1958 - குடும்ப கௌரவ...
 
Notifications
Clear all

1958 - குடும்ப கௌரவம் - காலை மலர்ந்ததடி கண்ணே  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 111
26/01/2020 11:33 am  

This is a part of a series of posts under the caption "Meendum Pallavi" by me in a Whatsapp Group

  1. 24.01.2020

 பாடல் – காலை மலர்ந்ததடி கண்ணே

படம் – குடும்ப கௌரவம் (1958)

இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

வரிகள் – மருதகாசி

குரல் – பி. லீலா

 

 

       அசர வைக்கும் ஐம்பதுகளின் பாடல்கள் இசையில், மெட்டில், குரலில் மட்டுமின்றி கருத்துக்களிலும் தலை சிறந்து விளங்குபவை. காலத்தின் கண்ணாடியாய் வரலாற்றின் அடையாளமாய் திகழ்பவை. அதற்கு இன்றைய பாடல் மிகச்சிறந்த உதாரணம்.

 

       விக்ரம் புரொடக்ஷன்ஸ் பி.எஸ். ரங்கா அவர்களின் பாணியே தனி. அவரே தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்குபவர்.  நடிகர் திலகத்துடன் இணைந்து அவர் அளித்த தெனாலி ராமன் பெரும் வெற்றியும் புகழும் அவருக்கு ஈட்டித் தந்தது. மன்னர்களுக்கும் தமிழ்த் திரையிசை உலகில் புதிய அங்கீகாரம், ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம், இவையெல்லாம் தேடித் தந்தது. அதனால் ரங்கா தன் படங்களில் பெரும்பாலும் மன்னர்களையே இசையமைக்க அழைத்தார். அந்தக் கூட்டணியும் வெற்றி மேல் வெற்றி பெற்றது.

 

       1958ல் அவர் அளித்த படம் குடும்ப கௌரவம். முன்னதில் நீளம் கருதி தவிர்க்கப்பட்ட, தென்னவன் தாய்நாட்டு சிங்காரமே என்ற பாடல் குடும்ப கௌரவம் படத்தில் சேர்க்கப்பட்டது. அதே போல் பின்னாளில் ரங்காவின் நிச்சய தாம்பூலம் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடினார் கவிஞர் பாடினார் பாடல், அவருடைய தென்றல் வீசும் படத்தில் சேர்க்கப்பட்டது.

 

       குடும்ப கௌரவம் படம் டிவிடியாகவோ யூட்யூப் காணொளியாகவோ கிடைக்கவில்லை. அந்த படத்தை அரங்கிலும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே கதைச்சுருக்கம் மட்டும் விக்கிபீடியாவில் உள்ளது அப்படியே தமிழாக்கம் செய்து தரப்படுகிறது.

 

       உமையாள்புரம் என்ற கிராமத்தில் உள்ள பண்ணையின் உரிமையாளர் கனகரத்தினம் (கே.சாரங்கபாணி). அவருடைய முதல் மனைவிக்குப் பிறந்தவர் கோபால் (ஜெமினி கணேசன்). கனகரத்தினத்தின் இரண்டாவது மனைவி கண்ணம்மா. அவர் மூலமாக ஒரு மகனும் மகளும் கனகரத்தினத்துக்கு உள்ளனர். கோபாலின் மனைவி சரளா (ஈ.வி.சரோஜா). குதூகலமாக சென்று கொண்டிருக்கும் அவர்கள் குடும்ப வாழ்க்கையில் நுழைகிறான் சங்கரலிங்கம். தன்னை அவர்களின் தூரத்து சொந்தம் என சொல்லி, கண்ணாவின் அண்ணன் முறை என உரிமை கொண்டாடுகிறான். பொய் பித்தலாட்டம் மோசடி இவற்றின் மொத்த உருவமாக திகழும் சங்கரலிங்கம் பண்ணை பணத்தை கையாளுகிறான். கோபாலும் சரளாவும் வீட்டை விட்டு விரட்டப்படுகின்றனர். சங்கரலிங்கத்தின் தவறுகளை அம்பலப்படுத்தி குடும்பத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர சூளுரைக்கிறார் கோபால். அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் கதையோட்டம்.

 

       ஜெமினி கணேசன், சாவித்திரி, கண்ணாம்பா, கே.சாரங்கபாணி, ஈ.வி.சரோஜா, சாயிராம், குலதெய்வம் ராஜகோபால், கிட்டான், பேபி உமா மற்றும் பலர் நடித்திருந்தனர். உதயகுமாரின் கதை, ஹரிதாஸின் ஒளிப்பதிவு, மோகன் படத்தொகுப்பு என பல நிபுணர்களின் உழைப்பில் உருவான படம் குடும்ப கௌரவம். படம் விக்ரம் ஸ்டூடியோவில் தயாரானது. இன்றைய தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் அலுவலகம் உள்ள பகுதியே விக்ரம் ஸ்டூடியோவாக அந்நாட்களில் இயங்கியது.

 

       இன்றைய பாடல் தேர்வு பொதுவான பாடலாக அமைந்துள்ளது. ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் அறிவுரை கூறும் பாடலாக வரிகள் கூறுகின்றன. அநேகமாக தாய் தன் மகளுக்கு சொல்வதாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு வரியும் கேட்கும் போது அன்றைய காலத்தில் நிஜத்தில் நடந்திருந்தாலும் இன்றைக்கு அது நிச்சயம் கனவாகத் தான் இருக்க முடியும். அதில் ஒரு சில கருத்துக்கள் பெண்ணுரிமைக்கு எதிராக இருப்பதாக தோற்றமளிக்கிறது.

 

       Anyway, அதைப்பற்றிய விவாதங்களைத் தாண்டி பாடலின் இனிமையை நாம் ரசிப்போம். மன்னரின் இசையமைப்பு, இசைக்கருவிகளின் பிரயோகம், லீலா அவர்களின் இனிமையான குரல், மருதகாசி அவர்களின் கருத்தாழமிக்க வரிகள் என என்றும் சிறந்து விளங்கும் அற்புதம் இன்றைய தேர்வுப்பாடல்.

 

       காணொளியின் இணைப்பு தமிழினுடையது அல்ல. தெலுங்கு காணொளியில் தமிழ்ப் பாடல் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

 

பாடல் வரிகள் மட்டும் இதோ நண்பர்களுக்காக.

காலை மலர்ந்ததடி பெண்ணே – உன்

கடமையை செய்யடி கண்ணே

கோலம் போடு மனை முன்னே – மலர்

கொய்து வாடி அதன் பின்னே

 

  • காலை மலர்ந்ததடி கண்ணே

 

கணவன் பாத நமஸ்காரம் – முதலில்

கணவன் பாத நமஸ்காரம் – பிறகே

கடவுள் பூஜை புனஸ்காரம்

மாமன் மாமிக்குபசாரம் – கொண்ட

மாமன் மாமிக்குபசாரம் - குல

மங்கை வாழ்வுக்கிதுவே சாரம்

 

  • காலை மலர்ந்ததடி கண்ணே

 

நீ இருக்கும் இடத்தில் லக்ஷ்மி வாசம் – பசு

இருக்கும் இடத்தில் லக்ஷ்மி வாசம் – இதை

எண்ணி அதன் மீது பாசம்

கொண்டு நாளும் செய்யடி சேவை – நம்

வாழ்வில் செழிக்காது தேவை...

 

  • காலை மலர்ந்ததடி கண்ணே

 

இன்னொரு சிறப்பான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்

 

https://www.youtube.com/watch?v=ny1f6X2-mH4


Quote
Share: