1959 - தங்கப் பதுமை...
 
Notifications

1959 - தங்கப் பதுமை - மருந்து விக்கிற மாப்பிள்ளை  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
01/03/2020 3:38 am  

142. 05.02.2020

பாடல் – மருந்து விக்கிற மாப்பிள்ளை
படம் – தங்கப் பதுமை (1959)
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்—ராமமூர்த்தி
வரிகள் – கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
குரல்கள் – ஏ.பி.கோமளா, கே. ஜமுனா ராணி மற்றும் குழுவினர்

“சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வீரபத்தினியாம் கண்ணகிக்குச் சிலை அமைத்து வழிபட விரும்பிய தமிழ்ப் பெருவேந்தன் சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டி, தமிழரின் வீரத்தைப் பெண் வீரம் என ஏளனம் செய்த கனக விஜயரைப் போரிலே வென்று அவர்களின் முடித்தலைகள் மீது பத்தினிக்கல்லைச் சுமந்து வரச் செய்து கருவூரில் கண்ணகிக்குக் கலைக்கோயில் கட்டினான். அது முதல் பத்தினி வணக்கம் தமிழனின் புதுமதமாக உலகமெங்கும் பரவியது.

சோழர் பழம் பெரும் பட்டினமான உறையூரில் பெருங்குடி வணிகரான முத்துவேலர் கண்ணகிக்குத் தங்கத்தாலான சிலை அமைத்து பூமண்டலத்தில் எந்த மன்னரும் அடைய முடியாத இரண்டு அபூர்வ ரத்தினங்களை அதன் கண்களில் பதித்து வைத்துத் திருப்பணி செய்து வந்தார். அவருடைய செல்லக்குமரியான சிலம்புச் செல்வி கண்ணகியை வழிபட்டு, செல்வத் திருமகளாய்த் திகழ்ந்தாள். அங்கே பத்தினிக் கோட்டத்தில் ஒரு நாள்...” (டைட்டில் கார்டின் முடிவில் இடம் பெற்ற முகவுரை)

பத்தினி தெய்வம் கண்ணகியின் கண்களில் முத்துவேலர் (டி.பாலசுப்ரமணியம்) பதித்த ரத்தினங்கள் மிகவும் சக்தி கொண்டு திகழ்கின்றன. கண்ணகியின் காலடியில் யார் கால் வைத்தாலும் அல்லது கரம் வைத்தாலும் அவர் கண்கள் பார்வையை இழந்து விடும்.

உறையூரில் ஆடித்திருவிழாவில் கற்பின் தெய்வமாம் கண்ணகியைத் தொழும் விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் பாடப்படும் சித்தர் விருத்தம் இந்நாட்டின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்கிறது.

வானம் பொய்யாது வளம் பிழைப்பணியாது
நீள்நில வேந்தன் சுற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு

எங்கள் குலநாயகியே கண்ணகியம்மா என பெண்டிர் ஆடிப்பாடி கண்ணகியை வழிபடுகின்றனர். சிலம்புச் செல்வி (பத்மினி) தலைமையேற்று ஆடிப்பாடுகிறாள். ஆட்டத்தின் முடிவில் மயங்கி விழுகிறாள்.

முத்துவேலர் வைத்தியமணியை அழைக்க, அவர் தன் மகன் மணி வண்ணனை செல்விக்கு வைத்தியம் பார்க்க அனுப்புகிறார். மணிவண்ணன் (சிவாஜி கணேசன்) துணைக்கு வீரப்பரை (குலதெய்வம் ராஜகோபால்) அழைத்து செல்கிறார். அங்கே முத்துவேலரின் மகள் செல்விக்கு வைத்தியம் பார்க்கிறார். அவளுக்கு குணமாகிறது.

முத்துவேலரின் உறவினர், கபாலபுரத்தின் மன்னர் நாகவிஜயன். (ஆர். பாலசுப்ரமணியம்). அவரது சகோதரி இளவரசி ராஜவதனா தேவி. அவளின் விருப்பம், இல்லை இல்லை, லட்சியம், உறையூரில் இருக்கும் கண்ணகியின் தங்கப் பதுமையின் கண்களிலுள்ள இரு ரத்தினங்களையும் தன் சித்த் தேவதையின் கண்களில் பொருத்த வேண்டும் என்பதே. ஆனால் மன்னரோ மிகவும் பயந்த சுபாவம் உடையவர்.

மணிவண்ணன் வெகுளியானவர். எதையும் மறைத்துப் பேசத் தெரியாதவர். சந்தர்ப்ப வசத்தால் செல்வியுடன் பழக்கம் அதிகமாக அது காதலாக மலர்கிறது. அவளிடமே தன்னை திருமணம் செய்ய சம்மதமா என கேட்டு விடுகிறார்.

கபாலபுரத்தில் முத்துவேலரின் சகோதரி மகனான சேனாதிபதியிடம், இளவரசி எப்படியாவது உறையூரிலிருந்து ரத்தினங்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என கட்டளையிடுகிறாள். அதற்கு சேனாதிபதி வில்லவன் (எம்.என்.நம்பியார்) தன்னை செல்விக்கு கல்யாணம் செய்து வைத்து விடுவார் என தயங்குகிறார். அதைப் பற்றி தனக்கு கவலையில்லை. என்ன சூழ்ச்சி செய்தாவது கொண்டு வரவேண்டும் என கூறி விடுகிறாள்.

வில்வனுக்கும் செல்விக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள சமயத்தில், வில்லவன் திருமணத்திற்கு நிபந்தனையாக அந்த இரு ரத்தினங்களைக் கேட்கிறான். மன்னரோ மறுக்கிறார். ஆனால் விடாப்பிடியாக வில்லவன் தன் சேவகனை அதை எடுக்கப் பணிக்கிறான். பதுமையின் காலடியில் செல்லும் போது அந்த சேவகனின் கண் பார்வை போய் விடுகிறது. இதைக் கண்டு திடுக்கிடுகிறான் வில்லவன். பத்தினி தெய்வம் கண்ணகியின் கண்க்ளில் உள்ள ரத்தினங்களைப் பறிக்க முயல்வோர் யாராயினும் இது தான் கதி என முத்துவேலர் ஆவேசமாக சொல்கிறார். உடனே மன்னர் மனம் மாறி செல்வியின் விருப்பத்திற்கிணங்க மணிவண்ணன் செல்வி திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

மணிவண்ணன் செல்வி திருமண ஏற்பாடு, செல்வியின் முறைமாப்பிள்ளையான வில்லவனுக்கு கடும் சினத்தை உண்டாக்குகிறது. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போவதா என்கிற ஆத்திரம் அதிகமாகிறது. இருவரையும் பழிவாங்கத் துடிக்கிறான். அதற்காக ராஜநர்த்தகியும் சாகசக்காரியுமான மாயமோகினியை (டி.ஆர்.ராஜகுமாரி) கலந்தாலோசிக்கிறான். அவளும் அதற்கு திட்டம் வகுத்துக் கொடுக்கிறாள். அதற்கு பிரதிபலனாக அவளுக்கு சிம்மாசனத்தில் இடமளிக்க ஒப்புக்கொள்கிறான் வில்லவன். அதாவது, மணிவண்ணனை தன் சாகச வலையில் மயக்கி அவனை நடைப்பிணமாக்க வேண்டும், செல்வியின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும், ரத்தினங்களை கைப்பற்றி கபாலபுரம் இளவரசியிடம் கொடுத்து அவளை வில்லவன் அடைய வேண்டும், அதன் பிறகு அவளை ஒதுக்கி விட்டு ராஜவதனாவின் இடத்தை மாய மோகினிக்கு தரவேண்டும். இதுவே இவர்களின் திட்டம்.

மணிவண்ணன் செல்வி திருமணமும் நடைபெறுகிறது.

கபாலபுரத்தில் இளவரசிக்கு, மாயமோகினியை அனுப்புவது நகைச்சுவையாக படுகிறது. ஆனால் மாயமோகினியோ தன் கண்வலை விரித்து, கைமுத்திரை காட்டினால் போதும், உறையூரின் சோழ சமஸ்தானத்தையே தன் வசந்த மாளிகையில் அமைத்து விடுவேன் என கூறுகிறாள்.

உறையூரில் தன் மாப்பிள்ளை மிகவும் வெகுளியாக இருக்கிறாரே, உலக விஷயம் தெரியவில்லையே என மன்னர் மிகவும் ஆதங்கப்படுகிறார். இன்னும் வைத்தியத் தொழிலை விடாமல் செய்கிறாரே என கவலைப்படுகிறார்.

இந்த சூழ்நிலையில் உறையூரில் மாயமோகினி குடியேறுகிறாள். அவள் வரும்போதே அவளைப் பற்றி ஊரெல்லாம் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

இந்த சமயத்தில் உறையூரில் வந்திருக்கும் மாயமோகினிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என மணிவண்ணனின் தந்தை அரண்மனைக்கு வந்து மன்னரிடம் அவனை அனுப்பக் கோருகிறார். மணிவண்ணனும் சம்மதிக்கிறான். மாயமோகினியின் அந்தப்புரத்தில் நுழைகிறான். மணிவண்ணனுக்கு அப்போது தெரியாது தன் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு பலவிதமான பிரச்சினைகளில் தான் சிக்கிக் கொள்வோம் என்று.

அந்தப் பிரச்சினைகள் தான் என்ன...
செல்வியின் குடும்ப வாழ்க்கை என்ன ஆனது
கபாலபுரம் இளவரசியின் கனவான ரத்தினக் கற்களைப் கைப்பற்றுவது நனவானதா
மாயமோகினியின் திட்டங்கள் நிறைவேறியனவா
மணிவண்ணன் சந்தித்த பிரச்சினைகள் என்ன
அவர் எப்படி அவற்றிலிருந்து மீண்டார்
வில்லவனின் மனக்கோட்டை என்னவானது

தெரிந்து கொள்ள தங்கப்பதுமை திரைக்காவியத்தைப் பாருங்கள்.

60கள் மற்றும் 70களில் எழுத்துலகில் தனக்கென தனி ராஜ்ஜியம் அமைத்து கோலோச்சிய அரு. ராமநாதன் அவர்களின் கதை வசனத்துடன், ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களின் திரைக்கதை இயக்கத்தில் இன்றும் பிரகாசிக்கிறது தங்கப்பதுமை.

1969ல் சென்னை சாந்தியில் மறு வெளியீட்டில் புதுப்படங்களைப் போல் ஆரவாரமாக வெளியாகி அமோக வெற்றி வாகை சூடிய படம் தங்கப் பதுமை. தங்க சுரங்கம் திரைப்படம் வெளியாகும் வரை ஒரு மாத காலம் சென்னையில் சாந்தி, கிரௌன் புவனேஸ்வரி மூன்று திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த் காட்சிகளாக வசூலில் சாதனை படைத்தது. குறிப்பாக சென்னை சாந்தியில் நான்கு வாரங்களில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலித்த படம் தங்கப் பதுமை.

மெல்லிசை மன்னர்களின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் வைரம் தங்கப்பதுமை. பாடல்கள் அனைத்துமே இன்றும் காலம் கடந்து புகழ் பெற்று விளங்குகின்றன. பட்டுக்கோட்டையார், கவியரசர், மருதகாசியார், உடுமலை நாராயண கவி என அனைவருமே பாடல்களை எழுதியிருந்தனர். டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.லீலா, எம்.எல்.வசந்தகுமாரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜிக்கி, சி.எஸ்.ஜெயராமன், ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி, டி.எஸ். பகவதி, ஏ.ஜி.ரத்தினமாலா, சீர்காழி கோவிந்தராஜன் என கிட்டத்தட்ட அந்நாளைய பிரபல பின்னணி பாடகர்கள் அனைவருமே இப்படத்தின் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.

ஜூபிடர் பிக்சர்ஸ் சார்பில் சோமு அவர்கள் தயாரித்த இத்திரைக்காவியத்தில் கலை அம்சம் டி.வி.எஸ். சர்மா, படத்தொகுப்பு ஏ. தங்கராஜ், நடனம் பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஹீராலால், ஸோஹன்லால், டி.சி.தங்கராஜ், ஒளிப்பதிவு பி. ராமசாமி, ஒலிப்பதிவு சீனிவாச ராகவன். கோவிந்த் சாமி, எம். விஸ்வநாதன் என அனைவருமே அந்நாளைய தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றினர்.

நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி இணைக்கு பெரும்புகழ் தேடித்தந்த படங்களில் முக்கியமான இடம் தங்கப்பதுமைக்கு உண்டு. குறிப்பாக ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான் பாடல் காட்சி, திரையரங்குகளில் தாய்மார்களின் கண்ணீரை பெரிதும் சம்பாதித்தது., நாட்டியப்பேரொளியின் நடிப்பில் மயங்காதவர்களே கிடையாது. இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் தங்கப்பதுமை.

இன்றைய தேர்வுப் பாடலாக இடம் பெறுவது மருந்து விக்கிற மாப்பிள்ளை என்கிற பாடல். முதன்முதலாக மாயமோகினியின் அந்தப்புரத்தில் மணிவண்ணன் நுழையும் போது அங்குள்ள சேடிகள் அவரை கேலி செய்து பாடும் பாடல்.

இந்தப் பாடலில் மன்னர் செய்துள்ள சாகசங்கள் பல. குறிப்பாக, மணிவண்ணன் ஒரு நாகத்திடம் சிக்கிக்கொள்ளப் போகிறான் என்பதை சங்கேதமாக உணர்த்தும் வகையில் பாடலில் மகுடியை பயன்படுத்தியிருப்பது இசையில் அவருடைய மேதைமையைக் காட்டுகிறது.

பாடலில் அனைத்து இசைக்கருவிகளும் அருமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

பதிவு விரிவாக நீண்டு விட்டது. பொறுமையாகப் படித்த அனைத்து நல்லிதயங்களுக்கும் உளமார்ந்த நன்றி.

அட்டகாசமான ஐம்பதுகளின் பகுதி நிறைவுறுகிறது. இனி அமர்க்களமான அறுபதுகளில் அடுத்த பதிவிலிருந்து பயணிப்போம்.

நன்றி.


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
01/03/2020 3:39 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


ReplyQuote
Share: