசிகன் தான். எனக்கு முறையான பயிற்சியோ இசைக்குறித்த தெளிவோ இல்ல்லாதவன். பல நேரங்களில் ஸ்ரீதருக்கு மன்னர் வழங்கிய இசைக்கொடைகளை சிலாகித்துப்பார்க்கிறேன் . அதே சமயத்தில் நான் மன்னரின் அசுர வளர்ச்சியை 10 ம் வகுப்பு முதல் ரசித்துவருகிறேன் . ஆனால் மன்னரின் அருமைபெருமைகளை விரித்துரைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இடையில் என்போன்ற அஞ்ஞானி - குருடன் ராஜ விழி ,விழித்ததற்கு ஒப்பாகத்தான் ஏதாவது எழுதமுடியுமா என்று ஏங்கலாம் / எத்தனிக்கலாம்.. ஆனாலும் ஆசை யாரை விட்டது எனும் முதுமொழிக்கேற்ப "பாவ மன்னிப்பு "ல் வரும் இந்தப்பாடலை பற்றி பேசினால் என்ன என்ற நப்பாசை தான் வேறொன்றுமில்லை. பின் எதற்காக ஸ்ரீதரைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுகிறாய் என்று அன்பர்கள் கேட்கலாம். என் பார்வையில், மறைவதற்கு முன்பே பலரும் மறந்துவிட்ட திரை உலக orphan ஸ்ரீதரை நான்கூட எழுதாமல் விட்டால் , என் மனம் என்னை மன்னிக்காது. ஆனாலும் இயன்ற அளவு பதிவுகளில் நேர்மையை துறக்காமல் ஏதோ எழுதிப்பார்க்கிறேன் . பிழையோ குறையோ இருப்பின் பொறுத்தருள்க.
நன்றி . அன்பன் ராமன் மதுரை
டியர் Prof
உங்கள் பதிவில் குறையோ பிழையோ யார் காணமுடியும் .
நீங்கள் மீதி பாடல்களைப் பற்றி எழுத ஆரம்பித்ததற்கான மகிழ்சியின் விளைவே என் அவ் வாசகம்
அவ் வாசகம் தவறானப் புரிதலைத் தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்
உங்களின் டைரக்டர் ஸ்ரீதர் பற்றிய பதிவுகள் அவரைப் பற்றியும் அவர்கள் குழுவினைப் பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைக்கும் ஒரு பெட்டகம் .
அதைப்போலவே உங்களது ஏனைய பதிவுகளும் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
தொடர்ந்து உங்களின் பதிவுகளைப் படிக்க ஆவலுடன்
best Regards
vk
@k-raman
அருமை .. //எம் எஸ் வி அவர்களின் பொறுப்பிலேயே பாடல் பணிகளை ஒப்படைத்துவிடுவார். பின்னர் காட்சியை தன் விருப்பப்படி அமைத்துக்கொள்வார் என்பது நாம் அறிந்த ஒன்று.// பாடல்காட்சி ... காதலி காதலை வெளிப்படுத்துகிறாள் மறைமுகமாக , அதைப் புரிந்தும் , புரியாததுபோல் ... பதில் வெளிப்படையாக இல்லாமல் முக பாவத்திலேயே அவன் தெரிவிக்க வேண்டும் ...என்பது இயக்குனரின் எண்ணம் . இனி விரிவ து இசையமைப்பாளரின் கற்பனை ...அதன் விளைவு இந்த இனிய பாடல் . நன்றி ஐயா .