கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள்..26
இது ... எல்லா வேதங்களையும் நினைக்க விடாமல்...மனிதம்... என்னும் வேதாந்தத் தையே ... மனம் உலுக்கிவிடும் அளவிற்கு எழுதப்பட்ட பாடல். மரண பயம் கொண்டவனும் சரி.. அது கண்டு பயம் கொள்ளாதவன்...நினைத்துப் பார்க்காதவன்... கேட்டதும் ஒரு கணம் நின்றே அசைபோடாது விடமாட்டான். ஆத்திகம், நாத்திகம், ஆன்மீகம்..
எதுவும் இதில் வரும் ஒவ்வொரு வரியையும் துய்த்துணர்ந்தே செல்லும்..
ஐயா, கண்ணதாசன் அவர்களே! உங்களால் எப்படி இப்படி எளிமையான தமிழில்... உணர்ச்சிகளைக் கொட்டி அள்ளி...விவேக எண்ணத்தை பாடல் கேட்கும் ஒவ்வொருவர் மனத்திலும் விதைக்க முடிந்தது.
கடமை தவறாத மருத்துவ விஞ்ஞானி...உயிர் காக்கும் தொழில்.. சிவாஜி யாக.. அவர்தம் பண்பான அழகும் பொறுப்பு மிகுந்த அன்பு மனைவி ...சரோஜாதேவி... மனைவி காச நோயில் சிக்கித் தவிக்க...காப்பாற்றும் முயற்சியில் முழுநேர ஈடுபாடு... இடையில் எங்கோ..கண்காணாத இடத்தில் மனைவியின் மரணச் செய்தி...விதி..மருத்துவன் என்பதற்காக விட்டு வைக்குமா...காதல் மணம் கொண்டவர்கள்...எல்லாவற்றிலும் மனம் ஒன்றி வாழ்ந்தவர்...வாழும் வயது இன்னும் எவ்வளவோ எட்டத்தில் இருக்க.. மரணமெனும் பிரிவா..? உள்ளம் மயங்குகிறான் ... எதைச் சொல்லி ஆறுதலடைவான்... கேள்வியும் பதிலுமாய்... தாய்பாச உணர்வு மொத்தத்தையும் மனைவி பால் கண்டவன்...விரக்தியின் விளிம்பில்...
"போனால் போகட்டும் போடா
இந்தப் பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா...?
போனால் போகட்டும் போடா"
..வார்த்தைகளின் வேகமே அவன் மனதை வலுவோடு அமைதிப்படுத்த முயலுகிறது.
ஓஹொஹஹோ...ஓ...ஓ... இந்த சங்கேதங்கள்.. அலறல் .. நெஞ்சங்களின் கதறல்... பின்னனி இசை...மெல்லிசை மன்னர்கள்..அமைத்த விதம் நம்மை ஒரு அமானுஷ்ய உலகுக்கே ..டி.எம்ஸ் குரலில்...அழைத்துச் சென்றுவிடும் அற்புதம் ..ஒரு அதிசயம்.
உயிர... அதன் தாத்பரியம் என்ன ? வரிகளில் நாம் வழுக்கி விழுகிறோம்.
'வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது...'
பிறந்தது நமக்குத் தெரியும்..அந்த நுழைவாயிலும் தெரியும்...ஆனால்போய்ச் சேரும் வாசல் நாம் அறிவோமா...? எந்த சக்தியுமே நமக்கு அறிவுறுத்தியது இல்லை.
புரியப் போவதுமில்லை...
ஆனால் இப்படி அறிந்து ஆறுதல் பெறுவோமே...
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது
... உண்மைதானே ...ஒன்று அழிய ஒன்று உருவாக.... இதுதான் இயற்கையின் நியதி...
அதனால்,
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
உயிர்...உடல்... வாழ்க்கையே ..வியாபாரகதி...அந்த வியாபாரத்தில் இன்னொரு கூறுபாடு...
இசையின் ஒரு அமைப்பாக ஒரு பெரிய பறவை கூக்குரலிட்டு அது அடங்கி ,வட்டமிட்டு மயங்கி வீழும் அழகை ...அந்தக் கூவும் ஒலியோடு சேர்த்துக் காண்பிக்க நம் மனதில் ஒரு மெலிதான பிரமிப்பு தட்டும் .
' இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால்
அவன் விடுவானா..?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா..?
கூக்குரலாலே கிடைக்காது
இது கோர்ட்டுக்குப் போனால் ஜெய்க்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...
இதில் ஆன்மீகம்..தத்துவம் மறைந்து வெளிப்படுகிறது..
ஆன்ம உணர்வுகள் பிறவி எடுக்கின்றன.
இரவலாக வரும் உயிரையும், உடலையும்...ஒருவன் தருகிறான்...கடனாக. அதை உரிய நேரம் தராவிட்டால் விடுவானா... அவனே எடுத்துக் கொள்ளும் போது...எந்த நியாயம் .. எப்படி பேசி.... எந்த வழக்காடு மன்றத்திற்குச் செல்லமுடியும்..? உலகின் தலைவன் அவனே... அவனது ராஜாங்கத்தில் நாம்.... என்ன செய்ய முடியும்..?
ஆமாம்..தாயின் கருவறையில்...ஸ்பரிசம்...உறவு...உண்டு....அந்தக் கோட்டை .. ? .. உயிர் சேர்ந்த இடம் ....அமானுஷ்ய ங்கள் நிறைந்த சூன்யம்.. எது எங்கு என்று யாரறிவார்..? வரும் வழி யாது..போகும் வழி யாதும் அறியோமே.
இனி.. இவனது மனசாட்சி... தன்னிலைப்பாட்டின் ஒரு இயலாமையாக...
'
' எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம்
கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா..?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா..?"
இப்படி புலம்பலுடனே வரும் பாவத்தில் ஒரு தெளிவு , அதனின்று எதோ உறுதியைக் கைக்கொண்டதுபோல் நடிகர் திலகத்தின் எழுச்சியான நடை , அதற்கு பக்கபலமாக இசை ....
"நமக்கும் மேலே ஒருவனடா..
அவன் நாலும் தெரிந்த தலைவனடா..
தினம் நாடகமாடும் கலைஞனடா..."
போனால் போகட்டும் போடா...."
இசை என்பது ஆத்மார்த்தமாக இருப்பது இதுபோன்ற ஒவ்வொரு பாடல்களிலும் நம்மால் அறிய முடியும் .
ஆற்றாமை பாசமிகுதியில் கரைமீறி... எரியும் நெருப்பில் விடுவேனா...?
இந்த சொல் போதுமே.. தாங்கவொன்னா பிரிவின் துயரை... ஆனாலும் அறிவின் விவேகம் அவனை எப்படி ஆற்றுப்படுத்துகிறது ...பாருங்கள்...
நமக்கு மேலே ஒருவன்...தலைவன் என்கிறாயா...? அவன் நாலு வித சாதுர்யத்தில் நம்மை இயக்குகிறான்... அடிமை பண்ணுகிறான்..
அடங்கனும்.. நாம்.
இல்லை..இல்லை... அவன் கலைஞன்...
தினம் ஒரு நாடகம் நம்மை வைத்து...
ஆக நம் கையில் என்ன இருக்கிறது...?
உரிமை கொண்டாட.... ம்ம்...
நமக்குள்ளே தெளிவு இன்னும் வராவிடில்...நாம் ஜடமே...
பாலும் பழமும்... திரையில்.
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இசையமைப்பு .
டிஎம்எஸ் ஐயா குரலில் ...ஒரு ஆண்மை வருந்தி பாடும் பாவம்
இதில் எல்லாப் பாடல்களுக்குமே ..இசை உட்பட..ஒரு அத்தியாயமே எழுதலாம்.
கோதைதனபாலன்.
https://youtu.be/CDjDXY4248Y
அன்பு சகோதரி,
இந்தப்பாடலில் வரும் ஆந்தை, கூகை ,கழுகு, நரியின் ஊளை அனைத்து ஒலிகளையும் வழங்கியவர் மறைந்துவிட்ட திரு. சதன் அவர்கள். ஒரு ஜீவனைப்பறிகொடுத்து அரற்றிக்கொண்டிருக்கும் மற்றோர் ஜீவனின் ஓங்கி ஒலிக்கும் ,இசை வழுவாத ஓலம் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் குரலிலேயே பதிவிடப்பட்டது. இந்தப்பாடலின் தாக்கம் திரு. சதன் அவர்களை அடையாளப்படுத்தியது.இதே படத்தின் பாடல்கள் குறித்த திரு நவுஷாத் பதிவிட்ட கருத்துகளை சமீபத்திய எனது பிறிதொரு [ஸ்ரீதர்-117] பதிவில் காணலாம். வாய்ப்புக்கு நன்றி. அன்பன் ராமன் மதுரை.
@k-raman நன்றி சார் ... நாங்கள் அந்த வயதில் இறுதிக் கட்டத்தில் ஒரு கொக்கு வட்டமிட்டு மயங்கி வீழ்வதை சொல்லி வியப்போம் . உண்மையில் இருக்கும் உயிரோ , பிரிந்த உயிரோ அதன் ஓலத்தை மென்மையாக உணர்த்துவதாக அமைக்கப் பட்ட இசை அனைவரையும் கவர்ந்த ஒன்று . தங்கள் பதிவைப் பார்க்கிறேன்