1959 - ராஜா மலையசிம...
 
Notifications

1959 - ராஜா மலையசிம்ஹன் - கண்ணுக்கு கண்ணான காட்சி  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
01/03/2020 3:34 am  

139. 30.01.2020

பாடல் – கண்ணுக்குக் கண்ணான காட்சி
படம் – ராஜா மலயசிம்ஹன் (1959)
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி
வரிகள் – அ. மருதகாசி
குரல்கள் – இசையரசி பி.சுசீலா

அட்டகாசமான ஐம்பதுகளின் வரிசையில் இன்று இசையரசி சுசீலா அவர்களின் குரலில் நம்மை சொக்க வைக்கும் இனிமையான பாடல் இடம் பெறுகிறது. இதுவும் விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படத்திலிருந்து தான்.

1959ம் ஆண்டில் பி.எஸ். ரங்கா தயாரித்து இயக்கி வெளியான படம் ராஜா மலயசிம்ஹன். 60 ஆண்டுகளான பின்பும் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அழகே அமுதே பாடலை சொன்னால் இந்தப் படம் நினைவுக்கு வரும். சகல கலா வல்லவன் கேப்டன் ரஞ்சன் அவர்களின் வீர தீர சாகசங்களோடும் மெய் சிலிர்க்க வைக்கும் வாள் சண்டைகளோடும், மெய்மறக்க வைக்கும் மன்னர்களின் இசையோடும் புகழ் பெற்று விளங்குகிறது இத்திரைப்படம்.

அந்நாட்களிலேயே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி கலரில் எடுக்கப் பட்டு பரபரப்பை அடைந்த படம். இதற்கு முன்னரே தங்கமலை ரகசியம், அம்பிகாபதி உள்ளிட்ட சில கருப்பு வெள்ளை படங்களில் சில காட்சிகள் வண்ணத்தில் எடுக்கப்பட்டன. அந்த வரிசையில் ராஜா மலயசிம்ஹனும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இறுதிக் காட்சி பிரம்மாண்டமான அரங்கில் சிங்கம் போன்று ஒரு வடிவமைத்து அதை ஒரு கோட்டையின் மய்யமாக நிறுவி காண்போர்க்கு பிரமிப்பை உருவாக்கினார் ரங்கா. அந்த பிரம்மாண்டமான க்ளைமாக்ஸ் காட்சியைத் தன் பின்னணி இசையால் இன்னும் பிரம்மாண்டமாக காண்பித்தார்கள் மன்னர்கள்.

கதை என்று சொன்னால் இதுவும் கற்பனை கலந்த Fantasy Genre தான். இரண்டு நாடுகளின் சேனாதிபதிகளின் கொட்டங்களால் விளையும் பல்வேறு பிரச்சினைகளை அலசுகிறது படம். இரண்டு நாட்டு அரசர்களும் டம்மியாக வைக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. பாரத நாட்டு மன்னரின் சேனாதிபதி கொடுமையானவன். மன்னரை டம்மியாக்கி விட்டு தான் சர்வாதிகாரங்களுடன் அலைகிறான். அவனுடைய காதலி சுந்தரி (சூர்யகலா). அவளை கல்யாணம் செய்து கொள்வதாய் சொல்லியே காலம் கடத்துகிறான் சேனாதிபதி.

அந்த நாட்டின் பிரஜைகளுள் ஒருவன் ராஜா. பேருக்கேற்றார்போல் அழகில் மட்டுமின்றி வீர தீர சாகசங்களிலும் சிறந்து விளங்குகின்றான். அவனுடைய தாயார் மற்றும் சகோதரி மாலதி (சௌகா4ர் ஜானகி)யுடன் வாழ்ந்து வருகிறான்.

ஒரு சமயம் அந்நாட்டுக்கு மலய நாட்டின் யுவராணி சித்ரலேகா (ராஜ சுலோச்சனா) விஜயம் செய்கிறாள். அழகிலும் ஆடல் பாடல் உள்ளிட்ட பல கலையிலும் தலை சிறந்து விளங்குபவள் சித்ரலேகா. அவள் வருகையை முன்னிட்டு ஆடல் பாடல் போட்டிகள் என ஊரே களை கட்டுகிறது. மற்போர் வாட்போர் என பல்வேறு விதமான வீர விளையாட்டுக்கள் அனைத்திலும் ராஜா முதன்மை பெறுகிறான். அவனுடைய ஆண்மையும் வீரமும் சித்ரலேகாவை வெகுவாக கவர்கிறது. அவன் மேல் மையல் கொள்கிறாள். முதலில் தயங்கினாலும் ராஜாவிற்கும் அவள் மேல் காதல் உருவாகிறது.

இந்த திருப்பம் சேனாதிபதியின் மனதில் ஆத்திரத்தை உருவாக்குகிறது. வேற்று நாட்டு யுவராணி ஒரு சாமான்யன் மேல் காதல் கொள்வதா என கோபமுறுகிறான்.

இந்நிலையில் ஒரு நாள் மாலதியை சேனாதிபதி பார்க்கிறான். அப்போது முதல் அவள் மேல் மையல் கொள்கிறான். அவளை திருமணம் செய்து அடைந்தே தீரவேண்டும் என துடிக்கிறான். இதை அறியும் சுந்தரி அவனுடன் கோபித்துக் கொள்கிறாள். தன் சகோதரியின் மேல் சேனாதிபதி மோகம் கொண்டு அலைவது ராஜாவுக்கு கடுமையான கோபத்தை உண்டாக்குகிறது. இருவருக்கும் மோதல் நடக்கிறது.

ராஜாவின் நண்பன் மாதவன் ஏற்பாட்டில் ராஜா மலய நாட்டிற்கு தப்பிச் செல்கிறான். ஆனால் இந்த விஷயம் சேனாதிபதிக்கு தெரிந்து விடுகிறது. உடனே மலய நாட்டு சேனாதிபதிக்கு (ஸ்ரீராம்) அவன் லிகிதம் அனுப்புகிறான். தங்கள் நாட்டிலிருந்து அரசாங்கத்தின் கைதி ஒருவன் தப்பி விட்டான். அவன் அந்த குறிப்பிட்ட கப்பலில் தான் வருகிறான் என தகவல் கூறுகிறான்.

மலய நாட்டில் இறங்கிய உடனே மலய நாட்டு சேனாதிபதிக்கும் ராஜாவுக்கும் மோதல் உருவாகிறது. தந்திரமாக அவனை கைது செய்கிறான் மலய நாட்டு சேனாதிபதி. அது மட்டுமின்றி இனிமேல் யாரையும் பார்க்கவோ பேசவோ கூடாது என யுவராணிக்கு கட்டளையிடுகிறான்.

ராஜா என்ன ஆனான்
யுவராணி ராஜா காதல் என்ன ஆனது
ராஜாவின் நாட்டில் சேனாதிபதியின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களுக்கு விடிவு கிடைத்ததா

சுந்தரியின் கதி என்ன..

இது போன்ற பல கேள்விகளுக்கு விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ் ராஜா மலயசிம்ஹன் விடை கூறும்.

ராஜாவாக கேப்டன் ரஞ்சன் மற்றும் இளவரசி சித்ர்லேகாவாக ராஜ சுலோச்சனா இருவரும் அற்புதமாக நடித்திருந்தார்கள்.

அழகிலும் கலையிலும் சிறந்து விளங்கும் மலய நாட்டு யுவராணி, ஆடிப் பாடுவதாக வரும் பாடலே இன்றைய தேர்வாக அமைந்துள்ளது.

இசையரசியின் மயக்கும் குரலில் இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. மன்னரின் இசையமைப்பில் பாடலில் தபேலா குறிப்பிடத்தக்கதாகும்.

மருதகாசி அவர்களின் வரிகள் இப்படத்தில் ஒவ்வொரு பாடலிலும் காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகின்றன.

மீண்டும் இன்னொ1ரு அற்புதமான பாடலுடன் சந்திப்போம்.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
01/03/2020 3:34 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது


ReplyQuote
Share: