1956 - பாசவலை - சின...
 
Notifications
Clear all

1956 - பாசவலை - சின்னப்பொண்ணு சிங்காரி நான்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 111
26/01/2020 11:29 am  

This is a part of a series of posts under the caption "Meendum Pallavi" by me in a Whatsapp Group

  1. 22.01.2020

 

பாடல் – சின்னப்பொண்ணு சிங்காரி நான்

படம் – பாசவலை (1956)

இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

வரிகள் – அ. மருதகாசி

குரல் – இசையரசி P. சுசீலா

 

       Fantastic Fifties – அசரடிக்கும் ஐம்பதுகளின் பாடல்கள் பகுதியில் இன்று, 1956ம் ஆண்டில் வெளியான பாசவலை திரைப்படத்திலிருந்து சின்னப்பொண்ணு சிங்காரி நான் என்ற பாடல் இடம் பெறுகிறது. மருதகாசி அவர்கள் பாடலை எழுதியிருந்தார். ஏ.எஸ்.நாகராஜன் இயக்கிய இப்படத்தின் ஒளிப்பதிவை W.R. சுப்பாராவ் மேற்கொண்டார். கதை வசனம் P. கண்ணன். படத்தொகுப்பு எல்.பாலு, தயாரிப்பு டி.ஆர். சுந்தரம்.

 

       எம்.கே.ராதா, ஜி.வரலக்ஷ்மி, வி.கோபாலகிருஷ்ணன், எம்.என்.ராஜம், வி.கேராமசாமி, குமாரி ராஜாமணி, டி.பி.முத்துலட்சுமி, திருப்பதிசாமி, எம்.ஆர். சந்தானம், மாஸ்டர் பாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 

                இந்திரபுரியின் மகாராஜா திறம்பட ஆட்சி செய்து வருகிறார். ஆனாலும் அவருடைய தம்பியின் நடவடிக்கைகள் அவருக்கு கெட்ட பெயர் ஈட்டுகின்றன. குறிப்பாக பெண் பித்தனாக அவன் அலைவது அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் அவமானம் தாங்க முடியாமல் அரண்மனையைத் துறந்து மனைவி மக்களுடன் வெளியேறி விடுகிறார். போகும் போது வழி தவறி தனியாக போய் விடுகிறார். மனைவி, குழந்தைகளுடன் வேறு திசையில். பின்னர் மனைவியும் வழி தவறி ஒரு குழந்தையை தொலைத்து விடுகிறார். தொலைந்த குழந்தையை வேறோர் கிராம மக்கள் மீட்டு காப்பாற்றி வளர்க்கின்றனர்.

 

       மகாராஜா கவலையில் புத்தி பேதலித்து விடுகிறது. மகராணியோ கூலி வேலை செய்து குழந்தையை காப்பாற்றுகிறார். போன ஊரில் அவர் யாரென்று தெரியாது. இவ்வாறு குடும்பம் கஷ்டப்படுவதைப் பார்க்கும் மகாராஜாவின் தம்பிக்கு மனம் உறுத்துகிறது. தன்னுடைய நடவடிக்கைகளினால் தான் அண்ணன் குடும்பம் சிரமப்படுகிறது, அவர்களை மீண்டும் அழைத்து வரவேண்டும் என மனம் திருந்தி புறப்படுகிறான்.

 

       வழியில் அண்ணன் பைத்தியக்காரனைப் போல் ஆடிப் பாடி கூத்தடிப்பதைப் பார்த்து வேதனைப்படுகிறான். அந்த ஊர் மக்களிடம் அவருக்கு வைத்தியம் பார்க்க் முடியுமா, அதை சரி செய்ய முடியுமா என கேட்க, அவர்கள், கொல்லி மலையில் ஒரு குகை இருக்கிறது. அங்கே இதற்கான ஒரு மூலிகை இருக்கிறது. அதைக் கொடுத்தால் இவர் குணமாவார், ஆனால் அது மிகவும் ஆபத்தான பயணம் என கூறுகிறார்கள். இவனும் என்ன ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என கிளம்புகிறான். காடு மேடு மலை எல்லாம் தாண்டி போகும் போது அந்த குகையை அடைகிறான். அங்கே அழகான ஒரு இளம்பெண் இவனைக் கண்டு மயங்கி, இவனை சரசமாட அழைக்கிறாள். அவன் தற்போது நல்லவனாக வாழ்வதால் மறுக்கிறான். அந்த பெண்ணை குறை சொல்கிறான். கோபமுற்ற அவள், தன் மந்திர சக்தியால் அவனை ஒரு நாயாக மாற்றி விடுகிறாள்.

 

       இதற்கிடையே பைத்தியமான மகாராஜா வசிக்கும் இன்னொரு நாட்டின் இளவரசிக்கு தந்தை மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார். அவளோ தான் இசைக்கலையில் தேர்ந்து விளங்குவதால், தன்னை விட சிறந்த இசைக்கலைஞனைத் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறுகிறாள்.

 

       ஒரு வழியாக அழகியிடமிருந்து மீண்டு வரும் மகாராஜாவின் தம்பிக்கு, மூலிகை கிடைக்கிறது. மிகுந்த சிரமத்துடன் மகாராஜாவிடம் சென்று, அந்த மூலிகையைக் கொடுக்கிறான். உடலும் மனமும் சோர்ந்து மிகவும் மோசமாகி, அண்ணனின் மடியிலேயே உயிர் விடுகிறான்.

 

       மகாராஜாவுக்கு சித்தம் தெளிகிறது. ஆனால் கண் பார்வை போகிறது. அவர் நன்றாகப் பாடக்கூடியவர் என்பதை கேள்விப்படும் இளவரசி, அவரை அழைத்து வந்து பாடச் சொல்கிறாள். மிக சிறப்பாக பாடுகிறார் மகாராஜா. அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை அறியாமல் அவரை தான் மணக்க விரும்புவதாக தந்தையிடம் கூறுகிறார்.

 

       மகாராஜாவுக்கும் இளவரசிக்கும் திருமணம் நடைபெற்றதா, மகராஜாவின் மனைவி குழந்தைகள் என்ன ஆனார்கள், இந்திரபுரிக்கு மீண்டும் திரும்பினார்களா போன்ற கேள்விகளுக்கு படம் பதில் கூறும்.

 

       சின்ன மகாராஜாவை நாயாக மாற்றிய பின் அந்த நாயை வைத்து ஒரு பாடலை உருவாக்க இயக்குநர் மன்னர்களிடம் கூற மன்னரும் பட்டுக்கோட்டையாரை அழைத்து எழுதச் சொல்கின்றனர். அவரும் எழுதித் தருகிறார். ஆனால் அதில் இலக்கிய இலக்கண நடைகளோடு செந்தமிழில் வரிகள் அமைந்திருக்க, இயக்குநர் அதை நிராகரித்து விடுகிறார். பட்டுக்கோட்டையார் சற்றே கோபமுற்று போய் விடுகிறார். சுந்தரம் அவர்கள் மீண்டும் பட்டுக்கோட்டையாரை வரச்செய்து பாடல் எளிமையாக பேச்சுத்தமிழில் இருந்தால் தான் மக்களிடம் விரைவாக சென்றடையும் என்று எடுத்துக் கூற, அதற்கேற்ப வரிகளை எளிமைப்படுத்தி எழுதித் தருகிறார் பட்டுக்கோட்டையார். மன்னரும் ஜிக்கியின் குரலில் பாடலைப் பதிவு செய்கிறார்கள்.

 

       பாடல் பிரம்மாண்டமான ஹிட். பட்டி தொட்டி எங்கும் மக்கள் முணுமுணுக்க படமும் வெற்றி அடைகிறது. அது மட்டுமல்ல அந்தப் பாடல் காட்சியில் நடித்த பெண்ணிற்கும் அந்த பாடலின் வார்த்தைகள் அடைமொழியாக ஒட்டிக்கொள்கின்றன.

 

       அது தான் மச்சான் உன்னைப் பார்த்து மயங்கிப் போனேன் நேத்து என்ற பாடல். இந்தப்பாடலில் வரும் லொள் லொள் லொள் என்ற வார்த்தை கன்னா பின்னா என மக்களால் உச்சரிக்கப்படுகிறது. அந்தப் பாடல் காட்சியில் நடித்த நடிகை ரமாமணி லொல் லொள் ரமாமணி என புகழ் பெறுகிறார்.

 

       அன்பினாலே உண்டாகும் பாசவலை, மதிப்புக் கெட்ட மாமா, குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு கொண்டாட்டம் போன்ற சூப்பர் ஹிட் பாடல்களுடன் பாசவலை இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. சொல்லப்போனால் இந்த பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு புதுப்படமே தயாரானது குறிப்பிடத் தக்கது.

 

       மூலிகையைத் தேடி வரும் சின்ன மகாராஜாவை அழகி ஆடிப்பாடி வசீகரிக்கும் பாடல் தான் சின்னப் பொண்ணு சிங்காரி.  இந்தப் பாடல் அனைத்து அம்சங்களிலும் நிறைந்து விளங்கும் அற்புதமான பாடல்.  ஒவ்வொரு வரியும் அந்த அழகி தன்னைத் தானே புகழ்ந்து பாடும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பல்லவியிலேயே அவளுடைய பாத்திரத்தையும் குணாதிசயத்தையும் கூறிவிடுகிறார் மருதகாசி அவர்கள். சின்னப்பொண்ணு சிங்காரி நான் என்று அறிமுகத்திலேயே அதகளப்படுத்துகிறார்.  காட்சியில் நடித்த ராஜாமணி வரிகளுக்கேற்ப அழகின் சிகரமாய் விளங்குகிறார்.

 

       மெல்லிசை மன்னர்கள் அளித்த கடமையை மிகச் சிறப்பாய் செய்து, பாடலை உச்சத்தில் கொண்டு செல்பவர் இசையரசி. இந்தப் பாடலின் இனிமையை சொல்லி மாளாது. அவருடைய குரலில் அந்த அழகியின் குணாதிசயம் அவ்வளவு அழகாக எதிரொலிக்கிறது.

 

       இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும்.  அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

 

       இந்தப் படத்தில் பட்டுக்கோட்டையார் பாடல் எழுதியதைப் பற்றிய வரலாறு அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்பதால் அதைப் பற்றி மீண்டும் எழுத தேவையில்லை என கருதி தவிர்க்கப்பட்டுள்ளது.

 

       மீண்டும் இன்னும் ஒரு சிறப்பான பாடலுடன் சந்திப்போம்.

 

https://www.youtube.com/watch?v=QxajorMgPM0

 


Quote
Share: